இந்தியாவை சுற்றி வந்த சீமா பவானிகள்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 27 Second

36 பெண்கள் இரண்டு இரண்டாக சாலையில் மோட்டார் பைக்கில் தங்களின் ஹெல்மெட் மற்றும் உடையில் இந்தியக் கொயினை ஏந்தி வந்த அந்த கம்பீரமான நிகழ்வு கடந்த மாசம் நிகழ்ந்தது. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது இந்த ஊர்கோலம். இந்திய ராணுவப் படையின் ஒரு துணைப்படை தான் பி.எஸ்.எஃப் என்று அழைக்கப்படும் எல்லை காவல் படை.

இதில் ஆண்கள், பெண்கள் என்று பலரும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய எல்லைப் பகுதியினை பாதுகாத்து வருகிறார்கள். மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தில் தொடங்கி ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மற்றும் கிழக்கு பகுதியில் பங்களாதேஷ் வரையுள்ள எல்லைப் பகுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த எல்லைப் பாதுகாப்பு படையில் பல பெண்கள் தங்களின் பணியினை செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் சீமா பவானி குழுவினர். இந்த குழுவினைச் சேர்ந்த 36 பெண்கள் தில்லி முதல் கன்னியாகுமரி வரை கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி தங்களின் விழிப்புணர்வு பயணத்தினை ராயல்என்பீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350 என்ற மோட்டார் வாகனத்தில் மேற்கொண்டுள்ளனர்.

‘‘கடந்த மாதம் மகளிர் தினத்தன்று தான் எங்களின் பயணம் துவங்கியது. பி.எஸ்.எஃப் சீமா பவானி ஷவுரியா என்ற எங்க குழுவில் நாங்க மொத்தம் 36 பெண்கள். எல்லாரும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினை சேர்ந்தவர்கள். நாங்க ஒவ்வொருவரும் ஒரு யூனிட்டில் வேலை பார்ப்பவர்கள். சீமா பவானி குழுவால் ஒன்றாக இணைந்து பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கோம்’’ என்று பேசத்துவங்கினார் குழுவின் கேப்டன் மற்றும் இன்பெஸ்டரான ஹிமான்ஷு ஷிரோஹி.

சீமா பவானி குழு பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குழு. இந்த குழுவில் உள்ள அனைவரும் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். 2016ம் ஆண்டு குவாலியர் மாவட்டத்தில் தான் இந்த குழு துவங்கப்பட்டது. எங்க எல்லாருக்கும் குவாலியரில் உள்ள மத்திய மோட்டார் வாகன பள்ளியில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு 2018ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் புரிந்தோம்.

எங்கள் குழுவில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்ட தெரியும். ஆனால் எங்களின் லிமிட் 2 கிலோ மீட்டர் தூரமும், மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகம் மட்டும் தான். முதன் முதலாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மட்டுமே 400 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயணம் செய்திருக்கோம்.

எங்க குழு சார்பாக இந்த பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்த செய்தி வந்தது. விருப்பமுள்ளவர்கள் இந்த பயணத்தில் இடம் பெறலாம்  என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 36 பெண் வீராங்கனைகள் இதில் பங்கு பெற முன்வந்தார்கள். இவங்களின் தலைவியாக நான் நியமிக்கப்பட்டேன். தில்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்தியா கேட் வரை சாலையில் என்னையும் சேர்த்து ஒரு சில பெண்கள் பைக் ஓட்டி இருக்கோம். அதைத்தாண்டி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து உள்ள சாலைகளில் நாங்க பயணம் செய்தது கிடையாது. முதலில் நம்ம பெண்களால் இதை கடக்க முடியுமான்னு பயந்தேன்.

அதன் பிறகு மனதில் உறுதி இருந்தால் கண்டிப்பாக எதையும் சமாளிக்க முடியும்னு என் தலைமையில் இவர்களை வழிநடத்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் உற்சாகமாகத்தான் எங்களின் பயணம் தொடர்ந்தது. அதன் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டரும் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தது. குறிப்பாக பல வண்டிகள் செல்லும் போக்குவரத்து சாலையில். இந்த பயணத்தில் நெடுஞ்சாலைகள் மட்டுமில்லாமல் மலைப்பகுதிகள், கரடுமுரடான சாலைகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள், ஆற்றுப்பாலங்கள் என பலதரப்பட்ட இடங்களில் வண்டியினை ஓட்டிச் ெசல்ல வேண்டி இருந்தது.

அதிலும் போக்குவரத்து நிறைந்த சாலைகள் மற்றும் மலைப்பகுதியில் வண்டியினை ஓட்டிச் செல்வது ரொம்பவே சவாலாக அமைந்தது. நாங்க இரண்டு இரண்டு பேராக வரிசையாக செல்ல வேண்டும். சில சமயம் போக்குவரத்து காரணமாக நடுவில் ஒரு காரோ அல்லது பைக்கோ சென்றுவிடும். அந்த நேரத்தில் எங்களை பின்தொடர்ந்து வந்த மற்றவர்கள் நின்றுவிடுவார்கள். அவர்களுக்காக காத்திருந்து அழைத்து செல்ல வேண்டும். மறுபக்கம் திடீரென்று மாடு குறுக்கே வந்திடும். அதையும் சமாளிக்கணும். இந்த பயணத்தில் ரொம்பவே த்ரில்லாக நாங்க கடந்த இடம் மலைப் பகுதி சாலைகள். முதல் ஐந்து கிலோமீட்டர் ஒன்றுமே தெரியல.

அதன் பிறகு செங்குத்தான சாலைகள், அதிக அளவு வளைவுகள் கொண்டு இருந்தது. அந்த வளைவுகளில் வண்டியினை எப்படி திருப்பணும் மற்றும் செங்குத்தான சாலையில் எப்படி கடக்கணும்னு சொல்லிக் கொடுத்து மற்ற பெண்களை வழிநடத்தினேன். ஒருத்தர் ஸ்லிப் ஆனா அவரை தொடர்ந்து வரும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் ரொம்பவே கவனமா இந்த பாதையினை கடந்து வந்தோம். மேலும் எங்களுடன் ஒரு டாக்டர், ஆம்புலன்ஸ் வண்டி வந்தது.

யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போனால், அதில் அவர்கள் சிகிச்சை அளிப்பதற்காக. எங்களின் இந்த சாகசப் பயணம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறது. மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து சீதோஷ்ணநிலையைப் பொருத்து ெவளிநாட்டைச் சுற்றி ஒரு பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். தற்போது மேற்கொண்ட பயணம் வெயில் காலம் என்பதால் 50 கிலோ மீட்டர் இடையே பிரேக் எடுப்போம். அந்த சமயத்தில் மக்கள் எல்லாரும் எங்களுக்கு இளநீர் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. சில சமயம் மதிய வேளையில் பயணக் களைப்பு ஏற்படும். அந்த சமயத்தில் எங்களின் உற்சாக மந்திரம் ‘பாரத் மாதா கீ ஜே’’ என்று தங்களின் பயணத்தைப் பற்றி விவரித்தார் ஹிமான்ஷு.

எளிதான மோட்டார் பைக்…

ராயல் என்பீல்ட் நிறுவனம் சுமார் 70 ஆண்டுகளாக இந்திய ராணுவத்திற்காக மோட்டார் பைக்கினை வழங்கி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் இரண்டிலும் ராணுவ வீரர்கள் பயன்படுத்தியது இந்த நிறுவனத்தின் மோட்டார் வாகனம்தான். மிகவும் உறுதியான மற்றும் எந்த வித கரடுமுரடான பாதையிலும் பயணம் செய்யக்கூடிய திறன் கொண்டது என்பதால்தான் இன்று வரை ராணுவத்தினர் இந்த பைக்கினை பெற்று வருகிறார்கள்.

ஜவான்களுக்காக அளிக்கப்படும் இந்த வண்டிகள் அனைத்தும் அவர்களின் வசதிக்கு ஏற்ப இருபக்கம் பாக்ஸ் அமைப்புடன் மற்றும் ஆர்மி பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிற பைக்கினை மற்ற சாதாரண மக்களுக்கு வழங்குவதில்லை. ஒவ்வொரு வருடமும் 2000 முதல் 3000 வண்டிகள் ராணுவ பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த மோட்டார் பைக்கினை மிகவும் எளிதாக பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
Next post dash diet!!(மருத்துவம்)