நொச்சி வளர்த்தால் நூறு நன்மை! (மருத்துவம்)

Read Time:9 Minute, 39 Second

‘மூக்கு அடைத்துக் கொண்டதா… நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்…’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா… கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே…’,  ‘கொசுவை விரட்ட வேண்டுமா… வீட்டில் நொச்சி வளருங்கள்’ – என நொச்சி பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம். நொச்சியில் அப்படி என்ன சிறப்பு?

பொதுவாக நீர்நிலைகளுக்கு அருகாமையில் இருக்கிற 3 இலைகளைக் கொண்ட நீர்நொச்சி, 5 இலைகளைக் கொண்ட நொச்சி, கரிய நிற இலைகளைக் கொண்ட நொச்சி ஆகிய வகைகள் காணப்படுகின்றன. மூன்றாம் வகையான கருப்பு இலைகளைக் கொண்ட நொச்சி வேறு இனத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் கரு நொச்சி என்றே அழைக்கப்படுகிறது.

தமிழில் ‘நொச்சி’ என்று சொல்கிற இந்த தாவரம் Vitex negundo என்று தாவரவியலில் குறிப்பிடப்படுகிறது. நொச்சி இலை தொடர்புடைய நீல நொச்சி Vitex agnas-castus என்ற பெயரில் இருக்கிற மற்றொரு தாவரமாகும். நொச்சி குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு தாவரங்களும் ஒரு சிறப்பான நறுமண எண்ணெயைத் தத்தம் இலைகளில் கொண்டிருக்கும். நொச்சியில் இருக்கிற இந்த நறுமண எண்ணெய் நம்முடைய சுவாசப் பாதையில் இருக்கிற சளி கடினப்பட்டு விடாமல் அதனை நெகிழ்த்தி, கிருமிகளையும் கொன்று அதன் மூலமாக சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

இதற்காகவே சுவாசம் எளிதாக வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம் என்று சொல்கிறார்கள். முதியவர்களுக்குக் கொஞ்சம் துளசி இலை மற்றும் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தல் உதவியாய் இருக்கும். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் வெப்பம் அளித்தல் என்பதும் முக்கியமான ஒரு முறை. அதாவது உடலில் இருந்து வியர்வையை ஏற்படுத்துகிற நிலை. உடலில் சேரும் வேண்டாத அசுத்தங்களை வெளியேற்றுவதற்கு, உடலை எளிதாக ஆக்குவதற்கு இது உதவும். கிருமிகள், வேண்டாத அசுத்தங்கள், எண்ணெய் பசையினால் ஏற்படும் கரும் புள்ளிகளைத் தவிர்ப்பதற்கும் நொச்சியில் இருக்கிற நறுமண எண்ணெய் உதவுகிறது.

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அகற்றுவதற்கும் தோலில் இருக்கிற எண்ணெய் பசையைத் தவிர்ப்பதற்கும் முகத்திற்கு ஆவி பிடிப்பது உதவும். ஒரு மூட்டில் வலி வீக்கம் இருக்கிறபோது, அது நீர் கோர்த்ததால் உருவான வீக்கமாக இருந்தால் மூட்டில் மட்டும் இந்த வேர்வை சிகிச்சை அளிக்கலாம். மூக்கடைப்பு இருந்தால் அதற்கு சுவாசப்பாதை சரியாக நொச்சி இலை ஆவியை சுவாசிப்பதும் தீர்வாக அமையும். ஒத்தடம் கொடுப்பதற்கும் மசாஜ் செய்வதற்கும் நொச்சியிலையை ஒரு கட்டி பயன்படுத்துவது சித்த, ஆயுர்வேதத்தில் இருக்கிற ஒரு வழிமுறை.

இதனை பொட்டனம் என்றும் ‘இலைகிழி’ என்றும் அழைப்பார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிற ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நொச்சி இலை மற்றும் மிளகை ஒரு மாத்திரையாக உருட்டி, வைரஸால் ஏற்படும் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு முதல் மருந்தாக தருகின்றனர். இந்தியாவிலும் இம்மாத்திரை வீக்கம், வலி போக்குவதற்கு உள்ளுக்கு சாப்பிடும் மருந்தாக, ஆயுர்வேத சித்த மருந்துகளில் முக்கிய பங்காற்றுகிறது. இதனை வெளிப்பிரயோகமாக மட்டும் பயன்படுத்தாமல் மாத்திரைகளுக்கும் பயன்படுத்துவது வழக்கத்தில் இருக்கிறது.

சித்த மருத்துவத்தில் நொச்சித் தைலத்தை மூக்கடைப்பிற்கும், தலைவலிக்கும், மூட்டுவலிக்கும் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தும் முறை இன்றைக்கும் இருக்கிறது. பொதுவாக எந்த வகை தாவரமாக இருந்தாலும் அதில் நறுமண எண்ணெய் இருக்கிறது. அது பெரும்பாலும் கிருமிகளைக் கொல்லக் கூடிய சக்தியும் குருதிச் சுற்றோட்டத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டு இருக்கும். இந்த காரணத்தால் சிறு காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பகுதியில் மிக அதிகமான குருதிச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தி வீக்கம், வலி குறைவதற்கு ஆதாரமாய் இருக்கும்.

இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதனால் நொச்சி ஒரு வீக்கமுறுக்கியாக, வலி நிவாரணியாக, உடல் அசைவுகளை, மூட்டுக்களின் அசைவுகளை கட்டுப்படுத்துகிற தன்மையிலிருந்து விடுவிப்பதாக தசைகளில் ஏற்படுகிற விறைப்பு நீக்கியாக பயன்படுகிறது. பிண்ட சுவேதனம் என்பது உடல் முழுவதும் வேர்வை ஏற்படுத்துகிற வழிமுறை. உடல் முழுவதும் இருக்கிற வேண்டாத அசுத்தங்களை, குறிப்பாக தோல் பகுதிகளில் சேர்கிற நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்காக உடல் முழுமைக்கும் வேது பிடித்தல் முக்கிய பழக்கமாக இருக்கிறது.

நொச்சியிலையை நீரில் கொதிக்க வைத்து. ஓர் அறையில் உட்கார வைத்து வேது பிடித்தல் செய்யப்படுகிறது. உடல் முழுவதற்கும் தரப்படும் இந்த சிகிச்சை முறைக்கு ‘பிண்ட சுவேதனம்’ என்று பெயர். பிண்ட சுவேதனம் சிகிச்சையை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்கிறபோது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த அறைக்குள் நேரடியாக போய் உட்காரும் நேரத்தை மிகக் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த உறைதலைத் தவிர்க்கும் மாத்திரைகளை உட்கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீல நொச்சி கருப்பை நோய்களுக்கு சிறந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் இச்செடியில் மலர்கள் பூக்கும்போது கொத்துக்கொத்தாக அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் பூத்திருக்கும். இந்த பூக்களில் உற்பத்தியாகிற தேனுக்கு உடல் வலியை, வீக்கத்தைப் போக்குகிற தன்மை உண்டு. ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரக்கூடிய நொச்சி, பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். மிக எளிதாக வளரும். வெளிப்பயிராக வளர்க்கலாம்.

கொசுவை விரட்டும் நொச்சி

இன்று கொசுக்கள் காரணமாக ஏற்படும் டெங்கு உள்ளிட்ட பல நோய்களும் நமக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதற்கு நொச்சி சரியான நிவாரணமாக இருக்கும். இந்த நறுமண வாசனை காரணமாக கொசுக்கள் வீட்டைச்சுற்றி அண்டாது. நொச்சி கொசுக்களை ஒழிப்பது இல்லை. இருக்கும் இடத்தில் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் மழைக்காலங்களில் நொச்சியில் உள்ள நறுமண அளவு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அந்த மழை பருவத்தில் நொச்சி இலைகளை உலர வைத்து அதனைப் புகைபோட்டால் கொசுக்களை விரட்டலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)