செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம் !! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 59 Second

மிகச் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்த படம் ‘ஜெய்பீம்’. படத்தில் பிரமிப்புக்குரிய விசயங்களில் ஒன்று மேக்கப். இதில் இடம்பெற்ற நடிகர், நடிகைகளின் ஸ்கின்டோனை இருளர் மக்கள்போலவே மாற்றி களத்தில் இறக்கியவர்களில் முக்கியமானவர் ஒப்பனைக் கலைஞர் முஹமது சலீம். சுருக்கமாய் சலீம். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனக்கென பெயரை உருவாக்கி வைத்திருப்பவர். 1999ல் வெளியான மலையாள மொழி படமான ‘வானபிரஸ்தம்’ படத்திற்காக சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர். அவரிடத்தில் பேசியதில்…

செங்கேணியாக நடித்த லிஜேமோல் ஏற்கனவே ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் அதர்வாவின் அக்காவாக நடித்தவர்தான். அவர் மலையாள நடிகை. அவரின் ஸ்கின்டோன் ஃபேராக இருக்கும். இருளர் மக்களில் ஒருவராய் அவரைக் கொண்டுவருவது எனக்கு சவாலாக இருந்தது. காதல் காட்சியில் ஆரம்பித்து.. 3 மாத கர்ப்பிணி.. 6 மாத கர்ப்பிணி.. நிறைமாதம்.. என நான்குவிதமான கெட்டப்புகளில் அவர் படத்தில் வருவார். அதிலும் கணவனுடன் காதல் முகம், கவலை தோய்ந்த முகம், காவல் நிலையத்தில் அடிவாங்கும் முகம், கணவனை பரிதவித்து தேடும் முகம், நீதிமன்றத்தில் நிர்கதியாய் நிற்கும் முகம், கணவனை இழந்து தத்தளிக்கும் துயர முகம் என நம்பகத்தன்மை வருகிற மாதிரி, சின்ன சின்ன வேரியேஷன்களை மனதில் வைத்தே செங்கேணியாக அவரை மாற்றி மேக்கப் போட்டுக் காட்டினோம்.

அதேபோலவே ஹீரோ மணிகண்டன் உடம்பையும் படாதபாடு படுத்தி மேக்கப் போட்டோம். அவரின் உடம்பு அழுக்காக இருப்பது மாதிரியும், உடல் முழுவதுமே காயமாக இருப்பது போன்றும் காட்ட ரொம்பவே மெனக்கெட்டு மேக்கப்பில் நுணுக்கங்களைக் கொண்டு வந்தோம். அவர் மிக நல்ல மனிதர். மேக்கப் விசயத்தில் என்னோடு நன்றாகவே ஒத்துழைப்புக் கொடுத்தார். படத்தில் எனக்கு வேறொரு சவாலும் இருந்தது. அது நடிகை சுபத்ரா. காவல் நிலையத்திற்குள் அடி வாங்கும் காட்சியில், அவர் நியூடாக இருப்பது மாதிரிக் காட்டுவதற்கு, டெக்னிக்கலாய் சில விசயங்களை செய்ததோடு, மேக்கப் மூலமாக அவர் பாடியில் நிறைய வொர்க் செய்தோம். மேக்கப் முடிந்து பார்க்க பெர்ஃபெக்டாக இருந்தது. ஆர்டிஸ்ட் கேரக்டரை உள்வாங்கி வெளிப்படுத்துவதுபோல், கேரக்டரை வெளிப்படுத்த மேக்கப்மேன் பங்கும் நிறையவே உண்டு’’ என்கிறார் அழுத்தமாக.

எல்லாமே இங்கு கிரியேட்டிவ்தான். கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மேக்கப் கலைஞரான பட்டனம் ரஷீதுதான் இந்தப் படத்தின் முதன்மை மேக்கப் கலைஞர். நான் அவரோடு நட்பு ரீதியாய் 40 ஆண்டுகளாகப் பயணிக்கிறேன். ஜெய்பீம் படத்திலும் அவருடனே இணைந்து பணியாற்றினேன். இந்த வாய்ப்பை அவர்தான் எனக்கு கொடுத்தார்.

1995ல் நடந்த உண்மைக் கதை என்பதால், அந்தச் சூழலை மேக்கப்பில் கொண்டு வருவதற்கான அனைத்து விசயத்தையும் கவனித்து கவனித்து மேக்கப்பில் கொண்டு வந்தோம். படம் ஆரம்பித்ததுமே முதல் லாக்டவுன் வந்தது. 8 மாதம் கழித்து மீண்டும் 2வது லாக்டவுன். இப்படியே 2 ஆண்டுகளாக லாக்டவுனில் சிக்கி படம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில் பலரின் தோற்றத்தில் மாற்றம் இருந்தது. முக்கியமாக மேக்கப்பில் ஸ்கின் டோன் கன்டினியூட்டி ரொம்ப முக்கியம். படப்பிடிப்பின் ஆரம்பத்தில் அவர்கள் இருந்த மாதிரியே ஸ்கின்டோனை அப்படியே கொண்டு வந்தோம்.

இரண்டு மணி நேரத்தில் பார்க்கும் ஒரு படத்தில் க்ளைமேக்ஸ் சீன் துவக்கத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம். துவக்கத்தில் எடுத்த சீன் படத்தில் இறுதிக் காட்சியாய் இருக்கலாம். ஆனால் ஷூட்டிங் முடியும்வரை கன்டினியூட்டி மாறாமல் மெயின்டெயின் செய்து மேக்கப்பில் கொடுக்க வேண்டும். அதற்கு ரொம்பவே மெனக்கெட்டோம். காலை 6 மணியில் இருந்தே மேக்கப் தொடங்கிவிடும். ஆர்டிஸ்ட் வரும்போது குளிச்சு ரெடியாகி ரொம்ப ப்ரஷ்ஷா வருவாங்க.

ஹீரோயின் ஹேர் வரும்போது சில்க்கியா ஷாஃப்டா இருக்கும். முடியினை அழுக்கா இருக்குற மாதிரியான கலருக்கு மாற்றி மேக்கப் போடுவோம். அதே போல் ஸ்கின்னும். மேக்கப் போடுவதைவிட அதை ரிமூவ் செய்வதும் கடினம்தான். குழந்தை நட்சத்திரம் ஜோஷிகா மாயாவில் தொடங்கி, இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மேக்கப்பில் பயங்கரமாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அதனால்தான் ஜெய்பீம் படத்தில் நடிகர், நடிகைகளின் மேக்கப் இந்த அளவு பேசப்பட்டது என முடித்தார்.

நாம் எதிர்பார்க்கும் விஷயத்தை திரையில் கொண்டு வருவதில் ஒப்பனைக் கலைஞர்களின் பங்கு பிரமிப்புதான். ஒரு படம் நல்ல படம் என்பதில் மேக்கப் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் மேக்கப்பிற்காகவே சலீம் என்கிற ஒப்பனைக் கலைஞனை நாம் மனதாரப் பாராட்டலாம்.

மேக்கப்மேன் பக்கங்கள்…

எனக்கு வயது 65. புகழ்பெற்ற பட்டணம் வைத்தியர் என் தாத்தா. அவரின் மகன்வழி வாரிசு நான். ஆனால் நான் மேக்கப் துறைக்குள் வந்துவிட்டேன்.1978ல் இருந்து சினிமாவில் மேக்கப் மேனாக இருக்கிறேன். ஏவிஎம்மின் ஆஸ்தான மேக்கப் மேன் முத்தப்பாவின் உதவியாளராகவே முதலில் நுழைந்தேன். 42 வருடம் ஓடிவிட்டது. முதல் படமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாருக்கு அருகே இருந்து அவருக்கு மேக்கப்போடும் வாய்ப்பாக அமைந்தது. அடுத்தது கேரளாவில் பிரேம்நஷீர் சார் படத்தில் மேக்கப் போடும் வாய்ப்பு. தொடர்ந்து நிறைய மலையாளப் படங்களில் வேலை செய்து மேக்கப் உள்ள நுணுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும், விரைவாக மேக்கப்போடும் வித்தையையும் கற்றுத் தேர்ந்தேன்.

கடந்த 25 ஆண்டுகளாக நடிகர் கமலஹாசன் மற்றும் மோகன்லாலுக்கு பர்சனல் மேக்கப் மேனாகவும் இருந்திருக்கிறேன். இதில் நடிகர் மோகன்லாலுக்கு 100 படத்திற்கு மேல் நான்தான் மேக்கப் மேன். நடிகர் கமலஹாசனுக்கு நாயகன், அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், பாபநாசம், தூங்காவனம் என அவரின் 45 படங்களுக்கு மேல் நான்தான் அவருக்கு மேக்கப் மேன். நடிகர் அஜித்துடன் பில்லா-2, விவேகம், வீரம் படங்களிலும் பணியாற்றியுள்ளேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேதனையை விலைக்கு வாங்கலாம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கோலமே… கோலமே…!! (மகளிர் பக்கம்)