By 31 August 2021 0 Comments

குழந்தை பிறந்த பின்னர் கடைபிடிக்க வேண்டியவை! (மகளிர் பக்கம்)

பிரசவத்திற்குப் பிறகு முதல் ஆறு வாரங்கள் தாய் ‘ஸூதிகா’ என்று அழைக்கப்படுகிறாள். இது ஒரு மகிழ்ச்சியான நேரமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு ஆரோக்கியநிலையை மீண்டும் அடைவதற்கான காலமும் கூட. இந்த வாரங்களில்தான் தாய்மார்களுக்கு தங்கள் குழந்தையுடனான பிணைப்பு உண்டாகும். பிரசவித்த தாய்மார்களுக்கு, குறிப்பாக முதல் குழந்தையாக இருந்தால், குழந்தை பிறந்த பிறகு அன்றாட வாழ்க்கைக்கு மீண்டுவந்து அதன் சவால்களை எதிர்கொள்வது ஒரு சாதனை என்றே கூறலாம். தங்கள் குழந்தையை பராமரிப்பது முக்கியம் என்றாலும், தங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் ஒவ்வொரு தாய்க்கும் தனக்கான ஓய்வு, உதவி, கவனம், ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி, சுகாதாரம் ஆகியவை சற்று அதிகமாகவே தேவைப்படும்.

ஓய்வு: சோர்வை சமாளிக்க முடிந்தவரை தூங்க வேண்டும். குழந்தைக்கு ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உணவளிக்க வேண்டும் என்பதால் குழந்தை தூங்கும்போதே தாயும் தூங்க வேண்டும்.உதவி: பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவி அவசியம் தேவை என்பதால் அவர்களின் உதவியை நாடவோ ஏற்கவோ தயங்கக்கூடாது. முதல் சில வாரங்களில், குழந்தைக்கு உணவளிப்பதும், தங்களை கவனித்துக் கொள்வதும் தவிர, மற்ற எல்லா பொறுப்புகளையும் வேறு யாரிடமாவது கொடுக்க வேண்டும்.

கவனம்: பிரசவத்திற்கு பின் பொதுவாக ஒரு வார காலம் மிகுந்த கவனத்துடன் இருப்பது முக்கியமாகும். கருப்பை, சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். சில நேரங்களில் பிரசவத்தில் சில பெண்களுக்கு ஆபத்தான அறிகுறிகள் வரலாம். அவை:

* வலிப்பு
* அதிக ரத்தப்போக்கு
* அடிவயிற்றில் வலி
* வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
* காய்ச்சல்
* கால்களில் அல்லது மார்பில் வலி மற்றும் வீக்கம்
* சிறுநீர் கழிக்கும்போது வலி

அதனால் பிரசவத்திற்கு பின் தாய்-சேய் இருவரும் மருத்துவரிடம் உடல் பரிசோதனைகள் செய்துகொண்டு அவர் அறிவுரைகளை சரியாக பின்பற்றுவது அவசியமாகும். பிரசவித்த பெண்ணானவள்,‌ கோபம்‌, களைப்பு, தாம்பத்திய உறவு, பகல்‌ தூக்கம்‌, உரக்கப்‌ பேசுவது, இரவு கண்விழித்தல்‌, வண்டி முதலியவற்றில்‌ செல்லுதல்‌, வெகுநேரம்‌ உட்கார்ந்திருப்பது- நிற்பது – நடப்பது, சந்தனம்‌ போன்ற குளிர்ச்சியான பூச்சுப்‌பொருட்களைப்‌ பூசிக்கொள்வது‌, வெகுநேரம் தண்ணீர்‌, காற்று, வெயில்‌ இவற்றில்‌இருப்பது, குளிர்ச்சியான உணவை உட்கொள்வது முதலியவற்றைத்‌தவிர்க்க வேண்டும்‌.

ஊட்டச்சத்தான உணவு பிரசவித்த தினத்தன்று வாதத்தைச்‌ சமனம்‌ செய்யக்கூடிய (சிற்றாமுட்டி, தேவதாரு, கோஷ்டம்‌முதலிய) சரக்குகள்‌ சேர்த்துத்‌தயார் ‌செய்யப்பட்ட கூழ்வகைகளை ‌சாப்பிட வேண்டும்‌. மூன்று நாள்‌சென்றதும்‌ நிலப்பூசணிக்கிழங்கு, ஆமணக்குவேர்‌முதலிய மருந்துச்‌சரக்குகளின்‌ கஷாயத்தில்‌தயார்‌ செய்யப்பட்ட கஞ்சி வகைகளை வேண்டிய அளவு நெய்யை ‌சேர்த்து அருந்துவது நல்லது.

இரண்டாம்‌தினத்திலும்‌, மூன்றாம்‌ தினத்திலும்‌ வெள்ளைக்‌கண்டங்கத்திரி வேர்‌ சேர்த்துக்‌ காய்ச்சிய நெய்யைப்‌பருகச்‌ செய்யலாம்‌.தாய்மார்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து அந்த சத்து தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு செல்வதால் தாய் மிகுந்த கவனமுடன் உணவில் கட்டுப்பாடாக இருப்பது அவசியம். பிரசவத்திற்குப்பிறகு தாயின் உடல் வலுவிழந்து போவதாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்பதாலும் மிகுந்த சத்தான பத்தியமான உணவுகளான முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதங்களை உண்ண வேண்டும். கொதித்து ஆறிய நீரையே பருக வேண்டும், நிறைய நீர்சத்து உள்ள ஆகாரங்கள், கீரைகள், பால், சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி, சூப் போன்றவைகள் பிரசவத்துக்கு பின் 12 நாள்கழித்து எடுத்துக்கொள்ள உடலுக்கு நன்மை தரும்.

நல்லெண்ணெய் ‌அல்லது நெய்யுடன் திப்பிலி, சுக்கு, மோடி, செவ்வியம்‌, கொடிவேலி ஆகியவற்றைச்‌சேர்த்துக்‌ காய்ச்சிய கஞ்சியை அளவுடன்‌பருகச்‌ செய்யவேண்டும்‌. (சரகஸம்ஹிதா) தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதால் அடிக்கடி பசி ஏற்படும். அப்போது இடைஇடையே உலர்பழங்கள் (dry fruits), சத்துமாவு கஞ்சி, ஆப்பிள், வாழைப்பழம் போன்ற உணவுகள் எடுத்துக்கொள்வது நல்லது. கோழிக்கறி, கருவாடு, குளிர்பானங்கள், காபி, கிழங்கு வகைகள் எண்ணெயில் பொரித்த பலகாரங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது. இது தாயின் உடலுக்கு மட்டுமின்றி குழந்தையின் உடலுக்கும் கேடு விளைவிக்கும்.

மருத்துவம்

பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல்நிலை மிகவும் பலவீனமாகவும், அக்னி குறைவாகவும், வாதம் அதிகமாகவும் காணப்படும். ஆகையால் வாதத்தை சமன்படுத்தி, அக்கினியை உயர்த்த முதல் 7 நாள், பலா தைலம் அல்லது தன்வந்திர தைலம் வைத்து உடலில் தேய்த்து வரலாம். உள்ளுக்கு மகாகல்யாணக நெய், தாடிமாதி நெய் போன்றவை அளிக்கலாம். 8வது நாளிற்கு பிறகு தன்வந்திர கசாயம், தன்வந்திர குடிகா, பலாரிஷ்டம், ஜீரகாதியரிஷ்டம் போன்ற மருந்துகள் தரலாம்.

தாய்மார்கள் பால் சுரக்க, உடல் வன்மையாக இருக்க, எதிர்ப்புத்திறன் உண்டாக சதாவரி சேர்ந்த மருந்துகள், சௌபாக்யசுண்டி லேகியம், சவன்பிராஷ லேகியம், தசமூல கஷாயம், தசமூலாரிஷ்டம்‌, திராக்ஷாரிஷ்டம்‌, தன்வந்திர தைலம் போன்றவைகள் பயன்படுத்தலாம்.

மார்பக வீக்கம்

பிறந்து ஓரிரு நாட்களில் மார்பகங்களில் பால் நிரம்பி வீக்கமாகி சங்கடமாக இருக்கும். அசௌகரியத்தை குறைக்க, மார்பகங்களுக்கு வெந்நீரில் முக்கி எடுத்த, சுத்தமான துணியை வைத்து ஒற்றடம் கொடுக்க வேண்டும். முலைக்காம்புகளில் புண், விரிசல் மற்றும் வலியிருந்தால் முறிவெண்ணெய் பயன்படுத்தலாம்.

மலச்சிக்கல்

குடல் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். பிரசவத்துக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதில் உள்ள சிக்கல்களைக் குறைக்க தண்ணீர் தாராளமாக அருந்த வேண்டும். மலம் மற்றும் சிறுநீர் அடங்காது வெளியேறினால், கெகல் (Kegel) பயிற்சிகள் செய்யலாம், அவை இடுப்பு தசைகளை பலப்படுத்தும்.
பிறப்புறுப்பிலிருந்து கசிவு: பிரசவத்துக்குப் பிறகு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு கருப்பையிலிருந்து ரத்தமும் திசுக்களும் வந்துகொண்டேயிருக்கும். இது இயல்பே. இது நிற்கும் வரை பஞ்சாலான சுத்தமான நாப்கின்களை பயன் படுத்தலாம்.

தாய்ப்பால்

குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு, பாலூட்டும் செயலானது தாய்க்கும் முக்கியமானதாகிறது. தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.தாய்ப்பால் கொடுப்பது காலம் காலமாகப் பெண்கள் இயற்கையாகவே செய்து வந்த பணி. சமீப காலத்தில் தாய்ப்பால் அளிப்பது பெருமளவில் குறைந்து வருகிறது.

ஒரு வயதுவரை குழந்தைக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவை. தாய் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுகையில் ஒரு பாசப்பிணைப்பும் உடல் ரீதியாக ஒரு ஈர்ப்பும் ஏற்படுகிறது. இதை மேலும் அக்குழந்தை உறிஞ்சி குடிக்கையில் பால் மீண்டும் சுரக்க உதவுகிறது இப்படி பாசத்தோடு வளரும் குழந்தைகள்தான ஆரோக்கியமான குழந்தைகளாக வளர முடியும். தாய்ப்பாலுக்கு நிகர் எதுவும் இல்லை. சில பெண்களுக்கு பால் சுரப்பில் குறைபாடு ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள்:

* அதிக உடல் சுமை கொண்ட வேலை
* மனஅழுத்தம் , கவலை
* ஊட்டச்சத்து குறைபாடு
* அடுத்தடுத்து கர்ப்பம் தரித்தல்
* வறட்சியான உணவு (Dry food) வகைகள் மற்றும் குளிர்பானம் அருந்துதல்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க

பால் சுரப்பு குறைவாக இருக்கும் தாய்மார்கள் பூண்டு, வெந்தயம், அரிசி சாதம், கோதுமை, சர்க்கரை, தயிர், பால், சீரகம், பெருஞ்சீரகம், சுண்டைக்காய், பால் முதுக்கன் கிழங்கு, இலுப்பைப் பூ, கருவேப்பிலை, இளநீர், தேங்காய், எள்ளுருண்டை, நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் மற்றும் சுறா மீன் புட்டு, பப்பாளி பழம், முளை கட்டிய தானியங்கள், பயறுவகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்து வர பால் அதிகம் சுரக்க உதவுகிறது. காய்ச்சி ஆறிய நீரில் சிறிது சீரகம்/சோம்பு சேர்த்து குடிப்பது நல்லது. உணவில் சுக்கு, இஞ்சி, மிளகு போன்றவை சேர்ப்பதால் எளிதில் செரிமானம் உண்டாகும், வயிற்றில் வாய்வு சேராமல் இருக்கும்.

சதாவரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேறுக்குப் பின்னர் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி) உதவுகிறது.

குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்து கொடுக்கவோ, வெந்தயக் கஞ்சி கொடுக்கவோ அதிக அளவில் பால் சுரக்கும். மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது.

உளுந்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சி இதை காலை வேளையில் குடிக்கலாம். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்ப்பால் பெருகும்.முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

மேலும் வெட்டிவேர், தர்பைப்புல், நன்னாரி, தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவரி), நீர்முள்ளி, அமுக்கிராங்கிழங்கு, ஆலம் விழுது ஆகியவையும் பால் கஷாயமாகக் கொடுக்க பால் சுரக்க உதவும் தாய்ப்பாலில் ஏதேனும் குறைகள் இருப்பின் தாய்க்கு சுக்கு, மரமஞ்சள், கோரைக்கிழங்கு, சீந்தில், கடுகுரோகிணி, நன்னாரி ஆகியவை கொடுக்க பாலிலுள்ள தோஷங்களை நீக்கி சிசுவிற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

மேலும் சதாவரி லேகியம், விதார்யாதி கஷாயம் அஸ்வகந்தாதி லேகியம், திராக்ஷாதி லேகியம் போன்றவை பயன்படுத்தலாம். ஒருவருடத்தின் முடிவில் தாய் பால் கொடுப்பதை மெதுவாக குறைக்க வேண்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி சரியாக செய்ய வேண்டும், கடினமான பயிற்சியாக இல்லாமல் மிதமான பயிற்சிகளாக இருக்க வேண்டும்.

சுகாதாரம்

பிரசவித்த பெண்ணிற்கு ‌பலா தைலம்,‌பலாதான்வந்தர தைலம், தான்வந்தர தைலம்‌ ஏதேனும் ஒன்றை தேய்த்து வாயுவை போக்கக்கூடிய சிற்றாமுட்டி, வில்வம்‌, தேவதாரு முதலிய சரக்குகளைச்‌ சேர்த்துக்‌காய்ச்சிய கஷாயம் கலந்த இளவெந்நீரில் தலைக்கு குளிக்கச்‌செய்ய வேண்டும்‌.

பிரசவித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்கள்‌

வரையிலும்கூட எண்ணெய்க்குளியலுக்கு இந்தத் ‌தைலங்களையே உபயோகிப்பது மிகவும்‌ நல்லது. இறுக்கமான ஆடைகளை தவிர்த்து சுத்தமான, லேசான காட்டன் உடைகளை அணிய வேண்டும், சில பாலூட்டும் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படும், அச்சமயத்தில் ஒரு நாளைக்கு 5-6 முறை நாப்கினை மாற்ற வேண்டும். குழந்தை தூக்குவதற்குமுன் கைகளை சுத்தமாக கழுவிய பிறகு தூக்க வேண்டும். குழந்தை மற்றும் தாய் இருக்கும் இடம் மிகுந்த சுகாதாரத்துடன் இருக்க வேண்டும்.

மனஅழுத்தம், கோபம், பதட்டம்

இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இல்லையெனில் குழ்நதையின் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும். ஹார்மோன் மாற்றங்கள் நடந்திருப்பதால் ‘மூட் ஸ்விங்ஸ்’ அதிகமாக இருக்கும். அதற்கேற்ப தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, குழந்தையின் சிரிப்பை கவனித்தல் போன்றவற்றால் இந்நிலை மாறும்.

கடந்த சில வாரங்களாக குழந்தையின்மை, எவ்வாறு ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களும் தீர்வுகளும், குழந்தை பெற்றெடுத்த உடன் முக்கியமாக செய்யவேண்டியவை மற்றும் தாய்ப்பால் சுரக்க செய்ய வேண்டியவை பற்றி விளக்கமாக பார்த்தோம். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes) பற்றி விரிவாக தனி தலைப்பில் பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam