ஆன்லைன் ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 34 Second

ரூ.199, ரூ.299, ரூ.399… அதென்ன ஒரு ரூபாய் மட்டும் குறைவு என்னும் பைனான்ஸ் அரசியலுக்குள் போகாமல் இப்படி விலைப்பட்டியலுடன் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைகளில் வரும் கண்கவர் விளம்பரங்களில் வரும் பொருட்களை அவ்வப்போது வாங்கலாமா என்னும் ஆசை ஏற்பட்டிருக்கிறதா? எனில் இதை முதலில் படிங்க…

‘‘கடந்த மாதம் சென்னையைச் சேர்ந்த சகோதரி ஒருவர் இணையதளத்தில் ரூ.1500க்கு குர்திகள் வாங்கி ஆன்லைனிலேயே பணமும் செலுத்தியிருக்கிறார். 300 ரூபாய்க்கு கீழ் என்னும் சலுகை, ஊரடங்கு கால ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனை போன்ற கண்கவர் விளம்பரங்கள் அவரை ஈர்த்துள்ளது. அவரும் அதில் மயங்கி உடைகளை ஆன்லைனில் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் சம்பந்தப்பட்ட எந்த மெயிலோ அல்லது குறுஞ்செய்தியோ வரவில்லை. பணம் செலுத்தியதால் அது மட்டுமே அவரின் அக்கவுண்டில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது.

குறிப்பிட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அழைத்தால் பதில் இல்லை. மறுநாள் தொடர்பு கொண்ட போது, ஸ்விட்ச் ஆஃப் என்ற செய்தி தான் கிடைத்துள்ளது.  இரண்டொரு நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட முகநூல் பக்கம் மற்றும் இணையத்திற்குச் சென்றால் அதுவும் இரவோடு இரவாக காலி செய்யப் பட்ட கடை போல் காட்சியளித்தது. அதாவது இணையத்திற்கான முகநூல் பக்கம் முற்றிலும் நீக்கப்பட்டு இருந்தது’’ என்று ஆன்லைன் ப்ராடுகளை குறித்து பேசத் துவங்கினார் ஐ.பி.ஆர் வழக்கறிஞர் ஸ்வப்னா சுந்தர். அவர் கூறிய தகவல்கள் மேலும் அதிர்ச்சிகளை உண்டாக்கின.

‘‘இம்மாதிரி ஆன்லைன் பண மோசடி வழக்கு மட்டும் சுமார் லட்சக்கணக்கில் குவிஞ்சு கிடக்கு. இதில் பெரிய சிக்கல் நம்மில் பலரும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு நேரடியாக வங்கிகளின் இணையதளத்தைப் பயன்படுத்தாமல் மூன்றாம் நபர் பணபரிவர்த்தனைகளான GOOGLE PAY, PAYTM, PHONEPE இப்படியான ஆப்களைப் பயன்படுத்துகிறோம். இதனால் பணம் எங்கே எப்படி பரிமாறப்படுகிறது என்பதற்கு கூகுள் உள்ளிட்ட தளங்களை நாடினால் அந்த நிறுவனமே அமெரிக்காவில் இருக்கும்.

யாரைப் பிடிச்சு என்ன கேள்வி கேட்க முடியும். சரி எந்த அக்கவுண்டுக்கு பணம் சென்றது என வங்கியை நாடினால், அவர்கள் நாங்க பொறுப்பேற்க முடியாது என்றும் சம்பந்தப்பட்ட ஆப்பின் (app) வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்பார்கள். ஒருவேளை குறிப்பிட்ட நபரின் வங்கியில் பணம் செலுத்தப்பட்டு, அவரை கண்டுபிடித்தாலும், அவருக்கு தன் பெயரில் வங்கிக் கணக்கு இருப்பதோ அல்லது அதில் பணப்பட்டுவாடா செய்திருப்பது குறித்த விவரம் தெரிந்திருக்காது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவில் உலகமே இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்போதுதான் அந்த உலகிற்குள்ளேயே நுழையும் நம் போன்ற நாடுகள் எம்மாத்திரம். ஐ.டி சட்டம் 2000ன் படி வழக்குப் பதிந்து குறிப்பிட்ட தளத்தை வேண்டுமானால் முடக்கலாம். ஆனால் அவனுக்கு இதுவும் ஒரு தளம் அவ்வளவே’’ என்றவரை தொடர்ந்தார் டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனத்தினை இயக்கி வரும் காமேஷ் இளங்கோவன்.

‘‘ரூ.50க்குக் கூட இன்று இணைய தளங்களை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் பொருட்களின் புகைப்படங்கள் இருக்கவே இருக்கின்றன Amazon, FlipKart, SnapDeal போன்ற அதிகாரப்பூர்வ தளங்கள். அங்கேயிருந்து அதிக விலையுள்ள பொருட்களை அப்படியே எடுத்து இவர்களின் தளத்தில் பதிவு செய்வார்கள். பிறகு இவர்கள் அதற்கான சலுகை விலையினை நிர்ணயிப்பார்கள். அதன் பிறகு அதனை முகநூல் மற்றும் இதர வலைத்தளங்களில் இது குறித்த செய்தி வருமாறு பார்த்துக் கொள்வார்கள்.

மற்ற இணையத்தை விட இங்கு குறைவாக கிடைக்கும் போது, நாமும் அவர்கள் வீசிய வலையில் சிக்கிக் கொள்வோம். இப்படி ஒருதளம் அல்ல இதே பாணியில் நூற்றுக்கும் மேலான தளங்கள் இருக்கும். எதிலும் Cash On Delivery வசதி இருக்காது. ஆன்லைன் முறையில் மட்டுமே தான் கட்டணம் செலுத்த முடியும். பெரும்பாலும் இது போன்ற ஆன்லைன் திருட்டில், வட இந்தியர்கள் தான் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாமும், ரூ.500, 1000த்துக்கு ஏன் இவ்வளவு போராடணும்னு முயற்சியைக் கைவிட்டுவிட்டு வேலையைப் பார்க்க சென்று விடுவோம். ஆனால் அவனோ ஆயிரமாயிரம் பேர்களிடம் ரூ. 500, 1000 எனச் சென்றுகொண்டிருப்பான்.

அதிலும் ஊரடங்கு நேரத்தில் ஸ்டாக் கிளியரன்ஸ் என்னும் ஒற்றை வார்த்தைப் போதாதா நம்மை சுலபமாக மயக்க. இதில் சிக்குவது பெரும்பாலும் பெண்கள்தான். காரணம் அவர்கள் ஏமாந்தால் வீட்டில் சொல்ல பயப்படுவார்கள். சேமித்து வைத்த பணத்தில் வாங்குவார்கள். எனவே இவர்களின் டார்கெட் பெண்கள் சார்ந்த பொருட்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவது. இது போன்ற இணையத்தில் வாங்கும் போது, அதற்கான கட்டணத்தை நேரில் செலுத்துமாறு பார்த்து வாங்குவது நல்லது’’ என்றார் காமேஷ்

ஆன்லைன் ஷாப்பிங் டிப்ஸ்

*டிஜிட்டல் உலகில் ஆபர்களுக்கு மயங்காமல் பொறுமையாக கஸ்டமர்களின் ரேட்டிங், மதிப்பீடு இவைகளைப் படித்துப் பார்த்து வாங்கலாம்.

*எந்த தளம் சரியான கஸ்டமர் சர்வீஸ்களைக் கொண்டு இயங்குகின்றன, எத்தனை வருடங்களாக சேவைகள் கொடுத்து வருகின்றன என ஆராய்ந்து அவைகளைப் பயன்படுத்தலாம்.

*தெரியாத தளம் எனில் முடிந்த வரை Cash On delivery ஆப்ஷன்கள் இருந்தால் மட்டும் பொருட்கள் வாங்கலாம்.

*சம்பந்தப்பட்ட தளத்தில் உள்ள எண் வேலை செய்கிறதா, முகவரி எங்கே என ஆராய்வது நல்லது.

*இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட தளத்தில் ஷாப்பிங் செய்கிறீர்கள் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை எனில் எப்போதும் அந்த
அதிகாரப்பூர்வ தளத்தில் பொருட்களை வாங்குவதையே பின்பற்றலாம்.

*குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் கண்கவர் பேனர்களுக்கு மயங்காமல் இருப்பதே நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது!!(அவ்வப்போது கிளாமர்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)