By 29 August 2021 0 Comments

இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித் !! (மகளிர் பக்கம்)

இணை இயக்குநர் ஜெனி டாலி

‘சார்பட்டா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதில் நடித்த திரைக் கலைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்த பெயர் ஜெனி டாலி. இயக்குநர் பா.ரஞ்சித்தின் இணை இயக்குநர்களில் ஒருவர். இயக் குநர் ரஞ்சித்துடன் கபாலி, காலா, இடையில் ஹிந்தியில் பிர்சா முண்டா, தற்போது ‘சார்பட்டா’ என தொடர்ந்து பயணிப்பவரை சந்தித்தபோது…

* சினிமாவிற்குள் வந்த மேஜிக் எப்படி நடந்தது..?

நான் ஊடகவியலாளராகவும் ரஞ்சித் இயக்குநராகவும்தான் எங்களுக்குள் அறிமுகம். சென்னையின் வரலாற்றை ஆவணப்படுத்த ‘மெட்ராஸ்’ படம் எடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்தை நேர்காணல் செய்யச் சென்றபோது, அவர் கபாலி படத்தில் பணியாற்ற பெண் துணை இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்தார். சேர்ந்து வேலை செய்யலாமா என என்னிடத்தில் கேட்டார். ஒரு ஊடகவியலாளராய் டாக்குமென்டரி செய்தி பின்னணியில் இருந்து வந்ததால், ரிசெர்ச் டீமிற்கு எடுத்ததாகவே எனக்குப் பட்டது.கபாலி படத்தில் நான் அசிஸ்டென்ட் டைரக்டர். காலாவில் அசோசியேட் டைரக்டர். இப்போது ‘சார்பட்டா’ படத்தில் கோ-டைரக்டர். நான்-பிக் ஷன் துறையில் இருந்து மாறி பிக் ஷன் துறைக்குள் வருவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

* ஆண்கள் நிறைந்த துறையில் இணை இயக்குநராய் உங்களை எப்படி உணர்கிறீர்கள்?

பெண் கேரக்டர்களை மட்டுமே வடிவமைப்பது, அவர்களுக்கு உதவுவது போன்ற முட்டாள்தனமான வேலைகளை பிரேக் செய்துவிட்டு, எல்லா ஆண் துணை இயக்குநர்களுக்கும் இணையான உழைப்பை நானும் செலுத்துகிறேன். ஆணோ பெண்ணோ ஒரு பிலிம் செட்ல வேலை செய்வதென்பது மிகப் பெரும் சவால். எல்லோரையும் சமாளிக்க வேண்டும். நீண்ட நேரம் செட்டில் நிற்க வேண்டும். பெண் என்பதைத் தாண்டி இணை இயக்குநராக அந்த இரும்புக் கூரையை உடைத்து வெளியில் வந்திருக்கிறேன் என்றால், அது ரஞ்சித் தோழர் மாதிரியான ஈகோ இல்லாத இயக்குநரால் மட்டுமே சாத்தியம். இணக்கமான ஒரு தோழமை அவரிடத்தில் எப்போதும் எனக்குக் கிடைக்கும். அப்படியான சுதந்திரத்தை அவரை மாதிரியான சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே உருவாக்கவோ கொடுக்கவோ முடியும்.

இது ரைட்புல்லா என் பிளேஸ் என்கிற எண்ணத்தை ஆரம்பத்தில் இருந்தே ரஞ்சித் தோழர் எனக்குக் கொடுத்துவிட்டார். நான் கம்ஃபெர்டான இயக்குநர் டீமில் இருக்கிறேன் என்பதே, மிகப்பெரிய சுமையை என்னிடமிருந்து இறக்கி வைத்தது. என்னை முன்னிலைப்படுத்துகிற இயக்குநராகவும் அவர் இருப்பதால், அவரது டீமில்

எல்லோரும் என்னை மதிக்கிறார்கள். நான் சொல்வதைக் கேட்கிறார்கள்.உடனிருப்பவர்களை வேலை வாங்குவதும் திறமைதான். நாம சொல்வதை அவர்கள் ஏற்கும் இடத்தில் நாம இருக்கணும். அப்போதுதான் எல்லோருடனும் கனெக்டெடாக வேலை செய்ய முடியும். டீமில் யாராக இருந்தாலும் என்னை நன்றாகவே ரிசீவ் செய்வார்கள். கூட்டத்திற்குள் கன்னா பின்னாவென்று எந்த இடத்திற்கும் வேகமாய் சென்று வருவேன். செட்டில் வேலை எப்போதுமே ஜாலியாகப் போகும்.

* திரைப்பட உருவாக்கத்தில் உங்களுக்குப் பிடித்த இடம்..?

சினிமா ஒரு மேஜிக். நீங்கள் செய்த அத்தனையும் உயிர்ப்புப் பெறும் இடம். எந்த போதைப் பொருளும் தர முடியாத ஒரு ஹை சினிமாவில் வேலை செய்வதில் கிடைக்கும். அதில் இருக்கும் அழகியலை உள்வாங்கிவிட்டால், சினிமா போதைக்கு அப்படியே அடிக்ட் ஆகிவிடுவோம். தவிர, சினிமா என்பது தனியாக நிகழ்த்தப்படுவதும் கிடையாது. ஒரு சினிமா செட் 500, 600 பேர் இருந்து இயங்கக்கூடிய மாஸிவ்வான விஷயம்.

முதல் இரண்டு படத்திற்குப் பிறகே இயக்குநர் ஒரு காட்சியை எப்படியாகப் பார்க்கிறார் என்கிற விஷயத்தையும் டெக்னிக்கலாகக் கற்றுக் கொண்டேன். கபாலி படத்தில் நான் வேலை செய்தபோது பிரேமில் நான் இருக்கிறேன் என்பதே தெரியாமல்தான் இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேமரா, மானிட்டர், லென்ஸ் என ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. இயக்குநரின் ரசனையும் புரிய ஆரம்பித்தது. அவர் யோசித்து முடிப்பதற்குள், அவர் இதைத்தான் நினைக்கிறார் என்பதை என்னால் கம்ளீட் செய்ய முடியும். அந்த அளவுக்கு அவரிடத்தில் கற்றுக் கொண்டேன். அவர்தான் எங்களோட ரெஃபரென்ஸ் பாயிண்ட். அவருக்கு என்ன வேண்டும் என்பது இணை இயக்குநராக எனக்குத் தெரியும்.

ஸ்பாட்டில் சில வேலைகள் ரொம்பவே அசாத்தியமானது. என்றாலும், ரிசெர்ச் அளவு, ஷூட்டிங் அளவு, புரொடக்‌ஷன் அளவு, போஸ்ட் புரொடக்‌ஷன்ல எனக்கு டப்பிங்கும், சவுண்ட் வொர்க்கும் ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அது அப்படியே அந்தப் படத்தை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும். எனக்கு இயக்குநர் அதிகமாக சுதந்திரம் கொடுக்கும் இடமும் அங்குதான்.

* இயக்குநர் பா.ரஞ்சித் குறித்து…

ஹி இஸ் எ பெஸ்ட் டைரக்டர். ரொம்பவே ஆளுமை மிக்க பாவலா இல்லாத ஒரு நபர். ரஞ்சித்தோட செட் என்பது சாதி ரீதியா, வர்க்க ரீதியா, பாலின ரீதியா பாதுகாப்பான ஒரு செட்டாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார். தன் செட்டுக்குள் இருப்பவர்களிடமும் அதையே அவர் எதிர்பார்க்கிறார். அவரது அலுவலகமும் அப்படித்தான் இருக்கும். அவருடன் வேலை செய்யும்போது அது அவர் படம் மட்டுமல்ல என் படமும்தான் என்கிற ஃபீலை கொண்டு வந்துவிடுவார். அவரிடம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளத் தோன்றும். நிதானமாக வேலை
செய்பவர்.

தான் சொல்லும் அனைத்திற்கும் தலையாட்டுகிற ஆட்களை அவர் கூடவே வைத்துக் கொள்வதில்லை. ஒரு கிரியேட்டரா அது அவருக்கு உதவாது. தவறுகளையும், குறைகளையும் ஹைலைட் செய்கிற ஆட்களை மட்டுமே வைத்துக்கொள்ள நினைப்பவர். ஆரோக்கியமான விவாதங்கள் அவரால் வரவேற்கப்படும். யாராக இருந்தாலும் அவரிடம் பேச முடியும். கருத்தைச் சொல்ல முடியும். ஒரு படத்திற்கு மட்டுமே வந்து வேலை செய்துவிட்டுப் போகிற டெக்னீஷியன்களும் அவரிடத்தில் இல்லை.

கடைசி நேரத்தில்கூட சிலர் அவரிடம் அசிஸ்டெண்டாக இணைவார்கள். படம் உருவாகும் அனுபவத்தை வைடாக ஓப்பன் செய்து எப்படியாவது பிறருக்கும் கொடுத்துவிடுவார். ஹி இஸ் வெரி அப்ரோச்சபிள் அண்ட் வெரி ஓப்பன். தான் பேசுவதையே தன் படங்களும் பேச வேண்டும் என நினைப்பவர். சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துக்கொண்டே வருபவர். எந்த நடிகரையும் உடச்சு வேறு ஒன்றாக மாத்துவதிலும் அவர் கில்லி. அவர் நினைக்கும் நடிப்பை அவரால் வாங்கிவிட முடியும். அவரும் நன்றாக நடிப்பார்.

* ரஞ்சித்தின் படத்தில் உள்ள ரிசெர்ச் வொர்க் குறித்து…

அவர் படத்தில் ரிசெர்ச் வொர்க் ஒரு அடித்தளம். ஒரு படம் உணர்வா.. சதையா.. ரத்தமாக நிகழனும்னா, உணர்வும், சதையும், ரத்தமுமாக இருப்பவர்களிடம் இருந்தே வாங்கிப் படமாக்குனாத்தான் அந்த மேஜிக் நிகழும். நிஜ வாழ்க்கையில் இருந்து கதைகளைத் தேடுவதைதான் ஒரு சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸா ஆடியன்ஸ்கிட்ட குளோஸாகக் கொண்டுபோக முடியும். நம் வாழ்க்கையை விட டிராமாட்டிக்கான பிக்‌ஷன் வேறெதுவுமே கிடையாது.

அதில் இருந்து ஒரு சின்ன துண்டை சினிமாவாக்க முயற்சிக்கிறோம். யார் எப்படி பேசுவாங்க, எப்படி நடப்பாங்க என மேனரிசத்தை கொண்டுவர அவர்களை நேரில் பார்த்து, ஸ்டடி செய்து அந்த கேரக்டரை கொண்டு வர முயற்சிப்போம். ரிசெர்ச்சுக்கே நாங்க ஷூட் செட்யூல் மாதிரி கிளம்புவோம். ஒரு செட் ஆஃப் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் ரிசெர்ச்ல இருந்து ஆரம்பிப்பாங்க. இயக்குநர் ரஞ்சித்தும் ரிசெர்ச்சில் பிளசென்டா இருப்பார். எங்களுடன் கூடவே நிறைய நடப்பார். மெட்ராஸ் படத்தில் இருந்தே இது தொடர்கிறது.

சார்பட்டா படத்தை ரிசெர்ச் பண்ணாமல் கற்பனையிலே கொண்டுபோக முடியும். படமும் ஹிட்டாகலாம். ஆனால் யார் அந்தப் படத்தை கொண்டாடணுமோ அந்த மக்கள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். ‘சார்பட்டா’ மக்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து மணிக் கணக்காக பேசி அவர்களிடம் இருந்து தரவுகளைக் குரலாகப் பதிவு செய்தோம். அந்த காலகட்டத்தில் வெளியான புகைப்படங்கள், அது சார்ந்து வெளியான பத்திரிகை செய்திகளைச் சேகரித்தோம். ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களையும் வாழ்விடங்களுக்கே சென்று சந்தித்தோம். ரிசெர்ச்சின் சுவராஸ்யமே இதுதான். அவர்களைப் பார்த்தால்தானே அந்த கேரக்டர்களை உணர்வுபூர்வமாக உருவாக்க முடியும். என்ன இருக்குன்னு முழுசாத் தெரிந்தால்தான் எதை கதைக்குள் வைக்க முடியுமெனவும் முடிவு பண்ண முடியும்.

* ரஞ்சித் படத்தின் பெண் கேரக்டர்ஸ் நாம் எதிர்பார்க்காத ஒன்றை நிகழ்த்துகிறார்களே?

கருத்தியலா பெமினிஸ்ட் என்பதைத் தாண்டி, அவர் எப்பவும் ஸ்ட்ராங்கான பெண்களைப் பார்த்தே வளர்ந்தவர். அவரின் அம்மா, மனைவி, அவரது கிராமத்துப் பெண்கள் என அவரைச் சுற்றியுள்ள எல்லோரும் துணிச்சல் மிக்க பெண்களாகவே இருக்கின்றனர். எனவே துணிச்சலான பெண் கேரக்டர்களை திரைக்குள் கொண்டு வருவது அவருக்கு சுலபமாக இருக்கிறது. காலா படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிகை ஈஸ்வரிராவ் கேரக்டர் தாராவியில் நாங்க பார்த்த பல பெண்களோட சின்ன வெளிப்பாடு. திருநெல்வேலியில் இருந்து புலம்பெயர்ந்து மும்பை மாதிரியான பெரிய நகரத்திற்கு மத்தியில் ஆளுமையோடு வாழ்வதற்கு அந்த பெண்கள் எவ்வளவு ஸ்ட்ராங்கானவர்களாக இருப்பார்கள்.

* ‘சார்பட்டா’ படத்தின் கேரக்டர்ஸ் உங்களைப் பற்றியே பேச என்ன மேஜிக் நிகழ்த்துனீர்கள்?

ரஞ்சித் படத்தில் வேலை செய்யும் நபராய் என்னை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. இயக்குநரின் ரெஃபரென்ஸ் பாயிண்டில் ஒருத்தியாக நானும் இருக்கிறேன். மானிட்டரில் அமர்ந்து பொறுமையாக, இயக்குநர் நினைத்த மாதிரியான ஒரு படத்தை எடுப்பதற்கான அனைத்து புறக்காரணிகளையும் எவ்வளவு சுலபமாக்கிக் கொடுக்க முடியுமோ அதுதான் என் வேலை. செட்டில் ரஞ்சித்திடம், ‘சார் ஜெனி எல்லாரையும் பாடாய் படுத்துது’ என்பார்கள். அவர் ஜாலியாக ‘ஏன் ஜெனி எல்லோரையும் பாடாய் படுத்துற’ என சிரித்துக்கொண்டே கேட்பார்.

ஸ்பாட்ல ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டின் டயலாக்கில் தொடங்கி இயக்குநர் நினைத்த மாதிரி ஆர்ட்டிஸ் நடிப்பைச் சொல்லி ரெடி செய்வது, ஆர்ட்டிஸ்டுடன் டப்பிங் செய்வது இதுவே என் வேலை. இதில் எல்லா ஆர்ட்டிஸ்டுடனும் நான் க்ளோஸாக வேலை செய்துதான் ஆகணும். இதில் டப்பிங் எனக்கு ரொம்ப பிடித்த வேலை என்பதைத் தாண்டி, லாங்வேஜ் பிடிப்பது எனக்கு சுலபமாய் வரும். இந்த செட்டில் 5 வருடமாக இருப்பதால் சென்னை ஸ்லாங் நன்றாகவே வரும். சார்பட்டா படத்தில் பேசிய ஒவ்வொரு டயலாக்கையும் எப்படி பேச வேண்டும் என்பதை தமிழ் பிரபா தோழர் சொல்ல, அதை பெர்ஃபார்மென்ஷோடு வாங்குவது என் வேலையாக இருந்தது.

டப்பிங்கில் எதுவும் பண்ண முடியும். குரல் மூலமே வயதான கேரக்டரைக் கொண்டு வரலாம். சார்பட்டா மாரியம்மா கேரக்டர், டாடி கேரக்டர், பாக்யம் கேரக்டர், டான்ஸிங் ரோஸ் கேரக்டர் என எல்லோருடைய டயலாக்கிலும் ஒரு பெர்ஃபார்மென்ஸ் கொண்டு வந்தோம். ஒரு கட்டத்தில் எல்லாமே சுவராஸ்யமாகிப் போனது. டப்பிங் ஈஸ் எ வெரி பேஷனேட்டிவ் பிராஸஸ்.

நமக்கு இல்லாத ஒரு இடத்தில் நாம் இருக்கிறோம் என நினைக்கிற நிறைய பெண் உதவி இயக்குநர்களின் மனநிலையை நான் உணர்ந்திருக்கேன். ஆனால் நான் அப்படி உணர்ந்ததில்லை. காரணம் இயக்குநர் ரஞ்சித். வேலை செய்வது மேல் பெரிய காதல் வந்து அதுவே தீவிரமாக சினிமாவில் என்னை ஈடுபடுத்திவிட்டது. சினிமாவை ஒரு மீடியமாக ரசிக்கிறேன். என்ஜாய்
பண்றேன்.Post a Comment

Protected by WP Anti Spam