வயதானவர்களுக்கான சிறப்பு வீடுகள்! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 36 Second

தனது தாத்தாவிற்கு ஒரு முழுமையான பராமரிப்பு தேவைப்பட்ட போது அதற்கான சிறப்பு வசதிகள் இல்லாமல் காவ்யா சிரமப்பட்டுள்ளார். ‘‘தாத்தா திடீரென ஒரு நாள் கீழே விழுந்ததில் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. நான் இங்கு சென்னையில் பல மருத்துவமனைகளில் வேலை செய்திருந்ததால் மருத்துவர்கள் செவிலியர்களை எனக்கு நன்கு தெரியும். ஆனாலும் என் தாத்தாவிற்கான தற்போதைய பராமரிப்பை எங்களால் கொடுக்க முடியவில்லை. மருத்துவ உதவிகளைத் தாண்டி அவரை ஒவ்வொரு நிமிடமும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் நினைத்தோம்.

அவரால் எழுந்து நடக்க முடியாமல் போன போது, படுக்கையில் இருக்கும் அவரை எப்படி பார்த்துக்கொள்வது என எங்களுக்கு தெரியவில்லை. அதற்கான போதுமான வசதிகளும் எங்கள் வீட்டில் இல்லை. அப்போதுதான் வயதானவர்களுக்கான ஒரு பாதுகாப்பான பராமரிப்புடன் கூடிய இடங்கள் தேவை என புரிந்தது. இங்கே முதியோர்களுக்குத்தான் அதிகப்படியான உதவியும் பராமரிப்பும் தேவை. ஆனால் அவர்களுக்கான பிரத்யேக அமைப்புகள் குறைவாகவே இருந்தன. இவர்களுக்கு அன்றாடம் தங்களை பராமரிப்பதை தாண்டி தங்களது வீடுகளையும் பராமரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது.

நாங்கள் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வயதானவர்களுக்கான ஆசிரமங்களும் தனி வீடுகளும் இருந்ததே தவிர அவர்களுக்கான பராமரிப்புடன் கூடிய எல்டர்லி-ஃப்ரெண்ட்லி வீடுகள் எதுவும் இருக்கவில்லை. எனவே நானும் என் நண்பர்களான னிவாசன் மற்றும் கார்த்திக் நாராயணன் இணைந்து அதுல்யா அசிஸ்டெட் லிவிங் ஆரம்பித்தோம். னிவாசன் சிறந்த மருத்துவமனைகளில் வேலை செய்திருக்கிறார். கார்த்திக் வயதானவர்களுக்கான மருத்துவராக பணியாற்றுகிறார். எனவே இவர்கள் உதவியுடன் மற்ற பல மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு இவ்வித இல்லங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்’’ என்கிறார் அதுல்யா சிறப்பு பராமரிப்பு இல்லத்தின் முதன்மை நிர்வாகியான கிருஷ்ண காவ்யா.

‘‘அதுல்யா பராமரிப்பு வீடுகளில் பொதுவாக வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்களின் பெற்றோர்களே வசிக்கின்றனர். இங்கு நடக்கமுடியாமல் உடல்நலக் குறைவுடன் இருக்கும் பெரியவர்கள் முதல் பொதுவாகவே தினசரி உதவி தேவை என வரும் பெரியவர்களும் உண்டு. சிலர் தங்கள் உடல்நிலை சரியாகும் வரை இங்கு தங்கியிருந்து சென்றுவிடுவார்கள். சிலர் அதுல்யாவை தங்கள் சொந்த வீடாக ஏற்று இங்கேயே வசித்து வருகின்றனர்.

குறிப்பாக அல்சைமர் நோயால் பாதித்தவர்களும் இங்கு தங்கியுள்ளனர். அவர்களுக்கு சசி விஜயன் ஆர்ட் தெரபி மூலம் பயிற்சி அளிக்கிறார். “அல்சைமர் எனப்படும் உளவியல் நோய், முதுமையில் மறதியை அதிகரித்து, நினைவுகளையும் சிந்தனைகளையும் சிதைத்துவிடும். இதில் கடந்த கால குழந்தைப் பருவம் அல்லது வாலிப பருவத்தின் நினைவுகள் இருந்தாலும், அண்மையில் சந்தித்த நபர்கள் முதல் பெற்ற குழந்தைகளைக் கூட மறந்துவிடுவார்கள். அப்போது தங்கள் பிள்ளைகளை அடையாளம் காண முடியாமல் அவர்களுடன் சண்டை போட ஆரம்பிப்பார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்றால், திரும்பி வர முகவரியும் வழியும் தெரியாமல் தொலைந்து போய்விடுவார்கள்.

காலை ஏற்கனவே குளித்திருந்தாலும், அது நியாபகமில்லாமல் மீண்டும் குளிப்பார்கள். திடீரென உணர்ச்சிகள் மேலோங்கி மன அழுத்தத்திற்கு செல்வார்கள், சில சமயம் கோபப்படுவார்கள். இதெல்லாம் பயத்தின் வெளிப்பாடுதான். யாரையும் அடையாளம் காண முடியாமல் தவிக்கும் போது மேலோங்கும் இந்த உணர்ச்சிகளை கண்டுபிடிக்கவே குடும்பத்தினருக்கு நேரமாகலாம்’’ என்றார் சசி.

‘‘அதுல்யாவில், வயதானவர்களுக்காக ஆர்ட் தெரபி நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது ஆச்சரியமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகளை வெளிப்நாடுகளிலும் அல்லது வட மாநிலங்களிலும்தான் பொதுவாக நடத்துவார்கள். அதுவும் குறிப்பாக குழந்தைகளை நோக்கிதான் இந்த ஆர்ட் தெரபி இருக்கும். அதுல்யாவில் பெரியவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தியது மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த ஆர்ட் தெரபியில், நாங்கள் ஓவியம் வரைய கற்றுத்தர மாட்டோம். இது வண்ணங்கள் மூலம் நம் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி. ஆர்ட் தெரபியை தொடர்ந்து செய்துவந்தால், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மீண்டும் பழைய நினைவுகளை நியாபகப்படுத்தி, மூளையை செயல்படுத்த முடியும். இது அவர்களது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கும். படைப்பாற்றலை அதிகரித்து ஒரு வித வெற்றியடைந்ததைப் போன்ற உணர்வை தரும். ஐந்து புலன்களையும் செயல்படுத்தி உடல் வலிமையை அதிகரிக்கும். ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிக்கும்’’ என்கிறார்.

இவரைத் தொடர்ந்து காவ்யா, ‘‘எங்களிடம் இருபத்தி நான்கு மணி நேரம் செவிலியர்கள் இருப்பார்கள். தினமும் வயதானவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளையும் மாத்திரைகளையும் வழங்குவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கான ஸ்பெஷல் உணவு முதல் ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு தகுந்த டயட்டை தினமும் ஆரோக்கியமான முறையில் தயாரித்து கொடுக்கிறோம். எங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ஒவ்வொரு குடியிருப்பாளரையும் பரிசோதித்து அவர்களது உணவுப் பழக்கங்களை தெரிந்துகொண்டு அதற்கேற்ற உணவுகளை பரிந்துரைப்பார்.

எங்கள் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் ஒரு பெட்ரூம் பாத்ரூம் அல்லது இரண்டு பெட்ரூம் பாத்ரூம் என இருக்கும். கணவன்- மனைவி இருவரும் ஒரே அறையில் தங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள் தனி அறைகளில் தங்கிக் கொள்ளலாம். குடியிருப்புகளில் இருக்கும் படுக்கைகள் இருக்கைகள் மற்றும் மரச்சாமான்கள் அனைத்துமே வயதானவர்கள் எளிதில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான பொருட்களாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

குளியலறையில் வயதானவர்கள் வழுக்காமல் இருக்க திடமான ஃப்ளோரிங், அவர்கள் மெதுவாக கைபிடித்து நடக்க கைப்பிடி கம்பிகள், பொழுதுபோக்கிற்கு கம்யூனிட்டி ஏரியாவில் மற்றவர்களுடன் உரையாடலாம், போர்ட் கேம்ஸ் விளையாடலாம், படிக்கலாம் மற்றும் அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கை செய்யலாம்” என்கிறார். அதுல்யா பராமரிப்பு வீடுகள் இப்போது அரும்பாக்கத்திலும் பெருங்குடியிலும் இயங்கி வருகிறது. நீலாங்கரையிலும் பல்லாவரத்திலும் இன்னும் சில வாரங்களில் புதிய குடியிருப்புகள் திறக்கப்படஉள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய்ப்பால் மூலம் கோவிட் 19 பரவுமா?! (மருத்துவம்)
Next post தமிழ் என் உயிரானதினால் தமிழாலே உயர்ந்தேன்! (மகளிர் பக்கம்)