By 3 September 2021 0 Comments

விலங்குகள் என்னோடு பேசும்!! (மகளிர் பக்கம்)

நான் ஒரு மீடியம். உங்கள் பெட் அனிமல் சொல்லும் தகவலை வாங்கி உங்களிடம் கொடுக்கிறேன். மனிதர்களிடம் நாம் எப்படி தொடர்பு கொள்கிறோமோ அதேபோல்தான் விலங்குகள், தாவரங்கள் என எவற்றுடனும் என்னால் பேச முடியும் என நம்மை அசரடித்த ஜனனி சமூக வலைத்தளங்களில் ‘இயற்கையின் மொழி’ என்கிற பெயரில் தன்னை ஒரு மீடியமாக அடையாளப்படுத்தி இருக்கிறார்.

இறந்தவர்களின் ஆன்மாக்களோடு பேசுவதும், நான் செய்வதும் ஒன்றுதான்.என்றாலும், நான் மிருகங்களை மட்டுமே கையில் எடுத்துள்ளேன். இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றாலும், நமக்கு எந்த அளவு அதில் நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் அவற்றிடம் இருந்து தகவலைப் பெற முடியும் எனும் ஜனனி இளங்கலையில் டபுள் டிகிரியுடன், எம்.எஸ்.ஸி சைக்காலஜியும் முடித்து, ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றையும், தனது சகோதரருடன் செய்து இயக்கி வருகிறார்.

விலங்குகளோடு தொடர்புகொள்ள அவை உயிரோடுதான் இருக்க வேண்டுமென்றில்லை, இறந்துவிட்டாலும் அதன் ஆன்மாவோடு ஆத்மார்த்தமாய் என்னால் பேச முடியும். இதற்குப் பெயர் டெலிபதி. இது ஒரு கிரேக்க வார்த்தை. டெலி என்றால் நீண்ட இடைவெளி. பதி என்றால் எமோஷன், பீலிங்ஸ், பெர்பெக்டிவ் என்ற சொற்கள் இதற்குப் பொருந்தும். அதாவது தூரமாக இருந்த நிலையிலே உணர்வுகளைப் பரிமாறுவது.

இதற்கு சரியான உதாரணம், பிறந்த குழந்தையும் அதன் தாயும்தான். குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன்பே அம்மா குழந்தைக்கு பசிக்கிது, தூக்கம் வருது, உடம்பு சரியில்லை எனச் சொல்வதெல்லாம் டெலிபதி மூலமாக உணர்ந்தேன். நம் எண்ணங்களைப் பறிமாறிக்கொள்ள டெலிபதியில் மொழி தேவை இல்லை. அவர் நினைப்பதையே அப்படியே நாமும் உணர்ந்திருப்போம். எனவே மீடியத்திற்கு மொழிகள் கிடையாது.

இன்பில்டா எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற ஒரு திறன்தான் இதுவும். இதை நான் எனக்கு சூப்பர் பவர் இருக்கு என்றெல்லாம் நினைக்கவில்லை. அதேபோல், விலங்குகள் சொல்வதை நாம் எந்த அளவு புரிந்து சொல்கிறோம் என்பதிலும் நூறு சதவிகிதமும் துல்லியமானதைக் கொடுக்க முடியாது. அவைகளிடம் இருந்து வாங்கிக் கொடுப்பதில் சில நேரம் சரியாகக் கேட்காமல் அல்லது சரியாகப் புரியாமல் அர்த்தங்கள் இங்கு சற்றே மாறலாம். அவ்வளவே.

இந்த ஆர்வம் தங்களுக்கு எப்படி வந்தது? என்ற நம் கேள்விக்கு. திருப்பூர் என் சொந்த ஊர். அப்பாவுக்கு விலங்குகளை வளர்ப்பது ரொம்பப் பிடிக்கும். அவை குட்டிகளை ஈன்றால்கூட யாரிடமும் கொடுக்க மாட்டார். எங்கள் வீட்டிலேயே 15 நாய்கள், 20 குதிரைகள், மாடுகள், முயல், வாத்து என விதவிதமான பறவைகள் இருந்தன. பாம்பைக்கூட அப்பா வளர்த்து வந்தார் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியினை நமக்குக் கொடுத்தவர், இதனாலே சின்ன வயதில் இருந்தே எந்த விலங்குகளோடும் சட்டெனப் பழகும் பழக்கம் எனக்கும் வந்தது என்கிறார். தொடர்ந்து விலங்குகள், பறவைகளோடு, இயற்கையையும் நேசிக்கத் தொடங்கினேன்.

நானும் ஜின் எனப் பெயரிட்டு நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தேன். அவன் என்னுடன் ஏழு ஆண்டுகள் கூடவே இருந்தான். திடீரென ஒரு நாள் இறந்துவிட்டான். அவன் இறப்பதற்கு முன்பிருந்தே என்னுடன் ஆத்மார்த்தமாய் பேசிக்கொண்டே இருந்தான். ஆனால் அவன் இறக்கப் போகிறான், அதனால்தான் என்னோடு பேசுகிறான் என்பதை நான் அப்போது உணரவில்லை. அவன் சொல்வதை வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு புத்தாண்டு நள்ளிரவில் அவனை கட்டி அணைத்து வாழ்த்துச் சொன்னபோது, அடுத்த புத்தாண்டுக்கு நானிருக்க மாட்டேன் என்பது மாதிரியான ஒரு குரல் அவனிடத்திலிருந்து எனக்குக் கேட்டது.

நான் அழுதேவிட்டேன். ஆனால் இந்தக் குரல் பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அடுத்த மாதமே, பிப்ரவரியில் டிக் ஃபீவர் வந்து என்னுடைய ஜின் இறந்தேவிட்டான். என்னால் அவனுடைய இழப்பை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அடுத்த புத்தாண்டுக்கு இருக்கமாட்டேன்’ என அவன் சொன்ன குரல், மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே எனக்கு இருந்தது. என்னைத் தூங்கவிடாமல் ஏதோ ஒன்று துரத்திக் கொண்டே இருக்க, அனிமல் லாங்வேஜ் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன்.

அப்போதுதான் அனிமல் கம்யூனிகேஷன் குறித்தும் எனக்குத் தெரிய வந்தது. அதில் இருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். என் வளர்ப்பு நாயான ஜின் புகைப்படத்தை அனுப்பி அவர்களைத் தொடர்பு கொண்டேன். அப்போது ஜின்னுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையில் நடந்து பல நிகழ்வுகளை மீடியம் அவனிடத்தில் கேட்டுச் சொன்னது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. மேலும் சில குரூப் ஆஃப் கம்யூனிகேட்டர் குறித்த தகவல்களும் கிடைக்க, நான் தான் உன்னை இதற்குள் கொண்டு வந்தேன் என ஜின் சொல்வதுபோலவே நான் உணரத் தொடங்கினேன்.

குடும்பத்தினர் ஆதரவுடன், பெங்களூரில் அனிமல் கம்யூனிகேஷன் தொடர்பாக நடைபெற்ற வொர்க்‌ஷாப்களில் கலந்து கொண்டேன். தொடர்ந்து புனேவில் நடந்த அட்வான்ஸ் வொர்க்‌ஷாப்பிலும் பங்கேற்றேன். இதில் விலங்குகளின் ஆரோக்கியம், நடத்தை, காணாமல் போனால் கண்டுபிடித்து தருவது என அனைத்தும் அடங்கும். மனிதர்கள் மாதிரியே அனிமல்ஸ்க்கும் பெர்சனாலிட்டிஸ் உண்டு. காணாமல் போன வளர்ப்பு விலங்குகள் திரும்பி வர விருப்பம் இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளும். விருப்பம் இல்லையெனில் அதனைக் கண்டுபிடிப்பது கடினம். சில நேரம் தன் இயல்பை மாற்றியும் விலங்குகள் நடந்து கொள்ளும். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் ஒட்டாது.

அவர்கள் சொல்வதையும் கேட்காது. இந்த மாதிரியான விலங்குகளிடமும் பேசி அது என்ன நினைக்கிறது என்பதை அவற்றிடமே கேட்டு வாங்கிச் சொல்லுவேன். மைன்ட் வழியாகவே கான்வெர்சேஷன் எங்களுக்குள் நடக்கும். ஒருவர் அவர் நாயின் நடத்தையில் மாற்றம் இருப்பதாய் என்னிடம் வந்தார். ‘குழந்தையை நக்குவது அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும், குழந்தைக்கிட்ட நாயை விடாதே. அதை வெளியில் கட்டிவிடு’ என வீட்டில் இருப்பவர்கள் சொன்னதைக் கேட்டு அதன் நடத்தை மாறியதாக அவர்களிடம் சொன்னேன். அந்தப் பெண் கதறி அழுதுவிட்டார்.

அனைத்து உயிர்களுக்கும் ஆற்றல் உண்டு. ஆன்மாவும் உண்டு. எனவே விலங்குகள் தவிர்த்து மரம், செடி, கொடி என அனைத்திடமும் என்னால் பேச முடியும். ‘கொய்யா மரம் காய்க்கலை. ஏன் எனக் கேட்டுச் சொல்லுங்கள்’ எனக் கேட்டு வருவார்கள். அதற்கும் காரணம் இருக்கும். மண் பிரச்சனை. இந்த மரம் காய்க்கும் வெரைட்டி இல்லை. வேறு என்ன உரம் தேவை என சில ஆலோசனைகளை நம்மிடத்தில் அவையே கொடுக்கும்.

இது எல்லோருக்குள்ளும் இருக்கிற இன் பார்ன்(in born) எபிலிட்டி என்கிற திறன்தான். அதாவது சிலருக்கு இயல்பாகவே பாட வரும். அவர்கள் முறையாகப் பயிற்சி செய்தால் அவரின் திறன் கூடுதலாக உயரும் இல்லையா? அதுமாதிரிதான் இதுவும். நம்மிடம் உள்ள அந்தத் திறனைத் தட்டி எழுப்பனும். எனக்கு மீடியம் வருதுன்னு தெரிஞ்சு நான் என்னை மேம்படுத்திக் கொண்டேன். உங்களை நம்ப வைப்பதோ, என்னை நிரூபிப்பதோ என் வேலையில்லை. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை’’ என்கிறார் புன்னகைத்து.

கௌரி வர்ஷினி, சென்னை

நான் சி.ஏ. படித்து வருகிறேன். என் வளர்ப்பு நாயின் பெயர் ஸ்நஃபி. எட்டு ஆண்டுகள் எங்கள் குடும்பத்தில் ஒருவனாக அவனும் இருந்தான். திடீரென உடல் நலம் சரியில்லாமல் மோசமான நிலைக்குச் சென்றான். அவனுக்கு உடலில் என்ன பிரச்சனை என்பதைக் கம்யூனிகேட்டர் மூலமாக கேட்கலாம் என என் அக்கா ஆலோசனை சொல்ல, நான் அனிமல் கம்யூனிகேட்டர் ஜனனியினை தொடர்பு கொண்டேன். அவர் ஸ்நஃபியின் புகைப்படம் மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அது தவிர்த்து எந்தத் தகவலையும் அவர் என்னிடத்தில் கேட்கவில்லை. இதில் எனக்கு ரொம்பவே ஷாக்கான விசயம் என்னவென்றால், நான் என் பெட் ஸ்நஃபியுடன் தனிமையில் பேசிய சிலவற்றை அனிமல் கம்யூனிகேட்டர் அப்படியே என்னிடம் சரியாகச் சொன்னதுதான். அப்போது ஸ்நஃபி உயிருடன் போராடிக் கொண்டிருந்தான். கம்யூனிகேட்டர் மூலமாக என் குடும்பத்தினருக்கும் சில தகவல்களைக் கொடுத்துள்ளான். ஆனால் அன்றைய இரவே தான் இறந்துவிடுவேன் எனவும், அதை எங்களிடம் சொல்ல வேண்டாம் எனவும் சொல்லியுள்ளான். இதைக் கேட்டு நாங்கள் வருத்தப்படுவோம் என அவரும் அதை மட்டும் எங்களிடம் சொல்லவில்லை. அவன் இறந்த பிறகே கம்யூனிகேட்டர் எங்களிடம் இந்த விசயத்தைச் சொன்னார்.

ஐஸ்வர்யா, சென்னை

என் பெட் பெயர் டார்சான். முதல் நான்கு வருடம் எங்கள் நண்பர் வீட்டில் வளர்ந்தவன், அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்ததால் எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு வருடமானது. அப்போது இன்ஸ்டாகிராமில் அனிமல் கம்யூனிகேட்டர் ஜனனி நேரலை ஒன்றைப் பார்த்தேன். எனக்கு டார்சான் மனநிலையை அறியும் ஆவல் வர, அவன் எங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறானா என அறிய, அவன் புகைப்படத்தை மட்டுமே அனுப்பினேன்.

ஆனால் அவன் எங்கள் குடும்பத்தில் நடக்கு பல விசயங்களை அவரிடம் சொல்லி, அவனுக்கு பிடித்தது பெடிகிரி, ஐஸ்க்ரீம் போன்ற தகவல்களையும் சரியாகச் சொல்லி இருந்தான். அவனது முதல் உரிமையாளரின் தம்பி ஒருவரை தனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரை மிஸ் பண்ணுகிறேன் எனவும் சொல்லியவன், எங்கள் வீட்டில் அப்பாவின் உடல்நலமின்மை. திருமணப் பேச்சுவார்த்தை நடப்பது என பல தகவல்களை அவர்களிடத்தில் சொல்லி, ரொம்பவே எங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதாய் சொல்லியுள்ளான்.

டாக்டர் எஸ்.சரவணன்,கால்நடை மருத்துவர்

இது ஒரு ஆச்சரியமான விசயமே கிடையாது. 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒன்றுதான். குவாண்டம் மெக்கானிக்கில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவராகவும், இதற்கான சாத்தியங்கள் உண்டு என்றே நான் சொல்வேன். விலங்குகளுக்கு நான் மருத்துவம் செய்யும்போது, அவற்றின் உடல் நலம் மற்றும் வலி குறித்து அவற்றால் பேச முடியாது. விலங்குகளைத் தொடும்போது, என் இதயத்தில் இருந்தே அதன் இதயத்தோடு தொடர்புப் படுத்திக் கொள்வேன். அதன் பிறகே வைத்தியம். இதே முறையைதான் அனிமல் கம்யூனிகேட்டர்களும் பின்பற்றுகிறார்கள். அதற்கென சில பயிற்சிகள் இருக்கிறது. மேலும் அனிமெல் கம்யூனிகேட்டர்கள் மன தைரியம் கொண்டவர்களாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.

விலங்குகள் மட்டுமல்ல, இயற்கையும், செடி கொடி என உயிர்கள் அனைத்தும் தன்னை தொடர்புப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. இதில் நாய், பூனை மட்டுமல்ல சுவற்றில் ஊரும் எறும்பில் இருந்து நீரில் நீந்தும் மீன்களுக்கும் இது பொருந்தும். இயற்கையின் இந்த பரிணாமத்தை மனிதனால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். இதில் நம்பிக்கை இல்லாதவர்களை நம்மால் ஒருபோதும் திருப்தி செய்ய முடியாது.Post a Comment

Protected by WP Anti Spam