இரவில் நடமாடும் சவப்பெட்டிகள் !! (கட்டுரை)

Read Time:10 Minute, 49 Second

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்ற பாடல் வரிகள் பொய்மையாக்கப்படும் காலமிது. ஆறடி நிலமல்ல, ஒரு சவப்பெட்டிகூட சொந்தமில்லாத நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கிறது.

ஒருவர் இறந்துவிட்டால், அவரது கடந்தகால செயல்களைப் புகழ்பாடி, பாடைகளை அலங்கரித்து, தத்தமது மதங்களின் பிரகாரம் இறுதிப் பிரார்த்தனைகளைச் செய்து, ஊரவர்களே ஊர்வலம் சென்று, பூக்கள் தூவி, அடக்கம் செய்த காலம் மலையேறிவிட்டது.

யாரோ தெரியாத நால்வர், எவ்விதமான முணுமுணுப்புகளும் இன்றி, தகனசாலைக்குள் சவப்பெட்டிகளை திணித்துகொண்டிருக்கும் நிலைமையே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. பல தகனசாலைகள், 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி, சொந்தங்களைக் கூட அநாதையாக விட்டுச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரோனா மரணங்கள் எத்தனைதான் நிகழ்ந்தாலும் ஐந்து வயதுச் சிறுமியை அநாதையாக்கிவிட்டு, அவளது பெற்றோரை, திருமண நாளன்றே கொரோனா கொன்றொழித்த சம்பவம், ஒவ்வொருவரின் மனங்களையும் உருக்கிக்கொண்டே இருக்கும்.

கிரிபத்கொடையைச் ​சேர்ந்த 36 வயதுடைய தனஞ்செய அனுருத்த என்ற ஆங்கில ஆசிரியரும் அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, பிறந்த சிசு முதல், இரண்டரை வயது, 12 வயதுச் சிறுமிகளென, வயது வித்தியாசங்கள் இன்றி, கொரோனாவின் மரணங்கள் எகிறிகொண்டே ​போகின்றன.

இப்படிச் சென்று கொண்டிருந்தால், நம் கண் முன்னே நிகழும் மரணங்களை எண்ணுவதா அல்லது நமக்கான மரணத்துக்கு நாள்களை எண்ணுவதா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு, நாளுக்கு நாள் வெளியாகும் கொவிட் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தற்காலத்தில் பிணவறைகள், மின் தகனம், சுடுகாடு, இடுகாடு போன்ற சொற்பதங்களுக்கு இலங்கை வாழ் மக்கள் பழகிவிட்டனர். ஒரு சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட மரணங்களைத் தமது கண்ணெதிரே கண்டுவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரை அவர்கள் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையிலேயே, ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தமது கொவிட் அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தெரியப்படுத்தி வருகின்றனர்.

சிலர், போலியான புகைப்படங்களுடன் கதைகளைக் கட்டி மக்களை பீதியடையச் செய்துவிடுகின்றனர். அதில், அவர்களுக்கு ஓர் இன்பம். பயப்பீதியை கிளப்பும் அவ்வாறானவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும். அத்தண்டனையே ஏனையோருக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

உருக்கமான பதிவுகள் உண்மையில் நெகிழச் செய்கின்றன. அனைத்தும் மரண பீதியை ஏற்படுத்துகின்றன. இலங்கை, இடுகாடாக மாறுவது வெகு தொலைவில் இல்லை என எச்சரித்து நிற்கின்றன.

அவற்றுக்கு ஏற்றால் போலவே, நாட்டில் இடுகாடுகளுக்கான இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், இருக்கும் இடுகாடுகளை விஸ்தீரணப்படுத்தும் செயற்பாடுகளும் புதிய இடுகாடுகளை ஏற்படுத்துவதற்கான இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை போதாதென, சவப்பெட்டிகளைப் பெறுவதற்கான அல்லல்களுக்கும் சிலர் உள்ளாகி வருகின்றனர்.

சிலர், இலவசமாக சவப்பெட்டிகளை செய்து விநியோகிக்கின்றனர். எரியத்தானே போகிறது. என்றெண்ணும் பலரும் காட்போட்களில் பெட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இறுதி மரியாதை என்பதற்கு அப்பால், எவ்வளவு விரைவாக பிணங்களை அகற்றவேண்டுமோ, அவ்வளவு விரைவாக பிணங்கள் அகற்றப்படுகின்றன.

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாத் தொற்றால் மரணித்தால் 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய்க்கு பிரேதப் பெட்டிகளை உங்களுக்காகக் கொள்வனவு செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை என பேஸ்புக்கில் பெண்ணொருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார்.

அதற்குச் சாட்சியாக அப்பதிவில் இரண்டு புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார். அதாவது, வைத்தியசாலைக்கு முன்பாக, மலிவான சவப்பெட்டிகளை ஏற்றியவாறு இரு ஓட்டோக்கள் காத்திருக்கின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் பணிபுரியும் பெண்ணொருவரே, தனது பேஸ்புக்கில் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

கொழும்பு வோர்ட் பிளேசில் பிரேத அறை அமைந்துள்ள பகுதி மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிவரை பிரேத ஊர்வலம் நடக்கும் பகுதியாகக் காணப்படுகின்றது என அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அப்பதிவு இவ்வாறு நீண்டு செல்கின்றது;

“மலிவான விலையில் கிடைக்கும் பிரேதப் பெட்டிகளை ஓட்டோக்களில் கொண்டுவந்தனர். இவ்வாறான பிரேதப் பெட்டிகளை அரசாங்கம் வழங்குவதில்லை. பிரேதப் பெட்டிகள் விற்கும் கடைகளில் பிரேதப் பெட்டிகள் இல்லை அறிய முடிந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், எதிர்காலத்தில் மிகவும் மலிவான பிரேதப் பெட்டியில் இறுதி ஊர்வலத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் கூட உங்களுக்கு இல்லாமல் போகலாம்.கோடி ரூபாய்க்கு பிரேதப் பெட்டியைக் கொள்வனவு செய்வதற்கான வசதியிருந்தால் கூட, எங்களால் எங்கள் நெருங்கிய நண்பருக்கு கௌவரமான பிரியாவிடையை வழங்க முடியாது.

இன்று நீங்கள் உயிருடன் இருக்கக்கூடும்; நாளை நீங்கள் அவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இணையக்கூடும். கொரோனாவுடனான இந்த மோதல் முடிவுக்கு வரும் நேரம் எங்களைச் சுற்றியுள்ள பலர், சொல்லாமல் போயிருப்பார்கள்’ என மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கொரோனா தொற்றுக்குள்ளான பலர் எவ்வித மருத்துவக் பராமரிப்புகளும் இன்றி வீடுகளுக்குள்ளேயே மரணிக்கின்றனர்.

“பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமை நாட்டின் பல வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ளன. கொவிட் சடலங்களை வைப்பதற்கான இடமின்மையால், குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் பெட்டிகளுக்குள்ளும் சடலங்கள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்ஸ நகர சபையால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ‘கார்ட்போட்’ சவப்பெட்டி தயாரிப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. சவப்பெட்டிகள் உட்பட சடலம் வைக்கப்படும் பைகளும், தனவந்தர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்காக பெட்டிகள் மற்றும் பைகள் காத்தான்குடியிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

நிலைமை இவ்வாறு இருக்கையில், நாட்டை முழுமையாக முடக்கி, கொரோனா தொற்றை ஒழிக்க, தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘ஒழுக்கம்’ எனும் விடயத்தை ஒரு மனிதன், சுயமாக யோசித்து நடந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடு விதித்தால்தான் கட்டுப்படுவேன் என்று நடந்தால், அது ஒழுக்கம் ஆகாது. எனவே, சிறந்த சுகாதார ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, தனி மனித சுகாதாரத்தைப் பலப்படுத்தி, தனக்கும், தன் சுற்றத்தாருக்கும் துன்பம் தராமல் நடப்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன் சொந்த ஹோட்டலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற முதலாளி பிறகு நடந்ததை பாருங்க!! (வீடியோ)
Next post கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… !! (அவ்வப்போது கிளாமர்)