செல்லுலாய்ட் பெண்கள் – குரலினிமையின் நாயகி ஜெயந்தி!! (மகளிர் பக்கம்)

Read Time:27 Minute, 56 Second

குலோப் ஜாமூன் குரல் அவருடையது. குழைவான அதே நேரம் தெளிவான, நிதானமான, இனிமையான குரலும் கூட. வழக்கமாக குரலின் இனிமைக்கு உதாரணமாகத் தேன் என்றே சொல்லப்படுவதற்கு மாற்றாக இந்த எளிய இனிப்பின் பெயரைக் குறிப்பிடக் காரணம் மிக இலகுவான குரலும் கூட என்பதாலேயே… வேறு எந்தவொரு நடிகையின் குரலுடனும் ஒப்பிட முடியாத குழைவுத்தன்மை கொண்டது சமீபத்தில் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமான நடிகை ஜெயந்தியின் குரல்.

ஓரளவுக்கு அவரின் குரலுக்கு நெருங்கி வரக்கூடிய மற்றொரு குரலும் இருக்கிறது என்று நினைத்தோமென்றால் அது ரம்யா கிருஷ்ணன் குரல் மட்டுமே… முழுமையாக ஜெயந்தியோடு எவர் குரலும் ஒத்து வராது. அப்படி ஒரு இனிமை அவர் குரலுக்கு மட்டுமே உண்டு. இரவல் குரலை நம்பாமல் அசல் குரலில் பேசி நடிக்கும் அத்தனை நடிகைகளுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி என அனைத்து மொழிகளிலுமாகச் சேர்த்து 500 படங்களைத் தொட்டவர். தமிழில் நூறு படங்களின் எண்ணிக்கையைக் கூட அவரால் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழின் முன்னணி நாயகியாகவும் அவரால் மிளிர முடியவில்லை. தமிழில் அவர் நடிக்கத் தொடங்கியதிலிருந்து ஒரு படத்தின் கதாநாயகி என்ற அந்தஸ்தை எட்டிப் பிடிக்கவே அவருக்குப் பத்தாண்டுகள் ஆனது. ஆனாலும் கிடைத்த சின்னச் சின்ன வேடங்களில் கூட சிறப்பாக நடித்தார். சின்ன வேடமோ பெரிய வேடமோ ஏதானாலும் தன் நடிப்பில் அவர் குறை வைக்கவில்லை.

இரு பெரும் திலகங்களின் படங்களில் ஜெயந்தியின் பங்களிப்பு

60களின் துவக்கத்தில் தமிழில் நடிக்கத் தொடங்கியவர் சிறு சிறு வேடங்களில் தலை காட்டி விட்டுப் போகிறவராகவே இருந்தார். இவ்வளவுக்கும் தமிழின் முன்னணி நாயகர்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன் இருவருடனும் முறையே இரண்டு, மூன்று படங்களில் நடித்தார் என்றாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்குக் கிட்டவில்லை. ‘இருவர் உள்ளம்’ படத்தின் டைட்டில் பாடலில் சிவாஜி பிளேபாயாக ‘பறவைகள் பலவிதம்’ என்று பல பெண்களுடன் ஆடிப் பாடுவார். அவர்களில் ஒருவராகவே ஜெயந்தி அப்படத்தில் தோன்றி நடித்தார். ‘கர்ணன்’ படத்திலும் கூட சில நிமிடங்களே தலைவிரி கோலத்துடன் வந்து செல்லும் திரௌபதி வேடம். சிவாஜியின் சொந்தத் தயாரிப்பான ‘அன்னை இல்லம்’ படத்தில் நீண்ட நேரம் தோன்றினார் நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கு ஜோடியாக.

எம்.ஜி.ஆர். படமான ‘படகோட்டி’ யில் வில்லன் நம்பியாருக்கு ஆசைநாயகி மீன்விழியாக நடித்தார். ‘இரவு ஒரு ராகம்’ என்று கவர்ச்சிகரமான பாடல் காட்சியும் உண்டு. ஆனால், அந்தப் பாடல் காட்சியிலும் வில்லன் நம்பியாரின் காமாந்தக் கண்களுக்கு அவர் நாயகி சரோஜாதேவியாகவே பெரும்பாலும் தென்படுவார். பாடலின் மிகச் குறைந்த நேரமே ஜெயந்தி திரையில் தோன்றுவார். பெரும்பான்மை பாடலையும் நாயகி சரோஜாதேவியே ஆக்கிரமித்துக் கொள்வார். படத்தின் உச்சக்கட்டக் காட்சியிலும் நாயகியைக் காப்பாற்றுவதற்காக வில்லன் நம்பியாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னுயிரைத் தியாகம் செய்து விட்டுப் பலியாவார். மற்றொரு படமான ‘முகராசி’ யில் படம் முழுதும் தோன்றினாலும் கதாநாயகி ஜெயலலிதாவுக்கு அக்காவாகவும் நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கு ஜோடியாகவுமே நடித்தார்.

இவ்விரு பெரும் திலகங்களின் படங்களிலும் ஜெயந்தியின் பங்களிப்பு என்பது அவ்வளவுதான். எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, அப்படம் கைவிடப்பட்டதால் அந்த வாய்ப்பும் நழுவிப் போனது. ஒருவேளை அப்படம் வெளியாகியிருந்தால், நிலைமை வேறு மாதிரியாகவும் ஆகியிருக்கலாம்.

நடிப்பை முன்னிறுத்தி வென்றவர்

தமிழில் அறிமுகமான பின் நடித்த இரண்டாவது படமான ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஜெயந்திக்கு வில்லி வேடம். அரசகுமாரனாக நடித்த நாயகன் ஜெமினி கணேசனை விரட்டி விரட்டிக் காதலிக்கும் யட்சி வேடம். தன்னைக் காதலிக்க மறுக்கும் அரசகுமாரனை சபித்து அவனை மாற்று உருவில் நடமாட விடுவார். ஃபாண்டஸி படமான இதனைத் தயாரித்து ஜெயந்திக்கும் வாய்ப்பளித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அன்று தொடங்கியதுதான், அது முதல் மிக அதிகமாக ஜெயந்தி நாயகியாக நடித்தது ஜெமினி கணேசன் மற்றும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் இருவருடனும்தான். நகைச்சுவை நடிகருக்கு நாயகியானபோதும், ஜெயந்தி நகைச்சுவை நடிகையாக மாறி விடாமல், கதாநாயகியாகவே தொடர்ந்தார். இவர்களைத் தவிர முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுடனும் நடித்தார்.

தமிழின் மிகப் பெரும் நாயக நடிகர்களுடன் நாயகியாகவோ மிக அதிகமான படங்களிலோ நடிக்கவில்லை; முதன்முதலில் முழு நீளத் திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்தது ‘எதிர் நீச்சல்’ படத்தில்தான். தமிழில் யானைப்பாகன் படத்தில் அவர் முதன்முதலாக நடிக்கத் தொடங்கிய ஆண்டு 1960. ‘நாயகியாக அவர் நடித்தது ‘எதிர் நீச்சல்’ படத்தில் 1969 ஆம் ஆண்டு. ஒன்பது ஆண்டுகளாயிற்று அவர் தமிழ்த்திரையில் நாயகியாகத் தோன்ற. ஜெயந்தியின் திறமைக்கும் அழகுக்கும் ஒன்றும் குறைவில்லை, ஆனாலும் இவ்வளவு காலம் வரை ஜெயந்தியையும் அவரது படங்களையும் நடிப்பையும் ரசிகர்கள் நினைவில் இருத்தி வைத்திருப்பது எது என்ற கேள்விக்கு ஜெயந்தி இயக்குநர்களின் நடிகையே தவிர முன்னணி நாயகர்களை முன்னிறுத்தி வளர்ந்தவரல்ல என்ற ஒற்றை பதிலே கிடைக்கும், ஆம்…! ‘நீர்க்குமிழி’ தொடங்கி பல படங்களில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாயகியாகவும் இரண்டாவது நாயகியாகவும் ஜெயந்தி தொடர்ந்து நடித்தார். ‘பாமா விஜயம்’ அவரை நகைச்சுவை நடிகையாகவும் முன்னிறுத்தியது. இதே படத்தின் இந்தி வடிவமான ‘தீன் பஹுராணியாங்’ படத்திலும் அவரே நடித்தார். அதன் பின் அவர் நடித்தவை அனைத்தும் நடிப்பில் அவரை முன்னிறுத்திய கனமான வேடங்கள் கொண்ட படங்களே.

“எதிர் நீச்சல்’ படத்தின் பாருவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? மனநலம் குன்றிய பெண்ணாகயிருந்து குணம் பெற்று வீடு திரும்பிய பின்னும், ‘பைத்தியம்’ என்று யாராவது ஒருவர் அழைக்கும் அந்த ஒற்றைச் சொல்லில் ஆக்ரோஷமாகி விரல் நகத்தைக் கடித்துத் துப்புவதோடு, எதிராளியையும் கையில் கிடைப்பதை எடுத்து சாத்தி ஒருவழியாக்கி விடுவாரே. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் எப்போதும் அப்படியே இருந்து விடுவதில்லை, நல்ல அறிவாளியாகவும் சமயோசிதமாகவும் அவர்களால் செயல்பட முடியும் என்பதற்கும் கூட பாரு பாத்திரம் ஒரு சிறந்த நேர்மறையான முன்னுதாரணம். நாடகத்தன்மை நிறைந்த படம்தான் என்றபோதும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்கும் படமாக எதிர் நீச்சலும் நாயகன் மாதுவும் நாயகி பாருவும் படத்தின் பிற பாத்திரங்களான பட்டு மாமி, கிட்டு மாமா, முரட்டு நாயர் என ஐம்பதாண்டுகளைக் கடந்த பின்னும் ரசிக மனங்களில் நிற்க முடிகிறதென்றால் அது இயக்குநர் பாலசந்தருக்குக் கிடைத்த வெற்றி அல்லவா?!

‘இரு கோடுகள்’ படத்தில் ஹெட் கிளார்க்கின் மனைவி ஜெயா, கலெக்டர் ஜானகியாக நடித்த சௌகார் ஜானகிக்கு சற்றும் குறையாமல் நடித்த வேடம். படத்தின் வசனங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.‘கண்ணா நலமா?’ நீண்ட காலம் குழந்தை இல்லாத ஒரு பெண்ணின் துயரையும் வேதனையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தின. நெடுநாள் கழித்துப் பெற்றெடுத்த குழந்தையையும் பிறருக்குத் தாரை வார்க்கும் சந்தர்ப்பத்தில் அபாக்கியவதியான ஒரு தாயாக அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்டு மனநோய் விடுதியில் சேர்க்கப்படும் மனப்பிறழ்வு நோயாளியாகவும் நடித்து ரசிகர்களை நெகிழ வைத்தார்.

ஜெயந்தியின் மாஸ்டர் பீஸ் வேடம்

எப்போதும் மனதில் நிற்கும் மற்றோர் படமென்றால் அது 1971ல் வெளியான ‘புன்னகை’. நாராயண் சன்யால் எழுதிய ‘சத்யகம்’ என்ற வங்க மொழி நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் இந்தியில் 1969ல் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் படமாக்கப்பட்டது. காந்தியத் தத்துவம் எப்போதும் கேலிப் பொருளாகவே பார்க்கப்படும் காலகட்டத்தில், உண்மை பேசுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் அதையே கைக்கொண்டு வாழ்க்கையில் உயிர் உட்பட அனைத்தையும் இழக்கும் கதாநாயகன் சத்தியமூர்த்தியை (ஜெமினி கணேசன்) பெயருக்கேற்ற கம்பீரமான இளைஞனாக அறிமுகப்படுத்திய படம்.

கணவன் சத்யாவுக்கு வாழ்விலும் தாழ்விலும் கைகொடுக்கும், அவன் கொள்கைகளைத் தானும் ஏற்றுக்கொண்ட மனைவி காஞ்சனா (ஜெயந்தி). இந்த இரு பாத்திரங்களும் முன்னுதாரணம் மிக்க மறக்க முடியாத பாத்திரங்கள். அவ்வளவு சிறப்பானதொரு நடிப்பை ஜெயந்தி இப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். தமிழில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களிலேயே இதனை மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையல்ல. முகமும் கண்களும் உதடுகளும் துடிக்கப் பல காட்சிகளில் வசனங்கள் ஏதுமின்றிக் குறிப்பாலேயே உணர்த்தி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஜெயந்தி.

‘வெள்ளி விழா’ இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டில் வெளியான படம். படம் முழுவதும் ஆக்கிரமித்தவர் நாயகி வாணிஸ்ரீ என்றாலும், ஜெயந்தியின் பாத்திர வார்ப்பு அவரை மறக்க முடியாதவராக்கி விட்டது. வீட்டுக்கும் மாமியாருக்கும் மரியாதை அளிக்கும் பயந்த, கூச்ச சுபாவம் மிக்க மருமகளாக அவர் வாழ்ந்தார் என்றே சொல்லலாம். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் கிசுகிசுக்கும் தொனியில் பாடப்பட்ட ‘காதோடுதான் நான் பாடுவேன்’ பாடல் ஒலிக்கும் வரை இந்தப் படமும் ஜெயந்தியும் நினைக்கப்படுவார்கள்.

அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பின் 1979ல் பி.என். மேனன் இயக்கிய ‘தேவதை’ படத்தில் சிவகுமாரின் அக்காளாக, முதிர்கன்னி தாயம்மாவாக நடித்தார். ஊரில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் முகூர்த்தப் பட்டுப்புடவை நெய்து கொடுக்கும் நெசவாளிப் பெண், அதுபோல் தனக்கு ஒரு புடவை நெய்து கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பற்றவராகவே படம் முழுதும் நடித்தார். படத்தின் டைட்டில் பேசும் தேவதையும் அவர்தான். நெசவுப் பணிகளினூடே ஷ்யாம் இசையில் எஸ்.ஜானகியின் குரலில் அவர் பாடுவதாக அமைந்த ‘கலீர் …கலீர்… என்று காலம் தன்னால் இங்கே முன்னேறுது’ என்னும் அந்த அற்புதமான பாடல் கேட்கும்தோறும் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஓர் உணர்வில் நம்மைத் தள்ளாட வைக்கும்.

இதற்குப் பின் அவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாம், இயக்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் அழைத்து நடிக்கத் தந்த வாய்ப்புகளே. அதில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஹவுஸ்ஃபுல்’ படம் தவிர பிற படங்கள் எண்ணிக்கையில் கூடியதே தவிர, பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் ரகம் அல்ல.

கமலா குமாரியிலிருந்து ஜெயந்தியாக…

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில் உள்ள பெல்லாரியில் 6.1.1945 ஆம் ஆண்டில் பிறந்தவர் கமலா குமாரி. (தற்போதைய கர்நாடகா) பெற்றோர் பாலசுப்பிரமணியம் – சந்தான லட்சுமி. ஐந்து குழந்தைகளில் இரண்டு இளைய சகோதரிகள், இரண்டு சகோதரர்களுடன் மூத்த பெண் குழந்தையாகப் பிறந்தவர் என்பதால் கமலாவுக்குப் பொறுப்புகளும் அதிகம். தந்தைக்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் பணி; ஆனால், தாயும் தந்தையும் இணைந்து வாழ முடியாமல் பிரிந்து போக வேண்டிய சூழலில் குடும்பம் வறுமையின் பிடிக்குள் ஆட்பட்டுத் தத்தளித்தது. அதன் பிடியிலிருந்து மீள சினிமா கைகொடுக்கும் என்பதால் சென்னை நோக்கிய பயணம் தாயாருடன்.

சினிமாவுக்கு அடிப்படைத் தேவையான இசை, நாட்டியம் கற்றுக் கொண்டதுடன் கிடைத்த சிறு சிறு வேடங்கள் என படிப்படியான முன்னேற்றமே. சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகரும் இயக்குநருமான பெக்கட்டி சிவராம் உடன் காதல் திருமணம், திரைத்துறையினருக்கே உரிய சாபக்கேடாக சிவராமுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருந்தனர். சிவராம் – ஜெயந்தி இணைக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரே மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரியவும் நேர்ந்தது. அதன் பின்னர் ஏற்படுத்திக் கொண்ட இரு திருமண உறவுகளும் கூட நிலைக்கவில்லை.

திரைப்படங்களில் தொடந்து நடிப்பதன் மூலம் மட்டுமே தன் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டார் ஜெயந்தி. உறங்குவதற்கும் கூட நேரமில்லாமல் அப்போது நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். குழு நடனம் ஒன்றின் ஒத்திகையின்போது சந்தித்த கமலா குமாரியை ஜெயந்தியாக மாற்றியவர் கன்னட இயக்குநர் ஒய்.ஆர்.ஸ்வாமி. அவர் இயக்கத்தில்தான் முதலில் கன்னடப் படத்திலும் அறிமுகமானார் ஜெயந்தி.

கன்னடத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெயந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி என பன்மொழிகளில் நடித்தவரென்றாலும் தாய்மொழியான கன்னடத் திரையுலகில் மற்றும் 1970, 80களில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் ‘அபிநய சாரதே’ என அன்புடன் அழைக்கப்பட்டவர். அப்போதைய கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் மட்டுமே 40 படங்கள் வரை இணையாக நடித்தவர். 1963ல் முதலில் நடித்த கன்னடப்படம் ‘ஜேனு கூடு’. இது ஏற்கனவே 1954, 56, 57ஆம் ஆண்டுகளில் வங்காளம், தமிழ், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம்தான்.

கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பேசப்பட்ட வங்கக் கதையை எல்லா மொழிகளிலும் வெற்றி பெற வைத்தார்கள். இது தமிழில் ‘குலதெய்வம்’ என்ற பெயரில் வெளியானது. சிறிய வேடம் என்றபோதும் முதல் படமே ஜெயந்திக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. ராஜ்குமார், உதயகுமார், கல்யாண்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் என கன்னடத்தின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் போட்டி போட்டு நடித்து ஜெயித்தவர். ஜெயந்தியின் காலகட்டத்தில் சரோஜா தேவி, வாணி, கல்பனா, ஆர்த்தி, பாரதி என பல முன்னணி நடிகைகள் இருந்தபோதும் ஜெயந்திக்கான இடம் கன்னடத்தில் அவருக்கு வலுவாகவே இருந்தது. கன்னடத் திரையைப் பொறுத்தவரை முதன் முதலில் கவர்ச்சிகரமாகவும் ஸ்கர்ட், டி.ஷர்ட், நைட்டி என நவநாகரிகமான உடைகள் உடுத்தியும் நடித்ததுடன் மட்டுமல்லாது முதன்முதலில் நீச்சல் உடையில் தோன்றி நடித்த நாயகியும் ஜெயந்திதான். 1960களின் காலம் என்பது தென்னிந்தியத் திரைப்படங்களில் கவர்ச்சிக்கான தேவையும் இருந்தது என்பதையும் சேர்த்தே குறிப்பிட்டாக வேண்டும்.

1965ல் ஜெயந்தி நடித்த ‘மிஸ் லீலாவதி’ சிறந்த கன்னடப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றது. இப்படத்தின் கதையும் கூட அப்போதைய காலகட்டத்தில் புதுமையானதாகப் பேசப்பட்டது. கன்னடப் படங்களைப் பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலும் கவர்ச்சிப் பண்டங்களாகப் பயன்படுத்தப்பட்டார்களே தவிர, பெண் பாத்திரங்களுக்கு தியாகிகள் என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படாத காலகட்டத்தில் இப்படம் பேசு பொருளானது. (மலையாளம் தவிர பிற தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்தானே).

பெண்ணின் பாலியல் விழைவுகள், தேவைகள், அவளின் சுதந்திரம் பற்றி 1960களில் ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் பேசியது. அதனாலேயே தேசிய விருதுக்கும் தேர்வு பெற்றது. இப்படத்துக்காக அப்போதைய தகவல் ஒளிபரப்பு அமைச்சரான இந்திரா காந்தியிடமிருந்து ஜெயந்தி விருதினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாய்மொழி அள்ளித் தந்த விருதுகள்

கர்நாடக மாநில அரசிடமிருந்து 1973 – 74, 1976 – 77, 1981 – 82, 1985 – 86 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதினை நான்கு முறை தன் சிறந்த நடிப்புக்காகப் பெற்றவர். இதைத் தவிர 1986 – 87, 1998 – 99 ஆம் ஆண்டுகளில் வெளியான படங்களுக்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் இரு முறை பெற்றவர். தாய்மொழி என்பதால் மட்டுமல்ல, அவருக்குக் கிடைத்த நல்ல வேடங்களில் மிகச் சிறப்பானதோர் நடிப்பினை வெளிப்படுத்தி இத்தனை விருதுகளையும் பெற்றார் ஜெயந்தி.

அத்துடன் இருமுறை சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றார். 2005 -2006 ஆம் ஆண்டு டாக்டர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மபூஷண் டாக்டர் சரோஜாதேவி பெயரில் வழங்கப்படும் தேசிய விருதையும் பெற்றவர் நடிகை ஜெயந்தி.நடிப்புத் தொழிலில் அர்ப்பணிப்பும் நேர்த்தியும்இன்றைய காலகட்டத்து நடிகைகள் பலரில், ஒரு சிலரைத் தவிர நான்கைந்து படங்களுடன் காணாமல் போய் விடுவது என்ற நிலையில் திருமணமாகி, குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் தங்கள் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு விடாமல் தொடர்ந்திருக்கிறார்கள் சென்ற தலைமுறை நடிகையர் பலர். திரைத்துறையும் இதையெல்லாம் காரணமாக்கி அவர்களைக் கைவிட்டு விடாமல் தொழிலை நேர்த்தியாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நடிகைகள் தொடர்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு மிக்க சென்ற தலைமுறை நடிகைகளில் ஒருவர்தான் ஜெயந்தியும்.இங்கு மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டேயாக வேண்டும். பிற மொழிகளிலிருந்து நடிக்க வந்த நடிகைகளில் மிகச் சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசிய நடிகைகள் ஒருசிலரில் ஜெயந்தி குறிப்பிடத்தக்கவர். அந்த அளவுக்கு ஏற்றுக்கொண்ட பணியில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டவர் ஜெயந்தி.

கடந்த 2018 ஆம் ஆண்டே ஜெயந்தி காலமாகி விட்டதாக ஊடகங்கள் புரளியைக் கிளப்பின. ஆனால், கடந்த ஜூலை 26 ஆம் தேதியன்று உடல்நலக்குறைவால் ஜெயந்தி காலமானார். ‘தாமரைக் கன்னங்கள்’, ‘ஆனிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே’, ‘காதோடுதான் நான் பாடுவேன்’, ‘ஆணையிட்டேன் நெருங்காதே..’, ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக..’ போன்ற மறக்க முடியாத பாடல்களும் அவரது நடிப்பும் படங்களும் என்றென்றைக்கும் நினைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்; அவரை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.

ஜெயந்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

1.ரதி நிர்வேதம் 2.யானைப்பாகன் 3.மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் 4. நினைப்பதற்கு நேரமில்லை 5.இருவர் உள்ளம் 6.மந்திரி குமாரன் 7.அன்னை இல்லம் 8.படகோட்டி 9.வழி பிறந்தது 10.கர்ணன் 11.கலைக்கோவில் 12.வீராதி வீரன் 13. நீர்க்குமிழி 14.முகராசி 15.கார்த்திகை தீபம் 16.கதை படுத்தும் பாடு 17.பாமா விஜயம் 18.பக்த பிரஹலாதா 19.எதிர் நீச்சல் 20. இரு கோடுகள் 21.நில் கவனி காதலி 22.புன்னகை 23.நூற்றுக்கு நூறு 24.புதிய வாழ்க்கை 25.கண்ணா நலமா? 26.வெள்ளி விழா 27.கங்கா கௌரி 28.பெண்ணை நம்புங்கள் 29.மணிப்பயல் 30.நல்ல முடிவு 31. ஷண்முகப்ரியா 32.எல்லோரும் நல்லவரே 33.குல கௌரவம் 34.தேவதை 35. கொம்பேறி மூக்கன் 36.மாப்பிள்ளை சார் 37.நானும் இந்த ஊருதான் 38.பாலைவனப் பறவைகள் 39.சார் ஐ லவ் யூ 40.ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் 41.வீட்டைப் பாரு நாட்டைப் பாரு 41.மைந்தன் 42.கோபாலா கோபாலா 43.செங்கோட்டை 44.புதல்வன் 45.ஹவுஸ்ஃபுல் 46. அன்னை காளிகாம்பாள் 47.நமீதா ஐ லவ் யூ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமுடிக்கான ஆய்வகம்!! (மகளிர் பக்கம்)
Next post நீதிமன்ற கதவுகளை தட்டிய மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை! (மகளிர் பக்கம்)