மழையுடன் டெங்குவும் வருது…!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 21 Second

கொரோனாவைப் போலவே கொசுக்களால் உண்டாகும் தொற்றுகளும் சர்வதேச சுகாதார கவலையாக நீடித்து வருகிறது. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 40 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் மட்டும் 98 ஆயிரம் பேர் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் டெங்கு தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதன்மூலம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பும் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. நகரமயமாதல் வேகமடைந்த சூழலில் டெங்குவும் அதற்கிணையாக வேகமெடுத்துள்ளது.

உரிய நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாக டெங்கு இருப்பதால், அலட்சியம் காட்டாமல் இருப்பது நன்மை பயக்கும். அதிலும் கொரோனா பரவலுக்கிடையில் இன்று பருவமழை காரணமாக டெங்குவும் மெல்ல மெல்லப் பரவி வருகிறது. எனவே, டெங்கு குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகளவில் பரவ வேண்டும். ஏடீஸ் என்னும் பெண் கொசுக்கள் கடிப்பதால் வரும் டெங்கு காய்ச்சல் பல்வேறு அறிகுறிகளைக் கொண்டுள்ளது.

மூக்கு ஒழுகுதல், தோலில் லேசான வெடிப்பு, இருமல் மற்றும் கண்கள் மற்றும் மூட்டுகளில் வலி ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். சிலருக்கு தோலில் அரிப்பு, சில இடங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறமாக மாறுதல், பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளையும் காட்டும்.
டெங்கு காய்ச்சலின் கடுமையான வகை, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது கடுமையான ரத்தப் போக்கு, ரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் ஆரம்ப நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் 4 முதல் 7 நாட்களுக்குப் பிறகு தொடங்குகின்றன. சிலருக்கு அறிகுறிகள் லேசானதாகவும் இதர காய்ச்சலுக்கான அறிகுறிகளாகவும் அல்லது இதர நோய்த் தொற்றாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. சிறு குழந்தைகள் மற்றும் ஏற்கனவே தொற்று நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு, இளைஞர்கள் மற்றும் பெரியவர்களைக் காட்டிலும் இந்த நோயின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இந்த அறிகுறிகள் சுமார் 10 நாட்கள் நீடிக்கும்.

திடீரென அதிக காய்ச்சல் (106 டிகிரிக்கு அதிகமாக) கடுமையான தலைவலி, நிணநீர் சுரப்பிகளில் வீக்கம், மூட்டு மற்றும் தசைகளில் கடுமையான வலி, சாதாரண காய்ச்சல் ஏற்பட்ட தினத்தில் இருந்து 2 முதல் 5 நாட்கள் வரை தோலில் வெடிப்பு ஏற்படுதல், குமட்டல், வாந்தி, ஈறுகள் மற்றும் மூக்கு வழியாக ரத்தக்கசிவு, தோலில் லேசான சிராய்ப்பு, வலிப்பு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

டெங்கு காய்ச்சலை கண்டறிதல்

நோய் பாதிப்பு குறித்து கண்டறிய மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மேற்கொள்வர். டெங்கு நோயால் ஏற்படும் ஆபத்து என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அது குறித்த எச்சரிக்கை அறிகுறிகளை பொதுமக்கள் தெரிந்து கொண்டால், டெங்குவால் ஏற்படும் இறப்புகளை இன்னும் தடுக்க இயலும்.
ஆய்வக பரிசோதனைகள் இல்லாமல் நோய் தொற்றை கண்டறிவது என்பது கடினம் ஆகும். ஏனெனில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் சிக்குன்குனியா போன்ற பிற நோய்களைப் போலவே இருக்கலாம்.

இதை கண்டறிய கீழ்க்கண்ட 2 முக்கியமான சோதனைகள் அவசியமாகும்.மூலக்கூறு சோதனை என்கிற பிசிஆர் (பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்) சோதனை மிகவும் நம்பகமான வழிமுறையாகக் கருதப்படுகிறது. ஆன்ட்டிபாடி டெஸ்டிங் என்கிற சோதனை நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என்பதற்கான விளக்கத் துடன் ஆன்டிபாடி டைட்டராக அறிவிக்கப்படலாம்.

ஆரம்ப ரத்த மாதிரியில் கண்டறியப்பட்ட டெங்கு ஆன்ட்டிபாடிகளுக்கான நேர்மறை ஐஜிஎம் மற்றும் ஐஜிஜி சோதனைகள், ஒருவர் சமீபத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிய உதவுகிறது.

சிகிச்சை முறை

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும், அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் ஏராளமான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாராசிட்டமால் மருந்தை காய்ச்சலை குறைக்கவும், மூட்டு வலியை குறைக்கவும் எடுத்துக் கொள்ளலாம்.
நோய் தாக்கத்திற்கு பின் ஒருவர் 24 மணி நேரத்திற்கு பிறகு மோசமாக உணர்ந்தால், ஒருவருக்கு காய்ச்சல் வருவதும் போவதுமாக இருந்தால், அது குறித்த
பிரச்னைகளை கண்டறிய அவர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

தடுப்பு முறை

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான எந்த தடுப்பூசியும் இல்லை. இருப்பினும் நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழி கொசுக்கள் கடிப்பதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதாகும். இது அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு, கொசுக்களின் உற்பத்தியையும் குறைக்கும். ஒருவருக்கு டெங்கு இருப்பதற்கான அறிகுறி தென்பட்டால் அவர் உடனடி யாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாத வகையில் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் யாராவது ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், மற்ற குடும்ப உறுப்பினர்கள் கொசுக்களிலிருந்து தங்களை பாதுகாக்கும் முயற்சிகள் குறித்து குறிப்பாக விழிப்புடன் இருப்பது அவசியமாகும். டெங்கு பாதிக்கப்பட்டவரை கடிக்கும் கொசுக்கள் அந்த வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தொற்றுநோயை பரப்பக் கூடும். எனவே, விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொந்த நாட்டின் ஏதிலிகள்!! (கட்டுரை)
Next post கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு!! (மருத்துவம்)