கொரோனாவைத் தடுக்கும் உணவுப்பழக்கம்!(மருத்துவம்)

Read Time:9 Minute, 23 Second

இதயநோய்க்கும் உணவுக்கும் இடையிலான தொடர்பு அதிகமாக பேசப்படுவது போல, நுரையீரல் நோய்க்கும் உணவுக்குமான தொடர்பு அதிக கவனத்தைப் பெறுவதில்லை. இதற்கான காரணத்தை நாம் உற்று நோக்கும்போது, நுரையீரல் நோய்கள் வருவதற்கான காரணங்களாக கூறப்படுபவை புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை அதிகமாக  சுவாசிப்பது ஆகும். நமது உடல் சீராக செயல்பட நமது நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் உள் இழுக்காமல், காற்று மாசுபடுத்திகள் மற்றும் புகை போன்ற சில தீங்கு விளைவிக்கும் கூறுகளையும் உள் இழுக்கிறது. இந்த மாசுபாடுகள் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சிபோன்ற சுவாச பிரச்னைகள் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது.

தற்போது உலகையே உலுக்கி வரும் கொடிய கொரோனா நோயின் காரணியான COVID-19 வைரஸ் நமது சுவாச அமைப்பைத் தாக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. COVID-19 வைரஸ் உடலில் நுழையும்போது​ மூக்கு, வாய், தொண்டையில் உள்ள மியூகஸ்(Mucus) உடன் தொடர்பு கொள்கிறது. லேசான முதல் சிக்கலான பலவித சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. வயதானவர்கள் மற்றும் இதய நோய், மற்றும் நீரிழிவு போன்ற பிற உடல்நிலைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. COVID 19 வைரஸ்க்கு எதிராக நோயெதிர்ப்பை வழங்குவதற்கான தடுப்பூசிகளும், மருந்தியல் சிகிச்சைகளும் ஆராய்ச்சி நிலையிலே இருப்பதால் தனிநபர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் நன்கு செயல்படுவதற்கான தற்போதைய  அணுகுமுறை ஊட்டச்சத்தான உணவினை உண்பதே ஆகும். ‘உணவே மருந்து’ என்று ஹிப்போகிரேட்ஸ் சொல்லியது இந்த நேரத்திற்கு மிக பொருத்தமாக உள்ளது.

பல வைட்டமின்கள் (ஏ, பி 6, பி 12, ஃபோலேட், சி, டி மற்றும் இ) மற்றும் மைக்ரோ மினரல்ஸ்(Zinc, Copper, Selenium, Iron) ஆகியவை மனித நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான அமினோ அமிலங்களும் கொழுப்பு அமிலங்களும் மிக முக்கியமானவை. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதில் நமது குடலில் வாழும் நல்ல நுண்ணுயிர்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இந்த நுண்ணுயிர்கள் நமது குடலில் வளர்வதற்கான உணவுகளையும் நாம் உண்டால்தான் நமது நோயெதிர்ப்பு மண்டலம் நன்றாக செயல்பட முடியும். நோய்த்தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ எந்த உணவுப் பொருட்களும் இல்லை என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள் முக்கியம். நல்ல ஊட்டச்சத்தான உணவு முறை மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் உணவுகள்

குடை மிளகாய்

பச்சை, சிவப்பு குடமிளகாய்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இவற்றை, நீராவி அல்லது கொதிப்பதை விட கிளறி வறுக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பு வைட்டமின் ஈ மற்றும் ஜின்க் கிடைப்பதற்கான சிறந்த மூலமாகும். மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஃபைபர் ஆகியவையும் இதில் உள்ளன. ஒரு சிறிய கைப்பிடி பாதாம், ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதி செய்யும்.

சிட்ரஸ் பழங்கள்

ஏறக்குறைய அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகின்றன.

பூண்டு

உலகின் ஒவ்வொரு உணவிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆரம்பகால நாகரிகங்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதில் அதன் மதிப்பை அங்கீகரித்தன. பூண்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் அல்லிசின்  என்ற ஒரு ரசாயன கலவையில் இருந்து பெறப்படுகிறது.

இஞ்சி

நோய்வாய்ப்பட்ட பிறகு பலர் உபயோக படுத்தும் ஒரு மூலப்பொருள் இஞ்சி. இஞ்சியானது தொண்டை புண் மற்றும் அழற்சி நோய்களைக் குறைக்க உதவும். நாள்பட்ட வலியைக் குறைக்கக்கூடும். மேலும் கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம்.

தயிர்

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரினை உபயோகியுங்கள். அவற்றில்தான் நல்ல நுண்ணுயிர்கள் அதிகமாக இருக்கும். கடைகளில் விற்கும் சுவை மற்றும் சர்க்கரை ஏற்றப்பட்ட வகைகளில் சில சமயம் கிருமிகளும் இருக்கக் கூடும். தயிரில் உள்ள நுண்ணுயிர்கள் நோய்களை எதிர்த்துப் போராட உங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டக்கூடும்.

மஞ்சள்

மஞ்சள் பல உணவுத்தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். மஞ்சள் முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிப்பதில், அழற்சி எதிர்ப்பு மருந்தாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள Curcumin நோயெதிர்ப்பு சக்தியை  தூண்டுவதாகவும், வைரஸ் வளர்ச்சியை தடுப்பதாகவும், ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன.

காளான்

காளான்களில் இருந்துதான் நோய் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பி வைட்டமின், வைட்டமின் டி, செலினியம், மற்றும் 8 அத்தியாவசிய அமினோ அமிலங்களில் 7 அமினோ அமிலங்கள் போன்ற உயர் ஊட்டச்சத்துக்கள் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

ஆரோக்கியமான உணவினை உண்ண சில குறிப்புகள்

* ஒவ்வொரு நாளும் முழு தானிய வகைகள், பருப்பு வகைகள் மற்றும் பயறு வகைகளை தேர்வு செய்து உண்ணுங்கள். இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் ஆகியவற்றை மிதமான அளவில் உண்ணுங்கள்.

* ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்படாத மக்காச்சோளம், தினை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்ற முழு தானிய உணவுகளை முடிந்தவரை உணவினில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* உணவுகளை சமைக்கும்போது உப்பை குறைவாகப் பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு 5 கிராம்(ஒரு டீஸ்பூனுக்கு சமம்) உப்பு உட்கொள்ளலை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* சிவப்பு இறைச்சியை விட கொழுப்பு  குறைவாக இருக்கும் கோழி மற்றும் மீன் போன்ற வெள்ளை இறைச்சிகளைத் தேர்வுசெய்வது நல்லது. பால் மற்றும் பால் பொருட்களில் குறைந்த கொழுப்பு உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காட்டு எலுமிச்சை!!(மருத்துவம்)
Next post நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!!(மருத்துவம்)