9 to 5தான் வேலை செய்யணுமா? (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 44 Second

பட்டப் படிப்பு… வேலை… தங்களுக்கு என்று சுய சம்பாத்தியம் என பெண்கள் இப்போது யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு சிலர் தான் திருமணம், குடும்பம், குழந்தைகள்னு தங்களுக்கான எல்லையை வரைந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் குடும்பம் இருந்தாலும் தனக்கான சம்பாத்தியம் வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர். அதற்கு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தொழில்முனைய பல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அப்படிப்பட்ட வாய்ப்பினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இப்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக திகழ்ந்து வருகிறார் சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்த செல்வாம்பிகா. இவர் ‘ஈவென்ட் ஜங்ஷன்’ என்ற பெயரில் ஈவென்ட் மேலாண்மை நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

‘‘என்னதான் பெண்கள் படிச்சு வேலைக்கு போய் நல்ல சம்பளம் என்று இருந்தாலும், திருமணத்திற்கு பிறகு தாய்மை அடையும் போது அவர்களின் வேலையில் இருந்து சில மாசங்கள் விடுபட வேண்டியுள்ளது. சிலருக்கு தற்கால இடைவெளியாக இருக்கிறது. ஆனால் பல பெண்களுக்கு நிரந்தரமாக அலுவலக வாழ்க்கை முடிவடைகிறது. அதன் பிறகு அவர்கள் தங்களுக்கு என ஒரு வேலை என்று யோசிப்பதையே மறந்துவிடுகிறார்கள். குடும்பம் என்ற சூழலுக்கு தங்களை அடாப்ட் செய்து கொள்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறுகிறார்கள்.

நானும் அப்படித்தான். பொறியியல் படிப்பை முடிச்சிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கை நிறைய சம்பளமும் கூட. ஆனால் என்ன வேலைக்கு சேர்ந்த ஒரே வருஷத்தில் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. திருமணமும் நிச்சயமாச்சு. கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாம் என்று மாமியார் வீட்டில் சம்மதித்தாலும், குழந்தை என்று வந்த பிறகு வேலைக்கு செல்வது என்பது முடியாத நிலையாக மாறிவிடுகிறது. குழந்தை பிறந்த பிறகு அலுவலகம் சென்று எட்டு மணி நேரம் வேலையை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. நான் பொறியாளராய் இருந்தாலும் மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை மீது ஆர்வம் இருந்தது. அதுதான் என்னுடைய நிறுவனம் ஆரம்பிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது’’ என்று கூறும் செல்வாம்பிகா தன் நிறுவனம் துவங்கியது பற்றி விவரித்தார்.

‘‘வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அதே சமயம் காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை. அந்த நேரத்தில் தான் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி நேச்சுரல்ஸ் நிறுவனர் குமரவேல் அவர்களின் நேர்காணலை பார்த்தேன். அவரின் பேச்சு என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்தது. அவரை சந்திக்கலாம் என்று தோன்றியது. அதன் மூலம் எனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்னு நினைச்சேன்.

அவரை அணுகினேன். அவரோ என்னை அவர் நிறுவனத்தின் ப்ரைடல் மேக் அப் பிரிவுக்கு மார்க்கெட்டிங் ஹெட் ஆக பணியில் அமர்த்தினார். பொறியியல் துறையை முற்றிலும் துறந்து வேறு ஒரு துறைக்குள் என்னை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். மார்க்கெட்டிங் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். எந்த தொழிலாக இருந்தாலும் நம்முடைய பொருளை சந்தைப்
படுத்துவதில்தான் தொழிலின் முன்னேற்றம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்.

“இது 9 டூ 5 வேலை இல்லை. மேலும் எனக்கு அத்துறையின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது, மார்க்கெட்டிங் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். எந்த தொழிலாக இருந்தாலும், சந்தைப்படுத்துதலில் தான் தொழிலின் முன்னேற்றம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன்” என்ற செல்வாம்பிகா சுயமாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.‘‘நான் நேச்சுரல்சில் சேர்ந்த பிறகு ஒரு பிரைடல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியினை செய்தேன். அந்த நிகழ்ச்சியினை அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்த போது தான், இந்த வேலையை நாமே செய்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்று புரிந் தது. அப்படித்தான் ‘ஈவென்ட் ஜங்ஷன்’ உருவானது.

இந்த துறையை நான் தேர்வு செய்ய முக்கிய காரணம் இந்த தொழிலுக்கு எந்த மூலப்பொருளும் முதலீடும் அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் மற்றும் ஒரு நிகழ்ச்சிக்கு தேவையானவர்களின் தொடர்பு இருந்தால் போதும். மேலும் நான் முதன் முதலில் ஆரம்பிக்கும் போது, என்னையோ என் நிறுவனத்தை நம்பியோ பெரிய நிகழ்ச்சி எல்லாம் கொடுக்க மாட்டாங்க. அதனால் சிறிய அளவில் இருந்து ஆரம்பிக்க முடிவு செய்து, பிறந்தநாள் விழாக்களை டார்கெட் செய்தேன்.

ஆனால் இதனை ஏற்பாடு செய்யும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் பல இருந்தன. அவர்களுக்கு என தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். மேலும் அவர்கள் இந்த துறையில் பல வருடங்களாக இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டு நான் நிகழ்ச்சி நடத்துவது என்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது’’ என்றவர் அதனை சமாளிக்க ‘நோ லாஸ் நோ ப்ராஃபிட்’ என்ற தாரக மந்திரம் மூலம் தனக்கான ஒரு பாதையினை வகுத்துள்ளார்.

‘‘எந்த தொழிலாக இருந்தாலும் ஆரம்பத்தில் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியாது. லாபம் இல்லை என்றாலும், நஷ்டத்தில் தொழிலை நடத்த முடியாது. எனக்கான ஒரு அடையாளம் வரும் வரை பெரிய அளவில் லாபமும் இல்லை அதே சமயம் நஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இதன் மூலம் செய்த முதல் பிறந்தநாள் விழா பெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து பல பிறந்தநாள் விழாக்கள் செய்ய ஆரம்பித்தேன்.

இன்னும் மார்க்கெட் உயர சமூக வலைத்தளங்களில் என் நிறுவனம் சார்பில் பக்கம் துவங்கினேன். அதன் மூலமும் ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. 5000 ரூபாயில் சிறிய அளவில் தான் விழாக்களை ஏற்பாடு செய்யத் துவங்கினேன். இப்போது லட்ச ரூபாய் மதிப்புள்ள விழாக்களை எடுத்து நடத்துகிறேன். விழாக்கள் மட்டுமில்லாமல் அலுவலக நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறேன். மேலும் ஸ்டார் ஹோட்டல்களுடன் இணைந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சியினையும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்து தருகிறேன்.

2017ல் நிறுவனம் துவங்கி ஒரு வருடத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சி மட்டுமில்லாமல், புத்தாண்டு பார்ட்டி, கல்லூரி விழா, நிறுவன விழா என படிப்படியாக நிகழ்ச்சிகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரே வேலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருவருக்கு வேலை செய்வதற்கு பதில் நமக்காக உழைத்தால் லாபமும் நேரமும் அதிகமாகக் கிடைக்கும்,” என்கிறார் செல்வாம்பிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவால் ஏற்படும் முடி உதிர்வு!! (மருத்துவம்)
Next post எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை! (மகளிர் பக்கம்)