60 ரூபாய்க்கு புஃபே சாப்பாடு!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 59 Second

‘‘அக்கா வத்தக்குழம்பு இன்னைக்கு வைக்கலையா… இந்த கூட்டு கொஞ்சம் போடுங்க… ரசம் இருக்கா..?’’ இது போன்ற சம்பாஷனைகள்… சென்னை மயிலாப்பூரில் உள்ள தெரு ஒன்றில் அமைந்திருக்கும் உணவகத்தில் கேட்க முடியும். காலை 8.30 மற்றும் பகல் 12.30 மணிக்கு அந்தப் பக்கம் கடக்கும் ஒவ்வொருவருக்கும் இவர்களின் உணவின் மணம் பசியை தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவினை புன்னகை மாறாமல் பரிமாறிக் கொண்டிருந்தனர் ஷோபனா, ராஜராஜேஸ்வரன் தம்பதியினர்.

‘‘நானும் என் கணவர் இருவருமே எம்.எஸ்.சி கணிதம் பட்டதாரிகள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே எங்களின் பயணம் இணைந்து செயல்பட துவங்கியதுன்னு சொல்லலாம். 1993ம் ஆண்டு படிப்பு முடிச்ச கையோடு ஒரு டியூஷன் சென்டர் ஆரம்பிக்கலாம்னு திட்டமிட்டோம். என் கணவர் கணிதத்தில் M.Phil படிக்க விரும்பினார். வேலைக்கு சென்று கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்பதால் நண்பர்களின் துணையோடு ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கொட்டகை அமைச்சு டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம்.

எப்போதுமே படிப்புக்கு தனி மதிப்பு உண்டு. மூணு வருஷம் எங்களின் டியூஷன் சென்டரும் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடந்தது. 96ம் ஆண்டு மதுபானக் கடை எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டது. எங்க டியூஷன் மையத்திற்கு கீழே ஒரு கடை திறந்தாங்க. அவ்வளவுதான் டியூஷனுக்கு வந்த பசங்க எல்லாரும் அப்படியே நின்னுட்டாங்க’’ என்றவரை ெதாடர்ந்தார் அவரின் கணவர் ராஜராஜேஸ்வரன். ‘‘சாதாரணமாகவே மதுபானக் கடைகள் என்றாலே நாம் முகம் சுளிப்பது வழக்கம். அப்படி இருக்கும் போது, படிக்கிற பசங்கள எப்படி பெற்றோர் அனுப்புவாங்க.

வேறு இடத்தில் ஆரம்பிக்கலாம் என்றால் வாடகை அதிகமாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில்தான் கம்ப்யூட்டர் டேட்டா என்டரி அறிமுகமாச்சு. அதை எடுத்து செய்யலாம்னு கடன் எல்லாம் வாங்கி துவங்கினோம். இரண்டரை வருடம் தொழிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வந்தது. ஓரளவுக்கு மூச்சு விட ஆரம்பித்த போது மறுபடியும் எங்க தலையில் இடி வந்து விழுந்தது. தனியார் நிறுவனங்கள் டெபாசிட் பணம் கட்ட வேண்டும் என்றார்கள். அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வந்த காலம். தொகையும் அதிகமாக இருந்தது. மேலும் ஆர்டர்கள் பல கைகள் மாறி எங்களிடம் குறைந்த கட்டணத்திற்கு வந்தது.

வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், இடத்திற்கு வாடகை மற்றும் கம்ப்யூட்டர் வாங்கியதற்கான கடன் என பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். இதனால் M.Phil படிப்பும் தொடர முடியவில்லை. சரி வேலைக்கு போகலாம்னு பார்த்தேன். அதுவும் எனக்கு இருக்கிற கடன் தொகைக்கு கட்டுப்படியாகவில்லை. அந்த சமயத்தில் எனக்கு ஆறுதலா இருந்தது என் மனைவி ஷோபனாதான். இந்த வேலை இல்லைன்னா வேற பார்க்கலாம்னு தைரியம் கொடுத்தாங்க. ஷேர், கமாடிட்டி, டிரேடிங் செய்தோம். பிறகு பிரின்டிங், டிசைனிங், விளம்பரத்தில் இறங்கினோம். பெரிய பெரிய நிறுவனங்களிடம் விளம்பரம் வாங்கி அதை பிரின்ட் செய்து தருவோம்.

இந்த விளம்பரம் தினசரி நாளிதழ்களுடன் இணைந்து வெளியாகும். சென்னை மட்டும் இல்லாமல் பெங்களூரூ, தமிழ்நாடு முழுக்க உள்ள பல நிறுவனங்கள் எங்களின் வாடிக்கையாளர்கள். ஏழு வருஷம் இந்த துறையை ஆண்டோம்னு சொல்லலாம். அது என்னவோ எங்க ராசியான்னு தெரியல. நாங்க ஒவ்வொரு தொழிலும் எடுத்து செய்வோம். அது நல்லா வளர்ந்து வரும் நிலையில் எங்களுக்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்படும். மறுபடியும் அதள பாதாளத்தில் விழுந்திடுவோம். இந்த வேலையும் அப்படித்தான் ஆனது. தினசரிகள், அவர்களின் வருமானத்தை நாங்க எடுத்துக் கொள்வதாக நினைச்சாங்க. அந்த வேலையும் கைவிட்டு போனது’’ என்றவர் அதன் பிறகு பிரஸ் தொழில் செய்துள்ளார்.

அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. கடைசியாக கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உணவகம் சார்ந்த தொழிலை துவங்கியுள்ளனர்.
‘‘நாங்க வசிப்பது புரசைவாக்கம். ஆனால் திருவல்லிக்கேணியில் சில காலம் பிரஸ் வச்சு நடத்தி இருந்தோம். அதனால் பழகின இடம் என்பதால் அங்கேயே உணவு தொழில் செய்ய முடிவு செய்தோம்’’ என்று பேசத் துவங்கினார் ஷோபனா. ‘‘சாப்பாடு அதுவும் வீட்டு சாப்பாடுக்கு தனி விருப்பம் உண்டு. திருவல்லிக்கேணியில் நிறைய மேன்சன்கள் உள்ளன. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஹோட்டல் உணவுகளை தான் சாப்பிடுவாங்க. அவங்களுக்கு வீட்டு சாப்பாடு தரலாம்னு முடிவு செய்தோம். ஹோட்டல் மாதிரி இல்லாமல் உணவுகளை ஆர்டர் பேரில் கொடுக்க திட்டமிட்டோம்.

ஏற்கனவே எங்களின் பிரஸ் நடத்திய இடம் இருந்தது. அதில் ஒரு பக்கம் பிரஸ் வேலை, மறுபக்கம் சமையல், மாலையில் டியூஷன்னு இயக்க ஆரம்பிச்சோம். மதிய உணவுகள் மீன், சாப்பாடுன்னு போட ஆரம்பிச்சோம். சாதம், சாம்பார், ரசம், மீன் குழம்பு, சிக்கன் குழம்பு, ஒரு மீன் வறுவல், ஒரு பொரியல் என அனைத்தும் ரூ.60க்கு கொடுத்தோம். இங்கு சாப்பிட முடியாது. பார்சல் மட்டும் தான். சாலையில் ஒரு சின்ன கவுன்டர் மாதிரி வச்சு விற்பனை செய்தோம். ஆரம்பத்தில் பத்து பேர் பார்சல் வாங்கினாங்க. அதன் பிறகு அது அப்படியே இரட்டிப்பானது. ஒரு கட்டத்தில் சாதம் பத்தாம மறுபடியும் வடிக்கும் நிலை ஏற்பட்டது.

பார்சலுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இரண்டு விதமான கூட்டம் வரும்னு யோசிச்சு, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு சாப்பாடு பரிமாறினோம். இங்கு இறால் தொக்கு, கருவாடு தொக்கு, நெத்திலி வறுவல்னு சேர்த்து செய்தோம். மேலும் மதியம் மட்டும் இல்லாமல் இரவு நேரம் பால் பணியாரம், சப்பாத்தி, இட்லி, கிச்சடின்னு பரிமாறினோம். எல்லாம் நல்ல படியாதான் போச்சு. ஆனால் சின்னதா ஒரு சிக்கல் ஏற்பட்டது. இந்த இடம் மாறி வரும் போது, அட்வான்ஸ் கொடுக்க போதிய பணமில்லை. அதனால் ஓனரிடம் அட்வான்ஸ் மட்டும் ஒரு மாதத்தில் கொடுப்பதாக கேட்டுக் கொண்டோம். மத்தபடி இடத்திற்கு தினசரி வாடகையான ரூ.400 தவறாமல் கொடுத்திடுவோம்.

கெடு காலம் முடிந்தது. அட்வான்ஸ் அவர் சொன்ன தொகையை பிரட்ட முடியல. ஒரு பத்து நாள் டைம் கேட்டும் அவர் தர மறுத்துட்டார். இடத்தை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்பதான் இவ்வளவு நாள் எங்களை துரத்திய கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்தோம். குட்ட குட்ட குனிந்து கொண்டேதான் இருக்கணுமா? எழவே முடியாதான்னு ரொம்பவே மனசு உடைஞ்சிட்டோம். இனி சமையல் தொழில்தான் எங்களின் வாழ்வாதாரம்னு நினைக்கும் போது, அதுவும் இல்லைன்னு ஆனது எங்களால் தாங்கவே முடியல. அந்த சமயத்தில் என் கொழுந்தனாரான இவரின் தம்பி தான் எங்களுக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்தார். அவர் உடனே இப்போதைக்கு எல்லாவற்றையும் நிறுத்திடுங்க.

ஒரு மூணு மாசம் ஓய்வு எடுங்க அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டார். எங்க இருவருக்கும் அந்த ஓய்வு தேவைப்பட்டது’’ என்றவர் ஒரு சில மாத இடைவேளைக்கு பிறகு மறுபடியும் புத்துணர்ச்சியோடு கிளம்பியுள்ளார். ‘‘திருவல்லிக்கேணியில் உணவு தொழில் நடத்திக் கொண்டு இருந்த சமயம் என் கணவர் தேங்காய் பிசினஸ் செய்து வந்தார். அப்போது, அங்குள்ள ஒரு கடைக்கு தேங்காய் சப்ளை செய்வது வழக்கம். அவருக்கு மயிலாப்பூரில் ஒரு மளிகை கடை இருந்தது. அந்த கடை வாசலில் இடம் இருப்பதாகவும், அங்கு மாலை நேரத்தில் கடை போட சொல்லி எங்களை அழைத்தார்.

சரின்னு, மயிலாப்பூரில் பஜ்ஜி கடை போட ஆரம்பிச்சோம். சாப்பாடு செய்ய சொன்னா என்னால் 100 பேருக்கு கூட சமைக்க முடியும். ஆனால் பஜ்ஜி, வடை எல்லாம் எனக்கு எப்படி போடுறதுன்னே தெரியாது. வீட்டில் செய்வோம். அவ்வளவு தான். ஆனால் கடைக்கு ஏற்ப செய்யும் ேபாது கொஞ்சம் தயக்கமா இருந்தது. என் கணவர்தான் உன்னால் முடியும். தரமா, சுவையா கொடுத்தா போதும்னு எனக்கு ஊக்கமளித்தார். வீட்டிலேயே பஜ்ஜிக்கான மாவு, வடைக்கான மாவு எல்லாம் தயார் செய்து கொண்டு போயிடுவோம். ஆரம்பத்தில் எனக்கு வாழைக்காய் பஜ்ஜி பதத்திற்கு சீவ வரல. பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லா ஸ்னாக்சும் போட கத்துக் கொண்டேன்.

பஜ்ஜி மட்டும் இல்லாமல் வாழைப்பூ வடை, போளியும் செய்தோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. வீட்டில் செய்வது போல் இருப்பதால் நிறைய பேர் விரும்பி சாப்பிட வந்தாங்க. மழை நாட்களிலும் அங்கு கூட்டம் அலை மோதும். பிசினசும் நல்லா போச்சு. ஆனால் ஒரு கட்டத்தில் எங்களுக்கும் அந்த கடை உரிமையாளருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. எங்க கடைக்கு சாப்பிட கூட்டம் வந்தது. ஆனால் அவரின் கடைக்கு பெரிய அளவில் பிசினஸ் வரல. இதனால் அவர் எங்களை அந்த இடத்தை காலி செய்ய சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தார். நாங்களும் பொறுத்து பார்த்தோம். ஒரு கட்டத்தில் எல்லாம் கை மீறி போனதால, ஒரே இரவில் எங்க கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையில் எங்க கடைக்கு அருகே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தோம். காரணம் தினமும் வீட்டில் வடைக்கான மாவு எல்லாம் தயார் செய்து, பெரிய தூக்கில் கொண்டு வருவோம். இரண்டு முறை வண்டி கவிழ்ந்து, மாவு எல்லாம் கீழே கொட்டிடுச்சு. ஒவ்வொரு நாளும் இது எங்களுக்கு பெரிய அலைச்சலா இருந்தது. அதனால், இங்கேயே ஒரு இடம் இருந்தா, அங்கு சமையல் செய்ய வசதியா இருக்கும்னு தான் அந்த இடத்தை வாடகைக்கு பிடிச்சோம். அந்த சமயம் இவங்க காலி செய்ய சொன்னதால, வேறு ஒரு இடத்திற்கு கடையை மாத்தினோம். ஆனால் அது முட்டு சந்து. இருட்டினால், அந்த பக்கம் மக்கள் நடமாட்டம் இருக்காது. அதனால் பாதிக்கு பாதி லாபம் குறைந்தது.

என்ன செய்யலாம்னு யோசித்துக் கொண்டு இருந்த போது தான் மற்றொரு இடம் எங்களுக்கு வாடகைக்கு கிடைச்சது. இங்கு காலை மற்றும் மதியம் உணவு ஆரம்பிச்சோம். தக்காளி, கோங்குரா, பிரிஞ்சு சாதம், தேங்காய் சாதம், கேப்சிகம் ரைஸ்ன்னு… வெரைட்டி ரைசும் செய்கிறோம். அதை பக்கத்து தெருவில் உள்ள கடை ஒன்றில் பேக் செய்து கொடுத்திடுவோம். அங்கு நின்று கொண்டு தான் சாப்பிட முடியும். தரமான உணவு கொடுத்தா மக்கள் வெயில், மழைன்னு பார்க்காமல் சாப்பிட வராங்க. அவங்களுக்காகவே தான் இந்த இடத்தை வாடகைக்கு எடுத்தோம். இங்கு மக்கள் உட்கார்ந்து சாப்பிடற வசதி இருக்கு. இங்கு கலந்த சாதம் கிடையாது. முழு மீல்ஸ் தான்… சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், கூட்டு பொரியல்ன்னு தரோம்.

இங்க வத்தக்குழம்பு சாப்பிடவே ஒரு கூட்டம் வரும். இங்கு பஃபே முறையில் தான் உணவு பரிமாறுறோம். வாடிக்கையாளர்களே அவர்களுக்கு வேண்டிய உணவை அவங்களே பரிமாறிக் கொள்ளலாம். ஒரு முழு சாப்பாடு ரூ.60க்கு தருகிறோம்’’ என்றவர் சமையல் வேலையை முழுதும் பார்த்துக் கொள்கிறார். ‘‘இங்க சமையல் பொறுத்தவரை நானும் இன்னொருத்தரும் சேர்ந்து செய்றோம். அவங்க காலை டிபன் மற்றும் பிரிஞ்சு சாதம் செய்திடுவாங்க. காலை எட்டரை மணிக்கு எல்லாம் இட்லி, பூரி, பொங்கல், வடை தயாராயிடும். அதற்குள் நானும் என் கணவரும் வந்திடுவோம். நாங்க மதிய உணவு தயார் செய்ய ஆரம்பிச்சிடுவோம்.

இரண்டு பேர் காய்கறி நறுக்கவும் கடைக்கு போகவும் பார்சல் கட்டவும் இருக்காங்க. இப்படியாக நாங்க ஐந்து பேர் சேர்ந்து தான் இந்த தேரை இழுக்கிறோம். பல போராட்டங்களுக்கு பிறகு இப்பதான் எங்களுக்கான ஒரு இடம் கிடைத்து இருக்கு. எங்களால் பலரின் வயிறும் நிறைகிறது. அதைப் பார்க்கும் போது எங்களின் மனசும் நிறைகிறது. எங்களின் அடுத்த கட்டம், இங்கு பல நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு ஆர்டர் முறையில் உணவினை பார்சல் செய்து தரும் எண்ணம் உள்ளது’’ என்றார் மதிய உணவிற்கு புளிசாதம் கிளறியபடி ஷோபனா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
Next post சோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)