புரதம் நிறைந்த சைவ உணவுகள்!(மருத்துவம்)

Read Time:5 Minute, 38 Second

* நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில், புரதம்(Protein) தனி இடம் பெறுகிறது. அத்தகைய சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த ஊட்டச்சத்து அசைவ உணவு வகைகளான கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றில்தான் அதிகளவில் உள்ளது என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், பாரம்பரிய பின்னணி கொண்ட சைவ உணவுப்பண்டங்களிலும் அசைவ உணவுப்பொருட்களை மிஞ்சும் வகையில், புரதச்சத்து கூடுதலாக காணப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத செய்தியாக இன்றுவரை உள்ளது. அவர்களுக்காகவே புரதம் நிறைந்திருக்கிற தானியங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றில் உள்ள இந்த சத்தின் அளவு முதலானவை தொகுத்து தரப்பட்டுள்ளது.

* பாதாம் பருப்பு

வளரும் குழந்தைகள் மட்டுமில்லாமல், முதுமைப்பருவத்தினருக்கும் அத்தியாவசியத் தேவையாக பாதாம் பருப்பு திகழ்கிறது. ஏனெனில் வயோதிக காலத்தில் ஏற்படுகிற நினைவாற்றல் குறைதல் போன்ற மூளை தொடர்பான பாதிப்புக்களை சரி செய்யவல்லது பாதாம்பருப்பு. பாதாம் புரோட்டீன் சத்தை தருவதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் A, D, C போன்றவற்றையும் தருகிறது. இன்னொரு கூடுதல் தகவல்… 100 கிராம் முட்டையிலிருந்து வெறும் 11 கிராம் புரோட்டீன் சத்து மட்டுமே கிடைக்க, அதே அளவுள்ள பாதாம், 10.15 கிராம் கூடுதலாக, 21.15 கிராம் புரோட்டீனை அளிக்கிறது.

* வேர்க்கடலை

புரோட்டீன் எனும் ஊட்டச்சத்தை ஏராளமாக நமக்கு அள்ளித்தருகிற பயறு வகைகளில், மணிலா எனக் குறிப்பிடப்படுகிற நிலக்கடலையும் ஒன்று. ஆனால், என்ன காரணத்தினாலோ இன்று வரை அதனுடைய முக்கியத்துவம் அறியப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, குறைவான மதிப்பீட்டிலே வைக்கப்பட்டு உள்ளது. கோழி இறைச்சியில் எந்த அளவிற்கு புரதச்சத்து காணப்படுகிறதோ அந்த அளவுக்கு சமமாக வேர்க்கடலையிலும் புரதம் உள்ளது. 100 கிராம் அளவுள்ள கோழி இறைச்சியில் இருந்து 27 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைத்தால், அதே அளவுள்ள மணிலா பயிர் மூலமாக, 26 கிராம் புரோட்டீனைப் பெறலாம்.

* பூசணி விதை

நம்முடைய உடல் நலனுக்குத் தேவையான புரோட்டீன் மட்டுமின்றி மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து போன்றவை பூசணி விதையில் போதுமான அளவு காணப்படுகிறது. எலும்பு தேய்மானம், உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்னைகளைச் சரி செய்வதோடு, விரக்தி போன்ற மனம் தொடர்பான பாதிப்புக்களையும் பூசணி விதை குணப்படுத்த வல்லது. 100 கிராம் பூசணி விதையில் இருந்து, 600 கிராம் கலோரி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* கறுப்பு பட்டாணி

‘ஏராளமான ஊட்டச்சத்துக்களைத் தன்னிடம் கொண்டுள்ள பயறு என்ற ஒரே காரணத்துக்காக, எண்ணற்ற குடும்பத் தலைவிகள், சமையலில் கறுப்பு பட்டாணியை மூலப்பொருளாக(Ingredient) அடிக்கடி பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலர்ந்த பட்டாணியில் காணப்படுவதைவிட, இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைத்த கறுப்பு பட்டாணியில் புரோட்டீன் அளவு கூடுதலாக இருக்கிறது. 100 கிராம் எடையுள்ள முட்டையில் 11 கிராம் மட்டுமே புரதச்சத்து கிடைக்க, அதே அளவுள்ள கறுப்பு பட்டாணியில் 17 கிராம் புரோட்டீன் நமக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 6 கிராம் புரதம் அதிகம்.

* அவரைக்காய்

நமது முன்னோர்கள் காலந்தொட்டே, சமையலில் தவறாமல் இடம்பிடித்து வரும் உணவுப்பொருள் அவரை. உடல் நலனைப் பேணிப் பாதுகாத்திட உதவும் அவரையில், கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. அதேவேளையில் புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைய உள்ளன. ஒரு கப் அவரைக்காயில் 13 கிராம் அளவிற்குப் புரதச்சத்தும், நார்ச்சத்து 9.2 கிராமும் உள்ளது. முற்றிய அவரையைப் பயன்படுத்துவதால், எவ்வித நன்மையும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post நடைப்பயிற்சி தியானம்!! (மருத்துவம்)