By 15 October 2021 0 Comments

எந்த வாழைப்பழத்தில் என்ன சத்து? (மருத்துவம்)

உணவியல் நிபுணர் திவ்யா எளிதாகக் கிடைக்கக் கூடியது, விலை குறைவானது, எல்லா பருவங்களுக்குமானது என்று பல்வேறு தனித்துவங்கள் கொண்டது வாழைப்பழம். பழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டதும் வாழைப்பழம். ஒவ்வோர் வகையும் தனித்துவமான மருத்துவ குணங்கள் கொண்டதுதான். இருப்பினும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்றவை எல்லா வாழைப்பழத்துக்கும் பொதுவானவை. என்னென்ன வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை விரிவாகப் பார்ப்போம்…

* செவ்வாழை

பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை செவ்வாழையில் இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. செவ்வாழை தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

மாலைக்கண் நோய், கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும். மேலும் பல் வலி, பல்லசைவு போன்ற பல் சார்ந்த பிரச்னைகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும். நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும். ஆண்மையும் பெருகும்.

* ரஸ்தாளி

பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி – 6 மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரஸ்தாளியால் உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு ஒரு ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.
மன அழுத்தமும் குறையும்.

* கற்பூரவள்ளி

செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் கற்பூரவள்ளியில் உள்ளது. இது வேறு எந்தப்பழத்திலும் காணப்படுவதில்லை. இது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும். நரம்புகளுக்கு வலுவினைத் தரும்.

* பூவன் பழம்

மூல நோய்களுக்கு உகந்தது. எலும்பு பலவீனம் கொண்டவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.

* பச்சைப்பழம்

பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளி்ர்ச்சியை உண்டாக்கும்,பித்த நோய் குணமாகும். நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை உள்ளது.

* நேந்திரம் பழம்

அதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல தூக்கத்தை வழங்கும் ப்ரோபயாட்டிக் நிறைய உள்ளது.

* மொந்தன் பழம்

மூலம் மற்றும் ரத்தசோகைக்கு நல்லது. குடல் புண்களைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய்க்கு நல்லது. அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.

* ஏலக்கி

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.

* பேயன் பழம்

புகைப்பிடிப்பதை நிறுத்த உதவியாக இருக்கிறது. இதில் உள்ள டிரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

தவிர்க்க வேண்டிய வாழை

சென்னை போன்ற பெருநகரங்களில் மோரீஸ் என்ற வாழைப்பழம் விற்கப்படுகிறது. இந்த வாழைப்பழம் திசு வளர்ப்பு முறையில் விளைய வைக்கக் கூடிய பழமாகும். இதை சாப்பிட்டால் ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே, இதுபோன்ற மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழங்களை உண்ணக்கூடாது.

யாரெல்லாம் வாழைப்பழம் உட்கொள்ளக் கூடாது?

* வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்வதே
போதுமானது.

* நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது.

* வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி பிரச்னை உண்டாகும். அதோடு, அடுத்தடுத்து உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.



Post a Comment

Protected by WP Anti Spam