மகத்துவம் மிக்க மாகாளி! (மருத்துவம்)

Read Time:10 Minute, 13 Second

அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி பலருக்கும் இன்னும் தெரியாமல் இருக்கும் மருத்துவ தாவரம் மாகாளிக்கிழங்கு. சித்த மருத்துவர் அபிராமி மாகாளியின் சிறப்பம்சங்கள் குறித்து பேசுகிறார்.

ஊறுகாயாக பயன்படுத்தப்படும் பெருநன்னாரி, வரணி, குமாரகம் என்றும் கூறுவோம். இதன் தாவரவியல் பெயர் Decalepis hamiltonil என்பதாகும். நன்னாரி வகையைச் சார்ந்தது மாகாளிக்கிழங்கு. நன்னாரி, சீமை நன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என்று நன்னாரியில் 4 வகைகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.

பெருநன்னாரியின் வேரின் மேற்புறம் கருமை நிறத்திலும் உள்ளே வெண்மையாகவும், நல்ல மணமுடையதாகவும் இருக்கும். வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும், துவர்ப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும். இலைகளிலிருந்து ரூட்டின் மற்றும் வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன், லூபியலர், ஆல்பா மரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் வேர், பட்டை மற்றும் இலைகள் எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

பொதுவாகவே மார்கழி, தை மாதங்களில் மாகாளிக்கிழங்கு, நார்த்தங்காய், பச்சைமிளகு போன்ற ஊறுகாய் செய்ய பயன்படும் பொருட்கள் தாராளமாக கிடைக்கும். நம்முடைய தென்னிந்திய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாதது ஊறுகாய். சாப்பாட்டில் ஏதேனும் வாயு உற்பத்தி ஏற்பட்டால் அதை சரி செய்யவும், சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் அடையவும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும், ஒரு முழுமையான சாப்பாட்டின் இறுதியில் தயிர் சாதத்துடன் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

இதற்காக அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய்களை ஊறுகாயாக செய்து பதப்படுத்தி வைப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் சாப்பிட்டவுடன் செரிப்பதற்காக ஒரு மாத்திரை, பசிப்பதற்காக ஒரு மாத்திரை, இரவு படுக்கும்போது, காலையில் எளிதில் மலம் கழிப்பதற்காக ஒரு மாத்திரை என ரகம் ரகமாக மாத்திரை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளோம்.

நம் முன்னோர்கள் நன்றாக சாப்பிட்டு, நன்றாக உழைப்பவர்களாக இருந்தார்கள். இன்றோ நம்மால் நன்றாக சாப்பிட முடிவதில்லை, நேரத்திற்கும் சாப்பிட முடிவதில்லை. அப்படியே பிடித்த உணவை சாப்பிட்டாலும், அது செரிப்பதும் இல்லை. இதனால் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுகிறோம்.

உணவு சாப்பிட்டவுடன் அந்த உணவு நன்கு செரிப்பதற்கு இயற்கையாக நம் உடலில் ‘ஜடராக்கினி’ உற்பத்தியாகிறது. இந்த ஜடராக்கினி ஒழுங்காக வேலை செய்தால்தான் நாம் சாப்பிட்ட உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல், உணவு செரிமானம், உணவுக்கழிவுகள் வெளியேற்றம் என செரிமான மண்டலத்தின் அத்தனை வேலைகளும் சரியாக நடைபெறும். இந்த செயல்பாடு சரியாக நடைபெறுவதற்காகத்தான் ஊறுகாயை கண்டுபிடித்தோம்.

அதேவேளையில் உப்பு, காரம் சுவை மிகுந்த இந்த ஊறுகாயை அளவுக்கதிகமாகவும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் வலது கைக்கு எட்டாத வகையில், இலையின் இடப்பக்கமாக வைப்பார்கள். வெவ்வேறு விதமான வெவ்வேறு மருத்துவத்தன்மைகள் இருக்கின்றன. ஆனால், நீண்ட நாள் உபயோகத்திற்காக சிட்ரிக் அமிலம் போன்ற ரசாயனங்கள்(Preservatives) கலந்து கடைகளில் விற்கப்படும் ஊறுகாய் எல்லாம் சரியான ஊறுகாயே அல்ல. இவற்றில் சேர்க்கப்படும் ப்ரசர்வேடிவ்கள், நன்மை செய்யும் மைக்ரோபியல் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடும்.

இவற்றை நம் வசதிக்காக கடைகளிலிருந்து வாங்கி உபயோகிக்கிறோம். இதற்கும் உண்மையான ஊறுகாய்க்கும் சம்பந்தமே இல்லை. வீட்டில் நாமே மஞ்சள், வெந்தயம் போன்று இயற்கையான பாதுகாப்பு பொருட்களைப் போட்டு, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய்களைக் கொண்டு தயாரிக்கும் ஊறுகாய்களில்தான் மருத்துவத்தன்மை இருக்கும்.

இப்போது Probiotic நிறைந்தது என்று டின்களில் அடைத்து விற்கும் சில பொருட்களை அப்படியே நேரடியாக சாப்பிடுகிறோம். நம் நாட்டில் இயற்கையாக பதப்படுத்தி செய்யும் தயிர், இட்லி, தோசை மாவு, ஊறுகாய் போன்றவை Probiotic நிறைந்த உணவுகள். இவற்றில் மைக்ரோபியல் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதற்காக தனியாக Probiotic பொருட்கள் வாங்கி சாப்பிட வேண்டியதில்லை. விருந்து, விழாக்கள் என்று வயிறு முட்ட சாப்பிடும் நாட்களில் ஊறுகாயை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் அடையும்.

நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. வீட்டில் தயாரிக்கும் ஊறுகாயை சாப்பிடுவதால், செரிமானத்திற்காகவும், மலம் எளிதில் வெளியேறுவதற்காகவும் வேறு செயற்கை மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்காது.

மாகாளிக்கிழங்கை எப்படி உபயோகிக்க வேண்டும்?

கசப்பும், துவர்ப்பும் கலந்த சுவையாக இருக்கும் இதை மற்ற ஊறுகாயைப்போல் அப்படியே சாப்பிட முடியாது. முதலில், மாகாளிக்கிழங்கை வாங்கி வந்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் மேல் பகுதியில் உள்ள தோலை நன்றாக சீவி, நடுவில் உள்ள வேரை எடுத்துவிட்டு, கிழங்குப் பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துண்டுகளை தயிர் அல்லது எலுமிச்சைச்சாறில் உப்பு கலந்து 1 வாரம் வரை ஊறவைக்க வேண்டும். இப்போது உப்பும் புளிப்பும் ஊறியிருக்கும். இப்போது கடுகு, வெந்தயம், மிளகாய் வறுத்து அரைத்து, பெருங்காயமும் அதனோடு சேர்த்து ஊறுகாயாக பயன்படுத்தலாம். இப்போது எல்லா மருத்துவ குணமும் சேர்ந்திருக்கும். இதை 6 மாதம் முதல் 1 வருடம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். செரிமானத்திற்கும், கல்லீரலை பலப்படுத்தவும் உதவும்.

சிலர் மாகாளிக்கிழங்கை சூடு என்று சொல்வார்கள். அது தவறு. உண்மையில் உடலில் சூடு இருந்தாலும் குளிர்ச்சிப்படுத்தும். வாயுத்தொந்தரவை மட்டுப்படுத்தும், கல்லீரலைத் தூண்டி உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும். பெருநன்னாரி என்று சொல்லப்படும் மாகாளிக்கிழங்கின் வேர்களை சித்த மருத்துவத்தில் பயன்படுத்துகிறோம்.

சிறுநீர் நன்றாகப் பிரியவும், வியர்வைப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. உடலில் உஷ்ணத்தை தணித்து, உரமாக்கக் கூடியது. ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு, பித்த நீக்கம், மேகநோய், பால்வினை நோய்களுக்கு நல்ல மருந்து. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை சித்த மருத்துவத்தில் பல தைலங்களிலும், லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுள் வளர்க்கும் ஆவாரை! (மருத்துவம்)
Next post பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)