கண்ணை சிமிட்டி கேட்கும் போது என் மனசு ஐஸ்கிரீம் போல உருகிடும்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 48 Second

காமெடி நடிகை வித்யுலேகா ராமன், கடந்த மாதம் திருமணம் முடிந்த கையோடு, ஹனிமூனை தன் கணவர் சஞ்சயுடன் மாலத்தீவில் கொண்டாடியுள்ளார். தற்போது தலை தீபாவளிக்காக தயாராகிக் கொண்டு இருந்தவர், தோழியருக்காக தன் காதல் கணவர் சஞ்சயை சந்தித்த தருணம் முதல் கல்யாணம் வரை பகிர்ந்து கொண்டார்.‘‘எங்க குடும்பம் கலைகுடும்பம் என்பதால், நானும் சினிமாவில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். ஷூட்டிங், அப்பா, அம்மா, நண்பர்கள்ன்னு பிசியாகவே இருந்துட்டேன். ஆனால் இந்த கொரோனா காலம் தான் எனக்குள் இவர்களை தாண்டி மற்றவர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

ஷூட்டிங் கிடையாது, வீட்டிற்குள்ளே இருக்க வேண்டிய நிலை, யாரையும் பார்க்க முடியவில்லை, நண்பர்களுடன் வெளியே போக முடியவில்லை… ஒரு கட்டத்தில் என்னடா வாழ்க்கைன்னு போர் அடிக்க ஆரம்பிச்சது. என்னுடைய வட்டத்தை தாண்டி புதுசா மற்றவர்களை பார்க்க வேண்டும்ன்னு தோணுச்சு. இது குறித்து நான் நண்பர்களிடம் பேசிய போது தான் அவங்க ‘பம்பிள்’ன்னு ஒரு ஆப் இருக்கு. அதில் ஃபிரண்ட்ஸ் மட்டுமில்ல உன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல துணையும் கிடைப்பாங்கன்னு சொன்னாங்க. மேலும் என் நண்பர்கள் எல்லாரும் அதில் இருப்பதாகவும், அவங்களின் பர்சனல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டாங்க.

அதைக் கேட்ட பிறகு தான் இந்த ஆப் பாதுகாப்பானதுன்னு எனக்கு ஒரு நம்பிக்கை வந்து, டவுன்லோட் செய்தேன். சர்வதேச அளவில் பலர் இதில் இருக்காங்க. மேலும் இதில் எனக்கு ரொம்பவே பிடிச்சது பெண்கள் தான் முதலில் செய்தியை அனுப்ப முடியும். அவர்களுக்கு பிடிச்சு சம்மதம் சொன்னா தான் ஆண்கள் அவர்களிடம் பேச முடியும். அவர்களின் தோழமை வேண்டாம் என்று பெண்கள் நினைத்தால், குறிப்பிட்ட அந்த நபரின் அக்கவுன்ட் மற்றும் செய்தி எல்லாமே 24 மணி நேரத்தில் மறைஞ்சிடும். பெண்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிந்த பிறகு தான் அதில் இறங்கினேன். இதில் தான் நான் சஞ்சயை சந்திச்சேன். முதல்ல அவருடைய புகைப்படம், அவரைப் பற்றி சிறு குறிப்பு மற்றும் அவரின் எதிர்பார்ப்பு, எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாவற்றையும் படிச்ச போது… என்னமோ இவர் எனக்கானவரா இருப்பார்ன்னு தோணுச்சு. எல்லாவற்றையும் விட இவர் என் நண்பர்களின் நண்பர் என்பதும் தெரிய வந்த பிறகு தான் அவருக்கு நான் ‘ஹை’ன்னு மெசேஜ் அனுப்பினேன்’’ என்றவரை தொடர்ந்தார் சஞ்சய்.

‘‘எனக்கு வித்யு… சினிமா நடிகைன்னு முதல்ல தெரியாது. நாங்க சிந்தி. அதனால பெரும்பாலும் ஹிந்தி திரைப்படங்கள் தான் பார்ப்போம். தமிழ் படங்கள் பார்த்தது இல்லை. எல்லாவற்றையும் விட தமிழும் கொஞ்சம் கொஞ்சம்தான் பேச தெரியும். வித்யுவை பார்த்தவுடன் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா எங்களின் உறவு கல்யாணம் வரை வரும்ன்னு நான் முதலில் நினைக்கவில்லை. முதலில் நண்பர்களாக பழகலாம்ன்னு தான் நான் அவங்களுடன் பேச ஆரம்பிச்சேன்.

ஹை… ஹலோ என்று ஆரம்பித்த எங்களின் சாட் பயணம்… எங்களைப் பற்றி பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவியது. நான் கீட்டோ உணவு துறை சார்ந்த பிசினஸ் செய்திட்டு இருக்கேன். வித்யு கீட்டோ உணவினை பின்பற்றுபவர் என்பதால்… பிசினஸ் குறித்தும் நிறைய விஷயங்களை நாங்க ஷேர் செய்தோம். ஒரு கட்டத்திற்கு பிறகு சாதாரண சாட்… வீடியோ சாட்டாக மாறியது. எங்களைப் பற்றி மட்டுமில்லாமல்… எங்க இருவரின் குடும்பம் சார்ந்தும் நிறைய பேசினோம். இந்த சமயத்தில் கோவிட் என்பதால், நாங்க இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தது நட்பை கடந்து அடுத்தக் கட்டத்திற்கு எங்களின் உறவு பயணிக்க ஆரம்பித்தது. அப்போது தான் நேரில் சந்திக்கலாம்ன்னு முடிவு செய்தோம்’’ என்ற சஞ்சயிடம்… அந்த சந்திப்பை பற்றி நான் தான் சொல்வேன் என்று வழிமறித்தார் வித்யுலேகா.

‘‘சஞ்சய்க்கும் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் பயம் மனசுக்குள் ஒட்டிக் கொண்டு இருந்தது. அதனால் எங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கும் ஒரு காபி ஷாப்பில்தான் இருவரும் சந்திக்க திட்டமிட்டோம். அவரை சந்திக்க போகப் போகிறேன்னு என் நண்பர்களிடம் எல்லாம் சொன்னது மட்டுமில்லாமல்… அவர்களை காபி ஷாப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்குமாறு சொல்லி இருந்தேன். என்னதான் வீடியோ சாட் மூலம் பேசி இருந்தாலும், நேரில் சந்திக்க போகிறோம்ன்னு நினைக்கும் போது ஒரு பதட்டம் இருந்தது. சந்திப்பின் போது ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்டா உடனடியா வந்திடுங்கன்னு அவங்ககிட்ட சொல்லி இருந்தேன்.

இப்படி எல்லாம் தயார் செய்து தான் நாங்க சந்தித்தோம். ஆனால், நான் செட்டப் செய்து வைத்திருந்த அனைத்தும் வீண் தான். ஒரு மணி நேரம் தான் எங்களின் சந்திப்பு இருக்கும்ன்னு நினைச்சோம்… ஆனா கிட்டதட்ட எட்டு மணிநேரம் நாங்க ஒன்னா சுத்திட்டு இருந்தோம். அந்த சந்திப்பில் எனக்கு சஞ்சயிடம் பிடிச்ச ஒரே விஷயம்… அவருடன் நான் இருந்த அந்த தருணம் நான் ஒரு நடிகையாக இல்லாமல்… நானாகவே உணர்ந்தேன்’’ என்றார். ‘‘நானும் அப்படித்தான் உணர்ந்தேன்’’ என்று பேச ஆரம்பித்தார் சஞ்சய். ‘‘வித்யுக்கு முன்பு நான் ஒரு சில பெண்களை சந்தித்திருக்கேன். அவர்களுடன் பேசி பழகி இருக்கேன். ஆனா வித்யுவை பார்த்த அடுத்த நிமிடம் பல வருடம் பழகியது போல் உணர்ந்தேன். பொதுவாக பெண்கள் தான் ஒரு ஆணுடன் கம்பர்டபிளாக இருந்தேன்னு சொல்வாங்க.

அதே உணர்வு எனக்கு வித்யுவுடன் ஏற்பட்டது. அதன் பிறகு நாங்க தொடர்ந்து சந்திக்க ஆரம்பித் ேதாம்’’ என்றவரை வழிமறித்து…‘‘ஆமாங்க எனக்கு எங்க ஷூட்டிங் இருந்தாலும் ஒரு பெரிய கீட்டோ ஐஸ்கிரீம் பாக்சோடு அங்கு சஞ்சய் வந்திடுவார். குறிப்பா அமேசானின் ‘LOL எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சியின் எல்லா ஷூட் போதும்… நான் இருக்கும் இடம் எல்லாம் தேடி வந்த போது தான் இவருக்கு என் மேல் தனிப்பட்ட அன்பு இருக்குன்னு புரிந்தது’’ என்றார் வித்யுலேகா.

‘‘நீங்க வேற… நான் இரண்டு கீட்டோ ஐஸ்கிரீம் பாக்ஸ் எனக்கு ஒன்னு இவளுக்கு ஒன்னுன்னு வாங்கிக் கொண்டு போவேன். ஒரு பாக்சை சாப்பிட்டுடுவா… அடுத்த பாக்சை ஷூட் முடிய ரொம்ப நேரம் ஆகும் எனக்கு பசிக்கும்ன்னு வாங்கி வச்சுக்குவா… அவ கொஞ்சி கண்ணை சிமிட்டி கேட்கும் போது… என் மனசும் ஐஸ்கிரீம் போல உருகிடும்’’ என்று உருகி உருகி காதலை வெளிப்படுத்தியவர்களிடம் பெற்றோரின் சம்மதம் பற்றி கேட்ட போது…

‘‘நான் முதன் முதலில் சஞ்சயை பார்க்க போகிறேன்னு அம்மாகிட்ட சொன்ன ேபாது… அப்பாவும் கூட இருந்தார். என்னது பம்பிளா… அப்படின்னா…ன்னு கேட்டார். அதன் பிறகு நான் இருவரிடமும் சஞ்சயை எப்படி சந்தித்தேன்னு அவரைப் பற்றி எல்லாம் சொன்னேன். அம்மா, அப்பா இருவரும் காதல் திருமணம் தான் என்றாலும், தங்கள் பெண் ஒரு பையனை பார்க்க போகிறாள்ன்னு சொல்லும் போது, அவளின் பாதுகாப்பை தான் பார்ப்பாங்க. நான் பாதுகாப்போடு தான் இவரைப் பார்க்க போறேன்னு சொன்ன பிறகு தான் அப்பா என்னை போகவே சம்மதித்தார். எல்லாவற்றையும் விட அப்பா, அம்மா இருவருமே எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க.

அதை நான் மீறமாட்டேன்னு நம்பிக்கை அவங்களுக்குண்டு. சஞ்சய் பற்றி சொன்னதும், அப்பா அவங்க குடும்பத்தை பற்றி விசாரித்த போது அவரின் பெரியப்பாவும் என்னுடைய ெபரியப்பாவும் நண்பர்கள்னு தெரிய வந்தது. என்னதான் குடும்ப நண்பர்களாக இருந்தாலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சஞ்சயை பிடிக்கணும். அதனால ஒரு நாள் நான் அவரை இரவு விருந்துக்கு அழைத்தேன். சஞ்சய் கீட்டோ உணவு குறித்த பிசினஸ் மட்டுமில்லை, கீட்டோ உணவுகளை குறிப்பாக டெசர்ட் வகைகளை அருமையா சமைப்பார். அவர் டெசர்ட் செய்ய, நான் உணவினை சமைக்க… எல்லாரும் சேர்ந்து குடும்பமா சாப்பிட்ட அந்த தருணம் ரொம்பவே மகிழ்ச்சியான தருணம். ஆனா சஞ்சய் என்னை அவர் அம்மாவிடம் ஃபிரண்டுன்னு தான் அறிமுகம் செய்தார்’’ என்று பொய்யான கோபத்துடன் பார்த்த வித்யுவை கண்டிப்பா சூப்பர் ஸ்டார் ‘அண்ணாத்த’ படத்துக்கு முதல் நாள் முதல் ஷோக்கு கூட்டிக் கொண்டு போறேன்னு சமாதானம் செய்தார் சஞ்சை.

‘‘எங்க வீட்டில் என்னை எப்ப பார்த்தாலும் ‘ஷாதி கரோ’ன்னு சொல்லிட்டே இருக்காங்க. நான் வித்யுவை என் கேர்ள்ஃபிரண்ட்ன்னு அறிமுகம் செய்தா… உடனே அடுத்த முதல் முகூர்த்தத்தில் தேதி பிக்ஸ் செய்திடுவாங்க. அதனால முதல்ல என் அம்மாவுடன் வித்யு நல்லா பழகட்டும்… அதன் பிறகு சொல்லலாம்ன்னு தான் முதல் சந்திப்பில் நான் சொல்லல. இப்ப என்னைவிட வித்யு தான் அம்மாவின் பெட்ன்னு சொல்லணும். இப்ப இரண்டு பேர் குடும்பத்தின் சம்மதத்தோடு, கடந்த செப்டம்பர் மாசம் திருமணம் செய்து கொண்டோம். அடுத்து தலை தீபாவளி. இருவர் வீட்டிலும் எப்படி கொண்டாடலாம்ன்னு இப்பவே திட்டமிட ஆரம்பிச்சுட்டாங்க. வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது’’ என்றனர் இருவரும் கோரசாக.

சோஷியல் மீடியா மூலம் ஒருவரை சந்திக்கும் போது கவனமாக இருக்க சில ஆலோசனைகளை வழங்கினர் தலை தீபாவளி தம்பதியினரான வித்யுலேகா மற்றும் சஞ்சய்.

*சமூக வலைத்தளத்தில் ஒருவருடன் பேசும் போது உடனடியாக உங்களின் செல்போன் எண்ணை பகிர வேண்டாம்.
*புகைப்படத்தில் உள்ள நபரிடம் தான் நீங்கள் பேசுகிறீர்களா என்று தெரிந்து கொள்ள வீடியோ மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
*ஒருத்தரை சந்திக்கும் போது பகல் நேரத்தில் சந்திக்கலாம். மேலும் அவர்களின் வீட்டிற்கு செல்லாமல், பொது இடங்களில் சந்திக்கலாம்.
*நமக்கு தெரிந்த ஒருவரின் அக்கவுண்டை ஹேக் செய்து, அதன் மூலம் பணம் பறிக்கிறார்கள். யாராக இருந்தாலும், பணம் கேட்டவுடன் விசாரணை செய்யாமல் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
*தொழில்நுட்பம் வளர வளர ஒருவருக்கு தனிப்பட்ட பிரைவசி என்பது இல்லாமல் போய்விட்டது. அதனால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஒவ்வொரு நபரும் சுயசிந்தனையோடு செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் என்று ஆலோசனை அளித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)
Next post பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்… !! (மருத்துவம்)