முப்பது வருடங்கள் உடன் பயணிக்கும் மண்பாண்ட பொருட்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 57 Second

“மண்பாண்ட பொருட்களைப் பொறுத்த வரை எனக்கு பிடித்த விஷயம் இது ஒரு பயனுள்ள பொருள். நாம் தினமும் பயன்படுத்தினாலும் அது என்றும் பார்க்க அழகாகவே இருக்கும். சில சமயங்களில் சாப்பிடும் போதும், இன்றைய அவசர உலகில் நமக்கு இருக்கும் ஸ்ட்ரெஸின் மீதுதான் எண்ண ஓட்டம் ஓடுகிறது. அவ்வாறு இருப்பவர்களுக்கும் டேபில்வேரில் இருக்கும் எனது பாட்ரியை பார்க்கும் போது ஒரு வித அமைதி கொடுப்பதோடு, அந்த பொருளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு ரசிக்கும்படி செய்கிறேன். அந்த நிமிடங்களை உங்களுக்கானதாக கொடுக்கும் போது மனநிறைவாக இருக்கிறது” என்கிறார் பாட்ரி டிசைனில் தனக்கென்று தனி முத்திரை பதித்து வரும் வர்ஷா.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். ஆர்க்கிடச்சர் முடிச்சிருக்கேன். கல்லூரி படிக்கும் போது இறுதி ஆண்டில் இண்டர்ன்ஷிப்பிற்காக ஒரு வருடம் வெளியே சென்று ஒரு அலுவலகத்தில் அனுபவம் பெற்று மீண்டும் கல்லூரி வருவோம். அப்படி போகும் போது பில்டிங், இண்டீரியல்ஸ் தாண்டி பர்னிச்சர், டிசைன்ஸ், புராடெக்ட், ஆப்ஜெக்ட், பேப்ரிக் என நிறைய டிசைன்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்தது. அதோடு ஆர்க்கிடச்சரில் டிசைனுக்கென்று தனி கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை என்பதும் தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில்தான் மண்பாண்டப் பொருட்கள் பற்றி அறிமுகம் கிடைத்தது. அது குறித்தான வீடியோக்கள் யூ டியூபில் பார்க்கும் போது இன்னும் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டது. பந்து போல் க்ளே எடுத்து, சில நிமிடங்களில் அதற்கொரு புது அர்த்தம் கொடுத்தது, என்னை அதை செய்து பார்க்க தூண்டியது.

உடனே அதற்கான தேடலில் இறங்கினேன். சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் சில நாட்கள் பயிற்சி எடுத்தேன். அப்போதே என் பலம் என்ன என்பது தெரிவதற்கான வாய்ப்புகள் அமைந்தது. இது என்னால் செய்ய முடியும் என்கிற தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். பின் ஒவ்வொன்றாக செய்து பார்க்கும் போது எனக்கென்று ஒரு டெக்னிக் உருவாக்கினேன். ஆனால் இதில் ஏதோ ஒரு போதாமை இருப்பதைப் போன்று உணர்ந்தேன், அதனால் பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மேற்படிப்பும் முடித்தேன். எனக்கான முழு நம்பிக்கை வந்த பின் சில ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக ஸ்டுடியோ ஆரம்பித்தேன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் செய்யும் வேலைகள் மூலம் வரும் வருமானத்தை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக என் ஸ்டுடியோவை மெருகேற்றினேன். ஸ்டுடியோ ஆரம்பித்திருந்தாலும், ஆரம்ப நாட்களில் முழு நேரமும் செய்யாமல், நேரம் கிடைக்கும் போது ஒரு ஹாபி மாதிரி செய்து வந்தேன். கல்லூரி முடித்ததும் ஆர்க்கிடச்சர் சம்பந்தமான வேலையில் இருந்தேன். கொரோனா நேரத்தில் தான் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. அப்படி முழு நேரமாக செய்யும் போது அதற்கான ரெஸ்பான்ஸ் கிடைக்க ஆரம்பித்தது. இதை இன்னும் கொஞ்சம் சீரிசாக எடுத்து பண்ணலாமே என்கிற யோசனையில் ஸ்டுடியோ அதற்கான வெப்சைட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தேன். இப்போது இது எனக்கு பிடித்தமான வேலையாக மாறி இருக்கிறது” என்கிற வர்ஷா, தான் செய்யும் மண்பாண்ட பொருட்கள் பற்றிய அனுபவங்களை பகிர்கிறார்.

“மண்பாண்ட பொருட்களை செய்ய பயன்படுத்தும் களிமண் மூன்று வகை. அதன் சுடுதல் நிலையில், அதற்கான வெப்பத்தின் அளவு வைத்து பிரிக்கப்படுகிறது. தென் இந்தியாவில் சிவப்பு களிமண்னை பார்க்கலாம். அதன் சுடுதல் வெப்பநிலை 850-900 டிகிரி வரைக்கும் இருக்கும். நாம் சமைக்க பயன்படுத்தும் மண்பாண்ட பொருட்களில் இதை அதிகம் பயன்படுத்துவார்கள். அடுத்து ஸ்டோன்வேர். இது பாண்டிச்சேரி ஆரோவில்லில் நிறைய பயன்படுத்துவார்கள். ஸ்டோன்வேர் களிமண்ணைத்தான் நான் என் மண்பாண்ட பொருட்கள் செய்ய பயன்படுத்துகிறேன். ஏரிகளின் ஓரத்திலிருந்து எடுத்து வரப்படும் இந்த களிமண், ஓரளவுக்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்த பின் பொட்டாஷ், சிலிக்கான் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்வோம். இதன் சுடுதல் நிலை 1250 டிகிரி. இந்த களிமண்ணில் எந்த விதமான வண்ணங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை தினமும் பயன்பாடான தட்டு, கப், மக் வகைகள் செய்யலாம். இதன் விலையும் குறைவானதாகவே இருக்கும். என் ஸ்டுடியோவில் நூறு சதவீதம் ஸ்டோன்வேர் தான் பயன்படுத்துகிறேன். டக்குனு கீழே போட்டாலும் உடையாது. அதே வேளையில் இதில் ரசாயன கலப்பு குறைவு. அதனால் உணவு பாதுகாப்புக்கு நல்லது. இது போன்ற காரணங்களினால் ஸ்டோன்வேர் பயன்படுத்துகிறேன்.

அடுத்து போசலின். இது தூய வெண்மையில் இருக்கும். இதில் சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் Kaolin என்கிற மினரல் கலக்கப்படுகிறது. சிறிய சைனிஸ் செராமிக் போசலினால் உருவாக்கப்படுபவை. இந்த களிமண் 1300 டிகிரி வரை சுடலாம். இது வித்தியாசமான மெட்டீரியல். எந்த கலர் போட்டாலும் அவ்வளவு அழகாக இருக்கும். இதன் விலை கொஞ்சம் அதிகம்” என்கிற வர்ஷா, ஒரு மண்பாண்ட பொருளை எவ்வாறு உருவாக்குகிறார் என்பது குறித்து விளக்கினார்.

“நான் இரண்டு விதமாக பண்றேன். ஒன்று நானாக சில ஐடியாக்கள் கொடுப்பது. மற்றொன்று வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைனில் செய்து கொடுப்பது. இது இரண்டுமே எனக்கு எளிதானதுதான். டிசைன் பேக்ரவுண்டிலிருந்து வந்ததால் என்னால் நல்ல டிசைன்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சொல்லும் வாய்ப்பு இருக்கிறது. இது ஒரு கொலாபரேட்டிவ் பிராசஸ் தான். ‘திருமணத்திற்காக பரிசு கொடுக்கிறேன், இந்த மாதிரி ஒரு செட் வேண்டும்’ என்று கேட்டால், அதற்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று அவர்களுக்கு ஒரு ஐடியா கொடுப்பேன்.

அவர்களுக்கு அது பிடித்திருந்தால், அதையே செய்து கொடுப்பேன். சிலர் எனக்கு இந்த டிசைனில் வேண்டும் என்று கேட்பார்கள். அதுவும் செய்து தருகிறேன். ஒரு சிலர் என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் இணையத்தில் பார்த்து, நேரடியாக ஆர்டர் செய்வாங்க. நான் தனிப்பட்ட முறையில் செய்வதால், வாடிக்கையாளர்களின் தேவையினை அறிந்து செய்ய முடிகிறது’’ என்றவர் தன் எதிர்கால திட்டத்தினைப் பற்றி விவரித்தார்.

‘‘ஆர்க்கிடச்சர் துறையில் நான் தொடர்ந்து பயணிக்கத்தான் போகிறேன். அதற்கு இடையில் இந்த பாட்ரியில் என்னால் தனித்து என்ன செய்ய முடியும் என்று முயற்சிக்கிறேன். நம் வாழ்க்கை முறையில் ஒவ்வொரு விஷயமும் மாறிக் கொண்டு வருகிறது. கீழே உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்போது சேர் மேல் உட்கார்ந்து போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் நேரம் கூட நாம் நாமாக இல்லாமல் மாறி வருகிறோம். மேஜையில் அமர்ந்து சாப்பிடும் போது, நம்முடைய கவனம் வேறு எந்த வேலையில் ஈடுபடாமல் மேஜை மேல் இருக்கும் மண்பாண்ட பொருட்கள் மேல் மட்டுமே இருக்கும். அதற்காகவே அதனை தயாரிக்கிறேன்.

அதாவது இன்னும் கொஞ்சம் மேலே போய் பார்த்தால், என்னுடைய மண்பாண்ட பொருட்களைப் பயன்படுத்தும் போது ஒருவர் நிதானமாக செயல்படுவார். ஆம்… அவசர அவசரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது, இந்த பொருளை அவ்வாறு கையாண்டால்உடைந்துவிடுமோ என்று யோசித்து பொறுமையாக கையாள்வார்கள். அப்படி ஒரு நம்பிக்கையில் தான் ஒவ்வொரு பொருட்களையும் உருவாக்குகிறேன். பொதுவாக ஒரு பொருள் வாங்கும் போது, ‘அது கண்டிப்பா வேண்டுமா? வேண்டாமா? இது பிடிக்குமா? வாங்கிய பின் இதை பயன்படுத்துவேனா? இந்த பொருள் வாங்குவதால் என் வாழ்க்கையில் என்ன வேல்யூ சேரும்…?’ என்கிற கேள்விகளோடுதான் ஒவ்வொரு பொருளாக வாங்கும் மன நிலைக்கு வந்திருக்கிறோம். அப்படி பார்க்கும் போது இந்த மண்பாண்ட பொருட்களை வாங்கினால், ஒரு முப்பது வருடங்களாவது உங்களோடு இருக்கும் என்கிற நம்பிக்கையை என்னால் நூறு சதவீதம் கொடுக்க முடியும்” என்கிறார் வர்ஷா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post இன-மத தேசியவாதத்திடம் சரண் புகுதல் !! (கட்டுரை)