By 2 September 2021 0 Comments

தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் கண்டிப்பா எதையும் சாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

ரிட்டயர் ஆகிட்டோம்… இனி என்ன செய்றதுன்னு பலர் யோசிக்கும் இந்த காலத்தில் அந்த நாட்களையும் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னை ராமாபுரத்தில் சிறிய அளவில் ‘என் பார் நொறுக்கல்ஸ்’ என்ற பெயரில் ஸ்னாக்ஸ் கடை ஒன்றை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சரஸ்வதி. ‘‘பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாரும் துரித உணவை தான் அதிகம் விரும்புறாங்க.

அதைவிட மேலும் நல்ல சுவையுடன் ஆரோக்கியமான நம்ம பாரம்பரிய உணவுகள் இருக்குன்னு பலருக்கு தெரிவதில்லை. அந்த உணவுகளை தான் மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கேன்’’ என்று கூறும் இவர் சேலத்தின் பாரம்பரிய ஸ்னாக்ஸ் உணவான தட்டுவடை, நொறுக்கல்ஸ் மட்டுமில்லாமல் சத்துமாவு உருண்டை, சூப் இட்லி, சிறுதானிய பிஸ்கெட் என பல ஆரோக்கியமான உணவுகளை வழங்கி வருகிறார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சேலம் தான். என் கணவரும் ராசிபுரம் நாமகிரிப்பேட்டை என்பதால், திருமணமாகி அங்கே செட்டிலாயிட்டோம். மேலும் எங்க அப்பா வீட்டிலும் சரி என் கணவரும் சரி இருவருக்குமே மளிகை கடை தான் பிசினஸ். கணவருக்கு உதவியாக நானும் சேர்ந்து கடையை பார்த்துக் கொண்டேன். என் மகன் சாஃப்ட்வேர் என்ஜினியர். அவர் படிப்பை முடிச்சிட்டு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டார். எங்களுக்கு அங்க வியாபாரம் இருந்ததால் நாங்க அங்கேயே தான் இருந்தோம்.

மேலும் எங்க ஊரில் பெண்கள் அனைவரும் சேர்ந்து வாசவி வனிதா கிளப் என்ற பெயரில் ஒரு குழு ஆரம்பிச்சு நடத்தி வந்தோம். இந்த குழுவின் முக்கிய நோக்கமே இதில் உறுப்பினரா இருக்கும் பெண்களின் தனித்திறமையை வெளியே கொண்டு வருவது தான். வருடந்தோறும் ஆண்டு விழா நடக்கும். அதில் அவர்களின் திறமையை எல்லாம் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருவோம். மேலும் அதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும் படி செய்து கொடுத்திருக்கேன். இது மட்டுமில்லாமல் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்துவோம்.

இப்படி நான் ஒரு பக்கம் பிசியாக இருக்க, என் கணவர் தொழில் மற்றும் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என அவர் மறுபக்கம் பிசியாக இருந்தார். இதற்கிடையில் சென்னைக்கு வந்த என் மகன், தனியாக ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் பி.ஜி ஹாஸ்டல் ஒன்றை ஆரம்பித்தார். அது நன்றாக செயல்பட… அதைத் தொடர்ந்து மற்ெறாரு கிளையும் ஆரம்பித்தார். அந்த சமயத்தில் இரண்டு கிளைகள் மற்றும் வேலை என எல்லாவற்றையும் அவர் ஒருவரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் எங்களை சென்னைக்கு வரும்படி கூறினார்.

அங்கு தொழில், வீடு எல்லாவற்றையும் விட சொந்த ஊர்… இதை எல்லாம் விட்டு விட்டு வர எங்களுக்கு மனசில்லை. ஆனால் மகன் ரொம்பவே வற்புறுத்தியதால்… நானும் என் கணவரும் நன்றாக ஓடிக்கொண்டிருந்த கடையை எல்லாம் மூடிவிட்டு சென்னைக்கு வந்துட்டோம். இங்க வந்த பிறகு ஊரும் புதுசு. எங்கேயும் தனியா வெளியே போக முடியல. எங்க இருவருக்குமே கையை கட்டிப் போட்டது போல இருந்தது. சக்கரம் கட்டிக் கொண்டு பறந்த கால்கள் அப்படியே முடங்கி போனது போல் உணர்ந்தோம். என் மகனோ இங்கே ஒரு மளிகை கடை ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னார்.

ஆனால் என் கணவர் மறுத்துட்டார். காரணம் அதை பார்த்துக் கொள்ளவும், பொருட்களை வாங்க கடைக்கு இந்த வயசில் அலைய முடியாது. ஹாஸ்டல் வேலை போக மாலை நேரத்தில் ஒரு நான்கு ஐந்து மணி நேரம் ஏதாவது தொழில் செய்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னார். ஆனால் அந்த சமயத்தில் என்ன செய்வதுன்னு தெரியல’’ என்றவர் இந்த கடையினை ஆரம்பித்து ஐந்து வருடங்களாகிறதாம்.

‘‘நானும் என் கணவரும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் கோயில் அல்லது பூங்காவிற்கு மாலை நேரத்தில் செல்வது வழக்கம். அப்போது அங்கு ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடலாமான்னு பார்த்தா எங்கு பார்த்தாலும் பானி பூரி அல்லது சமோசா கடைகள் தான் இருக்கும். எங்க ஊர் ஸ்பெஷல் தட்டுவடை செட், நொறுக்கல்ஸ் எல்லாம் கிடைக்கவே இல்லை. சேலத்தில் அந்த உணவு கடைகள் தான் நிறைய இருக்கும்.

அதை சாப்பிடாமல் எங்க ஊர் மக்களுக்கு அன்றைய தினம் முழுமை அடையாது. அதனால் நான் வீட்டில் இதை தயார் செய்து எங்க ஹாஸ்டல் பசங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்க சாப்பிட்டு ரொம்ப நல்லா இருக்கு, ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு போர டிச்சிடுச்சு. இது அம்மா கையால் சாப்பிடுவது போல் இருக்குன்னு சொல்வாங்க. அதை கேட்கும் போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.

எல்லாவற்றையும் விட நல்ல உணவு கொடுத்த திருப்தி இருந்தது. அப்பதான் என் கணவரும் மகனும் சேர்ந்து… இதையே ஏன் ஒரு கடைபோல ஆரம்பிக்கக்கூடாதுன்னு கேட்டாங்க. எனக்கும் சரின்னு பட, எங்க வீடு பக்கத்திலேயே சின்னதா ஒரு கடை ஆரம்பிச்சோம். முதலில் நானே வீட்டில் தட்டுவடை முறுக்கு எல்லாம் செய்தேன். அதே பக்குவத்தில் செய்தாலும், எங்க ஊரில் கிடைக்கும் சுவையை கொண்டு வர முடியல. எங்க ஊரில் இதை சிறு தொழிலா நிறைய பெண்கள் வீட்டில் செய்து கடைக்கு விற்பனை செய்வாங்க.

அவங்களிடம் தட்டுவடை, முறுக்கு எல்லாம் ஆர்டர் கொடுத்தேன். இதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வருமானம் ஏற்படுத்தி தரமுடியும்ன்னு நினைச்சேன். இன்று வரை சேலத்தில் இருந்து தான் இதனை வாங்கி வருகிறேன். தட்டுவடை மட்டுமில்லாமல் ஹெர்பல் பால் எங்க கடையில் ஃபேமஸ். ஹெர்பல் பால் மிக்ஸ் கொல்லிமலையில் இருந்து ஒரு சித்தரின் சிஷ்யர் அவர்கள் பரம்பரை பரம்பரையாக தயாரித்து வருகிறார்கள். நாங்க மளிகை கடை வைத்திருந்த போது பேக்கெட்டாக விற்பனை செய்தோம். இப்போது எங்கள் உணவகத்திற்கு பயன்படுத்துறோம்.

கேட்பவர்களுக்கு பேக்கெட்டாகவும் தருகிறோம். இதில் 18 மூலிகைகள் அடங்கி இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் நல்லது. எங்க கடையின் ஸ்பெஷல் தட்டுவடை செட். இரண்டு தட்டுவடைக்கு இடையே காய்கறி, வெங்காயம், புதினா மற்றும் காரச்சட்னி, எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து சாண்விட்ச் போல் தறோம். ஃப்ரெஷ் காய்கறி உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மேலும் இனிப்பு, புளிப்பு, காரம் எல்லாம் கலந்த ஒரு சுவையான உணவு. அடுத்து நொறுக்கல்ஸ், முறுக்கு, தட்டுவடையை நொறுக்கி அதில் வேர்க்கடலை காய்கறி, மசாலா பொரி எல்லாம் சேர்த்து தறோம்.

சூப் இட்லி. பொதுவா குழந்தைகளுக்கு இட்லி தோசைன்னா பிடிக்காது. அதையே கொஞ்சம் வித்தியாசமா கொடுக்க நினைச்சேன். மினி இட்லியில் சூப் மற்றும் நெய் சேர்த்து தரும் போது விரும்பி சாப்பிடுறாங்க. இந்த சூப் நானே தயார் செய்தது. இது சாம்பார் அல்லது ரசம் மாதிரி இல்லாமல் வேறு ஒரு சுவையில் இருக்கும். இது தவிர மசாலா பொரி, சிறுதானிய பிஸ்கெட், பிஸ்கெட் சாண்விட்ச், வெரைட்டி செட் தோசை, சத்துமாவு உருண்டை, தினம் ஒரு சூப் என 13 வகை உணவுகளை பரிமாறுகிறோம்’’ என்றவர் இளம் தலைமுறையினருக்காக ஸ்பெஷல் டிஷ் ஒன்றை தயாரித்துள்ளார்.

‘‘இங்க எல்லாம் சைவம் மற்றும் எந்த வித சுவையூட்டிகள் மற்றும் ரசாயன பொருட்கள் கலப்பதில்லை என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடும்பமா சாப்பிட வராங்க. இவங்களை எல்லாம் திருப்திப் படுத்த முடிந்த என்னால் இளைய தலைமுறையினரை மட்டும் இந்த உணவுப் பழக்கத்திற்கு கொண்டு வர முடியவில்லை. அவங்க பானி பூரி இருக்கான்னு கேட்டு வராங்க. இல்லைன்னு சொன்னதும் அப்படியே திரும்பி போயிடுறாங்க. இந்த உணவை சுவைத்து பார்க்கணும்ன்னு எண்ணம் வருவதில்லை.

என்ன செய்யலாம்ன்னு யோசித்து ஒரு புது டிஷ் உருவாக்கினேன். அதற்கு கேன்பெஸ் சாட்ன்னு பெயர் வச்சேன். கப் கேக்ஸ் வடிவில் கோதுமை மாவில் சின்ன கப் செய்து அதில் சாட் உணவுகள், சீஸ், மேயனீஸ் எல்லாம் வைத்து கொடுத்தேன். அப்படியே பானி பூரி போல சாப்பிட வேண்டியது தான். கோதுமையில் கப் செய்வதால் உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. இப்போது டீன் ஏஜ் மாணவர்களும் கேங்கா சாப்பிட வராங்க. அவங்களின் ஃபேவரெட் கேன்பெஸ் சாட் தான்’’ என்றவர் தற்போது இதனை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

‘‘ஐந்து வருஷம் முன்பு பொழுதுபோக்காகத்தான் சிறிய அளவில் ஆரம்பிச்சேன். அப்போது எங்க கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு எங்க உணவின் சுவை பிடித்து போக, சென்னை வர்த்தக மையத்தில் ஸ்டால் அமைச்சு தர ஏற்பாடு செய்தார். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தான் அங்க ஸ்டால் போடுவேன். அங்கு எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்வு இருக்கும் என்பதால், விற்பனையும் நன்றாக இருந்தது. புதிதாக இருப்பதால் மக்களும் விரும்பி சாப்பிட்டாங்க. அங்கு ஒரு முறை டி.எல்.எஃப் நிறுவனத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவங்களுக்கு எங்க உணவு ரொம்பவே பிடிச்சிடுச்சு. தங்களின் நிறுவனத்தில் ஸ்டால் வைக்க சொல்லிக் கேட்டாங்க. அவர்களின் ஐந்து கிளைகளில் நாங்க ஸ்டால் வச்சிருந்தோம். ஆனால் கொரோனா வந்த நாள் முதல் எல்லாமே தடைப்பட்டு போனது. இப்போது மீண்டும் பழைய நிலை திரும்பியதால், எங்க வீட்டுக்கு அருகே ஒரு சிறிய இடத்தில் கடை ஆரம்பிச்சி இருக்கேன்.

இதைப் பார்த்து ரெடீஷ் நிறுவனத்தினர் அவர்களுடன் இணைந்து செயல்பட கேட்டனர். எங்களுக்கும் அது நன்றாக பட்டதால், அவர்களுடன் இணைந்து பிரான்சைசி துவங்கும் எண்ணத்தில் இருக்கிறோம். இதன் மூலம் பல பெண்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னைப் பொறுத்தவரை தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் கண்டிப்பா முன்னேற முடியும்’’ என்றார் சரஸ்வதி.Post a Comment

Protected by WP Anti Spam