சிறுகதை-பரிமாற்றம்!(மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 30 Second

“பெண் குழந்தை”காதில் தேனாகப் பாய்ந்தது அந்த வார்த்தைகள். பாலு மலந்து போய் நின்றான். “அம்மா” என்றது வாய். உள்ளம் பூரிக்க, வார்த்தைகள் வராமல் தவித்தான். அவனின் உணர்வின் மகிழ்ச்சியைப் பார்த்து நர்ஸ் சிரித்தாள். “என்ன சார்? ரொம்ப சந்தோஷமா?” “பின்னே? என் வீட்டுக்கு தேவதை வந்திருக்காளே” “ஆமாம் சார், பெண் குழந்தைகள் நம் வீட்டின் தெய்வங்கள்.”- பக்கத்து ரூம்காரர்.

“நம்ம வீட்டுக்கு வளமும், அழகையும், உற்சாகத்தையும் கொண்டு வரும் பட்டாம்பூச்சிகள். நம்ம வாழ்க்கையையே ஜெகஜோதியாக்கும் குத்து விளக்குகள். வீடு தேடி போனா, வாப்பான்னு வாய் நிறையக் கூப்பிடும் அந்த அழகில் வாழ்வே முழுமை அடைஞ்சுடும்.”- ரசித்துப் பேசினார் அவர்.புன்னகைத்தான் பாலு. உண்மைதானே. அவனும் அப்பா, அம்மாவை விட்டு விலகி சென்னையில் இருக்கிறான். அக்காதான் அவர்களை வைத்துப் பாதுகாக்கிறாள்.பாலு தங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்று கட்டளை.

தஞ்சாவூர் அருகே வேத பாடசாலை நடத்தும் வைத்தியநாத சாஸ்திரிகளின் ஒரே மகன் பாலு தன்னுடன் வேலை பார்க்கும் எஸ்தரைக் காதலித்து, அவளுக்காக மதம் மாறி கல்யாணம் செய்து கொண்டால் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்.அவன் காதலை ஏற்றுக் கொண்ட எஸ்தர் குடும்பம் அவன் மதம் மாற வேண்டும் என்றது. அப்பா சம்மதிக்கவில்லை. பாலுவால் காதலை உதற முடியவில்லை. மதம் மாறி எஸ்தரைக் கல்யாணம் செய்து கொண்டான்.

அவளுடன் போனபோது அப்பா அவனை உள்ளே விடவில்லை. வாசலில் நிற்க வைத்து உறவு முடிந்தது என்று ஒரு பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டார். அம்மா அழுதாள்.அவனை வளர்த்த பாட்டி ரகசியமாய் ஓடி வந்து பத்து ரூபாய் ஆசிர்வதித்துக் கொடுத்து விட்டுப் போனாள். நான்கு மாதத்தில் இறந்தும் போனாள். உடலைப் பார்க்கவும் அனுமதியில்லை.

பாட்டிதான் வந்து பிறந்திருக்கிறாள் என்று நினைத்தான்.பாட்டி மாதிரிதான் இருந்தது குழந்தை.குழந்தைக்குத் தண்ணீர் விட்டு, எஸ்தரை ரூமுக்குக் கொண்டு வந்ததும் அவனைப் பார்க்க அனுமதித்தார்கள்.நார்மல் டெலிவரி என்றாலும் சோர்ந்து போயிருந்தாள் எஸ்தர். அவனைப் பார்த்ததும் மலர்ந்தாள். கண்கள் மலர, “குழந்தையைப் பாத்தியா?” என்றாள்.
சின்னப் பூங்கொத்து மாதிரி இருந்தது. ரோஜாப்பூவுக்கு கண், காது வைத்தது போல் தொடும்போது சின்னப் பஞ்சுப் பொதியைத் தொடுவது போல் இருந்தது. பாட்டி மாதிரியே தாடையில் சின்னப் பிளவு. மூக்கு நுனியில் வளைந்து, கை, கால்கள் நீள, நீளமாய் அழகாக இருந்தது.

சின்னப் பட்டு வாய் திறந்து கொட்டாவி விட்டதில் சிலிர்த்துப் போனான் பாலு. உள்ளம் சொக்கியது.“அப்படியே எங்க பாட்டி மாதிரியே இருக்கு எஸ்தர்.” “அவங்கதான் வந்து பிறந்திருப்பாங்க. உன்மேல கொள்ளை ஆசையல்ல.”பாட்டிக்கு அவன்மேல் உயிர். இறந்து போன தாத்தாவே வந்து பிறந்திருக்கான் என்று பூரித்துப் போவாள். என் செல்லமே என்று கொஞ்சுவாள். பாலு என்பது தாத்தாவின் பெயர் என்று அவனைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.“செல்லம், செல்லம்” என்றுதான் அழைப்பாள். அவனின் காதலுக்கு முழு ஆதரவு தந்தவள்.

“நம்ம குடும்பத்தினுடைய சாஸ்திரம், வேதம் இதை எல்லாம் நீ காதலிக்கும்போது யோசிச்சு இருக்கணும். ஒத்து வருமான்னு பாக்கனும். ஏன், நீதான் மதம் மாறணுமா? சரி, காதலிச்சவளை விடக் கூடாதுன்னு நினைக்கறே. நல்ல விஷயம். செஞ்சுக்கோ. எங்கேயோ நல்லா இரு” என்று ஆசிர்வதித்தாள்.இரண்டு பக்கமும் சம்மதம் கிடைக்கவில்லை என்று எஸ்தர் தற்கொலைக்கு முயன்று ஹாஸ்பிடலில் இருந்தாள். அவளின் பெற்றோர்கள் பாலு மதம் மாறினால் காதலுக்குச் சம்மதிப்பதாகக் கூறினார்கள்.

“நம்பியவளைக் கை விடாதே. காதல்ல நேர்மை, உண்மை வேணும். போ” என்று பாட்டிதான் அனுப்பினாள். மதம் மாறி எஸ்தரைத் திருமணம் செய்து கொண்டான்.வாழ்க்கை அழகாய்த்தான் போனது.ஆனந்தமாய், பொங்கி வழியும் காதலுடன், ஒருவர் அன்பில், மற்றவர் நனைந்து நிறைவாய் இருந்தது. எஸ்தர் அவன் விருப்பங்களில் குறுக்கிடுவதில்லை. அவன் அடிக்கடி காஞ்சிபுரம் போவான். வடபழனி முருகன் கோவிலுக்கும் போவான். சில நேரங்களில் எஸ்தரும் கூட வருவாள். அவன் குழந்தையின் பிஞ்சு முகத்தைப் பார்த்தபடி நின்றான்.

“என்ன சொல்றா என் பேத்தி”- எஸ்தரின் அப்பா உள்ளே வந்தார்.கையில் பெரிய ஸ்வீட் பாக்கெட். “என்னப்பா, இவ்வளவு பெரிய பாக்கெட். கடையையே விலைக்கு வாங்கிட்டீங்களா?”“பின்னே? என் வீட்டுக்கு ராஜகுமாரி வந்திருக்கா. கொண்டாட வேண்டாமா?”பாலுவிடம் கொடுத்து எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார்.“அம்மாடி இப்போ குழந்தைக்கு என்ன பெயர்னு செலக்ட செஞ்சிடு. இவங்களே பிறப்புச் சான்றிதழ் கொடுப்பாங்க. ஏதேனும் தேர்வு செஞ்சிருக்கியா?”“இன்னும் இல்லப்பா? உங்க ஐடியா என்ன?”“நான் எங்க அம்மா பெயர் வைக்கப் போறேன். ஸ்டெல்லா மரியம்னு வச்சு. ரியான்னு கூப்பிடப் போறேன்.”- அப்பா குஷியுடன் பேசினார். மகள் பிறப்பது ஆனந்தம். மகளுக்கு ஒரு மகள் பிறப்பது பேரின்பம் என்பார் அடிக்கடி.

கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எஸ்தர் ஒரே மகள் என்பதால் அவளின் காதலுக்கு சில நிபந்தனைகளுடன் சம்மதித்தார். நல்ல படிப்பாளி, நேர்மையானவர். மனித நேயமும், பெருந்தன்மையும் கொண்ட பண்பான மனிதர். பாலுவுக்கு அவரிடம் நல்ல மரியாதை உண்டு.திருமணம் ஆனதுமே தனிக் குடித்தனம் போகச் சொல்லி விட்டார்.“உங்களுக்குன்னு ஒரு பிரைவசி வேணும். இனி நீங்கள் ஒரு குடும்பம். பட்ஜெட் போட்டு, அழகாய், கச்சிதமாய் வாழ்வது எப்படின்னு கத்துக்கணும்”- என்றார். அவ்வப்போது ஆலோசனைகள் மட்டும் சொல்வார்.
“குட், இனி நீங்கள் தம்பதிகள் இல்லை. பெற்றோர்கள். உங்கள் குழந்தைக்கு வாழ்வது எப்படின்னு வாழ்ந்து காட்டனும்”- சிரித்தார்.

“அம்மா எங்கப்பா?”- ஆவலோடு கேட்டாள் எஸ்தர்;“ராஜகுமாரிக்கு ரூம் ரெடி செய்யணும். ஞானஸ்நானம் செய்யணும். உறவுகளை அழைக்கணும். எவ்வளவு வேலை இருக்கு? என்னை இங்க போகச் சொல்லிட்டு அவங்க அதைக் கவனிக்கப் போயிருக்காங்க.”பாலுவின் முகம் மாறியது. மெதுவாக வெளியில் வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.உறவுகள் வரணும். ஆம். எஸ்தர் பக்கம் உறவுகள் வருவார்கள். ஆனால் தன் பக்கம்? அது நெருங்கவே நெருங்காதா? தன் குழந்தைக்கு அத்தை, சித்தப்பா, மாமா, பாட்டி, தாத்தா உறவுகளே கிடைக்காதா? கண்ணோரம் கசிந்தது. வருந்தி பயனில்லை. தன் குடும்பம் பற்றித் தெரிந்தும் தான் இப்படிச் செய்தது தவறுதானே. அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் பக்கம் கோபம் நியாயமானது.

அவன் மௌனமாக அந்த வார்டில் போகுபவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். எஸ்தரின் அப்பா, கிளம்பிப் போனார். எஸ்தர் அவனை அழைப்பதாக நர்ஸ் கூப்பிட்டாள்.“என்னம்மா?”“எங்க போயிட்டே?”“வெளில உட்கார்ந்திருந்தேன்.”

“உங்க வீட்டுக்குத் தகவல் சொல்லிட்டியா?”
“இல்லை. சொன்னா வரப் போறாங்களா?”

“வராங்களோ, இல்லையோ, சொல்ல வேண்டியது நம்ம கடமை. இது அந்த வீட்டு வாரிசு. அவங்களுக்குத்தான் உரிமை.”கிண்டலாகச் சிரித்தான் பாலு. “சிரிக்காதே பாலு. அதான் உண்மை. மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. அது வெந்து தணியும் காடு மாதிரிதான். கொஞ்ச நாள் போனா ஆறிடும். அதுவும் பேரன், பேத்திகள் எல்லா மன வேறுபாடுகளையும் மறக்க அடிச்சிடும்.”“ம், பாக்கலாம்.”

“முதல்ல அவங்களுக்கு தகவல் சொல்லு.”
“சரி.”
“அடுத்து உன் பொண்ணுக்கு ஒரு பெயர் வை.”
“அதான் உங்கப்பா வச்சாரே?”
“அது அவர் வச்சது. நீ உன் குல வழக்கப்படி
பெயர் வை.”
“எங்க பாட்டி பெயர்தான் வைப்பேன்.”

“வை. அதையே ரிஜிஸ்டர் செஞ்சிடு.”
“ஏய்!” வியப்புடன் கூவினான் பாலு. “உங்க வீட்டில் ஒத்துக்கணுமே.”
“அவங்க என்ன ஒத்துக்கறது? என்னை மாதிரியே, நீயும் இந்தக் குழந்தைக்கு உரிமைப்பட்டவன். இது மேல உனக்கும் அன்பும், பிரியமும் ஆசையும் இருக்கும்தானே. ஒரு குழந்தையைப் பத்தி தகப்பனா உனக்கும் நிறையக் கனவுகள் இருக்கும்ல. அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. நான் இந்தக் குழந்தையை பத்து மாசம்தான் சுமந்தேன். ஆனா நீ இனி காலம் முழுவதும் சுமக்கப் போறவன். உன் இஷ்டம்தான் இனி.”

பாலு அவள் பேசுவதை வியப்புடன் பார்த்தான்.
“நான் . . . . . .நான் உங்க மதத்துக்கு மாறிட்டேனே?”
“மாறிட்டா?”- எதிர்க் கேள்வி கேட்டாள் எஸ்தர்.
“மாறிட்டா, நீ உன் உணர்வுகள், சொந்த பந்தங்களை மறந்துடணுமா? நான் மறக்கலையே. நீ மட்டும் ஏன் மறக்கணும்? மாறணும்.?”

பாலு மனம் குளிர நின்றான்.“எனக்காக நீ உன் மதத்தையே விட்டுக் கொடுத்திருக்கே. உனக்காக இந்தப் பெயர் வைக்கிற உரிமையை நான் விட்டுத் தரக் கூடாதா? உங்க பாட்டி பெயரையே வை. குழந்தையை எடுத்துண்டு நாம போய் அவங்களைப் பார்த்துட்டு வரலாம். உங்க வழக்கப்படி ஃபங்ஷன் நடத்தி குழந்தைக்குப் பெயர் வைக்கலாம். எல்லாம் கடந்து போகும். அதுதான் மாறாதது.”
அவள் எட்டி பாலுவின் கை விரல்களைப் பிடித்து தடவிக் கொடுத்தாள்.

“காதல்கிறது என் வரையில் அன்பின் பரிமாற்றம். எனக்காக நீ. உனக்காக நீ. பரிமாறிக்கலாம்.”சிலிர்த்தது பாலுவுக்கு. நெஞ்சமெல்லாம் குளிர குனிந்து குழந்தையின் பிஞ்சுக் கால்களை வருடினான். மெதுவாக “பரிமள சுகந்தம்”- என்று அழைத்தான்.குழந்தை நெளிந்து சோம்பல் முறித்து அழகாய்புன்னகைத்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post அவல்… அவல்…!! (மகளிர் பக்கம்)