நினைவில் நீங்கா சுதந்திரத் திருநாள்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 12 Second

வாசகர் பகுதி

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் என் மனம் 63 வருடங்கள் பின்நோக்கி என் பள்ளி நாட்களை நினைவுப்படுத்தும். சென்னை மயிலையிலுள்ள பிரபல பள்ளியில் 10ம் வகுப்பு படித்த சமயம். மறுநாள் சுதந்திர தினம். என் வகுப்பு ஆசிரியை, சிறப்பு விருந்தினரின் வரவேற்புரை குறிப்புகளை அளித்து அவரை வரவேற்கும் பொறுப்பினை என்னிடம் கொடுத்திருந்தார். அதே சமயம் சுதந்திர தினம் என்பதால், அன்று வெள்ளை நிறத்தில் புடவை அணிய வேண்டும் என்று கூறினார். எட்டாம் வகுப்பு நுழைந்ததும் எல்லோரும் தாவணி உடுத்த வேண்டும் என்பது பள்ளியின் விதி. பள்ளிக்கு தாவணி அணிந்தாலும், எனக்கு புடவை உடுத்த தெரியாது, புடவையும் என்னிடம் கிடையாது.

பள்ளி விட்டு வீட்டுக்கு சென்று அப்பாவிடம் வெள்ளை நிற புடவை வேண்டும் என்று கேட்டது தான் தாமதம். அவர் மிகுந்த கோபத்துடன் முதல் முதலாக வெள்ளைப்புடவை வாங்கித்தர மறுத்தது மட்டுமில்லாமல், ‘நீ ஸ்கூலுக்கே போக வேண்டாம்’ என்று கடுமையாக கூறி சென்றுவிட்டார். நான் எனக்கு துக்கம் தாளாமல், அழுது கொண்டு இருந்தேன். கல்லூரியில் இருந்து வந்த அண்ணன் விவரம் கேட்டு என்னை சமாதானப்படுத்தினான். அப்பா அண்ணன் கை செலவுக்கு தினமும் 5 ரூபாய் கொடுப்பார். அதை செலவு செய்யாமல் பெருங்காய டப்பாவில் சேர்த்து வைத்திருப்பான்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, என்னை சைக்கிளில் அமர்த்தி மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள தாஜ்மகால் சில்க் எம்போரியம் கடைக்கு அழைத்துச் சென்றான். எங்கள் இருவருக்குமே தனியாக துணி கடைக்கு சென்ற அனுபவம் இல்லை. கடையில் திருதிருவென விழித்த எங்களை பார்த்த கடைக்கார் எங்கள் நிலைமை அறிந்து உதவினார். வெள்ளை நிற புடவை வேண்டும் என்றதும், பல வித புடவை பெயர்களை அடுக்கினார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அவராகவே ஒரு ஜார்ஜெட் புடவையை தேர்வு செய்து அதன் விலை 7 ரூபாய் 50 காசு என்றார்.
புடவையை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம்.

அப்பாவிற்கு விஷயம் தெரிந்து, எங்களை திட்டித்தீர்த்தார். நாங்க என்ன கூறுவது என்று புரியாமல் அமைதியானோம். பொழுது விடிந்தது. வழக்கத்திற்கு சற்று முன்பே எழுந்து பள்ளிக்குத் தயாரானேன். புதுப்புடவையை புத்தகப் பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தேன். என் வகுப்புத் தோழி கங்காவின் வருகைக்குக் காத்திருந்து, அவளை புடவையை கட்டிவிடச் சொன்னேன். அடி மனதில் வீட்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் வருத்தத்தைக் கொடுத்தாலும் நினைத்தபடி புடவை உடுத்தியதில் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. வரவேற்பில் முன்னின்று, சிறப்பு விருந்தினரை வரவேற்று எனது பணியினை சிறப்புடன் செய்து முடித்தேன். ஆசிரியர்களும் பாராட்டினர். நிகழ்ச்சி முடிந்ததும் புடவையை மடித்து புத்தகப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

அப்பொழுது எடுத்த புகைப்படம் இது. இந்தப்புடவை என் அண்ணனின் அன்புப் பரிசு. இந்தப்புடவையை மற்ற புடவைகளுடன் வைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் என் மனம் 63 வருடங்களுக்கு முன் செல்வதை தடுக்க முடியாது. அதன் பிறகு அந்த புடவையில் சிகப்பு நிற பூக்கள் பிரிண்ட் செய்து கல்லூரி படிக்கும் போது கட்டி மகிழ்ந்தேன். ஆனால் இன்றுவரை அந்த புடவை என் பீரோவில் தனி இடம் பிடித்துள்ளது. இதை பரிசளித்த அண்ணன் மறைந்து விட்டார். பீரோ நிறைய புடவைகள் இருந்தாலும் இந்தப்புடவைக்கு ஈடு இணை இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களே…மனம் தளர வேண்டாம்! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஐ அம் சோஷியல் டிரிங்கர் !! (மகளிர் பக்கம்)