மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி… !! (மருத்துவம்)

Read Time:8 Minute, 7 Second

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது குணமானால் மருந்துகள் தேவையில்லை’ என்பது மலர் மருத்துவத்தைக் கண்டுபிடித்த டாக்டர் எட்வர்ட் பாச்-சின் கருத்து.

“மலர்களின் சாறுகளிலிருந்து எடுக்கப்படும் இந்த மலர் மருந்துகள் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடியது. கவலை இல்லாத வாழ்க்கை எப்போது வாழ்கிறோமோ, அப்போது நம் உடல் உறுப்புகள் எல்லாம் சரியாகி ஆரோக்கியமாகிறது. அதற்கு மலர் மருத்துவம் உதவியாக இருக்கிறது” என்கிறார் மலர் மருத்துவ நிபுணர் கற்பக ஆனந்தி.

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயம், கோபம், பதற்றம், தனிமை உணர்வு, அதீத சிந்தனை, தோல்வி மனப்பான்மை, கவலை… போன்றவை ஆட்கொண்டு அவர்களது செயல்பாட்டில் தடையை ஏற்படுத்திவிடுகிறது. இது போன்ற மனது சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியது மலர் மருந்துகள். பூக்களை சுத்தமான நீரில் போட்டு வெயிலில் வைத்திருப்பதன் மூலம் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

அதன்பிறகு அந்த நீரை வடிகட்டி சில மருத்துவப் பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டால் அதுவே தாய்த்திரவமாகும். இந்த மருந்துதான் மனதில் நன்றாக வேலை செய்து உடல் நோய்களைப் போக்குகிறது. நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். ஒருவருக்கு மனநிலை மாறுபடும்போது உடல்நிலையும் மாறிவிடும். முக்கியமாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தேடித்தரும். நோயாளியின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகள் திரவமாகவும் மாத்திரைகளாகவும் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மனநோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் கைகொடுக்கும். மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள், நாள்பட்ட நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனதின் ஆற்றலை சீராக்க முடியாதபோது மலர் மருத்துவம் மனதில் ஆற்றலை சீராக்கி மனதின் மேலோட்டத்தில் உள்ள செயலை ஆழ்மனதில் கொண்டு சேர்க்கும் வேலையைச் செய்கிறது. இதுதான் மலர் மருத்துவம் செய்யும் அற்புதமான பணியாகும். இதனால் பல்வேறுவிதமான அரிய மாற்றங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன” என்று கூறும் கற்பக ஆனந்தி, இந்த மலர் மருத்துவத்தில் உள்ள மலர்களின் வகைகளும், பல வகை பிரச்னைகளுக்கு தீர்வு அளிப்பதாக கூறினார்.

‘‘ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு மருந்துள்ளது. நம்முடைய பிரச்னை என்னவோ அதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். ராக் ரோஸ், இம்பேடென்ஸ், கிளிமாடிஸ், ஸ்டார் ஆப் பெத்லெஹம் மற்றும் செர்ரி பிளம் போன்ற மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மை போன்றவற்றைப் போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் ஏற்படுத்தும். அதே போல் மன உளைச்சல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அக்ரிமனி என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நல்ல பலனை தரும். அதே போல் நல்ல உறக்கம், ரத்தத்தை சுத்திகரிக்க, சகிப்புத்தன்மை… என அனைத்து மனது சார்ந்த பிரச்னைகளுக்கு மலர் மருத்தவம் நல்ல பலனை அளிக்கும்’’ என்றவர், இந்த மருத்துவத்தின் வரலாற்றினை சுருக்கமாக சொன்னார்.

“இங்கிலாந்தை சேர்ந்த எட்வர்ட் பாச் என்பவர் அலோபதி மருத்துவர். ஹோமியோபதி மருத்துவமும் கற்றறிந்தவர். மனிதர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள்? அந்த கவலையைப் போக்க வழி இருக்கிறதா? என்ற கேள்விகள் சிறுவயதிலிருந்தே அவருக்குள் இருந்துள்ளது. 35 வயதில் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்று மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கை விரிக்கிறார்கள். அப்போதுதான் அவருக்கு நாமே மருத்துவராக இருந்துகொண்டு நம் உயிரைக் கூட காப்பாற முடியவில்லையே என்று விரக்தி ஏற்பட்டு சில காலம் தனிமையை நாடிச் செல்கிறார்.

அருகில் இருக்கும் காட்டில் டெண்ட் போட்டு ஓய்வு எடுக்கிறார். காட்டில் புல்தரையில் நடக்கும் போது மனது மிகவும் இலேசாகவும், சந்தோஷமாகவும் உணர்கிறார். இதில் ஏதோ இருக்கிறது என்று ஆராய்ச்சியில் இறங்கியவருக்கு, ‘எந்த ஒரு நோய்க்கும் மனமே காரணம்’ என்ற உண்மை புலப்பட்டது. மனதைச் சரி செய்தால் பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும் என்று உறுதியாக நம்பினார். மனதை சரி செய்யும் மருந்துகளைத் தேடி மலைகள், காடுகள் என அலைந்தார்.

மூலிகைகளையும் மலர்களையும் கொண்டு பரிசோதனைகள் செய்தார். ஒவ்வொரு மலர்களும் அவருள் சில மாற்றங்களை கொடுத்தது. 38 வகையான மலர் மருந்துகள் மனதை ஒழுங்குபடுத்த உதவியதாகக் கண்டுபிடித்து அவற்றை வரிசைப்படுத்தினார். மேலும், இந்த மலர் மருந்துகளை தனியாகவும் ஹோமியோபதி மருந்துகளுடன் சேர்த்தும் கொடுத்துப் பரிசோதித்து, முறைப்படுத்தினார்.

இன்றைக்கு உலகம் முழுவதும் இந்த மலர் மருத்துவம் பரவி ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்” என்று கூறும் கற்பக ஆனந்தி, மலர் மருத்துவம் பற்றி பல ஆலோசனைகளை, தனது யூ டியூப் சேனலில் வழங்குவதோடு, மலர் மருத்துவம் குறித்து உலகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகளும் எடுத்து வருகிறார். இதனோடு 150 மாணவர்களுக்கு ஓவிய வகுப்பும் எடுக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!! (மருத்துவம்)
Next post சேமிப்பு வழிகாட்டி-வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)