தொடரும் மர்மம் !! (கட்டுரை)

Read Time:9 Minute, 47 Second

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக சிறுநீரக நோயின் தாக்கத்துக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மணலாறு ஆகிய பிரதேசங்களிலேயே சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன​ர். முன்னர், இந்தப் பிரதேசங்களில் இவ்வாறான நோயின் பாதிப்பு இருந்திருக்கவில்லை. ஆனால், தற்போது சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதை வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது.

மல்லாவி, மணலாறு ஆகிய இரண்டு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளிலும் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சிறுநீரக நோயின் தாக்கம் அதிகரித்திருக்கின்றது.

மல்லாவி பிரதேசத்தில், 2015ஆம் ஆண்டு 143 பேரும், 2016ஆம் ஆண்டில் 197 பேரும் 2017ஆம் ஆண்டில் 224 பேரும் 2018ஆம் ஆண்டில் 362 பேரும் சிறுநீரக நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

வெலிஓயா பிரதேசத்தில், 2015ஆம் ஆண்டில் 251 பேரும் 2016ஆம் ஆண்டில் 353 பேரும் 2017ஆம் ஆண்டில் 425 பேரும் 2018ஆம் ஆண்டில் 411 பேரும் இவ்வாறான நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை, இந்த இரண்டு பிரதேசங்களிலும் அசாதாரணமாக அதிகரித்துவரும் சிறுநீரக நோய்க்கான காரணம் கண்டறியப்படாவிட்டாலும், அது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோய்க்கான பிரதானமான காரணம், குடிநீராக இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அது, இன்னமும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரில் அதிகரித்திருக்கும் நுண்ணங்கிகளும் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் இராசாயனங்களின் அதிகரிப்பும் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களும், இவ்வாறு சிறுநீரக நோய் அதிகரித்து வருவதற்குக் காரணமாக அமைகின்றது எனச் சந்தேகம் ​தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வயது வேறுபாடுகளின்றி சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதும், இன்றுவரை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆனாலும், பெருமளவான இப்பிரதேச மக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ப் பாவனையில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறுநீரக நோய்ப் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்னர், உரிய மருத்துவ ஆலோசனைகள் இல்லாமல், தாமாக மருந்தகங்களில் வாங்கிப் பயன்படுத்திய மருந்துகளின் பின்விளைவும் இவ்வாறாக சிறுநீரக நோய்க்கு ஒரு காரணியாக அமையும் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், மக்கள் மத்தியில் சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக மிக அவசியமாகும். இவ்வாறான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும், எல்லோரிடத்திலும் உள்ளது.

இன்று நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொவிட் -19 பெருந்தொற்கைக் கூட, கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான விழிப்புணர்வுகளும் பொறுப்புகளும் மிகமிக அவசியமாகும்.

முல்லைத்தீவு விவசாய மாவட்டமாக காணப்படுவதுடன், 80 சதவீதமான மக்கள் விவசாயத்தையே தமது முழுநேரத்தொழிலாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவசாயத்தின் மூலம், அதிக இலாபத்தை ஈட்டவேண்டும் என்ற எண்ணம், பிரதான இலக்காகக் காணப்படுகின்றதே தவிர, நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய வேண்டும், சுகதேகிகளாக வாழ வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இத்தகைய போக்கு, எதிர்காலத்தில் வெவ்வேறு நோய்களின் தாக்கங்களுக்கும் வழிவகுக்கலாம்.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள், சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி விவசாயத்தை முன்னெடுத்த அதேநேரம், போதுமான அளவு உரிய விளைச்சலையும் பெற்று, நல்ல தேக ஆரோக்கத்தையும் கொண்டிருந்தார்கள். அவர்களில் அநேகர், யானையை அடக்கும் பலம் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என சொல்லப்படுகின்றது. இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன என்பதை, எங்கள் மூதாதையர்கள் மூலமும் அறிந்திருக்கின்றோம்.

இப்போது, விவசாயத்தில் நவீன வளர்ச்சி கண்டாலும் இவ்வாறான தொற்றா ​ நோய்த் தாக்கங்கள், போசாக்கு குறைபாடுகள், கண்பார்வை குறைபாடுகள் எனப் பல்வேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

இதற்கு முழுக்க முழுக்க மனிதனின் செயற்பாடுகளே காரணமாக அமைகின்றன. தற்போது சேதனப் பசளைகளினுடைய பயன்பாட்டை அதிகரித்தல், இரசாயன பூச்சி நாசினிகளை அளவுக்கதிகமாகப் பாவிப்பதைக் குறைத்தல் போன்றவற்றில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை எவரும் ஏற்றுக் கொள்ளத்தயாராக இல்லை என்பதும் கவலைக்குரிய விடமாகக் காணப்படுகின்றது. இத்தகைய இரசாயனப் பயன்பாடு, எதிர்காலத்தில் நிலக்கீழ் நீரை மேலும் மாசுபடுத்தும் என்பது நிதர்சனமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறு நீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2015ஆம் ஆண்டு, மல்லாவி, மணலாறு ஆகிய பிரதேசங்களில் இரண்டு சிறுநீரக வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இன்றுவரை அதற்கான போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்புகள், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, செட்டிகுளம் வைத்தியசாலை ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சைகள் இடர்பாடுகள் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது, குறிப்பாக, ஒருசிலருக்கு வாரத்தில் மூன்று நாள்கள் கூட இரத்த சுத்திகரிப்பு முன்னைடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அதிக போக்குவரத்து செலவுகள் உட்பட, சிரமங்களை எதிர் கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. ஆனாலும் இன்றைய சூழலில், அதிகளவில் நோய்த் தொற்று ஏற்படக் கூடியவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், மேலும் பல வைத்தியசாலைகளை அமைக்கவேண்டும். இருக்கும் வைத்தியசாலைகளை மேம்படுத்தவேண்டும் என்று அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுகின்றனர். இதற்கான வைத்தியசாலைகளை நிறுவுவதோ மேலும் வைத்திய வசதிகளை அதிகரிப்பதோ எதிர்காலத்தில் இதற்கான தீர்வாக அமையாது.

மாறாக, இராசாயனப் பயன்பாட்டைக் குறைத்தல், நஞ்சற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்ளுதல், நிலக்கீழ் நீரைப் பாதுகாத்து சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கு வழிசெய்தல், பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை கையாளுதல் ஊக்குவித்தல் என்பனவே, இதற்குச் சிறந்த தீர்வாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)
Next post ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)