அன்னையரை போற்றுவோம் அன்போடு!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 54 Second

இந்த உலகத்தில் எந்த பொருளும், பதவியும், பட்டங்களும் வாங்கிவிடலாம். ஆனால் நாம் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே செல்வம் தாய். ‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…’ என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், பெருமை மற்றும் தியாகத்தினை குறிப்பவை. இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே கிடையாது. ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ கதாபாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற கதாபாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு ‘அன்னையர் தினமாக’க் கொண்டாடப்படுகிறது.

அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் நம் புராதன காலத்திலேயே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றது. பண்டைய காலத்தில் அன்னையர் புராணங்கள் கதைகளாக வழங்கப்பட்டு வந்தன. அன்னைக்கு ஈடாக ‘சைபீல்’ என்ற பெண் கடவுளை எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக மக்கள் வணங்கி வந்தனர். வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்கள் விழா எடுத்து கொண்டாடுவது வழக்கம், இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழாவாக கருதப்படுகிறது. வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும்.

க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் கிரேக்கர்கள் தங்களின் தாயாகவும் தெய்வமாகவும் வழிபட்டு வந்தனர். ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். ரோமானியர்கள் தங்களது தாய் கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள் விழா நடத்தப்பட்டு பலவிதமான விருந்து படைப்பது வழக்கம்.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசு பிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தாங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில
ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய வகையில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவானது. ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் கிராஃப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். யுத்தம் நடைபெற்ற போது, யுத்த களத்தில் பல அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் நாலாபக்கம் சிதறிப்போயினர்.

பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாகவே வாழ்ந்த ஜார்விஸ் 1904ல் மறைந்தார். இவரின் மகள் அனா ஜார்விஸ் நான்கு வருடம் கழித்து முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார். தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய உலகத்தில் முதல் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அனா ஜார்விஸ் 1913ம் ஆண்டு பணி நிமித்தமாக பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை தொடர ஆரம்பித்தார். அதில் முதல் கட்டமாக வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பு ஒன்றில் இணைந்தவர், அன்னையைப் போற்றுவதற்காக ஒரு நாள் உலகளவில் கொண்டாடப்படவேண்டும் என்ற தன் கோரிக்கையை பென்சில்வேனியா அரசிடம் தெரிவித்தார்.

அவரது கருத்தை ஏற்ற அரசு 1913ம் ஆண்டு அன்னையர் தினம் கொண்டாட அங்கீகாரம் அளித்தது. மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. அமெரிக்கா முழுவதும் ‘‘அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசு விடுமுறை நாளாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதிக்கு தன் வேண்டுகோளை விடுத்தார். இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனை 46 நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் அனா ஜார்விஸ் உலகமெங்கும் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தார். 84வது வயதில் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் அவர் தெரிவித்த ஆசை இன்று பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்று அன்னையர்களை போற்றும் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம் போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதிலேயே முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். எதையும் வியாபாரமாக்கி பணம் பாக்கும் அமைப்பு ஒன்று அன்றைய தினத்தில் அன்னையின் படம் பொறித்து கொடியினை விற்றது. இதனையறிந்த அனா ஜார்விஸ், கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் என்பது அன்னையினை போற்றக்கூடிய நாளாக இருக்க வேண்டுமே தவிர பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது, இத்தகைய வசூல்களுக்கு தடை விதிக்க கோரி வாதிட்டு வெற்றியும் பெற்றார். எனவே, அன்னையர் தினத்தில் அன்னையரை மகிழ்விக்க எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். இந்த தினம் உண்மையான அன்பிற்காகவும், நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று போராடிய அனா ஜார்விஸின் நோக்கத்தை புரிந்து அன்னையர் தினத்தினை கொண்டாடுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதல் பெண் வாரிசை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த பெற்றோர்!! (மகளிர் பக்கம்)
Next post முதுமையை முழுமையாக்கும் இயன்முறை மருத்துவம்!(மருத்துவம்)