வெள்ளத்தாளில் எழுதிய உயில் செல்லுமா? (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 56 Second

என்ன செய்வது தோழி?

அன்புடன் தோழிக்கு,

எனது அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது அவருக்கு 67 வயது. அவருக்கு நாங்கள் 2 பெண்கள். எங்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.எனது அப்பாவின் அப்பா அதாவது எனது தாத்தாவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்த பிறகுதான் 2வது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி மூலமாக 3 பெண்கள், ஒரு ஆண் என 4 பிள்ளைகள். தாத்தாவின் 2வது மனைவிக்கு 3 ஆண்கள், ஒரு பெண் என 4 வாரிசுகள். எனது அப்பா 2வது மனைவிக்கு பிறந்தவர்.

எனது தாத்தா தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றியவர். அப்படி பணியில் இருக்கும் போது தனது சுய சம்பாத்தியம் மூலமாக நிலம் வாங்கினார். அந்த நிலத்தில் ஒரு பகுதியை அவரது 2வது மனைவி அதாவது எங்கள் பாட்டியின் பெயரில் கிரயம் செய்துள்ளார். அந்த நிலத்தில் எங்கள் பாட்டியின் பெயரில் ஒரு ஓட்டு வீடும் கட்டித் தந்தார். வீடு கட்டி முடிவதற்குள் தாத்தா வேலையில் இருந்து ஓய்வு பெற்ற விட்டாராம்.

முதல் மனைவிக்கு பிறந்த பெண்களில் இருவருக்கு 1969ம் ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது. தாத்தா ஓய்வு பெற்ற பிறகு முதல் மனைவிக்கு பிறந்த 3வது மகளுக்கு அதே 1969ல் நவம்பர் மாதம் திருமணம் நடந்தேறியது. ஓய்வு பணத்தை வைத்துதான் அந்த திருமணத்தையும், எங்கள் பாட்டியின் எஞ்சிய வீட்டுப் பணிகளையும்
முடித்துள்ளனர்.

தாத்தாவின் முதல் மனைவியின் 4 பிள்ளைகளும் அதிகம் படிக்கவில்லை. இரண்டாவது மனைவியின் 4 பிள்ளைகளும் நன்றாக படித்தவர்கள். இந்நிலையில் தாத்தா தனது சுய சம்பாதியத்தில் வாங்கிய நிலத்தில் ஒரு பகுதி நிலத்தை எனது அப்பாவின் பெயரில் உயில் 1976ம் ஆண்டு எழுதி வைத்துள்ளார்.அந்த உயில் பத்திரத்தில் எழுதவில்லை. வெறும் வெள்ளைத்தாளில்தான் எழுதியுள்ளார். கூடவே பாகப் பத்திரமும் வெள்ளைத் தாளில்தான் எழுதி தந்துள்ளார். எங்கள் பெரியப்பாவை அந்த உயிலை செயல்படுத்தி தர வேண்டும் என்றும் அதில் தாத்தா குறிப்பிட்டுள்ளார். அதன் நகல்களை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.

இந்த உயில் சம்பவத்திற்கு பிறகு எனது தாத்தா 1979ம் ஆண்டு ஜனவரி மாதமும், பாட்டி 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இறந்து விட்டனர். இப்போது தாத்தாவின் வாரிசுகள் அந்த உயிலை நிறைவேற்ற விடாமல் தகராறு செய்கிறார்கள். வெளியாளுக்கு அந்த நிலங்களை விற்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

எனது கேள்விகளும் சந்தேகங்களும்..

உயிலுக்கு காலவரம்பு இருக்கிறதா? வழக்கமான பத்திரத்தில் எழுதாமல், வெள்ளைத்தாளில் எழுதப்படும் உயில், பாகப் பிரிவினை பத்திரம் செல்லுபடியாகுமா?உயிலை நிறைவேற்றிக் கொடுக்கும் கடமையில் இருப்பவர், உயிலை நிறைவேற்றி தரமாட்டேன் என்று இரண்டகம் செய்கிறார். உயிலை அவர் நிறைவேற்றிட உதவும்படி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?எனது அப்பாவுக்கு தெரியாமல் அவரது கையெழுத்தை போலியாகப் போட்டு தாத்தாவின் பெயரின் வாரிசு சான்றிதழுக்கு 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்து உள்ளனர். இப்போது சான்றிதழும் வாங்கி விட்டனர்.

எனது அப்பாவுக்கு எழுதி கொடுத்துள்ள சொத்தில்தான் எனது தாத்தா, பாட்டியின் கல்லறைகள் உள்ளன. அந்த நிலத்தை இப்போது விற்பதற்கான வேலையில் மற்றவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்கு எனது அப்பாவும், எனது இளைய அத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை.பாட்டியின் பெயரில் இருந்த வீட்டை2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது பெரியப்பா ஏமாற்றி தன் பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார். ஆனால் அந்த சொத்தை எனது அத்தைக்கும் தர வேண்டும் என்று தாத்தா உயில் எழுதி வைத்துள்ளார். அதனால் தாத்தா கூறியபடி இளைய அத்தைக்கு பங்கு தருவார்களா?நாங்கள் அனைவரும் தென் இந்திய திருச்சபையை(சர்ச்) சேர்ந்த கிறிஸ்துவர்கள். எங்கள் தாத்தா எழுதி தந்த உயில் படி எங்கள் அப்பாவுக்கு பங்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் தோழி.

இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத தோழி.

நட்புடன் தோழிக்கு,

முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வெள்ளைத்தாளில் எழுதியிருந்தாலும் உங்கள் தாத்தா உயில் செல்லுபடியாகும். ஆனால் உயில் எழுதுபவர்கள் 18 வயதை கடந்தவர்களாக இருக்க வேண்டும். தெளிவான மனநிலை, சுயமாக முடிவெடுக்கும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அது தவிர அந்த உயிலை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உயிலை பத்திரத்தில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அதே நேரத்தில் அந்த உயில் எப்போது உயிர் பெறும் என்றால், அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான். ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை எழுதலாம். அதாவது அதை மாற்றி, மாற்றி எழுத முடியும். அவர் இறக்கும் முன்பாக எழுதும் கடைசி உயில்தான் செல்லுபடியாகும். அதனால் அதனை பதிவு செய்யவோ, பத்திரமாக எழுதவோ அவசியமில்லை.உயிலை செயல்படுத்தும் அதிகாரத்தை உங்கள் பெரியப்பாவுக்கு உங்கள் தாத்தா வழங்கியுள்ளார். ஆனால் அவர் அதனை செயல்படுத்த ஒத்துழைக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள். அவர் ஒத்துழைக்காவிட்டாலும் பிரச்னை இல்லை.

உயில் யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள், அந்த உயில் படி சொத்தினை பெறும் உரிமை உள்ளவர்கள். இப்போது உங்கள் தந்தை உயிருடன் இருக்கிறார். அதனால் அவரே உயிலை சட்டப்படி செயல்படுத்தி உரிய பங்கை பெற முடியும். அதற்கு நீங்கள் மாவட்ட சிவில் நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகி வழக்கின் மூலம் தீர்வு காண முடியும். அதாவது வழக்கில் எதிர்ப்பவர்களையும், கூடவே உங்கள் பெரியப்பாவையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கலாம்.

அதன் பிறகு நீதிமன்றம் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல் உயிலின் உங்கள் சொத்துரிமை குறித்து செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த நீதிமன்ற நடைமுறைகள் மூலம் இறந்துபோன உங்கள் தாத்தாவின் உயில் படி உங்கள் அப்பாவும், இளைய அத்தையும்தான் உரிமை உள்ளவர்கள் என்று வாரிசு சான்றிதழ் தந்து விடுவார்கள். அந்த சான்றிதழை வைத்து உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.

அதேபோல் உயிலில் சாட்சி கையெழுத்துப் போட்டவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் வாரிசு சான்றிதழ் அடிப்படையில் சட்ட உரிமை கோரலாம். அதேபோல் பாகப்பிரிவினை உடன்படிக்கையும் அமல்படுத்த உத்தரவிடும்படி சிவில் நீதிமன்றத்தை அணுகலாம். அதனால் அதுவும் பிரச்னை இருக்காது. உங்கள் தந்தையின் கையெழுத்து இல்லாமல் வாரிசு சான்றிதழ் வாங்கி இருந்தால் நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் புகார் செய்யலாம். அவர்கள் விசாரித்து , அந்த சான்றிதழை ரத்து செய்து விடுவார்கள். அதன்பிறகு புதிதாக வாங்கிக் கொள்ளலாம். இவையெல்லாம் செய்வதற்கு முன்பு ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

உயில் சுருக்கம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறாம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கண்ட முகவரியில் வசிக்கும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் நான். தற்சமயம் 66 வயதாகும் நான் சுய நினைவுடனும், யாருடைய தூண்டுதலின்றியும் எழுதும் உயில் இது. எனது பெயரில் காலி மனை உள்ளது. அது என் மனைவியின் பெயரில் உள்ள காலி மனைக்கு பின்புறம் உள்ளது. குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட அந்த மனை பட்டா மனையாகும்.

அந்த சொத்து என் சுய உழைப்பின் மூலம் வாங்கிய சொத்தாகும்.எனக்கு வயதாகி விட்டதால், என் பெயரில் உள்ள நிலத்தை, எனக்கும் எனது 2வது மனைவிக்கும் பிறந்த இளைய மகனுக்கு எழுதி வைக்கிறேன். என் மகனுக்கு அந்த நிலத்தின் மீது முழு உரிமை உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உயிலை யாரும் என்னை வற்புறுத்தி எழுதி வாங்கவில்லை. நான் சுய நினைவுடனும், திடகாத்திரத்துடனும் இருந்த காலத்தில் எழுதிக் கொடுத்த உயில் இது. இந்த உயில் ஒன்றுதான் நான் எழுதிக் கொடுத்த உயிலாகும். இந்த உயிலை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பை எனக்கும், எனது 2வது மனைவிக்கும் பிறந்த முதல் மகனுக்கு உரிமையாக்குகிறேன்.

பாக உடன்படிக்கை

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆறாம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கண்ட முகவரியில் வசிக்கும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நானும் எனது மனைவியும் சேர்ந்து எழுதிக் கொண்ட கடைசி விருப்ப உடன் படிக்கையாகும். எனக்கு 66வயது. என் மனைவிக்கு 49வயது.நான் இரு மணம் புரிந்தவன். என் முதல் மனைவிக்கு 3 பெண், ஒரு ஆண் பிள்ளை உண்டு. இவர்கள் 4 பேருக்கும் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைத்து விட்டேன். அதனால் முதல் மனைவிக்கு பிறந்த 4 பேருக்கும் எனது சுய சம்பாதியத்தில் பங்கு இல்லை.

அதேபோல் எனக்கும் 2வது மனைவிக்கும் பிறந்த முதல் 2 ஆண் பிள்ளைகளுக்கும் எனது சுய சம்பாதியத்தில் பங்கு கிடையாது. நானும் 2வது மனைவியும் வசித்து வரும் வீட்டை எனக்கும், எனது 2வது மனைவிக்கும் பிறந்த கடைசி மகளுக்கு அவரது திருமணத்துக்கு பிறகு அவருக்கு உரிமையாக்க வேண்டும். இது எனது மனைவியின் கடைசி ஆசை. அதேபோல் எனது சுயசம்பாத்தியத்தில் வாங்கிய காலி மனையும், எனது 2வது மனைவியின் பெயரில் உள்ள காலி மனையும் எனக்கும், எனது 2வது மனைவிக்கும் பிறந்த இளைய மகனுக்கு உரிமையாக்க வேண்டும்.

இந்த உயிலை நிறைவேற்றும் பொறுப்பை எனக்கும், எனது 2வது மனைவிக்கும் பிறந்த மூத்த மகனிடம் ஒப்படைக்கிறேன். மேலும் இ ளைய மகனுக்கு வழங்கப்படும் சொத்துக்கு செல்வதற்கு தெருவில் இருந்து ஒரு மீட்டர் அகலப் பாதையை மேற்கு பக்கத்தில் ஏற்படுத்தி தர வேண்டும். பாகப் பிரிவினையில் சொல்லியபடி மூத்த மகன் பொறுப்பாளராக செயல்பட்டு நிறைவேற்றி தர வேணடும். எனது பெயரில் உள்ள சொத்தும், என் மனைவியின் பெயரில் உள்ள சொத்தும் என் சுய உழைப்பினால் சம்பாதித்த சொத்துகளாகும். என் ஆண் பிள்ளைகள் சம்பாதித்து கொடுத்த சொத்துகள் அல்ல.

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள்தான் டிபென்டென்ட்… பெண்கள் இன்டிபென்டென்ட்… !! (மகளிர் பக்கம்)
Next post ஆண் என்ன? பெண் என்ன?!! (அவ்வப்போது கிளாமர்)