கொலைவெறி தண்டவாளம் !! (கட்டுரை)

Read Time:9 Minute, 30 Second

என்னதான் பாதுகாப்பாக நாம் பயணம் செய்தாலும், விபத்துகள் எம்மை எதிர் நோக்கியே வந்துகொண்டிருக்கின்றன.

இறைவனின் நாட்டம் ஒருபுறமிருக்க, நாம் பயணம் செய்யும் போது நம்மில் ஏற்படும் பொடுபோக்கும், அசமந்தப் போக்குமே நாம் விபத்தில் சிக்கிக் கொள்ளவும், பிறரை விபத்துக்குள்ளாக்கவும் காரணமாக அமைகின்றன.

ஓர் ஊரை விட்டு வேறு ஊருக்கு, நாம் பிரயாணம் செய்யும் போது, மிகக் கவனமாகவும் நிதானமாகவும் பயணம் செய்ய வேண்டும். அந்த ஊரின் வீதிகளின் அமைப்புகள், வளைவுகள், பள்ளம் படுகுழிகள், அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்கள் போன்றவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறியாமல் நாம் பயணிக்கும் போது தான், விபத்துகளை எதிர்கொண்டு, பல்வேறு ஆபத்துகளை நம்மில் பலரும் சந்திக்கின்றனர்.

வீதிகள் பயணிக்க அழகாக இருக்கின்றன என்பதற்காக நாம் ஒருபோதும் கண்ணைக் கட்டிக் கொண்டு பயணிக்க முடியாது. விபத்து என்பது நேரான பாதையிலும் வரும்; கரடுமுரடான பாதையிலும் வரும். எனவே, நாம் எந்த இடத்தில் பயணிக்கிறோமோ அந்தந்த இடங்களில் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும்.

சில ஊர்களில், அடிக்கடி விபத்துகள் இடம்பெறும் சந்திகளையும் வீதிகளையும் அவ்வப்போது கேள்விப்பட்டு வருகிறோம். அவ்வாறான இடங்களில் ஒன்றாகத்தான் கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில், ஓட்டமாவடி பாலத்தால் குறுக்கறுக்கும் தண்டவாளம் காணப்படுகிறது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை ரயில் நிலைய நிர்வாக எல்லைக்கு உட்பட்ட இவ் இடத்தில், விபத்துகள் இடம்பெறாத நாள்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அந்த இடத்தில் நாளாந்தம் விபத்துகள் நடைபெறுகின்றன.

ஓட்டமாவடியில் இரண்டு பாலங்கள் காணப்படுகின்றன. ஒரு பாலம், ரயில் மாத்திரம் செல்வதற்குப் பயன்படுகிறது. அதேபோன்று, புதிய பாலத்தால் பாதசாரிகள், வாகனங்கள், கால்நடைகள் செல்கின்றன.

புதிய பாலத்தால் செல்லும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றில் செல்வோரே கூடுதலாக விபத்துக்குள்ளாகின்றனர்.

குறித்த இடத்தில், காபட் வீதி வளைந்து செல்லும் பகுதியாக காணப்படுகிறது. அதில் தண்டவாளம், காபட் வீதியில் இருந்து சற்று உயரமாகக் காணப்படுவதால், அதில் பயணிக்கும் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகின்றன.

தண்டவாளத்தைக் குறுக்கறுக்கும் காபட் வீதி, திட்டமிடலுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டால், குறித்த இடத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் விபத்துகளை தடுக்க முடியும் என்று பலராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தூர இடங்களில் இருந்து வரும் நபர்கள், இந்த இடத்தின் தன்மைகள் தெரியாமல் மிக வேகமாகப் பயணித்து, விபத்துகளில் சிக்கிக் கொண்ட சம்பவங்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஏராளமாகப் பதிவாகியுள்ளன.

அத்துடன், ஏனைய காலங்களை விட, மழைக் காலங்களில் கூடுதலாக விபத்துகள் நடைபெறும் இடமாகவும் இந்த வளைவு மாறியுள்ளது. வரும் மாதங்களில் மழை பெய்யக் கூடிய வானிலை உள்ளதால், அதிலும் விபத்துகள் நடக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.

இதனால், மதிப்பிட முடியாத பல மனித உயிர்கள் இழக்கப்படுவதுடன், கை, கால்கள் உடைந்த நிலையில், அங்கவீனரகளாகத் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளும் நிலையிலும் பலர் தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியை கடந்துதான் வாழைச்சேனை கடதாசி ஆலை, கோறளைப்பற்று மத்தி. பிரதேச செயலகம், காவத்தமுனை வைத்தியசாலை, வயல் நிலங்கள், அரிசி ஆலைகள், பாடசாலைகள் உட்பட ஏராளமான தொழில் நிலையங்களுக்கு செல்லும் ஒரே வீதியாக இது காணப்படுகிறது.

இதனால், பயணிக்கும்போது தங்களின் உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு தினந்தோறும் அச்ச உணர்வுடன் பயணிப்பதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, சைக்கிளில் பயணித்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் அந்தத் தண்டவாளத்தில் சறுக்கி விழுந்து, கணவன் தெய்வீகமாக உயிர் தப்பியதுடன் மனைவி மீது டிப்பர் வாகனம் ஏறியதில் அவர் சம்பவ இடத்தில் மரணமடைந்த சோக நிகழ்வும் நடைபெற்றது.

அதேபோன்று சில மாதங்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த போது, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அந்தத் தண்டவாளத்தில் சறுக்கி விழுந்ததில், ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றவர் ஆபத்தான நிலையில் மிக நீண்ட நாள்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதேபோன்று, அந்த இடத்தில் ஏராளமான விபத்துச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அந்த இடத்தில் நடந்த விபத்துச் சம்பவங்களை பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம்.

அந்த இடத்தால் சுமார் 40 வருடங்களாகப் பயணிக்கும் நபர் ஒருவர், மிகவும் மன உளைச்சலுடன் அந்த இடத்தால் பயணிப்பதாக எம்மிடம் கவலையுடன் கூறினார்.

“நான் செல்லும் போது, ஏராளமான விபத்துகளை பார்த்துள்ளேன். அதில் பல உயிர்கள் அந்த இடத்தில் துடிக்கத் துடிக்க சென்றுள்ளதை, நான் கண்டுள்ளேன். இதனால் நான் இன்றும் கூட, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.ஓட்டமாவடியில் விபத்து என்று நான் கேள்விப்பட்டால், எனக்கு இந்தத் தண்டவாளப் பகுதி மாத்திரம் தான் நினைவில் வருவதுண்டு. அந்த இடத்தை கடக்கும் போது, நான் உட்பட யாரும் விபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற பிரார்த்தனையோடுதான் தினந்தோறும் அதைக் கடந்து செல்வதுண்டு” என்று அந்நபர் எம்மிடம் கவலையுடன் தெரிவித்தார்.

அந்நபர் போன்று, ஏராளமான நபர்கள் அந்த இடத்தில் தாம் கண்டு கொண்ட விபத்துச் சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். “நாம் கடமையில் இருக்கும்போது, எங்களது கடமைகளில் ஒன்று போல, அவ்விடத்தில் விபத்துக்கு உள்ளாகும் நபர்களைத் தூக்கி விடும் ஒரு வேலையையும் நாம் பார்த்து வருகிறோம்” என்று அவ்விடத்தில் அமைந்துள்ள ரயில்வே கடவை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ள அந்த இடத்துக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவ் வீதியைப் பயன்படுத்தும் நபர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேபோன்று குறித்த இடத்தில், ‘பயணிகள் அவதானமாகப் பயணிக்க வேண்டும்’ என்று காட்சிப் பலகை ஒன்றை அமைக்க வேண்டும் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி, பொது மக்கள் எவ்வித ஆபத்துக்களுமின்றி குறித்த வீதியால் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வேலைக்காக நள்ளிரவில் 32 km நடந்து சென்ற இளைஞன், அடுத்து நடந்தது அவனது வாழ்வையே புரட்டி போட்டது.!! (வீடியோ)
Next post நெஞ்சுவலி… மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?! (மருத்துவம்)