நடைப்பயிற்சி தியானம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 18 Second

உடற்பயிற்சிகளிலேயே மிகவும் எளிமையானது நடைப்பயிற்சி. சிரமங்கள் அதிகமின்றி மனதுக்கும், உடலுக்கும் நன்மை தரக்கூடியதும் நடைப்பயிற்சிதான். இத்தகைய  சிறப்பான நடைப்பயிற்சியில் கொஞ்சம் தியானத்தையும் சேர்த்து செய்வது தற்போதைய புதிய டெக்னிக். இதன்மூலம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் நவீன உடற்பயிற்சி நிபுணர்கள்.

சரி… எப்படி நடைப்பயிற்சி தியானத்தை மேற்கொள்வது?!

நடைப்பயிற்சி தியானமானது அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு இணையான பலனைத் தரக் கூடிய உடற்பயிற்சி. புத்தமதத்தினர் அதிகம் பயன்படுத்தும் இப்பயிற்சி முறைக்கு, இயக்கத்தில் தியானம் செய்வது என்று அர்த்தம். வெறுமனே பாட்டு கேட்டுக் கொண்டோ, உடன் வருபவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ நடைப்பயிற்சி செய்வதைக்காட்டிலும் இதில் அதிக பலன்களைப் பெற முடியும். பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம் உடல் மட்டுமே அதில் எந்திரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால், மனதை எங்கேயோ அலைபாய விட்டுக் கொண்டிருப்போம்.

இல்லாவிட்டால் காதில் ஏதாவது பாட்டு கேட்டுக் கொண்டோ, உடன் வருகிறவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டோ நடைப்பயிற்சி மேற்கொள்வோம். ஆனால், நடைப்பயிற்சி தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடக்கும்போது ஒவ்வோர் அடியிலும் அமைதியையும், மகிழ்ச்சியையும்  தரையில் பதிக்கிறோம் என்று பாசிட்டிவாக எண்ண வேண்டும். இதுபோல் மனதை ஒருமுகப்படுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அபாரமான நன்மைகள் நாளடைவில் கிடைக்கும். நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பு முழு கவனத்தையும் கொண்டு வருவதற்காக ஒரு நிமிடம் ஆழமாக  இழுத்து மூச்சு விடுங்கள். உங்கள் கால்கள் தரையில் பதிந்திருப்பதை ஆழமாக உணருங்கள். உங்கள் உடலுக்குள் இருக்கும் பலவிதமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, எண்ண ஓட்டங்களையும் நிறுத்துங்கள்.

அதன் பின்னர் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். நடக்கும்போது எழும் எண்ண ஓட்டங்களை வலுக்கட்டாயமாக நிராகரிக்கவோ, அதை பகுப்பாய்வு செய்யவோ, ஏற்றுக்கொள்ளவோ தேவையில்லை. வெறுமனே அவற்றை கவனித்துவிட்டு நடைப்பயிற்சியில் மனதைத் திருப்பலாம். நடைப்பயிற்சி தியானத்தின் நுட்பம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. பூமியோடு தொடர்பு கொண்ட உங்கள் உணர்வு அமைதியாகவும், சீரானதாகவும் இருக்கும். உங்கள் சூழல் உடல் மற்றும் எண்ணங்களைப் பற்றிய வித்தியாசமான விழிப்புணர்வை வளர்க்கவும் இந்த தியானம் உதவுகிறது. மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், செரிமானத்தைத் தூண்டவும், மனப்பதற்றத்தைக் குறைக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் நடைப்பயிற்சி தியானம் உதவுகிறது. நடப்பதில் தடுமாற்றம் ஏற்படாமல் சமநிலையை அதிகரிக்கவும் நடை தியானத்தை கடைபிடிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புரதம் நிறைந்த சைவ உணவுகள்!(மருத்துவம்)
Next post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)