By 7 October 2021 0 Comments

சட்டவிரோத செயற்பாடுகளின் மையம் ஆறுகள், குளங்கள்: கசக்கும் கசிப்பு!! (கட்டுரை)

உலகத்தை கொவிட்- 19 பெருந்தொற்றின் மூலமாக, இயற்கை அடக்கி வைத்திருந்தாலும், பல்வேறான குற்றச்செயல்களும் சட்டவிரோத செயற்பாடுகளும் நடந்தேறிய வண்ணமே உள்ளன.

நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கம் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை நிறைவேற்றினாலும் இன்னமும் குற்றச்செயல்களும் சட்டவிரோத செயற்பாடுகளும் முடிந்தபாடில்லை. ஆரோக்கியமானதும், நல்லொழுக்கம் கொண்டதுமான சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டுமென கோசங்கள் இட்டாலும், கிராமங்களில் இடம்பெறுகின்ற அசம்பாவிதங்களை முறியடிக்க அல்லது முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் இருப்பதும் கவலையானதொன்றே.

நாட்டில் சட்டபூர்வமான முறையில் மதுபானசாலைகள் இயங்கிக் கொண்டிருக்கையில், அவற்றிற்கும் மேலாக கசிப்பு உற்பத்திகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. சட்டவிரோத செயல்களுக்கு எதிரான சட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இன்னமும் முடிவுறுத்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கசிப்பு உற்பத்திகள் இடம்பெறுவதை அறிகின்றோம். அதிலும் மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதியில், ஆறுகள், குளங்களை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

அண்மையில், கண்டியநாறு, அடைச்சல் போன்ற குளங்களில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாகவும், அதனால் அக்குளங்களில் உள்ள மீனினங்கள் இறப்பதாகவும் செய்திகள் வெளியாகிருந்தன. அப்பகுதியில் இருந்து பெருமளவிலான கசிப்புகளும் கைப்பற்றப்பட்டு இருந்தன.

அதேபோன்று சாமந்தியாறு, புளுகுணாவை குளம், விளிம்பாகுளம், சிறையாத்தீவு போன்ற பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை இடப்பட்டிருந்தன. இவ்வாறு அமையும் ச கசிப்பு உற்பத்தி நிலையங்களின் உற்பத்திகளை, அதிகளவில் சாதாரண மக்களே அருந்துகின்றனர்.

மதுபானங்களை விடக் குறைந்த விலையில் குறித்த கசிப்பு விற்பனை செய்யப்படுவதால் இதற்கு சாதாரண மக்கள் அடிமையாகிருன்றனர். அதேவேளை எந்நாளும், தாம் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலேயே கசிப்பு கிடைப்பதினாலும் இதனை அடிக்கடி அருந்துவதற்கும் வாய்ப்பாகி உள்ளது. எவ்விதமான உத்தியோகபூர்வ மதுசாரப் பெறுமானங்களும் இன்றி, தமக்கு விரும்பிய அளவுகளில் இவ்வாறான உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், இவ்வுற்பத்தி எவ்விதமான பக்கவிளைவுகளை மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதும் தெரியாமல் உள்ளது. எதையாவது அருந்தினால் போதும் என நினைக்கின்ற சாதாரண மக்களிடத்தில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ணுகின்றது. குடும்பச் சண்டைகளும் வீட்டில் இருக்கின்ற பொருட்களை விற்றுகூட இதனை அருந்துகின்ற துர்ப்பாக்கியமும் கிராமப்புறங்களிலே இடம்பெறுகின்றன.

வீடுகளிலும் சிறுசிறு அளவில் இவ்வாறான உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தமையையும் அறியமுடிகின்றது. இவ்வாறான உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்படுகின்ற போது, கசிப்பும், அதற்கு பயன்படுத்துகின்ற பொருட்களுமே மீட்கப்படுகின்றன.

ஒருசில இடங்களில் மாத்திரமே உற்பத்தி மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றனர். சில இடங்களில் 20க்கு மேற்பட்ட பெரல்களில் இருந்து கசிப்பு கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறானெனின் இது சிறிய அளவிலான உற்பத்தி நிலையமாக பார்க்க முடியாது. பெரிய அளவிலான தொழிற்சாலையாகவே பார்க்கத்தோன்றுகின்றது.

அவ்வாறு பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்படுகின்றதென்றால் இவற்றில் ஒரிருவர் மாத்திரம் சம்மந்தம் உடையவர்களாக இருக்க முடியாது. கூட்டாக இயங்கி, திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது என்பதனை இதன் மூலம் ஊகித்துக்கொள்ள முடிகின்றது.

இவ்வாறான சட்டவிரோத உற்பத்தி நிலையங்களை நடத்துபவர்களாக, இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுபவர்களாக அதிகளவில் இளம் சமூகத்தினர் உள்ளமை மிகக்கவலையானதே. அதேவேளை, இளம்சமூகத்தினறே அதற்கு அடிமையாகின்றமையினையும் அவதானிக்க முடிகின்றது.

எனவே, மாவட்டத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் இச்சட்டவிரோத செயற்பாடுகளை இல்லாமல் ஆக்குவதற்கு ஒன்றாக இணைய வேண்டும். சமூக நலனில் அதீத அக்கறை கொண்டு, ஆரோக்கியமானதும் ஒழுக்கமானதுமான சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இதற்கான பூரண ஒத்துழைப்பினையும், தடைகளையும் நீக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். இவற்றிற்கு ஆதரவாக, துணையாக செயற்படுபவர்களையும் சமூகத்திற்கு தெரியப்படுத்தி அவ்வாறானவர்களையும் சட்டத்தின்முன் நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் கசிப்பு உற்பத்தி அற்ற மாவட்டம் என்ற நற்பெயரினைப் பெற வேண்டும். வீதி, வீடு, பாலம், கட்டடம் இவைகள் மட்டும் அபிவிருத்திகள் அல்ல. மக்களிடத்திலும் அபிவிருத்தி இடம்பெற வேண்டும். குறிப்பாக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நீங்கிய அபிவிருத்தி இடம்பெற வேண்டும். இவ் அபிவிருத்தியை அனைவரும் இணைந்தால் இலகுவாக மேற்கொள்ள முடியும். இல்லையாயின் இருண்ட உலகிற்கு மக்கள் செல்வதை தடுக்கமுடியாமல் போய்விடும்.Post a Comment

Protected by WP Anti Spam