ஆண்டவன் விட்ட வழி!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 43 Second

காலை ஒன்பது மணி… அலுவலகம் செல்லும் வாகனங்கள் எல்லாம் அந்த சாலை வழியாக சீறிப் பாய்ந்து கொண்டு இருந்தது. இந்த பரபரப்புக்கு நடுவே சாலை ஓரத்தில் தன்னுடைய ஜூஸ் கடைக்கான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார் அந்த பெண்மணி. ஒரு பக்கம் தர்பூசணியை பத்தைகளாக அவரின் மகன் நறுக்கிக் கொண்டு இருக்க, மறுபக்கம் ஜூஸ் அடிப்பதற்காக மிக்சியினை தயார் படுத்திக் கொண்டு இருந்தார் அவரின் கணவர். இவரோ ஜூஸ் அடிக்க இருக்கும் பழங்களை சுத்தம் செய்து நறுக்கிக் கொண்டு இருந்தார். இப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதே சமயம் இவர்கள் கடையில் பழச்சாறு குடிப்பதற்காக பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை நின்று கொண்டு இருந்தனர். அங்குள்ள அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப பழச்சாற்றினை போட்டுக் கொண்டு இன்முகம் மாறாமல் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார் ஜெயந்தி.
‘‘நாங்க இங்க பழச்சாறு கடையினை ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகுது’’ என்று பேச துவங்கினார் ஜெயந்தி. முதன் முதலில் கத்தாழை சாறு தான் விற்பனை செய்து வந்தோம். அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக பழச் சாறுகளையும் சேர்த்து போட ஆரம்பிச்சோம்’’ என்றவர் பழச்சாற்றினை ரூபாய் 20 முதல் 30 வரை தான் விற்பனை செய்கிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் திண்டிவனம். நான் என் மாமா மகனை தான் கல்யாணம் செய்து கொண்டேன். அவரின் சொந்த ஊரும் திண்டிவனம் தான். பழங்கள் எனக்கு பரிச்சயம் ஆனதுக்கு காரணம் என் மாமனார் தான். ஆரம்பத்தில் நானும் என் கணவரின் குடும்பமும் திண்டிவனத்தில் தான் இருந்தோம். எங்க வீட்டில் விவசாயம் தான் தொழில். இன்றுமே விவசாயம் தான் செய்து வராங்க. என் மாமனார் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு கூடையில் பழங்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார். ஆரம்பத்தில் அவர் மட்டும் சென்னையில் தங்கி இங்கிருந்து பழ வியாபாரம் செய்தார்.

நாங்க எல்லாம் குடும்பமா ஊரில் இருந்தோம். ஒரு கட்டத்துக்கு மேல் என் மாமனாரின் குடும்பம் சென்னைக்கு மொத்தமா குடிபெயர்ந்து வந்துட்டாங்க. இங்கு வந்து அடையாரில் பழக்கடையை ஆரம்பிச்சு நடத்தி வந்தாங்க. என் கணவரும் அப்பாவிற்கு உதவியா கடையை பார்த்துக் கொண்டார்’’ என்றவர் ஆரம்பத்தில் அடையாரில் தான் இவர்கள் கடையினை நடத்தி வந்ததாக கூறினார். ‘‘முதலில் அடையாரில் மெயின் ரோட்டில்தான் பழக்கடை வச்சிருந்தாங்க. வாகனங்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடம் என்பதால், வியாபாரமும் நன்றாக இருந்தது. நிறைய பேர் போகும் போது பழங்களை வாங்கிச் செல்வது வழக்கமானது.

தொழிலும் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த சமயத்தில் தான் நான் என் மாமா மகனை மணந்து கொண்டு சென்னைக்கு வந்துட்டேன். இவர் கடையை பார்த்துக் கொண்டதால், நான் இவருக்கு மதிய உணவினை கடைக்கு கொண்டு வருவேன். அப்படித்தான் பழங்களை பற்றித் தெரிந்து கொண்டேன். பழங்களை பற்றி எல்லா விவரங்களையும் என் கணவர் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். சில சமயம் மதிய வேளையில் நான் தான் கடையை பார்த்துக் கொள்வேன். அதனால் வியாபார சூட்சமம் மற்றும் வாடிக்கையாளரிடம் எவ்வாறு பேசவேண்டும், கல்லாவில் இருக்கும் காசினை எப்படி கணக்கிடணும்ன்னு எல்லா பொறுப்பினையும் என் கணவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

அதனால் என் கணவர் இல்லாத நேரத்தில் கடையினை பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. இன்னும் சொல்லப்போனால் நான் மழைக்கு கூட பள்ளிக்கூடத்தில் ஒண்டியதில்லை. மாலை நேர வகுப்பு எங்க ஊரில் எடுப்பாங்க. அதற்கும் நான் போகமாட்டேன். ஆனால் என் கணவர் தான் எனக்கு எழுதவும் படிக்கவும் மற்றவரிடம் எப்படி பேசனும் என்பதை கற்றுக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டத்தில் தான் பழக்கடையுடன் ஜூஸ் கடை ஒன்றையும் சேர்த்து துவங்கினோம். வரவேற்பும் நன்றாக இருந்தது’’ என்றவர் அதற்கு பின் பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

‘‘எங்க கடை இருந்த சாலையை விரிவாக்கம் செய்ய இருந்ததால், எங்க கடையை எல்லாம் அங்கிருந்து அகற்ற மாநகராட்சி உத்தரவு போட்டது. அதே சமயம் எங்களின் பிழைப்பு பாதிக்காமல் இருக்க தனியாக ஒரு கடையினையும் அமைச்சு தந்தாங்க. நாங்க அடையாரில் பழக்கடை போட்டிருந்த இடம் முக்கிய சாலை என்பதால், வருமானமும் நன்றாக இருந்தது. நாங்க சீசனுக்கு ஏற்ப எல்லா விதமான பழங்களும் விற்பனை செய்து வந்தோம். அதனால் வாடிக்கையாளர்கள் எங்களை நாடி வந்தாங்க. இந்த சமயத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக சொல்லி அரசாங்கம் எங்களுக்காக வேறு ஒரு இடத்தினை ஏற்பாடு செய்து கொடுத்தது.

ஆனால் அந்த இடத்தில் விற்பனை சரியாக போகல. மக்களுக்கும் எங்க கடை இருக்கும் இடம் தெரியல. அதனால் கடை நஷ்டத்தில் போக ஆரம்பிச்சது. இதற்கு மேல் இங்கு கடையை நடத்தினா சிக்கலாயிடும்ன்னு நானும் என் கணவரும் பழ வியாபாரத்தை அப்படியே மூடிட்டோம்’’ என்றவர் அதன் பிறகு அடையாரில் இருந்து பெருங்குடிக்கு வந்து செட்டிலாகிவிட்டார். ‘‘விற்பனையும் சரியாக போகவில்லை. பழங்களை வாங்கி விற்பனையாகாமல் எல்லாம் நஷ்டத்தில்தான் போனது. வியாபாரம் இல்லை, வீட்டில் குழந்தைகள் வேறு. பழக்கடை போட முடியவில்லை என்றால் என்ன வேற வேலையா இல்லை என்று எனக்கு தோன்றியது.

அதனால் என் கணவரிடம் ஆட்டோவினை வாங்கி ஓட்டலாம்ன்னு சொன்னேன். அவருக்கும் என் யோசனை சரின்னு தெரிந்தது. உடனே நண்பரின் உதவியால் ஆட்டோ ஒன்றினை வாடகைக்கு வாங்கி அதை ஓட்ட ஆரம்பிச்சார். ஓரளவு வருமானம் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் ஒரு நாள் நான் இந்த வழியாக சென்ற போது, மேம்பாலத்திற்கு கீழே இந்த இடம் காலியாக இருப்பதை பார்த்தேன். அடுத்த நொடியே அங்கு ஏன் ஜூஸ் கடையை ஆரம்பிக்கக்கூடாதுன்னு தோன்றியது. என் கணவரிடம் விவரத்தை சொன்னேன்.

என்னதான் ஆட்டோ ஓட்டினாலும் பரம்பரை தொழிலை விட முடியாதில்லை. அதனால அவரும் சம்மதம் தெரிவித்தார்’’ என்றவர் முதலில் கத்தாழை ஜூஸ்
சாற்றினைதான் விற்பனை செய்துள்ளார். ‘‘மேம்பாலத்திற்கு கீழே மெயின் ரோட்டில் இருந்தாலும், ஆரம்பத்தில் இங்கு ஆண்கள் குடிச்சிட்டு பேசிட்டு இருப்பாங்க. சில சமயம் மெக்கானிக் வேலையும் நடக்கும். முதலில் தயக்கமா தான் இருந்தது. இருந்தாலும் நம்ம குடும்பத்தை பார்க்கணும்ன்னு தைரியமா கடையை போட்டோம். முதல்ல என் நண்பரின் உதவியோட கத்தாழை ஜூஸ் மட்டும்தான் போட்டோம். காலையில் அலுவலகம் செல்பவர்கள் பலர் விரும்பி சாப்பிட்டாங்க. என் கணவர் ஆட்டோ ஓட்டுவார். நான் கடையை பார்த்துக் கொண்டேன்.

இப்படியே ஒரு வருஷம் ஓடிடுச்சு. எங்க கடைக்கு வர்றவங்க எல்லாரும் மத்த பழச்சாறும் போடச் சொல்லிக் கேட்டாங்க. அதுவும் ஆரம்பிக்கலாம்ன்னு முதலில் தர்பீஸ், கிர்ணி அப்புறம் பப்பாளி பழங்களை துண்டுகளாக நறுக்கி வைத்தோம். அதை விரும்பி ஒரு கூட்டம் வந்தது. அடுத்த கட்டமாக ஜூசுக்கு முழுமையா இறங்கினோம். 22 வருஷம் முன்னாடி பழக்கடை வச்சிருந்த போதே 5 ரூபாய்க்கு பழச்சாறு விற்பனை செய்தோம். இப்ப 20 ரூபாய்க்கு செய்றோம்’’ என்றவர்
இவரின் கடையை எல்லா ரக மக்களும் நாடி வரவேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார்.

‘‘பெரிய பெரிய கடைகளில் நாங்க கொடுக்கும் அதே ஜூஸ் தான் ரூபாய் 40 முதல் ரூ.100 வரை விற்பனை செய்றாங்க. அங்கு எல்லாரும் போய் சாப்பிட முடியாது. எல்லாரும் சாப்பிடணும் அதே சமயம் தரமாகவும் இருக்கணும் என்பதில் நானும் என் கணவரும் ரொம்பவே கவனமா இருக்கோம். தினமும் கோயம்பேட்டில் தான் பழங்களை வாங்கி வருவோம். எல்லாம் தரமானதான்னு பார்த்து வாங்குவோம். அதில் நாங்க காம்பிரமைஸ் செய்வதில்லை. வெயில் காலத்தில் தர்பூசணி, கிர்ணி, மாம்பழம், பிளம்ஸ்ன்னு பார்த்து வாங்குவோம். எல்லா நாட்களிலும் அத்தி, பட்டர் ஃபுரூட் கிடைக்கும். முன்னெல்லாம் டிராகன் பழங்கள் வெளிநாட்டில் இருந்து தான் வரும். இப்ப இந்த பழங்கள் எல்லாம் ஊட்டி மற்றும் கேரளாவிலேயே விளைவிக்கிறாங்க.

மாதுளை, ஆரஞ்ச், திராட்சை எல்லாம் சீசனுக்கு ஏற்ப கிடைக்கும். எல்லா பழங்களும் உடலுக்கு நல்லது. கத்தாழை கண் எரிச்சல், அல்சருக்கு நல்லது. உடலை குளுமை படுத்தும். பட்டர் ஃபுரூட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். பெண்களுக்கு மிகவும் நல்லது. இப்படி ஒவ்ெவாரு பழத்திலும் ஒரு மருத்துவ குணம் இருக்கு. அதெல்லாம் மக்கள் இப்பதான் புரிந்து கொண்டு இருக்காங்க. மழைக்காலத்திலும் ஐஸ் போடாமல் ஜூஸ் கேட்கிறாங்க. அதனால எல்லா
நாட்களிலும் எங்க கடை இயங்கிக் கொண்டு இருக்கும்’’ என்றவர் பெண்ணாக இருந்தாலும் எந்த வேலையும் தைரியமாக செய்ய ஒரு உந்துதல் அவசியம் இல்லையா?

‘‘இங்கு பழச்சாறு கடை வைக்கும் முன்பு கணவர் ஆட்டோ ஓட்டி வந்தார். ஆனால் அவரின் உடல் நிலை காரணமா அவரால் தொடர்ந்து ஆட்டோ ஓட்ட முடியல. அதனால எங்க குடும்பத்தின் மொத்த வருமானம் இந்த பழச்சாறு கடை தான். எனக்கு மூன்று பசங்க. பெரிய பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சு. இரண்டாவது பெண் மாற்றுத்திறனாளி என்றாலும் புத்திசாலி பெண். எம்.ஏ படிச்சிட்டு இருக்காங்க. பையன் ஐ.டியில் சேர்ந்து மெக்கானிக் துறையில் தேர்ச்சி பெற்று இருக்கான். சில காலம் கார் நிறுவனத்தில் வேலை பார்த்தான். எனக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் வேலையை விட்டுட்டான். இப்ப அவனும் ஜூஸ் கடையில் எங்களுக்கு உதவியா இருக்கான். அப்பப்ப மெக்கானிக் வேலையும் செய்வான்.

அவனுக்கு பிறக்கும் போதே இருதயத்தில் பிரச்னை இருந்தது. அதற்கான சிகிச்சை எடுத்து வந்தோம். இப்போ நல்லா இருக்கான். வேறு கிளைகள் திறக்கும் எண்ணம் இப்போது இல்லை. இதில் வரும் லாபமே போதும்ன்னு இருக்கோம். ஒரு நாளைக்கு பத்து ஜூஸ் வித்தாலும் அதில் எல்லா செலவும் போக லாபம் கிடைச்சா போதும். நாங்க ஏதும் சேர்த்து வைக்கல. வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை இத்தனை காலம் நகர்த்திட்டோம். இனி ஆண்டவன் விட்ட வழி’’ என்றார் புன்னகை மாறாமல் ஜெயந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடி குடியைக் கெடுக்கும்… ஃபீடிங் பாட்டில் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!! (மருத்துவம்)
Next post யூடியூப் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!! (மகளிர் பக்கம்)