By 8 January 2022 0 Comments

தலை காக்கும் தடுப்பூசிகள் வந்தாச்சு! (மருத்துவம்)

புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், 1964ல் எம்.பி.பி.எஸ். முடித்தவர். 1970 ஜனவரி மாதம் மருத்துவராகப் பயிற்சியைத் தொடங்கி, குழந்தைகள் நல மருத்துவத்தில் 45 ஆண்டு காலம் பழுத்த அனுபவம் வாய்ந்தவர். ராணுவத்தில் மருத்துவராகச் சேர்ந்து லடாக், கார்கில், தராஸ் போன்ற இடங்களில் பணியாற்றியவர். வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல மருத்துவத்துக்கான சிறப்புப் பிரிவில் தேர்ச்சி அடைந்தவர். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் ஹானரரி அசிஸ்டென்ட் சர்ஜனாக 18 ஆண்டுகள் பணியாற்றியவர். அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களின் குடும்ப மருத்துவராகவும் செயல்படுகிறவர் டாக்டர் ஜே.விஸ்வநாத்!

‘‘நான் குழந்தைகள் நல மருத்துவராக பணியைத் தொடங்குவதற்கு என் அக்கா மகள்தான் முக்கிய காரணம். பிறந்த ஐந்தாம் நாளில் அக்குழந்தை இறந்து விட்டது. அதன்பிறகுதான், குழந்தைகள் நல மருத்துவத்தில் என் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்…’’ – அறிமுக உரையுடன் ஆரம்பிக்கிறார் டாக்டர்.

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியத்தில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. 1970களில் போலியோ, டிப்தீரியா, தொண்டை அடைப்பான், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகள்கைவசம் இருந்தபோதும், மக்களிடம் இவற்றின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இப்போது குழந்தைகளை தாக்கும் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், போதிய தடுப்பூசிகளும் மருந்துகளும் தயார்
நிலையில் உள்ளன. எங்கள் காலத்திலோ மஞ்சள் காமாலை, தட்டம்மை (Measles), புட்டாலம்மை, ருபெல்லா (Rubella) போன்ற நோய்களுக்குச் சரியான மருந்துகள் கிடையாது. பின்னர்தான் இந்த நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தார்கள். ஆரம்பத்தில் ருபெல்லா முதலான நோய்களைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டன. இப்போது இவை 45 ரூபாய்க்கு கிடைக்கின்றன.

குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் பன்றிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், சின்னம்மை (Chicken Pox), ஹெபடைட்டிஸ்-ஏ, மூளைக்காய்ச்சல் (Meningitis) போன்றவற்றுக்கும் தடுப்பூசிகள் வந்துவிட்டன. முன்பு கர்ப்பப்பை புற்றுநோய்க்கு தடுப்பு மருந்து இல்லாமல் இருந்தது. இப்போது இதற்கும் தடுப்பு ஊசி கண்டுபிடித்தாகிவிட்டது. 10 வயது சிறுமியில் இருந்து 45 வயது பெண்கள் வரை அனைவரும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். முன்பு குழந்தைகளுக்கு ஊசி மூலம் குளுக்கோஸ் செலுத்தி வந்தோம்.

2000ம் ஆண்டு முதல் ஊசிக்குப் பதிலாக, Venflon என்னும் நவீன மருத்துவ உபகரணம் பயன்படுத்தப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்குப் பொது வார்டில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கு NICU (Neonatal Intensive Care Unit)ல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. NICU அறிமுகமான பிறகு குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து உள்ளது…’’ – நல்ல தகவல் சொல்கிற டாக்டர், தன்னுடைய 45 வருட அனுபவத்தில், தன்னால் மறக்க முடியாத சம்பவத்தை நினைவுகூர்கிறார்.

1974ல் நடந்த சம்பவம்… வசதி படைத்த பெற்றோர் தங்களுடைய 3 மாத பெண் குழந்தையை போலியோ சொட்டு மருந்து மற்றும் முத்தடுப்பு ஊசி போடுவதற்காக என்னிடம் கொண்டு வந்தனர். பிரேஸ்லெட், மோதிரம் என குழந்தைக்கு நிறைய நகைகளை அணிவித்திருந்தார்கள். மோதிரம் பெரிதாக இருந்ததால் அதில் நூலைச் சுற்றி இருந்தனர். நான் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பினேன். அரைமணிநேரம் கழித்து அந்தக் குழந்தை வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர் ‘குழந்தை மூச்சுவிட சிரமப்படுகிறது.

வாயில் நுரை தள்ளுகிறது. உதடு ஊதா நிறமாக மாறிவிட்டது. கண் கள் செருகிக் கொண்டன’ என்றார்.பதறிப்போய், உடனே அங்கு சென்றேன் குழந்தையின் பெற்றோர் நான் அளித்த சிகிச்சையால்தான் இப்படி ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டிருந்தனர். குழந்தையைப் பரிசோதித்து பார்த்ததில் தொண்டையில் ஏதோ அடைத்து இருப்பது தெரிய வந்தது. தாமதிக்காமல் குழந்தையை காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் எடுத்து சென்றோம். அவர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு, தொண்டையில் சிக்கி இருந்த மோதிரத்தை சிறப்பு உபகரணம் மூலம் வெளியே எடுத்தார். அதன்பின்னர், குழந்தை நன்றாக மூச்சுவிட்டு சிரிக்க ஆரம்பித்தது…குழந்தையின் பெற்றோரும்தான்!Post a Comment

Protected by WP Anti Spam