உங்கள் குழந்தை மேல் நம்பிக்கை வையுங்கள்!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 35 Second

‘‘ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் ஒளியினை வெளிப்படுத்த உறுதுணையாக இல்லாமல், வெளியே இருக்கும் பொதுவான சில விஷயங்களை பாடத்திட்டங்கள் என்கிற பெயரில் அவர்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள் 24 வருடங்களுக்கு மேலாக ‘TRICHY PLUS’ என்கிற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு அனுபவ கல்விப் பயிற்சி அளித்துவரும் சாவித்திரி, சிவகுமார் தம்பதியினர்.

‘‘நானும் என் கணவரும் மாணவ, மாணவிகளுக்காக திருச்சியில் ஒரு பயிற்சி மையத்தினை நடத்தி வருகிறோம். இதில் குறிப்பாக பள்ளி முடித்த பின் கல்லூரி செல்பவர்களுக்கு 1998 ஆம் ஆண்டிலிருந்து வழிகாட்டி வருகிறோம். ஒன்றரை ஆண்டுக்கு முன் S & S FAMILY FIRST: Build Family…Build Nation என்கிற புத்தகம் எழுதினோம். இது தமிழில் ‘நல்லதொரு குடும்பம்’ என்கிற பெயரிலும் வெளியானது. அமேசானில் இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் புத்தகமாக வந்தது. இப்போது இதே பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து, திருச்சி செம்மத் அருகில் உள்ள குடிசைப் பகுதியினை தேர்வு செய்து அங்குள்ள 85 குழந்தைகளுக்கு படிப்பு, ஊட்டச்சத்து சம்பந்தமான வேலைகளை பார்த்து வருகிறோம்” என்கிற சாவித்திரியை தொடர்ந்து சிவகுமார் பேசினார். இந்த யோசனை எதனால் வந்தது? தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலைகள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பேச ஆரம்பித்தார்.

‘‘எங்கள் மகள் சகாரிகா பத்தாம் வகுப்பில் பெரிதாக மதிப்பெண் எடுக்கவில்லை. ஏன் எந்த வகுப்பிலும் அவள் அதிக மதிப்பெண் எடுத்து நான் பார்த்ததில்லை. அப்படி பத்தாம் வகுப்பு முடித்த பின் அடுத்து என்ன என்கிற கேள்வி அவளிடம் இருந்தது. ஏனெனில் அடுத்தடுத்த மேற்படிப்பிற்கான அடித்தளம் பதினோறாம் வகுப்பிலிருந்து ஆரம்பம் ஆகிறது. இது போல் அடுத்து என்ன என்கிற கேள்வியிலிருக்கும் குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் வழி காட்டுகிறார்கள். சிலர் தங்கள் விருப்பத்தை அந்த குழந்தையின் மீது திணிக்கிறார்கள். சில குழந்தைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களாக தீர்மானிக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கும் போது நானும் என் மனைவி சாவித்திரியும் எங்கள் மகளிடம் பேசினோம். அந்த உரையாடலின் முடிவில் ‘ஓராண்டு பள்ளிக்கு செல்லாமல், இடைவெளி எடுத்து கொண்டு உலகம் என்ன என்று முதலில் தேட முயற்சி செய்’ என்று கூறினோம். அந்த ஓராண்டில் பதினைந்து இடங்களுக்கு மேல் இண்டர்ன்ஷிப் மாதிரி வேலை பார்த்தாள். உதாரணத்திற்கு இரண்டு வாரம் ஹோட்டலில் வேலை என்றால், ரிசப்ஷனிஸ்ட், வெயிட்டர், ஹவுஸ்கீப்பிங் என ஒவ்வொரு வாரம் ஒரு வேலை. இப்படித்தான் ஸ்டாக் மார்க்கெட், பள்ளி, மருத்துவமனை, இண்டஸ்ட்டிரியல் விசிட் என ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அனுபவம் பெற்றாள். வேலையில் ஒரு பக்கம் அனுபவம் கிடைத்தாலும், வாழ்க்கையின் மற்றொரு பக்கமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ட்ரக்கிங் அனுப்பினோம். இதற்காக தனிப்பட்ட குழுக்கள் இயங்கி வருகிறது. அதில் அவளை இணைத்தோம்.

அப்போது தான் தனக்கான ஒரு பொறுப்பு வரும் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அவளுக்கு அது ரொம்பவே பிடிச்சு இருந்தது. போகும் இடமெல்லாம் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுப்பது தான் இன்றைய தலைமுறையினரின் டிரண்ட்… அதில் என் மகள் ஒன்றும் விதிவிலக்கில்லை. ஆனால் அவ்வாறு எடுத்த புகைப்படத்தினை நல்ல முறையில் பயன்படுத்த சொன்னோம். அவளும் அதைப் புரிந்து கொண்டு புகைப்படங்கள் கொண்டு டாக்குமெண்டரி செய்தது மட்டுமில்லாமல், அவளின் ஒரு வருட அனுபவத்தை ‘My Unschooled Year’ என்ற புத்தகம் எழுதினாள். அதோடு நில்லாமல் இப்போது ஒரு தொழில் முனைவராகவும், பல இடங்களில் செமினார் மற்றும் மோட்டிவேஷன் ஸ்பீக்கராகவும் இருக்கிறாள்” என்கிற சிவகுமார், சரஸ்வதி தம்பதியின் மாணவராக இருந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘‘எங்களின் நம்பிக்கை என்னவென்றால் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதை வெளிக் கொண்டுவருவதற்கான வழிகளை பார்க்காமல், நம் ஆசைகளை அவர்களுக்குள் திணித்துவிடுகிறோம் என்பதை ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்தி வருகிறோம். இதை வெறும் பேச்சோடு மட்டும் நிறுத்திவிடாமல், எங்கள் குழந்தைக்கு கிடைத்த அனுபவத்தை போல் மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற முதல் முயற்சியாக திருச்சி செம்பத் குடிசைப் பகுதியில் உள்ள 85 குழந்தைகளிடத்தில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளோம். அதற்காக இன்டர்நெட் க்ளாஸ் ரூம் கட்டியுள்ளோம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே இன்டர்நெட் பயிற்சி வகுப்பு முறையினை குடிசைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, ஆசிரியர்கள் இல்லாமலேயே கற்றுக் கொள்ளலாம் என்பதை கொண்டு வந்தவர் TED Talkக்கின் பிரபலமான பேச்சாளர் சுகதா மித்ரா. அவரை தொடர்பு கொண்டு அவரின் ஆலோசனை பேரில் தான் இந்த வகுப்பினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தோம்.

காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்த பிறகு மாலை நேரங்களில் இந்த வகுப்பில் ஈடுபாடு செய்தோம். குழந்தைகளும் தங்களின் ஆர்வத்திற்கு ஏற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடங்களில் ஒரு தலைப்பு எடுத்துக் கொண்டு அதை இன்டர்நெட்டில் தேடி அது குறித்து குறிப்பு எடுப்பார்கள். ஒரு வாரம் கழித்து அவர்கள் எடுத்துள்ள குறிப்பினை பற்றி விளக்க வேண்டும். முதலில் தமிழில் விளக்கமளிக்கும் அதே பாடத்தினை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்ல வேண்டும் என்கிற பயிற்சியும் அளித்து வருகிறோம்.

இதன் மூலம் அவர்கள் ஆங்கில ெமாழியினை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு வாரம் ஒரு தலைப்பை தேர்வு செய்து அதற்கான வேலைகள் செய்வதற்கு வழிகாட்டுதலாக இன்டர்நெட் கிளாஸ் ரூமில் ஆசிரியர்களையும் நியமித்துள்ளோம். இணையம் மற்றும் புத்தகங்களில் அவர்கள் படித்த பாடங்களை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் போது இன்னும் கூடுதலாக அந்த விஷயத்தில் தெளிவு பெறுவார்கள் என்பதற்காக மாதம் இரு முறை ஃபீல்டு விசிட் அழைத்து செல்கிறோம். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெவ்வேறு துறைகளில் இருக்கும் ஆளுமைகளை அழைத்து குழந்தைகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறோம்.

பாடங்களை கற்பிப்பது மட்டுமில்லாமல் வகுப்பிற்கு வரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உள்ள உணவினையும் கொடுத்து வருகிறோம்’’ என்கிற சிவகுமார், குழந்தைகளின் ஒவ்ெவாரு வளர்ச்சி மற்றும் அவர்களின் முயற்சியும் நாமே வெற்றி பெற்ற உணர்வினை ஏற்படுத்தும். கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்று நான்கு சுவரில் அடைக்காமல், அதிலிருந்து வெளியே வந்து உலகம் எப்படி இருக்கிறது என்று குழந்தைகளுக்கு காட்டுங்கள். கல்வி என்பதே ஒரு பரிசோதனையின் நிகழ்வு தான். அவர்களை ஒரே கூட்டில் அடைக்காமல் பல துறைகளில் பறந்து செல்ல அவர்களுக்கான எல்லையை விரிவுபடுத்துவோம்.

இந்த அனுபவத்தை எங்கள் குழந்தைக்கு கொடுத்ததன் விளைவு, 2019ஆம் ஆண்டு டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் அன்று, தலாய்லாமாவுடன் கலந்துரையாடும் மூன்று குழந்தைகளில் ஒருவளாக எங்கள் குழந்தை தேர்வானாள். இதுவே துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, கிரண் பேடி போன்றவர்கள் எங்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து பேசும் வாய்ப்பையும் உருவாக்கியது. சசி தரூர் அவர்கள் இந்தப் பயிற்சி திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்.

ஒவ்வொரு குழந்தையின் செயல்திறன் அறிந்து, அதற்கு சரியான வழிகாட்டுதல் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களின் தன்னம்பிக்கை உயரும். எல்லாம் தாண்டி உங்கள் குழந்தைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கையை என்றும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருங்கள்” என்கிறார்கள் சாவித்திரி, சிவகுமார் தம்பதியினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மகா நடிகை சாவித்திரியின் பிரதிபிம்பம் வாணிஸ்ரீ!! (மகளிர் பக்கம்)
Next post மாற்று திறனாளிகளுக்கு உதவும் மாற்று சிகிச்சை!!(மருத்துவம்)