சிப்பி சுகந்தி! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 31 Second

‘‘கடல் தொழிலில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் பங்கும் அதிகம் இருக்கிறது” என்கிறார் பாம்பன் தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த சுகந்தி. ‘‘பிறந்த ஊர் ராமேஸ்வரம், மாங்காடு அருகில் உள்ள நரிக்குளி. அப்பா, அம்மாவிற்கு கடல் தொழில்தான். அதனால் நானும் பத்து வயதிலிருந்தே கடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கடல் தொழில் மீது கொண்ட ஆர்வத்தினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. வீட்டில் கணவரும் கடல் தொழில்தான் செய்கிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை” என்று தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்ட 38 வயது சுகந்தி, கடல் குறித்து கவிதை பாடுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

‘‘கடல் பாசி எடுப்பதை பத்து வயதிலிருந்தே செய்து வரும் நான், கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேல் கடல் சிப்பிகளை சேகரித்து அதன் மூலம் கைவினைப் பொருட்கள் செய்து வருகிறேன். சுனாமி பாதிப்பிற்கு பிறகு கடலோர கிராமங்களில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கைவினைப் பொருட்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.ஐந்து நாட்கள் நடைபெற்ற அந்த பயிற்சியில் நானும் கலந்து கொண்டு முறையாக கற்றுக் கொண்டேன்.

அதைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நான் கற்றதை வைத்து சில பொருட்கள் செய்து பார்க்க ஆரம்பித்தேன். அதை நண்பர்கள், சொந்தக்காரர்களிடம் காண்பித்த போது அவர்கள் மேலும் என்னை ஊக்குவித்தார்கள். அதனால் பல வடிவப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வர ஆரம்பித்தேன். இதற்கிடையில் கொரோனா வந்ததால், எங்களால் விற்பனை செய்ய முடியாமல் போனது.

இந்த சூழலில் நான் செய்யும் வேலைகளை தெரிந்து கொண்ட கடல் ஓசை எஃப்.எம் என்னை ஒரு நேர்காணல் செய்தார்கள். கடலுக்கு நான் சென்று வருவது குறித்து அவர்களிடம் நான் சொன்ன போது, அவர்கள் எனக்காக மாவட்ட கலெக்டர் அவர்களிடம் பேசி லைஃப் ஜாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்கள். அதை பெறப்போகும் போது சிப்பிகளால் ஆன பொக்கே ஒன்று செய்து கொண்டு போயிருந்தேன்.

இதை பார்த்த கலெக்டர், ‘இது நல்லா இருக்கே…’ என்று கேட்டதற்கு, ‘இது சிப்பிகளால் செய்தது சார். அக்கா தான் செய்தாங்க. இன்னும் சிப்பிகள் மூலம் நிறைய விஷயங்கள் செய்துட்டு இருக்காங்க’ என்று என்னை பற்றி அந்த தம்பிகள் சொன்னதும், கலெக்டர் அவர்கள் நான் செய்யும் தொழில் பற்றி என்னிடம் பேச ஆரம்பித்தார்.அவரிடம் நான் சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தில் கற்றதை வைத்து சில கைவினை பொருட்கள் செய்து வருவதாக கூறினேன். அதே சமயம் எங்களால் அதை சரியாக விற்பனை செய்ய முடியவில்லை என்று எங்களின் கஷ்டத்தினையும் வெளிப்படுத்தினேன்.

நான் இப்படி சொன்னதும் அடுத்த நிமிடம் ‘உங்களுக்கு இப்ப என்ன வேண்டும்’ ன்னு கேட்டார். உடனே நான் அவரிடம் இந்த பொருட்களை விற்பனை செய்ய ஒரு கடை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டேன். எங்களின் கோரிக்கையை ஏற்று உடனே அப்துல் கலாம் ஐயா அவர்களின் சமாதி அருகில் ‘சீ ஷெல் மார்க்கெட்’ ஒன்றை ஏற்பாடு செய்து அங்கு கடை வைத்து கொடுத்தார். இப்போது அதை மகளிர் அணி எடுத்து நடத்துகிறார்கள்.

அந்த மார்க்கெட்டில் மீனவ பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களும் தங்களின் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். மகளிர் அணியை சேர்ந்தவர்களுக்கு சிப்பிகளில் எப்படி கைவினைப் பொருட்கள் செய்யலாம் என்று பயிற்சி அளித்து வருகிறேன். இப்போது எங்களுக்கு என்று ஒரு கடை கிடைத்திருக்கிறது. அதனால் ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என்கிற சுகந்தி, கொரோனா காலங்களில் தன்னார்வலராக இருந்து பலருக்கு உதவிகள் செய்துள்ளார். தனது பகுதியில் வார்டு பிரதிநிதியாக இருக்கும் சுகந்தி, கடல் பாசிகள் எடுக்கும் தொழில் பற்றி கூறினார்.

‘‘கப்பா பாசி, மரிக்கொழுந்து பாசி என பாசிகளில் இரண்டு வகை இருக்கிறது. இதில் கப்பா பாசியினை நான் பதினைந்து ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். மரிக்கொழுந்து இயற்கையாக கடல் பாறைகளில் கிடைக்கும். வருஷத்தில் மூன்று மாதம் இந்த பாசி எடுப்பார்கள். கப்பா பாசியைப் பொறுத்தவரை அதை வாங்கி, மூங்கில் கட்டி செயற்கையாக வளர்க்கணும். இதனை வருடம் முழுக்க வளர்க்கலாம். கப்பா பாசி உணவு பொருட்களுக்காகவும், மருத்துவ பயன்பாட்டிற்கும் வளர்க்கப்படுகிறது. இதனை திரவ வடிவத்தில் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்களில் பயன்படுத்துகிறார்கள். அதோடு செடிகளுக்கான உரமாகவும் தயார் செய்கிறார்கள்.

என்னுடைய கணவருக்கும் சின்ன வயசில் இருந்தே கடல் சார்ந்த தொழில் தான். கடலைப் பொறுத்தவரை அவள் சீற்றமாக இருந்தாள் உள்ளே போக முடியாது. மாசத்தில் பாதி நாட்கள் தான் கடலுக்கு போக முடியும். அந்த நேரங்களில் பாசி எடுப்பது, சிப்பிகள் வைத்து கைவினை பொருட்கள் செய்வது போன்ற வேலைகளை இருவருமாக சேர்ந்து செய்வோம். இதன் மூலம் சிறு சிறு வருமானம் கிடைத்தாலும், அது எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. ரமேஸ்வரம், மாங்காடு, சம்பா போன்ற பகுதிகளில் தான் பாசிகள் வளர்க்கிறார்கள்.

பாம்பனில் பாசி எடுக்கவும் வளர்க்கவும் வசதி இல்லை என்பதால், பாசி எடுக்கவே ராமேஸ்வரம் வரை சென்று வருகிறேன். சில நேரங்களில் கப்பல் ஓட்டிகள் எல்லாரும் ஸ்ட்ரைக் செய்வாங்க. அப்ப கடலுக்குள் செல்ல முடியாது. அந்த நேரத்தில் நண்டு பிடிக்க நண்டு வலை பின்னி கடற்கரையில் நண்டு பிடிப்போம். அந்த நேரத்தில் அது எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும். சில சமயம் நான் பாசி எடுக்க போகும் நேரங்களில், வலையும் கூடவே கொண்டு போயிடுவேன். பாசி எடுக்கும் நேரத்தில் வலையை விரித்துவிடுவேன். திரும்பி வரும் போது பாசி மற்றும் விரித்திருந்த வலையில் மீன் ஏதாவது கிடைக்கும்.

அதை அன்றைய சாப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வோம். இப்படித்தான் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். சிப்பிகள் மூலம் செய்யப்படும் கைவினை பொருட்கள் விற்பனைக்காக சாதகமான சூழல் அமையும் போது எங்கள் மீனவப் பெண்களின் திறமை எல்லோருக்கும் தெரியும். அத்தோடு வீட்டில் இருக்கும் பெண்களும் எங்களை போல் சிப்பிகளாலோ அல்லது மற்ற பொருட்களை வைத்தோ கைவினை பொருட்கள் செய்து அதை விற்பனையாக்கும் போது பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் மன நிறைவையும் கொடுக்கும்” என்கிறார் சுகந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)
Next post இளநீர்… இளநீர்!(மருத்துவம்)