சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 57 Second

சட்டம் என்பது வெறும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஆனால், இங்கே நிலைமையே வேறு. புரிந்து கொள்ள வேண்டியவர்களே, தெரிந்து மட்டும் வைத்திருக்கிறார்கள். ஒவ்ெவாரு குடிமகனும் சட்டத்தை மதிப்பது அவர்களின் கடமையாகும். ஒரு நாட்டின் இறையாண்மை என்பது சகல பாதுகாப்புடன் இருப்பதற்கு சட்டம் ஒரு முக்கிய காரணம். சட்டத்தை நம்ப வேண்டும்.

சட்டம் மூலமாகத்தான் நீதியைச் சென்றடைய முடியும். அதற்கான திறவுகோள் சட்டம் மட்டுமே. இவை அனைத்தையும் மனதில் கொண்டு பகுத்தறிவோடு சட்டத்தை அணுகவில்லை என்றால், அந்தச் சட்டமே நம்மை இருளில் தள்ளிவிடும். நாட்டின் இறையாண்மையை சுடுகாட்டில் புதைத்துவிடும். தன்னை நம்பினால் நீதி கிடைத்துவிடும் என்று நம்பியவர்களுக்கு துரோகம் இழைத்துவிடும். ஏனென்றால், சட்டம் எப்பொழுதும் நல்லதாகவே இருந்துவிடாது. ஒரு காலத்தில் ‘சதி’யும் சட்டமாகவே இருந்தது. அடிமைத்தனமும் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டவையாகவே இருந்தது. இவைகளை வரலாறு என்றுமே நமக்கு வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது.

மனிதன் தன்னுடைய தேவைக்கேற்ப அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கிறான். இதை தவறென்று சொல்லி விட முடியாது. சில கலாச்சாரக் காவலர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள். அவர்களை நாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றமே மனிதனின் பரிணாமத்திற்குகாரணம். இங்கே சட்டம் என்ற ஒன்று பரிணாமத்தின் விளைவாகவே கருதப்படுகிறது. மனித சமூகத்தின் தேவை மாறிக்கொண்டே இருக்கும், சட்டமும் அதுபோல தான். காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த மாற்றம் முற்போக்கான மாற்றமாக இருப்பது அவசியம்.

நிர்பயாவின் இழப்பிற்கு பிறகே, பல சட்டங்களைத் திருத்தியமைக்கும் எண்ணம் தோன்றியுள்ளது. ஒருவருடைய இழப்பு மட்டும்தான் சட்டங்களைத் திருத்தி அமைக்கவும், அதற்கேற்ப வழிமுறைகளையும் ஏற்படுத்தி கொடுக்க காரணமாக அமைகிறது. நீதியை நிலைநாட்ட மட்டும் இங்கே சட்டங்கள் போதாது. வலியோர்களின் உயிர், உரிமை மற்றும் உடமைகளின் இழப்பைத் தடுக்கவும், அவைகளை பாதுகாக்கவும் இங்கே சட்டங்கள் தேவைப்படுகிறது. அவ்வாறு சில சட்டங்கள் இருந்தும் அதை பற்றிய அறியாமை தான் இங்கே மேலோங்கி இருக்கிறது. விளைவு, இங்கே இன்னும் பல நிர்பயாக்கள் உயிருக்கும், உரிமைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

“பெண்கள் இந்த பிரபஞ்சத்தை தாங்கி நிற்கிறார்கள். ஆனால் சமத்துவம் என்று வரும் போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்று பெண் நீதிபதி லெய்லா சேத் கூறியுள்ளார். சமத்துவம் என்ற கருத்துக்கு அன்பு தேவைப்படுகிறது. மரியாதையில் இருந்து அன்பு பிறக்கும் போது நாம் பிறர் உணர்வுகள் மேல் வைத்திருக்கும் மரியாதையே அன்பாக மாறுகிறது.

தேசங்கள், மதங்கள், சாதி, இனம், பாலியல்… இவற்றுக்கு இடையேயான சமத்துவமின்மை, சமூக அடுக்கின் அனைத்து அடுக்குகளையும் களைத்த பின்னரும், பெண்களின் உரிமைகள் பற்றிய கேள்வி, கேள்வியாக மட்டுமே உள்ளது. ஜேர்மன் தத்துவஞானியும் சமூக விஞ்ஞானியுமான ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், ‘‘அடிமைத்தனத்தை ருசித்த முதல் மனிதர் பெண். அடிமைத்தனம் நிலவுவதற்கு முன்பே பெண் அடிமையாக இருந்தாள்” என்று கூறுகிறார். வாக்களிக்கும் உரிமை, வேலைவாய்ப்பு உரிமைகள், சொத்துரிமைகள், விவாகரத்து மற்றும் திருமணத்தை நிர்ணயிக்கும் உரிமைகள், குழந்தை பராமரிப்பு மற்றும் மருத்துவத்திற்கான உரிமைகள் இவை அனைத்தும் பெண்களின் சம உரிமைக்காக பெண்ணிய போராட்ட சட்டத்தின் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி, ராஜா ராம் மோகன் ராய் மற்றும் சாவித்ரிபாய் பூலே போன்ற தலைவர்கள் பெண்கள் தங்கள் வீடுகளையும் அடுப்புகளையும் விட்டு வெளியேறி சுதந்திரப் போராட்டத்தில் பொது வெளியில் நுழைய ஊக்கப்படுத்தினர். அதே சமயத்தில் தெனிந்தியாவில் மட்டும் பெரியார் என்றொருவர் ஊக்கப்படுத்துதலில் இருந்து ஒரு படி மேலே சென்று பெண்களின் உரிமைகளை சட்டங்களாக மாற்ற தொடங்கியிருந்தார். இங்கே பெண்களுக்கு எந்தெந்த இடங்களில் பெண்களே எதிரியாக இருந்தார்கள் என்பதை நன்கறிந்து பெண்களின் புரட்சிக்கு விதை வித்திட்டார். இந்தியாவில் முதல்முறையாக, பெண்கள், மனித வளத்தோடு ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கியிருந்தது.

பெண்களை பொது வெளியில் கொண்டு வருவதற்கு கல்வி, வாரிசுரிமை, விதவை மறுமணம் போன்ற பெண்களுக்கான அடிப்படை உரிமைகளில் சட்டரீதியான மாற்றங்கள் தேவைப்பட்டன. சுதந்திர இந்தியா காலத்தில் பெண்களின் உரிமைகளில் சட்டப்பூர்வ நிலைமை மாறியிருந்தாலும், இந்தியாவில் உலகமயமாக்கல், தாராளமயக் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பாய்ச்சல் போன்றவைகள் பெண்களின் தற்போதைய வாழ்வியலுக்கு பெரும் மாற்றங்களாகக் கருதப்படுகிறது.

இது பொதுத் துறையில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. முன்பை விட தற்போது பெண்கள் வணிக நிறுவனங்கள், சர்வதேச தளங்கள், விளம்பரம் மற்றும் ஃபேஷன் போன்ற பல வித தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லா துறையிலும் கால் பதித்து வரும் இன்றைய பெண்களின் நிலை என்ன? சட்ட அமைப்பு பெண்களுக்கான சமூக மாற்றத்துடன் இணைந்திருக்கிறதா? அரசமைப்பில் பெண்களுக்கான சமத்துவம் அல்லது சமத்துவத்திற்கான ஏற்பாடுகள் உள்ளதா? பெண்ணுரிமைகளுக்கு நீதிமன்றம் உத்தரவாதம் தர முடியுமா? சட்டத்தை பற்றிய இன்றைய பெண்களின் பார்வை என்ன? இது போன்று பெண்களை மையமாக கொண்ட சட்ட சீர்திருத்தங்கள், சமூக கட்டமைப்பில் அதன் கலாச்சார தாக்கம் குறித்து வரவிருக்கும் இதழ்களில் வழக்கறிஞர் அதா விளக்கமளிக்க இருக்கிறார். பெண்களுக்கான சட்டம் என்ற ஒளியை தேடி வரும் இதழ்களில் பயணிப்போம் தோழிகளே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யோகர்ட்டில் என்ன சிறப்பு?! (மருத்துவம்)
Next post கிச்சன் டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)