By 21 September 2021 0 Comments

அவர் போன பிறகும் பிரச்னை!! (மகளிர் பக்கம்)

அன்புடன் தோழிக்கு,எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன், ஒரு மகள். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். அத்தை மகனைதான் திருமணம் செய்தேன். ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. சொந்த அத்தையே மாமியார் என்பதால் குடும்பத்திலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பிறகு வெளியில் இருந்துதான் பிரச்னைகள் வந்தன. என் கணவர் வேலைப் பார்த்து இருந்த நிறுவனத்தை மூடிட்டாங்க. கையில் சில லட்சங்கள் கொடுத்து கணக்கு முடித்து அனுப்பி விட்டனர். அடுத்து என்ன செய்வதன்னு தெரியாமல் இருந்தவரை, பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, வேறு வேலைக்கு போகச் சொன்னேன். அவரோ அதை வட்டிக்கு விட்டு சம்பாதிக்கப் போவதாக சொன்னார். ‘பணம் இருந்தால் பிள்ளைகளின் படிப்புக்கு உதவும்… வேறு வேலைக்கு போங்கள்’ என்று எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.

ஆனால் அவர் விருப்பப்படி வட்டி தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் சிலர் ஏமாற்றினாலும், வருவாய் வர ஆரம்பித்தது. அதனால் நானும் அவர் பார்த்துக் கொள்வார்ன்னு விட்டுட்டேன். எங்கள் ஊரில் இருப்பவர்களுக்குதான் முதலில் பணம் கொடுத்தார். பிறகு பக்கத்து ஊர், வியாபாரிகள் கொடுத்ததால், வட்டி பணம், வசூலிக்க காலை கிளம்பினால் இரவுதான் வீடு திரும்புவார். பணம் புழங்கியதால் நட்பு வட்டாரம் பெரிதானது. குடிப்பழக்கமும் ஏற்பட்டு, தினசரி பழக்கமானது.

அதனால் இரவில் சண்டை வரும், காலையில் சமாதானம் ஆகிவிடுவோம். ஆனால் சமாதானம் ஆக முடியாத பிரச்னை ஒன்று வந்தது. வட்டிக்கு கொடுக்கப்போன ஊரில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சிலர் சொன்னார்கள். நான் நம்பவில்லை. ஆனால் பலர் சொல்ல ஆரம்பித்தனர். இவரும் அதற்கு ஏற்ப வீட்டுக்கு வராமல் வெளியவே தங்க ஆரம்பித்தார்.

விசாரித்த போது, அந்த பெண் திருமணம் ஆனவர். அவருக்கு வயதுக்கு வந்த பெண் உட்பட 3 பிள்ளைகள். கணவர் ஆட்டோ டிரைவர். என் கணவருக்கும், அவரது மனைவிக்கும் உள்ள தொடர்பு தெரிந்த பிறகு அவர் வீட்டுக்கே வருவதில்லையாம். அதனால் என் வீட்டுக்காரர் அவள் வீட்டிலேயே தங்கியுள்ளார். இதைப் பற்றி கேட்டால் சண்டை போடுவார். பிள்ளைகள் மீது பாசமாக இருந்தவர், இப்போது அவர்களையும் கவனிப்பதில்லை. சண்டையிலேயே நான்கைந்து ஆண்டுகள் ஓடின. ஆனால் அந்த பெண்ணுடன் தொடர்பு தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.

நான், பிள்ளைகள் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வர ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது சிறுநீரகத்தில் பிரச்னை, ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல இனி குடிக்கக் கூடாது, வெளியில் சாப்பிடக்கூடாது என்று சொல்லி மருந்து, மாத்திரைகள் தந்தனர்.

ஆனால் டாக்டர்கள் சொன்னதை மதிக்காமல் அவள் வீட்டுக்கு சென்று குடிக்க ஆரம்பித்தார். நான் அதை கண்டிக்கவே அவள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். ஒருநாள் உடம்பு முடியாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொன்னார்கள். போய் பார்த்தால் பக்கவாதத்தால், கை, கால் வரவில்லை. ‘கிட்னி பெயிலியர்’ வேறு. ஒருவாரம் வைத்திருந்தவர்கள், வீட்டிலிருந்தபடியே மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள சொன்னார்கள். அதன் பிறகு எல்லாம் படுக்கையில்தான்.

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணிய போது, அவரிடம் கையில் பணம் இல்லாதது தெரியவந்தது. சரியாக வசூலிக்க போகாமல் அந்த பெண்ணின் வீடு, குடி என்று இருந்ததால் அந்த நிலைமை. வீட்டிலிருந்த நகைகளும் காணவில்லை. கேட்ட போது, அவரால் சரியாக பேச முடியாததால் ஏதும் சொல்லவில்லை. அந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணிடம் செல்போனில் பேசி வருகிறார். திருத்தி விடலாம் என்று நம்பினேன்.

அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது. அவர் மறையும் போது எனக்கு 37 வயது. என் மாமனார் வீட்டில் வசதி எல்லாம் இல்லை, என் கணவரின் சகோதரர் தான் வீட்டு செலவினைப் பார்த்துக் கொண்டார். எனக்கு சங்கடமாக இருந்தது. தோழி உதவியால், வேலைக்கு சேர்ந்தேன். குறைந்த வருமானம் என்றாலும், மதிய சாப்பாடு, தினமும் அவர்கள் பஸ்சிலேயே போய் வரலாம் என்பதால் செலவு குறைவு.

பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். ஆனால் எனக்கு தொல்லைகள் தொடர்ந்தது. என் கணவரின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாராவது அடிக்கடி போன் செய்வார்கள். பலரும், ‘கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… எது… எப்போது வேணுமானாலும் கேளுங்க… இந்த சின்ன வயதில் உங்களுக்கு நிறைய கஷ்டம்… ’ என்பார்கள். முதலில் மரியாதையாக பேசியவர்கள் சில நாட்களில் ‘வா… போ…’ என்று பேச ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர், ‘நா உங்களுக்கு நல்ல ஃபிரண்டாக இருப்பேன்.. மனம் விட்டு பேசுங்க’ன்னு சொல்வாங்க.

என் கணவரின் மறைவுக்கு பிறகு, அன்பு காட்டத் துடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதில் என் கணவரின் சிறு வயது நண்பர் மூலமாக என் கணவரின் கள்ளக்காதலுக்கு அவரின் அப்பா மற்றும் அண்ணன் உதவியாக இருந்துள்ளது தெரிய வந்தது. எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை என் கணவரின் தோழரிடம் சொல்லி அழுதேன். அதற்கு அவர் ‘அதெல்லாம் இந்த காலத்தில் சகஜம்.

நீயும் உன் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசு… மனசுல பாரம் குறையும்’ என்பார். மற்றவர்கள் போலில்லாமல் அவரிடம் மட்டும் அடிக்கடி பேச ஆரம்பித்தேன். இந்த நான்கைந்து மாதங்களில் அவரிடம் எதையும் மறைக்காமல் சொல்லி விடுகிறேன். அவரும் என்னிடம் நெருக்கமாக பேசுகிறார். அவர் என்னை விரும்புவது புரிகிறது. ஆனாலும் வெறுக்க முடியவில்லை. அதே நேரத்தில் வெளியில் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயமும் இருக்கிறது. என் கணவர் செய்த அதே தவறை, நானும் செய்கிறேன் என்ற உறுத்தலும் இருக்கிறது. மற்றவர்கள் பழிப்பார்களோ என்ற பயமும் உள்ளது. அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஆனால் என்னிடம் பேசும்போதுதான் நிம்மதியாக உணர்கிறார்.

அதனால் அவரை தவிர்க்க முடியவில்லை. ஆனால் என் அம்மா வீட்டுக்கோ, மாமியார் வீட்டுக்கோ தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயமும் இருக்கிறது. இந்த பழக்கம் எங்கு போய் முடியுமோ என்று அச்சமாகவும் இருக்கிறது. ஆனாலும் தவிர்க்க முடியாமல் தவிக்கிறேன். என்னால் இந்த பிரச்னையில் இருந்து விடபட முடியுமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு வழிகாட்டுங்கள் தோழி!

இப்படிக்குபெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்போதுமே துயரத்தால் நிறைந்திருக்கிறது. கணவனுடன் வாழ்ந்தாலும் சரி, கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும் சரி துன்பம் மட்டும் தொலைவில் இருப்பதில்லை. முன்பு கணவர் என்ற ஆணால், இப்போது கணவர் இல்லாததால் பல ஆண்களால் தொல்லையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆண்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதைக் கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும், உங்கள் 2 குழந்தைகளுக்கும் உங்க கணவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அன்பான குடும்பம் இருக்கும் போது உங்கள் கணவர் இன்னொரு குடும்பத்தை தேடியதில் நியாயமில்லை. அவர் அப்படி செய்தும் கடைசி காலத்தில் நீங்கள்தான் அவரை கவனித்துக் கொண்டீர்கள்.

ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது மிகவும் இயல்பானது என்று உங்கள் கணவரின் அப்பா, அண்ணன் நினைத்து இருக்கலாம். அது சட்டப்படியும் நியாயமில்லை, தர்மப்படியும் நல்லதல்ல.அவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் கருதி தொழிலில், பணத்தை கையாளுவதில் கவனமாக இருந்திருக்க வேண்டும். கூடவே குடும்பத்தின் மீது அக்கறை இருந்திருந்தால் இப்படி குடிபோதைக்கு அடிமையாகி இருக்க மாட்டார். உங்களுக்கு மட்டுமல்ல அவர் அந்த பெண்ணுக்கும் உண்மையாக இருந்திருப்பார் என்று தோன்றவில்லை. அவளது குடும்பத்திற்கு உதவுவது கூட நேர்மையாக இருந்திருக்கும் என்று நம்ப முடியவி்ல்லை. அந்தப்பெண் எப்படிப்பட்ட வரோ? ஆனால் அந்தப் பெண்ணின் நிலையை இன்று நீங்கள் உணர முடியும். ஆம். உங்கள் கணவரால் அந்தப்பெண் எந்த நிலையில் இருந்தாரே.. அதே நிலையில்தான் இன்று நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கணவரின் நண்பருடன் நீங்கள் நட்பை தொடர்ந்தால் அந்த நிலை ஊருக்கும் தெரியவரும். நீங்கள் கணவரிடம் சண்டை போட்டது போல், நண்பரின் மனைவிக்கு தெரிந்தால் அங்கும் சண்டை வரும்.

உங்கள் கணவரை போலவே அவரது நண்பரும், தனது மனைவி, குழந்தைகள் குறித்து கவலைப்படாமல் உங்களுடன் உறவை தொடர நினைக்கிறார். அது நியாயமில்லை என்பது உங்களுக்கு புரிய வேண்டும். இன்றைய சூழலில் உங்கள் செயல் உங்களுக்கு நியாயமாக கூட தோன்றலாம். ஆண்கள் பலரும் உங்களை தொல்லை செய்வதால், அவர்களிடம் தப்பிக்க நினைப்பது சரியானதுதான். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக அந்த நண்பரிடம் அடைக்கலம் புக நினைப்பது பிரச்னையைதான் அதிகரிக்கும். வேட்டை நாய்களிடம் இருந்து தப்பி வெறிநாயிடம் சிக்கக் கூடாது. முக்கியமாக அவர் திருமணமானவர். அதனால் அவரிடம் அன்பை, ஆதரவை தேடுவது சரியாக இருக்காது. அவர் தனது உணர்ச்சிகளின் வடிகாலாக உங்களை நினைக்கிறார். கணவர் இல்லாமல் தனிமையில் இருக்கும் உங்களை தன் விருப்பப்படி பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்.

உங்கள் கணவர் குறித்து, இன்று குறைகளை சொல்பவர், ஏன் அன்றே உங்களிடம் சொல்லி எச்சரித்திருக்கலாமே. குறைந்தது அவரது நண்பரிடம் சொல்லி திருத்தியிருக்கலாம். ஆனால் ‘எல்லாம் நடக்கட்டும்’ என்று காத்திருந்தது போல் இருக்கிறது. கூடவே அவர் ஒரு திருமணமான மனிதர் என்பதால் அந்த உறவும், ஆதரவும் உதவாது. நிரந்தர உறவாக நீடிக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் கணவர் என்ன செய்யக் கூடாது என்று விரும்பினீர்களோ அதைதான் நீங்கள் இப்போது செய்கிறீர்கள். அதை செய்யத்தான் அவர் உங்களை தூண்டிக் கொண்டிருக்கார். வளர வேண்டிய உங்கள் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். அவர்கள் நன்றாக வளர வேண்டிய அடுத்த தலைமுறை. ஏற்கனவே தந்தையை இழந்தவர்கள். உங்களின் செயல்கள் அவர்களை பாதிக்கக் கூடாது.

நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும், அது உங்கள் நடத்தையில் இருந்துதான் தொடங்குகிறது.உங்களுக்கு ஒரு துணை தேவை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அந்த நண்பர் சரிப்பட்டு வரமாட்டார். இன்னொரு திருமணத்தை கருத்தில் கொள்வது சிறந்த யோசனையாக இருக்கும். உங்களுக்கு வயது இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் ஆதரவுடன் 2வது திருமணம் செய்ய முயற்சிப்பது சரியானதாக இருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் ஆதரவு தேவை. இருப்பினும் இரண்டாவது திருமணம் செய்தால் ஏற்படும் பலன்களையும், பிரச்னைகளையும் யோசியுங்கள். நல்ல தோழிகளுடன் கலந்தாலோசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். யாரையும் விட உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள்.

ஏற்கனவே திருமணமான அந்த நண்பருடனான அனைத்து உறவுகளையும் துண்டியுங்கள். அவரை தவிர்க்க உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அண்ணன், தம்பிகள், பெற்றோர், சகோதரிகள், மைத்துனிகளிடம் பேசுவது மூலம் நேரத்தை செலவிடுங்கள். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லித்தருவதிலும், புத்தகங்கள் படிப்பதிலும் கவனத்தை திருப்பலாம். ஆண்கள் உங்களுடன் பேச முயற்சிப்பதற்கான நோக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் நல்ல நட்பைக் கொண்டிருக்க முடியாத ஆண்களிடம், குறிப்பாக திருமணமான ஆண்களிடமிருந்து விலகியிருங்கள். எதையும் யோசித்து செய்யுங்கள். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam