ஷரியா சட்டம்… பெண்களை பாதுகாக்குமா? (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 28 Second

இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் தாலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை கைப்பற்றியிருந்தது. ஆப்கான் அதிபர், நாட்டை விட்டு வெளியேறிவிட, தாலிபான் அமைப்பு அந்நாட்டில் தற்போது ஆட்சி அமைக்க உள்ளது. மக்களிடையே தாலிபான்கள் எந்த முறை ஆட்சியை பின்பற்ற போகிறார்கள் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், தாங்கள் ஜனநாயக ஆட்சிக்கு பதிலாக இஸ்லாமின் ஷரியா சட்டங்களை பின்பற்றி ஆட்சியை நிறுவப் போவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இதனால் பெண்களின் உரிமை பறிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. பலர் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். “பெண்களுக்கு இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். அவர்களுக்கு கல்வியும் அளிக்கப்படும். ஆனால் இவை எல்லாம் ஷரியா சட்டங்களுக்கு உட்பட்டு இருக்கும்” என்று தாலிபானின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

1996-2001ல் ஷரியா சட்டங்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட ஆட்சியில் பெண்களின் அடிப்படை உரிமைகள் பல முழுவதுமாக பறிக்கப்பட்டன. அவர்கள் தெருவில் நடக்கவே பயப்பட்டனர். இந்த முறை மீண்டும் இதே கட்டுப்பாடுகள் அமல்படுத்தினால் ஆப்கான் மீண்டும் 20 ஆண்டுகள் பின்னுக்கு இழுக்கப்படலாம் என்ற கவலை நிலவி வருகிறது. ஷரியா முறை என்றால் என்ன? அது பெண்களின் சுதந்திரத்தை எப்படி கட்டுப்படுத்தும்? ஷரியா, அரேபிய மொழியில் இஸ்லாமிய சட்டம் அல்லது இஸ்லாமிய வாழ்க்கை முறையை குறிக்கிறது.

குர்-ஆனை அடிப்படையாக கொண்ட இது, முகம்மது நபி அவர்களால் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்களை தொகுத்து மக்களை இஸ்லாமிய பாதையில் அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்ட வழிமுறை. இஸ்லாமியத்தை பின்பற்றுபவர்கள் எப்படி வாழ வேண்டும், குறிப்பிட்ட சில குற்றங்களை செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதையும் ஷரியா கூறுகிறது. ஷரியா சட்டத்தின்படி, குற்றங்களை தசீர், கிசாஸ், ஹத் என பிரிக்கின்றனர். தசீர் சிறிய குற்றங்களுக்கு, நீதிபதியின் வழிகாட்டுதலின்படி தண்டனை வழங்கப்படும். கிசாஸ், குற்றவாளியால் ஏற்பட்ட அதே பாதிப்பு குற்றவாளிக்கே தண்டனையாக அளிக்கப்படும். ஹத், மிகக் கடுமையான குற்றங்கள். கடவுளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றமாக அறிவிக்கப்பட்டு உறுப்புகளை வெட்டுவது, கல்லால் அடித்துக் கொல்வது என தண்டனைகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.

தாலிபான் அமைப்பு, இந்த சட்டத்தை மிகத்தீவிரமாக பின்பற்றுபவர்கள். இதில், தொலைக்காட்சி, இசை போன்ற பொழுதுப்போக்குகளுக்கு இடம் கிடையாது. ஒரு நாளில் ஐந்து முறை கடவுளை பிரார்த்தனை செய்யாத ஆண்கள் அடித்து துன்புறுத்தப்படுவார்கள். பெண்கள், பள்ளிக்குச் செல்ல அனுமதி கிடையாது. அவர்கள் குறிப்பிட்ட சில வேலைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதற்கும் ஆண்களின் அனுமதி தேவை.

ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாது. கட்டாயம் தலை முதல் கால் வரை மறைக்கக்கூடிய அபயா எனப்படும் உடையை அணிய வேண்டும். ஆண் துணையில்லாமல் வெளியே செல்ல முடியாது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பேருந்துகளில்தான் பயணிக்க வேண்டும். பெண்களின் புகைப்படங்கள் எந்தவொரு புத்தகத்திலும், திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் அனுமதிக்கப்படாது. பெண்கள் ஹீல்ஸ் அணியக் கூடாது.

வெளியே செல்லும் போது தங்கள் குரல் மற்றவர்களுக்கு கேட்கும் படி சத்தமாக பேசக் கூடாது. தங்கள் வீட்டின் பால்கனியில் நிற்கக்கூடாது. பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது. அழகு நிலையங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு தடை. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்படுவர். சில சமயம் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவர்.

இன்றைய சூழலில் இந்த சட்டங்களில் எதுவெல்லாம் பின்பற்றப்படும் என்பது தெரியவில்லை. உலக நாடுகளின் கவனம் ஆப்கான் மீது இருப்பதாலும், பெண்கள் பல துறைகளில் வளர்ச்சியடைந்திருப்பதாலும், முழு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றியவுடன், புர்கா விற்பனை அதிகரித்துள்ளது. பெண்கள் கொண்ட விளம்பர பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அழகு நிலையங்களில் பெண்களின் உருவம் மறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்ல அஞ்சி வீட்டிலேயே இருக்கின்றனர். தாலிபானின் செய்தி தொடர்பாளர், முழுமையான ஆட்சி அமைத்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளார்.

2001 வரை ஆப்கான் மக்கள் இந்த கட்டுப்பாடுகளுடனே வாழ்ந்து வந்தனர். தாலிபான் வீழ்த்தப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெண்களால், அந்த சுதந்திரத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவே பல ஆண்டுகளாயின. இருந்தாலும் பெண்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, சுதந்திரத்தை பயன்படுத்தி கல்வி, வேலை, விளையாட்டு, அரசியல் என அனைத்து துறையிலும் வளர்ந்து நிற்கின்றனர். மறுபடி தாலிபான் கைப்பற்றியதும், பலர் எதிர்காலத்திற்கு பயந்து தங்கள் தாய் நாட்டை விட்டு அகதிகளாக புறப்பட்டுள்ளனர்.

பெண்கள் தங்கள் கல்வி, வேலையை கைவிட்டுள்ளனர். தாலிபான் அமைப்பு பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் என பல செயல்பாட்டாளர்கள் அஞ்சி வருகின்றனர். தங்கள் குழந்தைகளையாவது வேறு நாடுகளுக்கு சென்று அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். இதனிடையே பெண்கள் சிலர் தங்கள் உரிமைக்காக தைரியமாக தாலிபான்களை எதிர்த்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வருடங்கள் கழித்து அன்பும் பாதுகாப்பும் கிடைச்சிருக்கு!! (மகளிர் பக்கம்)