நான் அவனில்லை அருண் & அரவிந்த் ட்வின்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 37 Second

நாங்கள் அயிடென்டிகல் ட்வின் ப்ரதர்ஸ் எனப் பேச ஆரம்பித்த அருணும் அரவிந்தும் நான் அவனில்லை என சுற்றி இருப்பவர்களை குழப்பும் ரகம். திரைப்படம், விளம்பரங்களுக்கு கேஸ்டிங் டைரக்டர்ஸ், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களுக்கு ஈவென்ட்ஸ் ப்ளானர்ஸ், அதையும் தாண்டி அம்மா, மனைவி, குட்டீஸ்னு குடும்பமாய் வந்து இன்ஸ்டா, ஃபேஸ்புக், யூ ட்யூப் பக்கங்களில் காமெடியில் பங்கம் செய்து 4 லட்சம் பாலோவர்ஸ்களை வைத்திருப்பவர்கள்.

முதலில் நம்மிடம் பேசியது அரவிந்த். எனக்கும் அருணுக்கும் சின்ன வயசுல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வரவேற்பாளராக ஆசை. அப்பதான புதுப்புது கஸ்டமர்களைப் பார்க்க முடியும், லைஃப் ஜாலியா இருக்கும்னு நினைச்சோம். அடுத்து டூரிஸ்ட் கைட் வேலையும் பிடிச்சது. என்னைத் தாண்டி அருணுக்கு தனியா எதுவும் ஆசை வந்தால், அதெல்லாம் நல்லாவே இல்லைடான்னு சொல்லி அவனை மாத்திவிட்டுறுவேன். நான் வாய் சொல் வீரன்னா அவன் செயல் வீரன். நான் சொல்றதைதான் செய்வான்… சிரித்த அரவிந்திடம் மீடியாவுக்குள் நுழைந்தது குறித்துக் கேட்டோம்.

தஞ்சாவூர்தான் எங்களுக்கு சொந்த ஊர். மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க இருவருமா சென்னை கிளம்பி வந்தோம். வாழ்க்கையில் முன்னேறிட்டுதான் ஊரு திரும்பணும்னு உறுதியா நின்னப்ப, வருமானம் இதில் கம்மியாக இருந்ததோடு, ஒருத்தருக்கு மட்டும்தான் வேலைன்னு எந்த நிறுவனமாவது சொன்னால் நாங்கள் அதை திரும்பியே பார்க்க மாட்டோம். பேச்சுலே மயக்குற கம்யூனிகேஷன் ஸ்கில் இருந்ததால் மீடியா வாய்ப்புகள் இருவருக்குமாகக் கிடைத்தது.

சின்னத் திரையில் சின்ன சின்ன வேலைகளில் தொடங்கி, 2015ல் ஒரு ரியாலிட்டி ஷோவுக்குள் இருவரும் நுழைந்தோம். 2016ல் அது நான்காக மாறியது. 2017ல் நான்கு சேனல் வாய்ப்புகள் எங்கள் கைகளில் மொத்தமாக அடுத்தடுத்து இருந்தது. எல்லா ரியாலிட்டி ஷோவிலுமே 80 சதவிகிதமும் எங்களுக்கு வேலை இருந்தது. தொடர்ந்து எங்களோட ‘ட்வின் ஹார்ட் (TWIN HEART) கேஸ்டிங் & ஈவென்ட் ப்ளானிங்’ நிறுவனம் உதயமானது.

செலிபிரிட்டியில் தொடங்கி காமன் பீப்பிள் பிக்ஸ் செய்வது வரை நாங்களேதான்னு வாழ்க்கை பிஸியா மாறுச்சு. கௌதம் வாசுதேவ்மேனன் சாரின் ‘அச்சமென்பது மடமையடா’, பால சாரின் ‘வர்மா’, நயன்தாரா மேடத்தின் ‘ஐரா’, டோரா, 96’ படம் என காஸ்டிங் இயக்குநர்களாக கலக்கினோம். இஞ்சினியரா இருந்தால்தான் பொண்ணு கிடைக்கும்னு வீட்ல சொல்ல, அதையும் நாங்க விடுறதா இல்லையென சிரித்தவர்.. வருகிற மருமகள்கள் எங்களை மாதிரி ட்வின்ஸ்ஸா இருந்தா குடும்பம் பிரியாது என்பது அம்மாவின் விருப்பம். ஆனால் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றில், எங்கள் பிறந்தநாளுக்கு கேக் கட் செய்ய, விஷுவல் கம்யூனிகேஷன் இன்டென்சிப்பிற்காக வந்த ப்ரியா அங்கு யதேச்சையாக எங்களுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி அப்படியே ப்ரெண்டானாங்க. பிறகு எங்களுக்குள் பிடிச்சுப்போயி… அடுத்து வந்த எங்களின் 5வது பிறந்த நாளில் எனக்கும் ப்ரியாவுக்கும் டும்..டும்..டும்மே
முடிந்துவிட்டது.

நானும் ப்ரியாவும் நண்பர்களாகப் பழக ஆரம்பித்ததுமே, ‘ப்ரியா வந்தா உன்கிட்டதான் பேசுறா’ன்னு வாலி அஜீத் மாதிரி அருண் மூஞ்சிய தூக்கி உர்ர்ர்ன்னு வச்சுப்பான். எனவே மூஞ்சிய உர்ர்ர்னு வச்சுக்கிட்டா அது அருண். ப்ரியா வந்து பக்கத்துல நின்று நெருங்கிப் பேசுனா அது அரவிந்த். இப்படித்தான் ப்ரியாவின் தோழியா எங்கள் நட்பு வட்டத்திற்குள் நுழைந்த ஹோமியோபதி டாக்டர் வைஷாலி ட்வின் பிரதர்ஸான எங்களை புரிஞ்சு வச்சுருந்தாங்க. பிறகு அவுங்களே அருணின் மனைவியாகிட்டாங்க. மூன்று குடும்பங்களின் சம்மதத்துடன், எங்கள் இரண்டு ஜோடிகளின் திருமணமும் இரண்டு நாள் இடைவெளியில் அடுத்தடுத்து நடந்தது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவர்கள் குடும்ப வீடியோ குறித்த நம் கேள்விக்கு வாய் திறந்தார் ட்வின் பிரதர் அருண். மெமரிஸ் சேகரிப்பது எங்களுக்கு பிடித்தமான ஒன்று. வாழ்க்கையில் நாங்கள் கடக்கும் ஒவ்வொரு மொமெண்டையும் வீடியோவா சேகரிக்க நினைத்தோம். எனவே குடும்பமாக வீடியோ தயாரித்து இன்ஸ்டா, ஃபேஸ்புக், யு டியூப்னு அப்லோட் செய்ய ஆரம்பித்தோம். பத்து வீடியோவுக்கு ஒன்றில் அம்மாவும் எங்களோட சேர்ந்துக்குவாங்க. புது வரவுகளான எங்கள் குட்டீஸ் நிலன் மற்றும் நவிலனையும் சேர்த்துக்குவோம். இப்ப இன்ஸ்டாவில் 4 லட்சம் யு-டியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் 2.50 லட்சம் பாலோவர்ஸ் எங்களுக்கு இருக்காங்க என்றவாறே அருண் தன் மனைவி வைஷாலியை பார்க்க அவரைத் தொடர்ந்தார் வைஷாலி.

நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஃப்ரெண்டா மீட் செய்து, நால்வருமே நல்ல திக் ஃப்ரெண்ட்ச்ஸா ஃபார்ம் ஆனோம். அதில் ப்ரியாவுக்கும் அரவிந்துக்கும் முதலில் பிடித்துப்போக, தொடர்ந்து எனக்கும் அருணுக்கும் பிடித்து மூணு ஃபேமலிய ஒரே ஃபேமலியாக்கிட்டோம் எனச் சிரித்தவர், அரவிந்த் மனைவி ப்ரியாவும் நானும் எல்.கே.ஜியில் இருந்து ஸ்கூல் ஃபைனல் வரை க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ப்ரியா மூலம்தான் அருண்-அரவிந்த் பழக்கம். துவக்கத்தில் இருவரையும் அடையாளப்படுத்திக்க குழம்பி இருவரிடமும் மாத்தி மாத்தி பேசியிருக்கேன்.

நானும் ப்ரியாவும் ஒரு நாள் படம் பார்க்க தியேட்டர் போயிருந்தோம். அப்ப அரவிந்த் சொன்ன நேரத்திற்கு தியேட்டருக்கு வராததால், அரவிந்த் மேல் ப்ரியா கோபமாக இருந்தாள். நான் அரவிந்த் என நினைத்து அருணிடம் ப்ரியா கோபமாக இருப்பது குறித்து பேசி கன்வின்ஸ் செய்ய, அவரும் நான் அவனில்லை என்பதை என்னிடம் சொல்லாமலே, நான் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நான் அருண் எனச் சிரிக்க மொக்கை வாங்கினேன் என்ற வைஷாலி, ப்ரியாவின் ஃப்ரெண்டாக கூடவே போனதால், அரவிந்தும்-ப்ரியாவும், மொழி படத்தில் வரும் பிரகாஷ்ராஜ்-சொர்ணமால்யா மாதிரி அருணோட கோர்த்துவிட, எங்களுக்குமே பிடிச்சிருந்தது. பெண்களின் நட்பு திருமணத்திற்குப் பின் தொடராது என்பார்கள். ஆனால் நாங்கள் எங்கள் நட்பைத் தக்க வச்சுக்கிடணும் என்பதில் ரொம்பவே தெளிவா இருந்தோம். அதனாலே திருமணத்தை ஓ.கே. பண்ணிக்கிட்டோம்.

நாங்கள் அனைவருமே அவரவர் கேரியர்ல பிஸி. குடும்பத்தில் நண்பர்களா நிறைய விவாதிப்போம்.. அடிச்சுக்குவோம்.. கொஞ்ச நேரத்தில் ஒன்னா சேர்ந்து சிரிப்போம். கொரோனா லாக்டவுனில் வேலை இல்லாமல் சும்மாவே இருக்க, அருண்-அரவிந்த் இணைந்து ஜாலியா டிக்டாக் வீடியோஸ் பண்ணும்போது கலைச்சு விடுறதுக்காகத்தான் நான் உள்ள போவேன். அப்படியே பலி ஆடா மாறிட்டேன். இதில் ஸ்கிரிப்ட், டயலாக் டெலிவரி, ஆக்டிங், கேமரா, டைரக் ஷன், எடிட்டிங் எல்லாத்தையும் ஒத்த ஆளாப் பார்க்குறது அரவிந்த்தான். நாங்க ஆர்டிஸ்ட் மாதிரி டைமுக்கு உள்ள வந்து ச்சும்மா சீனைப் போடுவோம் என்றவரை இடைமறித்த அரவிந்த், வைஷாலி நடிக்க வரும்போது டம்மி பீஸ். எங்ககூட சேர்ந்து இப்ப நடிப்புல எங்களையே டாமினேட் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க என வைஷாலியை கலாய்த்தார்.

கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறித்து வைஷாலியிடம் கேட்டபோது? ஏற்கனவே ப்ரியாவை ஃப்ரெண்டா எனக்கு நிறையவே தெரியும் என்பதால் குடும்பத்தில் எங்களுக்குள் எப்போதும் பிரச்சனை இல்லை. எனக்கான உடை தேர்வில் தொடங்கி, இருவரின் தாட் ப்ராசஸ் எப்போதுமே ஒன்றுதான். ஷேர் பண்ணுவதற்காக ஃப்ரெண்ட்ஸ் தேடி வெளியில் செல்லும் வேலையும் எங்களுக்கு இல்லை. பக்கத்து பக்கத்து அறை என்பதால் அந்த வேலையும் எங்களுக்குள் சுலபம் என்ற வைஷாலியைத் தொடர்ந்து பேசினார் ப்ரியா.

ஜீன்ஸ் படத்தில் வருகிற நடிகர் பிரசாந்த் மாதிரி அவர்கள் அப்படியே டபுள் ஆக்ட் கிடையாது. நெருங்கிப் பழகுபவர்கள் ஈஸியாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் அருண்-அரவிந்திற்கு குரோம்பேட்டையில் ஷூட்டிங் இருந்தது. என் வீடும் அங்குதான். ஏற்கனவே நான் அவர்கள் நட்பில் இருந்ததால், அப்போது அவர்கள் அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, போய் பார்த்துக்க முடியுமான்னு உதவி கேட்டாங்க.

நான் என் ப்ரெண்ட் வைஷாலியையும் கூடவே கூட்டிட்டுப் போய் அம்மாவை ரொம்ப நல்லாவே கவனிச்சுக்கிட்டோம். அப்படியே எங்களுக்கும் அம்மாவுக்கும் இடையே ரிலேஷன்ஷிப் நல்லவிதமாக பில்டாயிருச்சு. மேலும் குழந்தையில் இருந்து நாங்கள் தோழிகள் என்பதால் எங்கள் இருவர் குடும்பத்திற்கும் எங்கள் இருவரையும் பிடிக்கும். திருமணத்திற்கு பின்பும் எங்கள் நட்பு மாறாமல் பார்த்துக்கொள்ள இரு குடும்பத்து பெரியவர்களும் அட்வைஸ் செய்து எங்களை ஆசிர்வதிச்சுருக்காங்க. தவிர நாங்களும் நிறைய விசயங்களை அடிப்படையில் பில்ட் பண்ணி வச்சிருக்கோம்.

நண்பர்களாக நால்வருமே நான்கு ஆண்டுகளைக் கடந்த பிறகே திருமண முடிவுக்குள் வந்ததால், கூட்டுக் குடும்பமாய் வாழ்க்கையை எஞ்சாய் பண்றோம். அருண்-அரவிந்திற்கு ஒரு அண்ணாவும் இருக்கிறார். அவரும் இஞ்சினியரிங் படித்து குடும்பமாக சிங்கப்பூரில் வசிக்கிறார். மூவருமே ஒரே மாதிரி அம்மா பிள்ளைகள்தான். அம்மாகிட்ட சொல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். அம்மாவும் எங்களை சூப்பரா வழிநடத்துறாங்க. மூன்று மருமகளையும் சமமாகத்தான் டிரீட் பண்ணுவாங்க. மேலும் அம்மா பிஸினஸ் ஃபீல்டிலும் இருந்தவர் என்பதால், எங்கள் முகம் பார்த்தே எதையும் புரிஞ்சுக்குவாங்க என மாமியார் முகத்தைப் பார்க்க, அவரைத் தொடர்ந்து அருண்- அரவிந்த் அம்மா ஜெயந்தி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

குழந்தையில இருந்தே இருவரும் திருட்டுத்தனத்தில்கூட ஒருத்தரை ஒருத்தர் சொல்லி மாட்டிவிட மாட்டாங்க. அந்த அளவுக்கு சேர்ந்தே தப்பு செய்வார்கள். அடிக்கடி ஐடி கார்டை மாற்றிப்போட்டு ஸ்கூலில் கலாட்டா செய்வார்கள். அளவுக்கு மீறி சேட்டைகள் செய்யும்போது வீட்டுக்கு கம்ப்ளெய்ன்ட் வரும். சில நேரம் அறைக்குள் கதவை சாத்திக்கொண்டு உச்சத்துல இருவருக்கும் அடிதடி சண்டை நடக்கும். கதவை திறந்தா ரெண்டுபேரும் அமைதியா இருப்பாங்க.

இருவரும் பவ்யமா நின்றால் அன்னைக்கு ப்ராக்ரெஸ் ரிப்போர்ட் வந்திருக்குன்னு அர்த்தம் எனச் சிரித்தவர்.. ஆனாலும் என் பிள்ளைகள் சமத்து. நான் கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள் என்கிறார். அதேபோல் என் மருமகள்களும் ட்வின்சாகவோ, அக்கா, தங்கையாகவோ இருந்தால்கூட என் மருமகள்கள் இந்த அளவு ஒத்துப் போவாங்களான்னு எனக்குத் தெரியாது. இருவரும் திக் ஃப்ரெண்ட்ஸ் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அன்பா குடும்பத்தைக் கொண்டு போறாங்க என்கிறார் முகமெல்லாம் பூரித்து.

திருமணம் பேச்சு நடந்த துவக்கத்தில் இரண்டு பெண் வீட்டாரும் யார் தங்கள் மருமகன் என அடையாளம் தெரியாமல் தடுமாறுனாங்க. அதனால் மாப்பிள்ளைகளா வாங்க என்றுதான் இருவரையுமே அழைப்பார்கள். அவர்கள் குழப்பம் புரிந்து, ‘நான் அருண் வந்துருக்கேன்.. நான் அரவிந்த் வந்திருக்கேன்’ என இவர்களே சொல்லுவார்கள். சில நேரம் பெரியவர்கள் யாராவது அருண் என் நினைத்து அரவிந்திடம் பேசினால், நான் அவனில்லை என டக்குன்னு சொல்லாமல், நீங்க சொன்னதை நான் அருணிடம் சொல்லிடுறேன் என்பார்கள் என புன்னகைக்கிறார்.

நண்பர்களாக இருந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்ததால் அவர்களுக்குள் வித்தியாசம் இல்லை. நானும் ஒரு மாமியாராக என் எதிர்பார்ப்புகளை மருமகள்கள் மீது திணிக்காமல் என் பெண்களாகவே அவர்களைப் பார்க்கிறேன். எதற்காகவும் நான் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. குடும்பத்திற்குள் எதையும் குற்றச்சாட்டாக இல்லாமல் ஷேரிங்காகக் கொண்டு செல்வோம். வீட்டில் எங்களுக்குள் எல்லாமே ஓப்பன் டாக்தான். ஜாலியாகவே எப்போதும் இருப்போம். பேசுவோம். என் மருமகள்களும் நல்ல புத்திசாலிகள். இடம் பொருள் அறிந்து, குறிப்பறிந்து அவர்களாகவே செயல்படுவார்கள்.

குறையில்லாத மனிதர்கள் இந்த உலகில் இல்லைதான். பெரியவர்கள் ரெண்டு படி இறங்கினா சின்ன பிள்ளைகள் ஒரு படி இறங்குவார்கள். ஈகோ கிளாஷ் இல்லாமல் வாழ்ந்துட்டா எந்த குடும்பத்திலும் பிரச்சனை இல்லைதான். உனக்காக நான்.. எனக்காக நீ.. உங்க எல்லாருக்காகவும்தான் நான் என பாசத்தை பகிரும்போதுதான் குடும்பம் சந்தோஷமாக இருக்கு… சிரித்தவாறே விடை கொடுத்தனர் குடும்பமாக அனைவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலை கிராமங்களில் கடத்தப்படும் குழந்தைகள்!! (மகளிர் பக்கம்)
Next post கொரோனாவை வெல்ல கொய்யாவே போதும்! (மருத்துவம்)