நர்சரி ஆரம்பிப்பது எப்படி?!! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 9 Second

பொழுதுபோக்குத் தோட்டத்தையே வர்த்தக ரீதியான தோட்டமாக மாற்றுவதைப் பற்றியும் அதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பது பற்றியும் பார்த்தோம். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, நாற்றங்கால்கள் வைத்து, நர்சரியாக நடத்தவும் முடியும். நாம் ஏற்கனவே தோட்டங்கள் அமைப்பதற்கான வங்கிக் கடன்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதே வங்கிக் கடன்களை நர்சரி திட்டத்துக்கும் பெற முடியும்.

நர்சரி ஆரம்பிக்க அடிப்படையான விஷயங்கள் என்னென்ன? எத்தனை வேலையாட்கள் வேண்டும்? என்ன மாதிரியான பொருட்கள் கையில் இருக்க வேண்டும்? நர்சரி நிர்வாகம் தொடர்பான அறிவு… நர்சரி ஆரம்பிக்க விரும்புவோர் இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

முதலில் உங்கள் நர்சரியில் என்ன மாதிரியான நாற்றுகளை தயாரிக்கப் போகிறீர்கள் என யோசியுங்கள். காய்கறி நாற்று மட்டுமா? பூக்கள் மற்றும் அழகுச் செடிகளை நாற்று தயாரித்துக் கொடுக்கப் போகிறோமா? இவ்வளவு ஏன்? இன்று மஞ்சள் செடிகளுக்கான நாற்றுகளுக்குக்கூட நல்ல வரவேற்பு இருக்கிறது. அதைப் பற்றியும் யோசிக்கலாம்.

நர்சரி வைப்பதென முடிவு செய்துவிட்டால் கட்டாயம் ஷேடு நெட் எனப்படுகிற பசுமைக்குடில் வேண்டும். நர்சரி அமைக்கிற போது நேரடியான சூரிய வெளிச்சத்தில் அப்படியே போட முடியாது. சாதாரண பசுமைக்குடில்களில் நாம் 50 சதவிகிதம் நிழலும் 50 சதவிகிதம் வெயிலும் வருகிற மாதிரி அமைப்போம். ஆனால், நர்சரிக்கு 75 சதவிகிதம் நிழல் வரக்கூடிய பசுமை வலைகளைப் பொருத்த வேண்டும். இது தவிர, MIST சேம்பர் என ஒன்று இருக்கிறது. நர்சரிகளுக்கான பிரத்யேக குடில் அமைப்பு இது. நர்சரியில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேர் விடுதலை எளிதாக்குகிற டெக்னிக் கொண்ட குடில் இது. ஆரம்ப காலத்தில் வெறும் பசுமைக்குடிலை வைத்தே முயற்சி செய்யலாம்.

நர்சரி அமைப்பதற்கான இடத்தைத் தயார் செய்துவிட்டோம். அடுத்து பசுமைக் குடில் அமைத்துவிட்டோம் என்றால் விதைகள் மற்றும் மண் கலவை என தேவையான பொருட்களுக்கு ஏற்பாடு செய்வது அடுத்தக் கட்டம். சிலது பதியன் போட வேண்டும். சிலதை குச்சியை எடுத்து நட்டு வைக்கலாம். சிலதுக்கு ஒட்டுக் கட்ட வேண்டும். அப்படிக் கட்டும் போது நமக்கு வேர் செடி வேண்டும். தாய் செடி, அதாவது, எந்தச் செடியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது, பழங்கள் அதிகம் வருகிறதோ அந்தச் செடியில் இருந்து குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து வேர் செடியுடன் சேர்ப்பதுதான் ஒட்டுக்கட்டுதல்.

இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்த ஆட்கள் நமக்குத் தேவை. குச்சிக்கட்ட, ஒட்டுக்கட்ட, தரைப்பதியன் மற்றும் விண்பதியன் எல்லாம் செய்யத் தெரிந்த ஒன்றிரண்டு ஆட்களை நியமிக்கலாம். 2 ஆயிரம் சதுர அடி இடத்தில் நர்சரி அமைக்கப் போவதானால் இப்படி 3 ஆட்களை வேலைக்கு எடுக்கலாம். நர்சரியை பராமரிப்பது மட்டுமின்றி, மேற்சொன்ன வேலைகளையும் பார்த்துக் கொண்டு, தினம் இத்தனை செடிகளை விதைகள் மூலம் உருவாக்குவது என ஒரு இலக்கை நிர்மாணித்துக் கொடுத்து அந்த வேலைகளை அவர்களை செய்ய
வைக்கலாம்.

நர்சரி செடிகளுக்கான மண் கலவையில் ஆற்றுமணல் அதிக பங்கு வகிக்க வேண்டும். ஆற்றுமணல் 2 பங்கு, ஒரு பங்கு தேங்காய் நார்கழிவு, ஒரு பங்கு செம்மண் என்ற கலவையில் தயார் செய்து உபயோகிக்க வேண்டும். ஏனெனில், ஆற்றுமணல் அதிகமாக இருந்தால்தான் வேர்விடுகிற தன்மை சுலபமாக நடக்கும். இயற்கையான முறையில் விதைகளை விதை நேர்த்தி செய்து பயன்படுத்தலாம். நல்ல சாம்பலை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வீட்டிலேயே அரைத்த விரளி மஞ்சள் தூள் சிறிது எடுத்து இரண்டையும் பசை போலக் கரைத்துக் கொள்ளவும். அந்தப் பசையில் விதைகளைப் போட்டுப் புரட்டி எடுத்து லேசாக ஈரம் போகக் காய வைத்து நடலாம்.

அடுத்து குச்சிகள். குச்சிகளை நடும் போது Quick Root என ஒரு பொருள் இருக்கிறது. சீக்கிரம் வேர் விடச் செய்வதற்கான பொருள் அது. ஆனால், முற்றிலும் இயற்கையானது அல்ல. வர்த்தக ரீதியாக நிறையச் செய்ய நினைப்போருக்கான கெமிக்கல் கலவை இது. வேர்களுக்கான ஹார்மோன்கள் இருக்கக்கூடிய பொடி இது. வேர்ப் பகுதியை அதில் தொட்டோ அல்லது அந்தப் பொடியை நீர்க்கரைசலாக்கி அதில் முக்கியோ நடலாம்.

இதையே இயற்கை முறையில் செய்ய நினைத்தால் சமையலுக்கு உபயோகிக்கிற பட்டையை வாங்கி, 5 துண்டு அளவை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அரை டம்ளராக வற்ற விட்டு அந்தத் தண்ணீர், ஒரு இளநீர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கலக்க வேண்டும். குச்சிகளை அதில் கால் மணி நேரம் ஊற வைத்து பிறகு நன்கு உதறிவிட்டு நடலாம். இதிலும் வேர்ப்பிடிப்பு சீக்கிரம் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம். இதே போல ஒட்டுக் கட்டுதல், பதியன் போடுதல் போன்றவற்றை விஞ்ஞானப்பூர்வமாக செய்கிற போது தரமான கன்றுகள் கிடைக்கிற விகிதாச்சாரம் அதிகரிக்கும்.

சரி, குச்சிகளை எதில் நடப் போகிறோம்? விதைகளை எங்கே விதைக்கப் போகிறோம் என்பது அடுத்த கேள்வி. விதைகளை ஜெர்மினேஷன் ட்ரே அல்லது Pro ட்ரே என்பார்கள். முட்டைப் பெட்டி மாதிரி 20, 52 அல்லது 92 குழிகளுடன் இருக்கும். அதில் மண்ணை சமமாகப் பரப்பி, ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு விதை போட்டு எடுத்துக் கொடுக்கலாம். இன்னொரு சுலப வழியும் உண்டு. டீ குடிக்கிற டிஸ்போசபிள் கப்புகளில் (பேப்பர் கப்புகளை உபயோகிக்க முடியாது. பிளாஸ்டிக் கப்புகளையே உபயோகிக்க முடியும்.) மிகச்சிறிய அளவாகத் தேர்ந்தெடுக்கவும்.

அவற்றில் துளைகள் போட்டு ஒவ்வொன்றிலும் செடிகள் வைத்து அப்படியே கொடுத்துவிடலாம். இந்த முறையில் ஒவ்வொரு நாற்றாகக்கூட விற்க முடியும். ட்ரேயில் போடும் போது 20, 52 செடிகள் என அப்படியேதான் கொடுக்க வேண்டியிருக்கும். குச்சி கட்டுவது, ஒட்டுக்கட்டுவது போன்றவற்றை அந்தந்த சைஸுக்கு ஏற்றபடி பாலிதீன் பைகளில் செய்து கொடுக்கலாம். பாலிதீன் பைகளை வாங்கி, மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். மூன்றாவது பகுதியில் 4 துளைகள் போடவும். கீழ்ப் பகுதியில் ஆற்றுமணல், பிறகு நாம் ஏற்கனவே சொன்ன மாதிரியான மண் கலவையை நிரப்பி அதன் பிறகு குச்சிகளை நடலாம். கருப்பு நிற பாலிதீன் பைகளில் வேர் விடுவது வெளியே தெரியாது என்பதால், ஆரம்ப காலத்தில் வெள்ளை பாலிதீன் பைகளில் செய்யலாம்.

அதில் வேர்கள் வருவது தெரியும். வேர்கள் விட்டு ஒன்றரை மாதங்கள் கழித்து அதை அப்படியே எடுத்து பெரிய பைகளில் மாற்றி 3 மாதங்கள் பாடம் செய்ய வேண்டும். நல்ல வளர்ச்சி வந்ததும் சிறிது நிழலில் வைத்து பாடம் செய்ததும் சிறிது வெயில் படும் இடத்தில் கொண்டு வர வேண்டும். கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்களில் நர்சரி செடி தயாராகி விடும். அந்தச் செடியை நீங்கள் 8 மாதங்களுக்குள் விற்றுவிட வேண்டும். அதாவது, ஐந்தரை, ஆறு மாதங்கள் முடிந்ததும், அடுத்த 2 மாதங்களுக்குள் அவற்றை விற்றுவிட வேண்டும்.
காய்கறி நாற்றுகளுக்கு முதலிலேயே ஆர்டர் வாங்கி விடுவது சிறந்தது.

தக்காளி, கத்தரிக்காய், மஞ்சள், தர்பூசணி என 50, 100 எண்ணிக்கையில் நாற்றுகள் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு, நாற்றுகள் போட்டு 25 முதல் 30வது நாளுக்குள் நடவுக்குப் போகும்படி தயார் செய்து கொடுக்க வேண்டும். 100 நாற்றுகள் கேட்கிறார்கள் என்றால் 125 நாற்றுகளுக்கு நாம் தயார் செய்ய வேண்டும். ஆர்டர் வாங்கும் போதே 50 சதவிகித முன்பணம் பெற்றுக் கொண்டுகூட நாற்றுகளை தயார் செய்து கொடுக்கலாம். பழ மரங்களுக்கான ஒட்டுக்கட்டிக் கொடுக்கும் முறைக்குக்கூட நாம் முன்கூட்டியே ஆர்டர் வாங்கிக் கொண்டு செய்வது நல்ல விஷயம். சொன்ன தேதிக்கு சரியாக ஆர்டரை கொடுப்பது நர்சரி தொழிலில் மிக முக்கியம்.

நர்சரி அமைப்பதில் பசுமைக்குடில் அமைப்பு, வேலையாட்கள் சம்பளம், விதை மற்றும் மண் கலவை போன்றவை தான் செலவு. முதலீடே போடாமல் ஆர்டர் பெற்று அதற்கான முன்பணம் வாங்கியே செய்ய முடியும். ஒரே மாதத்தில் பணம் பார்க்கச் செய்கிற தொழில் இது. விதை நாற்று போட்டுக் கொடுக்கும் போது முதல் மாதத்திலேயே பணம் பார்க்கலாம். மஞ்சள் மாதிரியான நாற்றுகளை 5 ரூபாய் வரை விற்கலாம். பழ மரங்களுக்கான நாற்றுகளை 30 முதல் 40 ரூபாய் வரை விற்கலாம். அரிதான பழங்கள் என்றால் 100 ரூபாய் வரைகூட வாங்கலாம்.

தோட்டம் அமைக்க நினைப்போருக்கும் இந்த விதைகளும் நாற்றுகளும்தான் அடிப்படை. தரமான விதைகள், நல்ல மண் கலவை என ஆரம்பத்திலேயே கவனமாக இருந்தாலே பிற்காலத்தில் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் குறையும். நல்ல விதைப் பண்ணைகள் மற்றும் நாற்றுப் பண்ணைகளில் இருந்து வாங்கக்கூடிய செடிகளுக்கு சிறப்பான பலன் தரும் தன்மைகள் உண்டு. இயற்கை வழியாக வந்த நாற்றுகளுக்கு இன்று தேவை அதிகம். அவை கிடைப்பது அரிதாக இருக்கின்றன.

இயற்கை வழியாக விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களுக்கு எப்படி ஆர்கானிக் சான்றிதழ் கொடுக்கப்படுகிறதோ, அதே போல இயற்கை வழி நாற்றங்கால் பண்ணைகளுக்கும் ISCOP, Coimbatore என்கிற அமைப்பு சான்றிதழ் தருகிறார்கள். இயற்கை வழி விவசாயப் பொருட்களுக்கும் இயற்கை வழி நாற்றங்கால் பண்ணைகளுக்கும் எப்படி சான்றிதழ் தருகிறார்கள்… அவற்றை எப்படிப் பெறலாம்? அவற்றுக்கு என்ன செலவாகும் என்பதை எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

நர்சரி அமைப்பதில் பசுமைக்குடில் அமைப்பு, வேலையாட்கள் சம்பளம், விதை மற்றும் மண் கலவை போன்றவைதான் செலவு. முதலீடே போடாமல் ஆர்டர் பெற்று அதற்கான முன்பணம் வாங்கியே செய்ய முடியும். ஒரே மாதத்தில் பணம் பார்க்கச் செய்கிற தொழில் இது. விதை நாற்று போட்டுக் கொடுக்கும் போது முதல் மாதத்திலேயே பணம் பார்க்கலாம்.

டீ குடிக்கிற டிஸ்போசபிள் பிளாஸ்டிக் கப்புகளில் மிகச்சிறிய அளவாகத் தேர்ந்தெடுக்கவும். அவற்றில் துளைகள் போட்டு ஒவ்வொன்றிலும் செடிகள் வைத்து அப்படியே கொடுத்து விடலாம். இந்த முறையில் ஒவ்வொரு நாற்றாகக்கூட விற்க முடியும். ட்ரேயில் போடும் போது 20, 52 செடிகள் என அப்படியேதான் கொடுக்க வேண்டியிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வருமானம் தரும் வுட்டன் ஜூவல்லரி!! (மகளிர் பக்கம்)
Next post கண்டிப்பா? சுதந்திரமா? எந்த வழி சிறந்த வழி? (மருத்துவம்)