தென்னிந்தியத் திரையுலகின் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயலலிதா !! (மகளிர் பக்கம்)

Read Time:26 Minute, 17 Second

‘கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே…
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே…’

இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும்தோறும் ஒவ்வோராண்டும் புத்தாண்டில் இவ்வாறே நிகழ வேண்டும் என்ற பேராசையும் மனதுள் எழும். 1970 ஆம் ஆண்டில் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ’நூற்றுக்கு நூறு’ திரைப்படத்தில் பி.சுசீலாவின் இனிமையான குரலில் இடம் பெற்ற,

‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்…’

புத்தாண்டுக்கு மட்டும் ஒலி/ஒளி பரப்பும் பாடலாக இல்லாமல் இன்று வரை எப்போதும் எந்த நாளிலும் கேட்கப்படும் எவர்க்ரீன் பாடலாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் இப்பாடலுக்கு வாயசைத்து, ஆடி நடித்தவர் நடிகை விஜயலலிதா. இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிந்து கொள்ளாத ஒரு நடிகையும் கூட.

விஜயலலிதா மயக்கும் கண்களுக்கும் கவர்ச்சிகரமான சிரிப்புக்கும் சொந்தக்காரர். பல திரைப்படங்களில் கன்னத்தில் ஒரு சிறு மச்சத்துடன் தோன்றுவார். செயற்கையோ இயற்கையோ ஏதாயினும் அது அவருக்குக் கூடுதல் கவர்ச்சியையும் அழகையும் அள்ளித் தந்தது. பெரும்பாலான படங்களில் லேடி ஜேம்ஸ்பாண்ட், ரிவால்வார் ராணி, அதிரடி ஆக்‌ஷன் நாயகி என்றும் 1960 மற்றும் 70களில் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் அதிரடி நாயகியாக அறியப்பட்டவர். கூடவே மலையாளம் மற்றும் இந்தியிலும் கூட தன் பங்களிப்பைச் செலுத்தியவர்.

தென்னிந்தியத் திரையுலகம் இவரை லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று அழைத்துக் கொண்டாடியது. அனைத்து மொழிகளிலுமாக 860 திரைப்படங்களில் நடித்துக் குவித்திருக்கிறார். நடிப்புடன் நடனமும் சேர்ந்தே இவருக்குக் கை கொடுத்தது. பின்னாட்களில் நடிகை சில்க் ஸ்மிதா பெற்ற இடத்தையும் புகழையும் 60, 70களிலேயே ஓரளவு விஜயலலிதா எட்டிப் பிடித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாகத் தமிழில் ‘தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் நடிகர்’ என அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் நடித்த பல படங்களிலும் விஜயலலிதா பங்களிப்பு இருந்தது. பெரும்பான்மையான படங்களில் நடனம் ஆடும் வாய்ப்புகள் மட்டுமே விஜயலலிதாவுக்கு அளிக்கப்பட்டன. அதைப்போலவே பெரும்பான்மை வேடங்கள் வில்லி மற்றும் Vamp கதாபாத்திரங்கள். பின்னர் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களையும் ஏற்றுக் குறைவற நடித்தவர்.

நள்ளிரவில் கதவைத் தட்டிய சினிமா வாய்ப்புவிஜயலலிதா திரைப்படங்களில் நடிக்க வந்ததே கூட ஒரு தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் 1946 ஆம் ஆண்டில் பிறந்தவர் லலிதா. ஆம், அதுதான் அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர். சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஆர்வமும் பற்றும் லலிதாவுக்கு இருந்தது. மகளுக்கு நாட்டியம் கற்றுத் தர வேண்டும், மகள் நடிகை ஆக வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் அவருடைய அம்மாவுக்கு, இருந்தது. அதற்கேற்றாற் போல் லலிதா ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபோது 1953 ஆம் ஆண்டில் நாட்டியம் கற்பிக்கும் ஆசையுடன் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார்கள்.

பள்ளிப் படிப்புடன், நாட்டியத்தையும் பயின்றார் லலிதா. அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நிகழ்ந்தது. திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வந்ததெனில், இவருக்கோ பக்கத்து வீட்டுக்காரரின் வடிவில் நள்ளிரவில் வந்து கதவைத் தட்டிக் கையில் கொடுக்கப்பட்டது அதிர்ஷ்டம் அல்லாமல் வேறென்ன?

ஆம்! லலிதாவின் அடுத்த வீட்டுக்காரராக இருந்தவர் தெலுங்கின் பிரபல இயக்குநர் எஸ்.வி. லால். அப்போது அவர் இயக்கிக் கொண்டிருந்தது ‘பீம ஆஞ்சனேய யுத்தம்’ தெலுங்குத் திரைப்படம். அப்படத்தின் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு ரம்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய நடிகை திடீரென்று வராமல் போக, என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த இயக்குநருக்கு, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பள்ளி மாணவியான லலிதா நினைவுக்கு வர, எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நேரத்திலேயே வந்து கதவைத் தட்டியிருக்கிறார்.

கதவைத் திறந்தவர் லலிதாவின் தாயார். ஏற்கனவே மகளின் சினிமா கனவுகளில் இருந்த லலிதாவின் தாயாருக்கு, படத்தின் இயக்குநரே வந்து கதவைத் தட்டி, வாய்ப்பளிக்க முன் வந்தபோது அதைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் அந்த வாய்ப்பை மகள் லலிதா ஏற்பதற்கு மனமுவந்து முன் வந்தார். அதனால் அவரும் இயக்குநரின் வேண்டுகோளை மகளை ஏற்கச் செய்தார். லலிதாவின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அடுத்த நாள் முதல் படப்பிடிப்புத் தளங்களில் வலம் வரத் தொடங்கினார். அவரின் திடீர் திரையுலகப் பிரவேசம் வெற்றிகரமாகவே தொடங்கியது.

‘விஜய’ என்ற பெயரொட்டு வெற்றியைக் குறிப்பதாலும் அப்போதைய பல நடிகைகளின் பெயர்கள் விஜய என்ற முன் ஒட்டுடன் ஆரம்பிக்கும் வகையில் அமைந்திருந்ததாலும் அவ்வாறே லலிதாவுக்கும் இயக்குநர் விஜயலலிதா எனப் பெயர் சூட்டினார். Single Take Artist என்ற பெருமைக்குரியவர்1962ல் வெளியான ‘பீம ஆஞ்சநேய யுத்தம்’ ஆந்திராவில் கூட சரியாக ஓடவில்லை, என்றாலும் விஜயலலிதாவை திரையுலகம் மனமுவந்து ஏற்றுக் கொண்டது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

எந்தக் காட்சி என்றாலும் ஒரே டேக்கில் காட்சிகளை நடித்துக் கொடுத்ததால் Single Take Artist என்றும் தயாரிப்பாளர்களுக்குச் சிரமம் கொடுக்காத நடிகை என்ற நல்ல பெயரும் திரையுலகில் விஜயலலிதாவுக்கு கிடைத்தது. அதனாலேயே அவரைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தன. அது எந்த அளவுக்கு என்றால், 17 படங்கள் வரை வீட்டுக்குப் போகவும் கூட நேரம் இல்லாமல், இரவு பகல் என்று பாராமல் ஸ்டுடியோவே கதி என படப்பிடிப்புகளிலேயே மூழ்கிப் போகும் அளவுக்கு பிஸி ஷெட்யூல் நடிகையாக இருந்துள்ளார். சில நேரங்களில் விஜயலலிதாவின் தாயார் பொறுக்க முடியாமல் ஸ்டுடியோவுக்கே வந்து தன் மகளைப் பார்த்துக் கண் கலங்கிக் கடிந்து கொண்டு, காத்திருந்து மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு பிஸி நடிகையாக அவர் இருந்ததும் ஒரு பொற்காலம்.

1966ல் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் ‘சந்திரா’ என்ற பெயரில் கதாநாயகன் ஜெய்சங்கரின் தங்கையாக, குடும்பப் பாங்கான வேடத்தில் தமிழில் அறிமுகமானார் விஜயலலிதா. அறிமுகமானது தங்கை வேடம் என்றாலும் நல்லவேளையாக நாயகனின் தங்கையாகவே அவர் காலம் முழுதும் தொடரவில்லை என்பது பெரும் ஆறுதல். இந்தப் படம் அடுத்த ஆண்டிலேயே ‘ப்ரேமலோ பிரமாதம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் எடுக்கப்பட்டு வெளியானது. சிறு வயதிலிருந்தே சென்னை வாசியாகவே அவர் வளர்ந்ததாலும் பள்ளிப் படிப்பும் இங்கேயே என்பதாலும் தமிழ்ப் படங்களில் விஜயலலிதாவின் தமிழ் உச்சரிப்பு கொஞ்சமும் சோடை போகவில்லை.

குதிரைக்கும் விஜயலலிதாவுக்கும் உள்ள பந்தம் ‘லேடி ஜேம்ஸ்பாண்ட்’ நடிகை என அழைக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இருந்தன. குதிரையேற்றம், பைக் சவாரி செய்தல், ஃபைட்டிங் (Fighting) என அனைத்திலும் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். குதிரை ஏற்றத்தை முறையாகக் கற்றுக் கொண்டவரில்லை. மனதில் துணிச்சலும் தொழில் மீது அதீத பக்தியும் இருந்ததால் அது அவருக்கு எளிதாகக் கைகூடி வந்தது. குதிரைக்கும் விஜயலலிதாவுக்கும் இடையே பிரிக்க முடியாத அளவுக்கு நெருங்கிய பந்தம் உள்ளதோ என நினைக்கத் தோன்றும் அளவுக்குக் குதிரையுடன் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். விஜயலலிதாவை தங்கள் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போதே, தயாரிப்பாளர்கள் கூடவே குதிரையையும் சேர்த்தே ஒப்பந்தம் செய்து விடுவார்களாம். பழகிய குதிரை வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்திருக்கிறார்கள்.

மற்றொன்று, அந்த அளவுக்குக் குதிரைச்சவாரி செய்யக்கூடிய பாத்திரங்களை ஏராளமாகவும் அதே நேரம் அநாயாசமாகவும் செய்தவர் விஜயலலிதா. அதற்கான எந்தப் பயிற்சியையும் அவர் எடுத்துக் கொண்டவரில்லை. அனைத்தும் பழக்கத்திலேயே அவருக்குக் கை வந்தது. ‘சாந்தி நிலையம்’ படத்தில் குறைந்த நேரமே அவர் வந்தாலும் அந்தப் படத்திலும் கூட குதிரைச்சவாரி உண்டு. குதிரையில் அமர்ந்து கொண்டு, உடன் கதாநாயகன் ஜெமினி கணேசன் நடந்து வர, குதிரையை மெள்ள நடத்தியவாறே நடித்திருப்பார்.

உண்மையில் விஜயலலிதா குதிரைப்பயிற்சி பெற உதவியவரும் ஜெமினி கணேசன் தான். ‘சாந்தி நிலையம்’ படப்பிடிப்பின் போதுதான் அந்த ஆலோசனையை ஜெமினி அவரிடம் கூறியிருக்கிறார். வெறுமனே வாய் வார்த்தையாக ஆலோசனை சொல்வதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், கிண்டி ரேஸ் கோர்ஸில் விஜயலலிதாவின் குதிரையேற்றப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் பின்னரே முறையாகப் பயிற்சியைப் பெற்றிருக்கிறார் விஜயலலிதா. அதனை மறக்காமல் நன்றியுடன் பல இடங்களில் இதுபற்றிக் குறிப்பிடவும் செய்துள்ளார்.

படப்பிடிப்புக்காக ஒருமுறை குதிரையில் ஏறி விட்டார் என்றால் படப்பிடிப்பு இடைவேளைகளில் கூட குதிரையை விட்டுக் கீழே இறங்காமல், குதிரையின் மீது அமர்ந்தவாறே சாப்பிடுவது, தேநீர் அருந்துவது, ஓய்வெடுப்பது என்பதையும் அவர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அந்த அளவுக்குக் குதிரை மீது பற்றும் பாசமும் அவருக்கு இருந்துள்ளது. குதிரையும் கூட அவரை நேசித்துள்ளது.

தமிழில் அவரின் மறக்க முடியாத பங்களிப்பு ஆங்கிலோ – இந்தியப் பெண் ஸ்டெல்லாவாக, ’நூற்றுக்கு நூறு’ படத்தின் நாயகிகள் பலரில் ஒருவராக, சற்றே வில்லத்தனம் எட்டிப் பார்த்தாலும் ரசிகர்கள் கழிவிரக்கம் கொள்ளும் அளவுக்கு ஒரு பாவப்பட்டப் பெண்ணாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் அவருடையது. படத்தின் கதையில் சில பல அதிர்ச்சித் திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம். விஜயலலிதாவின் திரை வாழ்க்கையில் இந்தப் பாத்திரமும் அதில் அவருக்கான பாடல் காட்சியும் என்றும் மறக்க முடியாததாகும். தொலைக்காட்சி சானல்களில் அடிக்கடி ஒளிபரப்பப்படும் படம் இது.

கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘எதிரொலி’ படத்தில் வில்லனுக்கு (மேஜர் சுந்தர்ராஜன்) ஜோடி என்றாலும், நாயகன் (சிவாஜி கணேசன்) மீது பக்தியும் மரியாதையும் கொண்டு, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் தன் காதலனை சுட்டுக் கொல்லும் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழின் முன்னணி நாயகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அனைவருடனும் நடித்தவர். எம்.ஜி.ஆருடன் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், சிவாஜி கணேசன், ஜெய்சங்கருடன் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

அதேபோலவே நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் கதாநாயகியாகப் ‘பத்தாம்பசலி’, ‘தேன் கிண்ணம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலசந்தரின் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடைய இயக்கத்தில் வெளியான ‘பத்தாம்பசலி’ யில்தான் முதன்முதலாகக் கதாநாயகியாகவும் அவர் நடித்தார். நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜி தான் தயாரித்த பெரும்பாலான படங்களில் இவரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்களிலும் விஜயலலிதாவின் பங்களிப்பு அதிகம்.

1976க்குப் பின் இவருக்குப் படங்கள் அதிகம் இல்லாமல் போனது பெரும் குறையே. அடுத்த தலைமுறை நடிகைகள் களத்தில் இறங்கியதும் கூட அதற்குக் காரணம். மீண்டும் 80களில் ‘செந்தூரப்பூவே’ மற்றும் 1990ல் ‘அதிசயப்பிறவி’ என சில தமிழ்ப்படங்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அதையும் சிறப்பாகவே செய்தார். அதன் பின் பெரிதாகத் தமிழில் வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலை உருவானது.

கிளாஸிக் எவர்க்ரீன் ஆடல், பாடல்களின் நாயகிமுக்கியமாக விஜயலலிதா நடித்த மறக்க முடியாத சில பாடல்களைக் குறிப்பிட்டேயாக வேண்டும். ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் இவர் பாடி நடித்த ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ ஒரு கிளாஸிக் எவர்க்ரீன் பாடல். இதன் மூலம் ஒரு ஆங்கிலப் பாடல் என்றபோதும், இந்தியில் வெளி வந்திருந்தாலும் தமிழில் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற பாடல் இது. ரேடியோவில் இந்தப் பாடல் ஒலிக்காத நாளில்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கேட்கும்போதும் அத்தனை சுகமான அனுபவம். வேதாவின் இசையமைப்பும் கிறங்க வைக்கும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலும் பெரும் வரப்பிரசாதம் என்றால் கொஞ்சமும் மிகையில்லை.

அந்த அழகிய கண்களும் புன்சிரிப்பும் தரையைத் தொடும் நீள இறுக்கமான கவுனுடன் அவர் ஆடிப் பாடும் அந்தக் காட்சியும் எப்போதும் நம் மனதில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.
‘சொர்க்கம்’ படத்தில் சிவாஜி கணேசனுடன் ஆடிப் பாடும் ‘பொன்மகள் வந்தாள்’ பாடல், ரீமேக் என்ற பெயரில் குதறப்பட்டபோதும் கூட இதன் அசல் வடிவம்
இன்றுவரை நிலைத்து நிற்கிறது. இப்பாடலின் காட்சி அமைப்பும், ஜொலிக்கும் வைரம் போன்ற உடைகள், மற்றும் தங்க பிஸ்கட், ரூபாய் நோட்டு வடிவிலான உடைகளும், விஜயலலிதாவின் சுறுசுறுப்பான நடனமும் கூட விஜயலலிதாவைப் போலவே என்றென்றும் மறக்க முடியாதவை.

மற்றொரு பாடல் மேலே குறிப்பிட்ட ‘நூற்றுக்கு நூறு’ படப் பாடல். விஜயலலிதா ஆடிப் பாடி நடித்த பிரபலமான பல படங்களின் பாடல்களில் இப்பாடலும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. காட்சியமைப்போடு ஒத்துப் போகும் ஒரு பாடலும் கூட.நாகேஷுடன் பாடும் ‘தேன்கிண்ணம்’ படத்தில் ’நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என பழைய பாடல்கள் பலவும் ஒன்றிணைந்த கலவைப் பாடலும் கூட நகைச்சுவை இழையோட உருவாக்கப்பட்ட பாடலே…

தாய் மொழிக்குச் செய்த பங்களிப்பு

தெலுங்கு அவரின் தாய்மொழி என்பதால் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, ஷோபன்பாபு, ஜக்கையா, ராமகிருஷ்ணா என அப்போதைய பிரபல நாயகர்கள் அனைவருடனும் பங்காற்றியிருக்கிறார். ‘மாயாஜாலப் பட மன்னன்’ என அறியப்பட்ட விட்டலாச்சார்யா இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கின் முதல் ‘கௌபாய்’ பாணியிலான ‘ரவுடி ராணி’ படத்தின் நாயகியான கௌபாய் உடைகளுடன் தோன்றி நடித்தார்.

அதன், இதே பாணியில் வெளியான பல படங்களிலும் கூட இவரே நாயகி. இப்போது குறிப்பிடப்படுவதைப் போல ‘ஐட்டம் சாங்க்ஸ்’ என்றில்லாமல் அப்போது ‘சோலோ சாங்க்ஸ்’ என்ற நடனப் பாடல் காட்சிகளிலும் ஏராளம் நடித்துள்ளார். அத்தகைய பாடல் காட்சிகளில் அவருக்கு முன்னோடியான ஜோதிலட்சுமி, அவருக்குப் பின் நடிக்க வந்த ஜெயமாலினி இருவருடனும் இணைந்தும் பல படங்களில் நடனம் ஆடியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்தியவர்

ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் தெலுங்கில் தயாரிப்பாளராக இரண்டு படங்களையும் சொந்தமாகத் தயாரித்துள்ளார். இவரது முதல் தயாரிப்பான ‘தேவுடு மாவய்யா’ கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியானது. ஆனால் சரிவர மக்களைச் சென்றடையாமல் தோல்விப் படமானது. இரண்டாவது தயாரிப்பான ‘ஆடதானி சவால்’ நன்றாக ஓடி நல்ல வருமானம் ஈட்டிக் கொடுத்தது. இப்படத்தில்தான் நடிகை விஜயசாந்தி அறிமுகமானார்.

அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயலலிதாவையே சாரும். மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், விஜயசாந்தி இவருடைய மிக நெருங்கிய உறவினர், உடன்பிறந்த மூத்த சகோதரியின் மகள் என்பது. பின்னாளில் தன் சித்தி விஜயலலிதாவின் அடியொற்றி விஜயசாந்தியும் அடிதடி, ஸ்டண்ட் படங்களில் நடித்து சித்தியைப் போலவே அதிரடி நடிகையாகப் பேரும் புகழும் பெற்று ஆந்திராவையே கலங்கடித்து அவரையும் தாண்டி ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பிரபலமானார்.

சிரஞ்சீவிகளாய் நம் மனங்களில் தங்கியவர்கள் கலைஞர்கள்

தன் காலம் முழுதும் ஆடியும் நடித்தும் வந்தவர், நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த சிவபிரசாத் என்ற தொழிலதிபரைக் காதலித்து 1994 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு ஹ்ருதய் சாய் என்ற ஒரு மகன் இருக்கிறார். தற்போது அவர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறார். விஜயலலிதா திருமணத்துக்குப் பின் முற்றிலும் சினிமாவை விட்டு ஒதுங்கி வீடு, குடும்பம், கணவர், மகன் என தன் வட்டத்தைச் சுருக்கிக் கொண்டு விட்டார்.

ஏ.வி.எம். போன்ற பெரும் நிறுவனத்திலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்காக வந்த அழைப்புகளை எல்லாம் கூட முற்றிலும் புறக்கணித்து விட்டார். ஆந்திராவிலிருந்து ஏழு வயதில் சென்னைக்குக் குடி பெயர்ந்தவர் இப்போது வரை சென்னை வாசியாகவே நம்முடன் தொடர்கிறார். நாம் அன்றைக்குத் திரையில் பார்த்த கலைஞர்களுக்கு வயதாகலாம். ஆனால், சிரஞ்சீவிகளாக நம் மனங்களில் அவர்கள் என்றென்றும் தங்கியிருக்கிறார்கள். ரசிக மனங்களில் விஜயலலிதாவும் குடியிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விஜயலலிதா நடித்த படங்கள்

காட்டு மைனா, காதல் படுத்தும் பாடு, வல்லவன் ஒருவன், பட்டணத்தில் பூதம்,. பக்தப் பிரகலாதா, எதிரிகள் ஜாக்கிரதை, நீலகிரி எக்ஸ்பிரஸ், காதல் வாகனம், நேர்வழி, அக்கா தங்கை, அஞ்சல் பெட்டி 520, சாந்தி நிலையம், நில் கவனி காதலி, திருடன், சொர்க்கம், ரிவால்வார் ரீட்டா, பத்தாம்பசலி, நம்ம வீட்டு தெய்வம், காலம் வெல்லும், கல்யாண ஊர்வலம், எதிரொலி, மீண்டும் வாழ்வேன், தேன் கிண்ணம், நூற்றுக்கு நூறு, நான்கு சுவர்கள், கன் ஃபைட் காஞ்சனா, ஹலோ பார்ட்னர், சவாலுக்கு சவால், கண்ணன் வருவான், மாப்பிள்ளை அழைப்பு, டெல்லி டு மெட்ராஸ், என்ன முதலாளி சௌக்கியமா?, கை நிறைய காசு, ஹோட்டல் சொர்க்கம், ஜெய் பாலாஜி, உங்களில் ஒருத்தி, சுப்ரபாதம், நல்லதொரு குடும்பம், சி.ஐ.டி. விஜயா, துணிச்சல்காரி, விஷக்கன்னி, செந்தூரப்பூவே, அதிசயப்பிறவி, வள்ளி வரப் போறா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்)
Next post நம் விரல்கள் மீண்டும் பேனாவினை பிடிக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)