முஷாரப்புடன் ஒருபோதும் தொடர்பு இல்லை: பேநசீர், ஷெரீப் கூட்டாக அறிவிப்பு

Read Time:3 Minute, 53 Second

Pak.Penasir-serif.jpgஅரசியல் நோக்கங்களுக்காக பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப்புடன் ஒருபோதும் எவ்விதத் தொடர்போ, பேச்சோ வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் பேநசீர் புட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். தங்களுக்கு இடையில் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகளையும் இருவரும் மறுத்தனர்.

முஷாரப்புடன் பேநசீர் ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் என்றும், நவாஸ் ஷெரீபுக்கு இது பிடிக்கவில்லை என்பதால் பேநசீருக்கும் ஷெரீபுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பேநசீரும், ஷெரீபும் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து சுமார் 4 மணி நேரம் விவாதித்த இருவரும் பின்னர் கூட்டாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

நவாஸ் ஷெரீப்: அரசியல் நோக்கங்களுக்காக முஷாரப்புடன் ஒருபோதும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை. அவருடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றார்.

பேநசீர் புட்டோ: நான் 7 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கியிருக்கிறேன். என்னுடன் பேசுவதற்காக முஷாரப் தூதர்களை துபைக்கு அனுப்பி இருக்கிறார் என்றும், நாடு திரும்பும்போது என்னைக் கைது செய்யப் போவதில்லை என்றும், என்னை பிரதமர் ஆக்க உறுதி அளித்திருக்கிறார் என்றும் தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. இந்த வதந்திகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

இந்தியாவுடன் அமைதியான உறவை ஏற்படுத்திக் கொள்கிற, இந்த பிராந்தியத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிற ஒரு பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்றார்.

இருவரும் கூட்டாக மேலும் கூறியதாவது;

பேநசீரும், ஷெரீபும் பாகிஸ்தானுக்கு வந்து தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப் போவதில்லை என்று முஷாரப் கூறியிருக்கிறார். சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவது பற்றி அவர் பேசவே இல்லை.

2007 அக்டோபருக்கும் 2008 பிப்ரவரிக்கும் இடையில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தல், நடுநிலையான ஒரு காபந்து அமைப்பின் கீழ்தான் நடக்க வேண்டும். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதிப்படுத்த சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும். தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றனர்.

Pak.Penasir-serif.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன்னார் மீனவர்களின் உடல்கள் கண்டெடுப்பு…கிழக்கு மாகாணத்திற்கு புதிய படைத்துறை தளபதி..
Next post சங்கீதத்திற்கு எனது சொத்துக்கள்: ஸ்ரீவித்யா உயில்