By 27 October 2021 0 Comments

மரப்பாச்சி சொன்ன ரகசியம்!! (மகளிர் பக்கம்)

தமிழ்மொழி பிரிவில் 2020ம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்கிற குழந்தைகள் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை சுற்றி வளைத்து சொல்லாமல், மரப்பாச்சி பொம்மையின் வழியாக புனைவின் வழியே ஆசிரியர் நேரடியாக இதில் பேசியிருக்கிறார். 2018ல் வெளியான இந்நூல் பாதிக்கப்படும் ஒரு குழந்தைக்கு மரப்பாச்சி பொம்மை ஆறுதல் சொல்வதாகவும், தைரியம் ஊட்டுவதாகவும், வழிநடத்துவதாகவும் புனையப்பட்டுள்ளது.
Advertisement
Powered By Powered by – Dinakaran x eReleGo

நம் முன்னால் இருக்கும் ஒரு பொம்மை திடீர் என நம்மிடம் பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும் நமக்கு உற்சாகத்தைத் தருகிறது. கதையில் வரும் குட்டிப் பாப்பா ஷாலினி விடுமுறையில் பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். அப்போது பாட்டி செம்மரக்கட்டையால் செய்த மரப்பாச்சி பொம்மை ஒன்றினை தனது பேத்தி ஷாலினிக்கு பரிசாகத் தர, ஷாலினி பார்பி டாலின் கவுனை மரப்பாச்சி பொம்மைக்கு அணிவித்து எப்போதும் தன்னுடனே வைத்துக்கொள்கிறாள். ஒருநாள் மரப்பாச்சி பொம்மை ஷாலினியிடம் பேசத் தொடங்குகிறது. அப்போது ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியம் நிறைந்த பல அனுபவங்களை புனைவின் வழியே விவரித்துச் செல்லும் எழுத்தாளர் குழந்தைகள் மொழியில், குழந்தைகள் வழியில் ‘பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல்’ என்கிற ஒரு நுட்பமான பிரச்சனையை கையிலெடுத்து குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.

ஷாலினியின் தோழி பூஜா என்கிற சிறுமியை அவள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான பெரியவர் பாலியல் சீண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதில் பூஜா உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, பெரியவரின் மிரட்டலுக்கு பயந்து, தனக்கு நேர்வதை வெளியில் சொல்ல பயந்து, குழப்பமான மனநிலைக்கு உள்ளாகிறாள். இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள். பூஜாவை மரப்பாச்சி பொம்மை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை சிறார்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

வேறு எப்போதைவிடவும் இன்று நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை என்பது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பரவிக் கிடக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு அவர்களின் உடலைப் பற்றியும், அவர்களது உரிமைகளைப் பற்றியும், சொல்லித் தருவது நம் கடமை என்கிற ஆசிரியர். குழந்தைகள் மீது பெற்றோர் செலுத்தவேண்டிய அக்கறை குறித்தும், குழந்தைகளுடன் பெற்றோர் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியிருப்பதுடன், பாலியல் சீண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பிரச்சினையிலிருந்து மீளும் முறைகளை குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் என்பது இருபாலருக்கும் இருக்கும் நிலையில், இக்குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் உறவினர்களாகவும், நண்பர்களாகவுமே பெரும்பாலும் இருக்கிறார்கள். எனவே குழந்தைகள் இதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார்கள். மேலும் இதை நீ வெளியே சொன்னால் உன்னை அடிப்பார்கள், தண்டிப்பார்கள், பள்ளிக்கு அனுப்பாமல் தனி அறைக்குள் வைத்து பூட்டிவிடுவார்கள் என்கிற பயத்தை குழந்தைகளிடம் குற்றம் இழைத்தவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

எனவே குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுக்க நினைத்த ஆசிரியர், நீ குற்றவாளி இல்லை. பாதிக்கப்பட்டவள். எனவே குற்றம் நடக்கும் இடத்தில் நீ சத்தம் போடு. கத்து… கதறு… உன் உணர்வை அப்போதே வெளிப்படுத்து. உனக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய பெற்றோரிடமும், உனக்குப் பிடித்த ஆசிரியரிடமும் குற்றவாளி செய்த பாலியல் சீண்டல்களை தைரியமாகச் சொல். அப்படி நீ வெளிப்படுத்துவதன் மூலம் குற்றவாளியை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை வாயிலாக குழந்தைகளுக்கு சொல்லியிருக்கிறார்.

பால சாகித்ய புரஸ்கார் விருது…

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதும், சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

நூலின் ஆசிரியர்…

யெஸ். பாலபாரதி எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வருவதுடன், சிறார் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வருபவர். சிறார் கதைக்கான போதாமை இங்கிருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு கதை சொல்லவே சிறார்கள் கதையை நான் எழுத ஆரம்பித்தேன் என்பதுடன், கற்பனை சக்தியை மட்டும் மனிதர்களிடம் இருந்து எப்போதும் பிரித்துவிடவே முடியாது என்கிறார்.

குழந்தைகள் பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இப்போதில்லை. அவர்களின் சிந்தனைக்கும், கற்பனா சக்திக்கும் கதை சொல்வதும், கதை படிப்பதும் முக்கியமானதாக இருக்கிறது. குழந்தைகள் புத்தகத்தை வாசிக்கும்போது அந்தக் காட்சிகள் அவர்களுக்குள் கற்பனையில் விரிவடையும். காட்சிகள் விரிய விரிய வாசிப்பு அவர்களுக்கு இன்பமானதாகிறது. வாசிப்பில்தான் கற்பனா சக்தி ஆழமானதாக உருவாகும் என்கிறார்.

பெற்றோர் புத்தகம் வாசிப்பவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கம் தானாய் ஒட்டிக்கொள்ளும் என்கின்றவர், இப்போதுள்ள குழந்தைகள் கேட்ஜெட்ஸ் பின்னால் சுழல்வதால், எதையும் விஷுவலாகப் பார்த்தே பழகுகிறார்கள். படக் கதைகள் வழியே குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான புத்தகங்களை குழந்தைகளே தேர்ந்தெடுக்கவும், பாடப்புத்தகங்களைத் தாண்டி புத்தகங்களை வாசிக்கவும் பெற்றோர் குழந்தைகளை அனுமதியுங்கள் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார்.

சிறார்களுக்கான இவரின் மற்ற படைப்புகள் ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘புதையல் டைரி’, ‘பூமிக்கு அடியில் மர்மம்’, ‘மந்திர சந்திப்பு’, ‘தலைகீழ் புஸ்வானம்’ போன்ற நூல்கள்.Post a Comment

Protected by WP Anti Spam