பாப்பா நலமா? (மருத்துவம்)

Read Time:9 Minute, 12 Second

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால் குழந்தைக்கு ‘இன்ஃபெக்‌ஷன்’ எனப்படும் நோய்தொற்று ஏற்படக்கூடும். தாய்ப்பாலிலேயே தேவையான நீர்ச்சத்து உள்ளது. எனவே தண்ணீர் கூடத் தரத் தேவை இல்லை. அவசியம் எனில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் தரலாம். வேலைக்குப் போகும் தாய்மார்கள் எனில் தாய்ப்பாலை சுத்தமான எவர் சில்வர் கிண்ணத்தில் பிடித்து, இறுக்கமான மூடிபோட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம். இதனைக் குழந்தைக்குத் தேவைப்படும்போது எடுத்துப் புகட்டலாம். ஃபிரிட்ஜில் வைத்த பாலைக் கொதிக்க வைக்கக் கூடாது. ஒரு மணி நேரம் வெளியேவைத்துக் குளிர்ச்சி குறைந்ததும் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்த பாலை பன்னிரெண்டு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது பால் வழிந்து கழுத்து, தோள்பட்டை மேல் பட வாய்ப்பு உள்ளது. இதை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டால் சருமத்தில் சிறு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே, குழந்தையின் உடலை, பால் குடித்து முடித்ததும் சுத்தமாகத் துடைக்க வேண்டும். தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. முடிந்தவரை ஃபீடிங் பாட்டிலை குழந்தைக்குப் பழக்க வேண்டாம். இதனால், மூன்று வயதில் டம்ளரில் பால் குடிக்கப் பழக்குவது சிரமம். ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தினால் தரமான பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தவும். ஒவ்வொருமுறையும் அதனைப் பயன்படுத்திய பிறகும் வெந்நீரில் கழுவி உலரவைக்க வேண்டும்.

திட உணவு எப்போது?

ஏழாவது மாதத்தில் இருந்து திட உணவைக் கொடுக்கத் தொடங்கலாம். சிலர் செரிமானம் எளிதாக இருப்பதற்காக நன்கு குழைந்த மோர், தயிர் சாதம் மட்டும் கொடுப்பார்கள். இதனோடு, குழந்தைக்குப் பருப்பு சாதமும் கொடுக்க வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின் பி, நார்சத்து ஆகியவை சேரும். ஒரு வயது நிறைவடையும் வரை பசும்பாலைத் தவிர்ப்பது நல்லது. இதனால், குழந்தையின் செரிமானத்திறன் மேம்படும்.

குழந்தையின் நிம்மதியான உறக்கத்துக்கு!

முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தை 18 முதல் 20 மணி நேரம் தூங்கும். அதற்குப் பிறகு, துக்கம் படிப்படியாகக் குறையும். குழந்தை தூங்கும் இடத்தில் கொசுக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ரசாயனக் கொசுவர்த்திகள், கிரீம்கள், மேட்கள், லிக்யூவிட்கள் போன்றவற்றைவிட கொசுவலையே சிறந்தது. கொசு பேட் பயன்படுத்துவதும் நன்றே. குழந்தைக்குத் தூக்கம் கெடும்போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குழந்தையின் உடலை முற்றிலுமாக மூடும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகள் சிறந்தவை.

இதையெல்லாம் மறந்துடாதீங்க…

காலை 7 முதல் 9 மணி வரை புற ஊதாக் கதிர்கள் இல்லாத சூரிய ஒளியில், குழந்தையை சூரிய ஒளிக்குளியல் எடுக்கவைப்பதால், வைட்டமின் டி சத்து கிடைக்கும். தற்போது கைக்குழந்தைகளை, முதுகில் சுமக்கும் சிந்தடிக் பேக்குகளில் தூக்கிக்கொண்டு போவது நாகரிகமாகிவிட்டது. இது தவறு. சிந்தடிக் ரப்பர் மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேக்குகள் குழந்தையின் தோலை உறுத்தும். அசெளகர்யமான உணர்வைத் தரும். சில குழந்தைகளுக்கு இதனால் தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குழந்தைகளுக்கான டயப்பரை ஒருமுறை சிறுநீர், மலம் கழித்த உடனே அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் பிறப்புறுப்பு, தொடை இடுக்குகளில் படை, அரிப்பு ஏற்படலாம். மேலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் டயப்பர் பொருத்தியபடியே இருப்பதும் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பாதிக்கும் என்பதால், சிறிது நேரமாவது காற்றோட்டமாக விடுவது நல்லது. குழந்தைகளுக்கு டால்கம் பவுடர்கள் எதுவும் போடக் கூடாது. ஏனெனில், குழந்தைகளின் சருமத்தில் வியர்வைத் துளைகள் திறந்திருக்காது. இதனால், பவுடர் படியும் மடிப்புப் பகுதிகளில் சரும ஒவ்வாமை, தடிப்பு, அரிப்பு ஏற்படலாம்.

மை வைக்கலாமா?

குழந்தைக்கு மை வைத்து அழகு பார்ப்பது நம்முடைய கலாச்சாரம். ஆனால், பிறந்த குழந்தைகளுக்குக் கண்மை வைப்பதை முற்றிலுமாகவே தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். அதுவும் இன்று சந்தையில் கிடைக்கும் கண்மைகளில் பெரும்பாலானவற்றில் செயற்கையான பொருட்கள் நிறைந்துள்ளன என்பதால் அவற்றால் ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை உடலில் தடவி மசாஜ் செய்வது நல்லது. கண், மூக்கு, வாய், காது ஆகிய பகுதிகளில் எண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் பரிந்துரைக்கும் பி.ஹெச் லெவல் குறைவான சோப்புகள் அல்லது பயத்தம் பருப்பு போட்டு குளிக்க வைக்கலாம். தலைக்குக் குளித்ததும் தலையை நன்றாகத் துவட்ட வேண்டும். இல்லாவிட்டால் சளிப்பிடிக்கும். குழந்தையின் கை, கால், உடலில் மஞ்சள் தடவிக் குளிக்கவைப்பதால், மருத்துவரீதியாக எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், அது கண், காது, மூக்கு ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வசம்புக்கயிறை குழந்தைகள் கையில் கட்டி விடுவதைத் தவிக்க வேண்டும். இதனை, குழந்தை வாயில் வைக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி முக்கியம்

குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி தடுப்பூசி போட வேண்டும். குழந்தை வளர்ந்து 16 வயதை நெருங்கும் வரை பல்வேறு வகையான தடுப்பூசிகள் தற்போது போடப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதால் சின்னம்மை, பெரியம்மை, ஹெபடைட்டிஸ் எனும் மஞ்சள் காமாலை, ரூபெல்லா, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள், போலியோ போன்ற முடக்க நோய்கள் உட்பட பல்வேறு நோய்களை வென்று ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே, உங்கள் மருத்துவரை ஆலோசித்து உரிய காலத்தில் அந்தந்த தடுப்பூசிகளைத் தவறாமல் போட்டுக்கொள்வது மிகவும் நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்)
Next post சுமார் ப்ரெய்னும் சூப்பர் ப்ரெய்ன் ஆகும்!! (மருத்துவம்)