ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்!! (கட்டுரை)

Read Time:13 Minute, 58 Second

உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன.

போர் முடிவுக்கு வந்த பிறகு வெற்றிக் கதைகளும் தோல்விக் கதைகளும் மிஞ்சுகின்றன. ஒரு தரப்பு வெற்றியைக் கொண்டாடுகின்றது; மற்றைய தரப்பு தோல்வியில் துவண்டுபோகின்றது. வரலாறு இதனைப் பதிவு செய்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகின்றது.

ஆனால், போரில் ஈடுபடும் எந்தத் தரப்பினாலும் கண்டுகொள்ளப்படாத, உலகம் பேசாத ஒரு கதை இருக்கின்றது. அதுதான் சம்பந்தப்பட்ட இரு நாடுகள் அல்லது தரப்புகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய கதையாகும். இது இரு தரப்புக்கும் பொதுவானதாக இருக்கும்.

பாதுகாப்புக் கேடயம் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து கொண்டு கட்டளையிடுவதோ, போர்ப் பிரகடனம் செய்வதோ ஓர் அசட்டுத் துணிச்சலே தவிர, இது வீரத்தனம் அல்ல.

அதுபோல யுத்தத்தில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அல்லது நெடுங்காலத்திற்குப் பிறகு சமரசமாகிப் போனாலும் ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படப் போவதும் இல்லை. ஆனால், நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள்தான், மீதமுள்ள வரலாறு நெடுகிலும் இழப்புகளையும் வடுக்களையும் சுமக்கின்றார்கள்.

உலக மகா யுத்தங்கள் தொடக்கம், இரு நாடுகளுக்கு இடையிலான சண்டைகள் தொட்டு, இலங்கை போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் வரை இதுதான் யதார்த்தமாகும். இப்போது உக்ரேனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போர் நடவடிக்கையின் எச்சமும் இதுவாகத்தான் இருக்கப் போகின்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இன்னுமொரு யுத்தம் நடைபெறக் கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவாக்கப்பட்டதாக சொல்கின்றார்கள் அப்படியென்றால், அந்த இலக்கு பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இவ்விடத்தில் எழுகின்றது.

மூன்றாம் உலக மகா யுத்தம் என்று ஒன்று இதுவரை நடைபெறவில்லை என்றாலும், 3ஆவது உலகப் போராக பிரகடனப்படுத்தப்படாத எத்தனையோ யுத்தங்கள் கடந்த 50 வருடங்களில் நடந்தேறி விட்டன. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது, பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான போர், உள்நாட்டு யுத்தம் என ஏகப்பட்ட யுத்தங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏன், ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் ‘சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான யுத்தம்’ என்ற தோரணையில் உலக பொலிஸ்காரர்களின் ஆதரவுடனான மனிதகுல அழிப்புகளும் நடந்தேறியிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவியலாது.
வளைகுடா யுத்தம், ஆப்கான், ஈராக், டர்புர், சிரியா, செச்னியா, ஈராக், லிபியா, காஷ்மீர் கொங்கோ யுத்தங்கள் தொடங்கி, இலங்கை போன்ற உள்நாட்டு போர்கள் என எண்ணிலடங்கா யுத்தங்களைப் பட்டியலிட முடியும்.

இந்த யுத்தங்களால் ஆன பலன் என்ன? குண்டுகளுக்கும் பீரங்கிகளுக்கும் பயந்து மக்கள் ஓடினார்கள். பலர் நாட்டை விட்டே ஓடித் தப்பினார்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். அதே அளவுக்கு இராணுவ வீரர்களும் கிளர்ச்சியாளர்களும் பலியெடுக்கப்பட்டார்கள். அந்தந்த நாடுகளில் நினைத்துப் பார்க்க முடியாத பௌதீக அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மக்கள்தான் இந்த இழப்புகளை எல்லாம் கடைசியில் தாங்கிக் கொள்கின்றனர் . இப்போது இந்தப் பட்டியலில் உக்ரேனும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல நாடுகளும் இணையலாம்.

சோவியத் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன், பின்னர் அதிலிருந்து விலகி தனிநாடாக பிரகடனம் செய்தது. குறிப்பாக, ரஷ்யாவுடனான சமரசத்தைப் பேணுவதற்காக உக்ரேன் பல விட்டுக் கொடுப்புகளை பல வருடங்களுக்கு முன்னர் செய்திருந்தது.

மீண்டும் உக்ரேனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக புட்டின் அரசாங்கம், உக்ரேன் மீது போர் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. பதிலுக்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் அறைகூவல் விடுத்திருக்கின்றார். அழிவுகள் பாரதூரமானவையாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.

கிழக்கு ஐரோப்பிய நாடொன்றின் மீதான ரஷ்யாவின் திடீர் படையெடுப்பு, ஏனைய ஐரோப்பிய நாடுகளை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவே கூறப்படுகின்றது. இதனால் பல நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவளிக்க பச்சைக் கொடி காட்டியுள்ளன.
ரஷ்யாவால் தமது நாடுகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பை, உக்ரேனின் தலைநகரில் நின்றுகொண்டு எதிர்த்தாடுவதற்கு இந்த நாடுகள் முயற்சி செய்கின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நிலை நீடித்தால், 1980களில் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்கா உதவியது போல உக்ரேனிய படைகளுக்கு மேற்கத்தேய நாடுகள் உதவலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. அப்படி நடந்தால், இது இன்னுமோர் உலக மகா யுத்தத்துக்கு இட்டுச் செல்லலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

போர் இடம்பெறும் பூமிகளில் மக்கள் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு ஓடும் காட்சியை, உலகம் எத்தனையோ முறை பார்த்திருக்கின்றது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இருநாடுகளுக்கு இடையிலானது அல்ல; என்றாலும், அந்த அவலக் காட்சிகள் இன்னும் மறக்கவில்லை.

இப்போது மீண்டும் உக்ரேனிய மக்கள் உயிருக்கு அஞ்சி ஓடுகின்ற காட்சிகளும் இருநாடுகளின் படை வீரர்களும் வீதிகளில் குவியலாக செத்துக் கிடக்கின்ற காட்சிகளும் ஒளிப்படங்களாக வந்தவண்ணம் இருக்கின்றன. உக்ரேனில் மட்டுமன்றி, ரஷ்யா மற்றுமுள்ள அயல்நாட்டு மக்களிடையேயும் இது பெரும் பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தத்தின் வெற்றிகள் தலைவர்களுக்கு ‘மார்தட்டும் பெருமிதங்களாக மாறலாம். நாடுகளில் ஆட்புல எல்லைகளை அதிகரிக்கலாம். இராணுவமும் ஆட்சியும் காலூன்ற வழிவகுக்கலாம். மறுதரப்பிற்கு அது ஒரு யுத்த தோல்வியாக மட்டும் அமையலாம்.
அரசியல் தலைவர்களும் இராணுவத் தளபதிகளும் வெற்றியைக் கொண்டாடிவிட்டுப் போய்விடுவர்கள். அல்லது தோல்விக்கான காரணத்தை கூறி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். ஆனால், சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு போரின் இழப்புகள், வடுக்கள், பாரதூரமானவை. அது தரும் காயமும் வலியும் என்றும் ஆறாதவை. உண்மையில், யுத்தத்திற்கான விலையையும் அதற்கான இழப்பீட்டையும் மக்கள்தான் தாங்கிக் கொள்கின்றார்கள்.

படைத் தரப்பை பொறுத்தமட்டில், ஒரு யுத்தத்தில் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் கொல்லப்படுகின்றார்கள்; ஊனமடைகின்றனர். இதனால் அவரது குடும்பம் என்கின்ற மக்கள் பிரிவு நிர்க்கதியாகின்றது. பாராட்டுப் பத்திரமும் ‘வீரன்’ என்ற கௌரவமும் பெறுமதியானவைதான். ஆனால், அவையெல்லாம் அவரது தாயின், மனைவியின், பிள்ளைகளின் மனக் கவலைக்கு தீர்வாகப் போவதில்லை. வெளியே பெருமையடித்தலும் உள்ளே புழுங்கி அழுவதுமான விதியுடன்… இப்பேற்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள் உலகில் உள்ளன.

இரு தரப்புக்கு இடையிலான சண்டையில் இவ்விவகாரத்துடன் அறவே சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் பல இலட்சக்கணக்கில் பலியெடுக்கப்படுகின்றார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள். இதனால் அனாதைகளும் விதவைகளும் குடும்பத் தலைவனில்லாத குடும்பங்களும் உருவாகின்றன.

போரின் வெற்றியோ தோல்வியோ அல்லது யுத்தக்குற்ற விசாரணைகளோ ஒருபேச்சுக்கு ஆறுதலாக அமையலாமே தவிர, நிஜத்தில் உயிரிழந்த கணவனின், தந்தையின், பிள்ளையின் இடத்தை அவை எதுவும் நிரப்பப் போவதில்லை. உலகப் போர் தொடங்கி இலங்கையின் உள்ளக யுத்தம் வரை எல்லாவற்றினது பெறுபேறும் இதுதான்.
உக்ரேனும் சிலவேளை ரஷ்யாவும் கூட அந்த வழித்தடத்தில்தான் தற்போது பயணிக்கத் தொடங்கியுள்ளது. உண்மைகளைப் போலவே, மனிதர்கள் கொல்லப்படும் செய்திகள் இனி மலிந்து விடும்.

ஓர் இராணுவ ஆட்சியாளரைப் போல புட்டின், நகர்வுகளைச் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரேன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆயினும், சமரசம் செய்ய முயற்சிப்போரை விட வழக்கம்போல உசுப்பேற்றும் நாடுகளே அதிகமாக தெரிகின்றன.

இந்தப் பின்னணியில், ரஷ்ய – உக்ரேன் மோதலில் அவ்விரு நாடுகளின் விருப்பு வெறுப்புக்கள் மட்டுமன்றி, உலக அரசியலும் ஆயுத வியாபாரமும் புகுந்து விளையாடும். குறிப்பாக, உக்ரேனைப் பயன்படுத்தி சில ஐரோப்பிய, மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவை எதிர்த்தாட முற்படும்.

இவை எல்லாவற்றுக்குமான விலையை உக்ரேனிய மக்களே செலுத்துவார்கள். இழப்புக்களையும் இரு தரப்பிலும் உள்ள மக்களே தாங்கிக் கொள்வார்கள். இந்த உலக ஒழுங்கில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.
ஒருவேளை, இன்னும் ஐந்து நாட்களில் இந்த யுத்த மேகம் கலைந்தாலும், அல்லது, 5 வருடங்களின் பின்னரே முடிவுக்கு வந்தாலும், இதன் வடுக்கள் இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகும் இருக்கத்தான் போகின்றது.

‘விளாதிமிர்கள்;’ மற்றும் ‘வொலோடிமிர்களின்’ பேரப் பிள்ளைகளும் இந்த இழப்புகளின் வலியை அனுபவிப்பார்கள். ஆனால், பிரகடனப்படுத்தப்படாத நவீன ஹிட்லர்களுக்கும், முசோலினிகளுக்கும் யுத்தத்தை புதினம் பார்க்கின்ற பலம்பொருந்திய சக்திகளுக்கும் இது எங்கே விளங்கப் போகின்றது?!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடாமுயற்சிக்கு கிடைத்த அழகி கிரீடம்!! (மகளிர் பக்கம்)
Next post சிறுகதை -நெருஞ்சி முள்!! (மகளிர் பக்கம்)