சிறுகதை-மனித நேயத்தின் மறுபதிப்பு!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 19 Second

ஏண்டி ராசாத்தி வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளைக்கு இனிப்பு பலகாரத்தை செய்து வையுடி மாப்பிள்ளை மனசு கோணாமல் பாத்துக்கிறது நம்ம கடமைடி என்ற மாணிக்கவேல் தன் முத்தான வார்த்தைகளை உதிர்த்தார்.ஏங்க நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா… இந்த ராசாத்தி மத்தவங்க மனசை புரிஞ்சிக்கறப் பக்குவத்தை ஏற்கனவே அனுபவத்திலே கண்டவ.. ஆமா.. என்று சொல்லி தன் கழுத்தை ஒரு வெட்டு வெட்டிவிட்டு அடுப்பறைக்கு சென்றாள்.

என்னங்க இப்படி சவ்வு கிழியற மாதிரி கத்துறீங்க உங்க பக்கத்தில் தானே நிக்கறேன்… அது இல்லேடி… நம்ப மாப்பிள்ளைக்கு தலை தீபாவளி சீர் செய்கிறதிலே, அந்த லிஸ்டிலே ஏதும் விட்டுப் போயிடாம பாத்துக்கோடி…நம்ம ராசாத்தி லிஸ்ட்டை சரி பார்த்தாள். எல்லாம் சரிதானுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு விட்டுப் போயிருச்சே… பாருங்க என்றாள்.

என்னடி சொல்றே?

ஆமாங்க நீங்க நல்லாப்
பாத்தீங்களா லிஸ்ட்டை…
மாப்பிள்ளை ரொம்பவும்
பிரியப்பட்டது என்னது? மாணிக்கவேல் கேட்டார்.
ஹீரோ ஹோண்டா பைக் பற்றி நம்ப மீனாவிடம்
பேசுவாறே…

நான் ஒண்ணும் மறக்கலே…
அந்த பைக்கிற்கு பணம் கட்டிட்டு வந்துட்டேன். மாப்பிள்ளை ஊரில் இருந்து வர்றதுக்குள்ளே அந்த பைக் வண்டி நம்ம வீட்டு வாசலில் வந்து நிற்கும்படி என்று கூறிக்கொண்டு தன் வெள்ளி நரை வீரபாண்டிய மீசையை முறுக்கிக் ெகாண்டு வீர நடை போட்டுக் கொண்டு வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். ஏதோ அன்னிய நாட்டைப் பிடித்து விட்ட ஜவானைப் போல…

அது சரிடி… உன் பொண்ணு மீனாவுக்கு உன் லிஸ்டில் என்ன சேர்த்து இருக்கே?…
ரட்டை வட செயினும், கல் பதித்த நெக்லசும் ஆர்டர் கொடுத்து அதை செய்து நம்ப பீரோ லாக்கரிலே வச்சிருக்கேன்…இந்தா பாருங்க என்று தன் கணவனிடம் காட்டி பூரித்தாள் ராசாத்தி…நாட்கள் கடந்தன. வீட்டில் தீபாவளி களை கட்டியது. இருவர் கண்களிலும் தன் மகள், மருமகன் வருகையில் எதிர்பார்ப்பு, அதில் தனி பூரிப்பு..தீபாவளி முதல் நாள் முதலே வீடு முழுவதும் அலங்கார வண்ண மின் விளக்குகள், சிரிப்புத் தோரணங்கள், மணங்கமழும் வாசங்கள், தன் பணியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூடிய பாச நேசங்கள்….

தன் ஒரே மகளின் தலை தீபாவளி எங்கும் தீப ஒளி…
சரியாக ஏழு மணியளவில் மாருதி காரில் தன் மகளும், மருமகன் சவகரும் வந்திறங்கினர்.ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிட்டு நாதஸ்வர இசை முழங்க வரவேற்பு நிறைவேறியது.தன் மருமகன் வசதியான வீட்டுப் பிள்ளை. ஒரே பிள்ளை. தாய், தந்தையர் கிடையாது. சொத்துப் பத்து நிறைய சேர்த்து வைத்துவிட்டு சவகர் கல்லூரி படிப்பு முடிக்கும் தருவாயில் இவ்வுலகை விட்டு சென்று விட்டனர்.தன்னுடைய கடும் உழைப்பால் தன் பெற்றோர் சேர்த்து வைத்த சொத்தை பேணிக் காத்து விவசாயத்திலும், சர்க்கரை ஆலை, காகித ஆலைகள் என்று இவற்றை உருவாக்கி பல ஏழைகளுக்கு வேலை கொடுத்தும் உழைப்பால் உயர்ந்த உத்தமன். பிறருடைய சொத்துக்கு ஆசைப்படாதவன். தன் உழைப்பால் பிறரை உயர்த்தும் இரக்க குணப்பண்பாளன். இப்படி தன் மருமகனை நினைத்து மாணிக்கவேலும், ராசாத்தி அம்மாளும் பூரித்து போய் நின்றனர்.

தன் ஒரே மகளை உயர்ந்த பண்பாளியிடம் சேர்த்து வைத்த அந்த இறைவனுக்கு நன்றிக்கடனை நாளும் செலுத்தி வந்தனர்.மீனாவின் தந்தையாரும் இரண்டு நூற்பாலைகளுக்கும், நஞ்சை புஞ்சைகளுக்கும் சொந்தக்காரர். தாம் நினைத்தால் பெரிய காரே தன் மருமகனுக்கு சீராய் தந்திட முடியும். தன் மருமகன் இந்த வரதட்சணை விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் தான் மோட்டார் பைக்கை வாங்கி வைத்திருந்தார். இருந்தாலும் உலக சமுதாயத்திற்காக சம்பிரதாயம் என்று ஒன்று இருப்பதால் தான் இதனை கூடச் செய்தார்.

வாங்க மாப்பிள்ளை வாங்க…வரவேற்பு பலமாகவே இருந்தது.என்ன மாமா, அத்தை நீங்க எல்லாம் சவுக்கியமா? என்றார் மாப்பிள்ளை. சவுக்கியந்தான் மாப்பிள்ளை என்றனர் மாமனாரும், அத்தையும்.தீபாவளி திருநாளில்…மங்கள ஓசையின் இசை நாடா ஒலிக்க, ஊதுவத்தி வாசம் கம கமக்க… அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்த பிறகு…

பரிமாறப்பட்ட வாழை இலைகளின் முன்னே மாப்பிள்ளை அமர, இனிப்புகளும், காரங்களும் பரிமாற, இறைவனின் நினைவோடு விருந்தோம்பல் துவங்கியது. மகிழ்ச்சியில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டே மாமனாரும், மாமியாரும் தாங்கள் செய்துள்ள சீர் வரிசைகளை உணவு பரிமாறிக் கொண்டே அதனையும் பரிமாறிக் கொண்டனர்.
மாமா… மாமா…

என்னங்க மாப்பிள்ளை? என்று பவ்யமாக கேட்டுக் கொண்ட மாமனார்…

நீங்க உங்க பொண்ணுக்குச் செய்தது சரிதான். எனக்கு எதுக்கு சீர் வரிசை எல்லாம்? எனக்கு என்று வாங்கி வந்த பைக்கை நீங்க வச்சுக்குங்க மாமா. எனக்கு கார் இருக்கு. உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் சீர்வரிசை இதுதான். உண்மையான பாசம் ஒன்று இருந்தாலே போதும் மாமா என்றான் சவகர்.உங்களின் மேலான ஆசீர்வாதம் ஒன்று இருந்தாலே போதும். இன்று நரகாசுரனை மாய்த்த நாள். அநியாயங்கள் அழிந்து, நியாயங்கள் நிலைக்கும் நாள். மனிதனாக என்று நாம் பிறந்துவிட்டோமோ, அன்றைக்கே நாம் நல்லதை நினைத்து, நல்லதை செய்ய வேண்டும்.

பிறக்கும் போது நாம் எதையும் கொண்டுவரவில்லை. போகும் போது எதையும் கொண்டு போகப் போவதும் இல்லை.எனவே, முடிந்த வரைக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இந்தக் கருத்தில் எனக்கு என்றும் உடன்பாடுண்டு.ஆக, மனித நேயத்துடன் வாழப் பழகிக் கொண்டவன் நான். பிறரை கசக்கி எதனையும் பெற வேண்டும் என்பதை வெறுப்பவன். எனவே, வரதட்சணை எதுவும் எனக்கு வேண்டாம் மாமா…

அப்படி நீங்கள் செய்ய நினைத்தால் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் இடுங்கள். ஏழை எளியவருக்கு ஆடை தாருங்கள். இப்பணியை நாம் இருவருமே இன்றே துவக்குவோம் மாமா…ம்… சரி என்று தலையை ஆட்டி மாமனாரும், மாமியாரும் மருமகனுக்கு (ஒப்புதல்) சம்மதம் தந்தனர். தன் மருமகனின் முத்தான உரையாடலைக் கேட்டு உணர்ச்சிவயப்பட்ட இருவரும் தம்மையே மறந்து நின்றனர். என்ன மாமா நான் சொன்னது சரிதானே என்று கூற…

சரிதான் என்றனர்… உயர்ந்த பண்பு கொண்ட தன் மருமகனை நினைத்து பூரித்தார் மாமனார்.மனித நேயத்தின் மறுபதிப்பு என்று உளமார பாராட்டி, தலை நிமிர்ந்த நடையோடு மிடுக்காக வராந்தாவில் உலாவினார்.ஆனந்தத்தால் கண்ணீர் பனித்தது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிசுவின் சீரற்ற பாதம்…பெற்றோர்களே கவனியுங்கள்!! (மருத்துவம்)
Next post பெண்களின் கண்ணோட்டம் பற்றி எனக்குத் தெரியாது!! (மகளிர் பக்கம்)