கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 45 Second

வேப்பம்பூ பச்சடி

தேவையானவை:

வேப்பம்பூ – ½ கப்,
புளிக்கரைசல் – 2 கப்,
வெல்லத் தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
தாளிக்க – கடுகு,
வரமிளகாய் – 1,
பெருங்காயப் பொடி,
நெய்,
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – ½ ஸ்பூன்,
வரமிளகாய் – 2 வறுத்து அரைத்து பொடித்தது.

செய்முறை:

சிறிது நெய்யில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய், வெந்தயம் வறுத்து பொடிக்கவும். வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு, கடுகு, வரமிளகாய் தாளித்து, வேப்பம் பூவைச் சேர்த்து வதக்கவும். புளிக்கரைசலைக் கொட்டி உப்பு, வெல்லப் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து கொதித்ததும், அரைத்த பொடியைச் சேர்த்து  இறக்கவும்.
– எஸ். ராஜம், திருச்சி.

*குழம்பு அல்லது சாம்பார் மணமாக இருக்க.. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, அதில் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவைப் போட்டு சிவப்பாக வறுத்து, அதில் குழம்பு / சாம்பாரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கினால் வாசனையாகவும் இருக்கும். இரவு வரை கெடாமலும் இருக்கும்.

*கொட்டைகளைத் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து ஆறியதும் கொட்டைகளின் வெளித்தோல் மற்றும் உள் தோலை எளிதாக நீக்கி, உள் இருக்கும் வெள்ளை நிறப்பருப்பினை அப்படியேயும் சாப்பிடலாம். பொடியாக நறுக்கி சுண்டல் செய்துச் சாப்பிடலாம்.

*மண் பாத்திரத்தில் தோய்த்த மாதிரியான கெட்டித் தயிர் வேணுமா? ‘டப்பர் வேர்’ பாத்திரங்களில் பாலை மிதமான சூட்டில் ஊற்றி, புளிக்காத மோர் அல்லது தயிர் சேர்த்து அசைக்காமல் வைத்துக் காலையில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்தால் கெட்டித் தயிர் ரெடி.
– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

*தேங்காய் துவையலுக்கு தேவையான சாமான்களைத் தாளிக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து அரைத்தால் துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.

*முட்டைக் கோசை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளை வீசி விடாமல் அவற்றை சாம்பாரில் போட்டு சமைத்துச் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

*பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டு வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பு தெரியாது.

*ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் தனி ருசியுடனிருக்கும்.
– கே.எல்.புனிதவள்ளி, கோவை.

*சேமியா பாயசம் செய்யும் போது குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாகி விடும்.

*காய்ந்த கறிவேப்பிலையை சேகரித்து வைத்தால் குழம்பு பொடி அரைக்கும் போது சேர்த்து அரைக்க குழம்பு ருசியாக இருக்கும்.

*இடியாப்பம் செய்ய மாவில் தேங்காய் எண்ணை மற்றும் கால் கப் பால் சேர்த்து தயாரிக்க வெள்ளை வெளேரென்று இருக்கும்.
– ஜி.இந்திரா, திருச்சி .

*நீரில் சிறிதளவு உப்யைக் கரைத்து அதில் தக்காளிப் பழங்களை போட்டு வைக்க, பழங்கள் கெட்டுப் போகாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.

*தோசை சுடும்போது, கல்லில் ஒட்டிக் கொண்டு வந்தால் கடுகு எண்ணெயுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கல்லில் தேய்த்து பிறகு தோசை சுட்டால் ஒட்டாமல் வரும்.

*தேங்காயை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விட்டு, பின் அதை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், பூப்பூவாக தேங்காய் துருவியது போலவே துருவல் கிடைக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*சுண்டலை தாளிதம் செய்து இறக்கியபின், இரண்டு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து தூவினால் சுண்டல் சூப்பராக இருக்கும்.

*ரவா தோசை செய்யும் போது 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள் தோசை சிவந்து, மொறு மொறுவென இருக்கும். பார்த்தாலே பசிக்கும்.
– க.நாகமுத்து, திண்டுக்கல்.

*மோர்க்குழம்பு செய்து இறக்குவதற்கு முன்னதாக சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் ருசியே தனிதான்.

*பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால்தான் தயிர் நன்றாகத் தோயும். சுவையும் இருக்கும்.

*பீன்ஸ், பருப்புகளை வேகவைக்கும் போது முதலிலேயே உப்பு போடக்கூடாது. வேக நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

*மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையோ சுவை.
–  ஆர்.பிரகாசம், திருவண்ணாமலை.

*பட்டாணி உரித்த பின்னர் தோலை எறிந்து விடாமல், சுத்தம் செய்து, சிறிது தண்ணீருடன் குக்கரில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து சாறு எடுத்தால் நல்ல திக்காக வரும். இதை சூப், சாம்பார், ரசம் போன்றவற்றில் பயன்படுத்தலாம். தேங்காய் நார் மாதிரி வரும் சக்கையை எறிந்து விடவேண்டும்.

*நன்றாக காய்ந்து போன பிரெட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ளவும். நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு இவற்றுடன் கொஞ்சம் உப்பையும் சேர்த்து மாவாகப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து இந்தக் கலவையை வடை போல் தட்டிப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடவும். பஜ்ஜிகளுக்குப் போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளுக்கான நம்ம ஊரு த்ரிஃப்டிங்! (மகளிர் பக்கம்)
Next post கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?(அவ்வப்போது கிளாமர்)