ஃப்ரீடம் ஃபைட் !! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 56 Second

தி க்ரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தாக்கமே இன்னும் குறையாமல் இருக்கும் போது, இயக்குனர் ஜியோ பேபி, மீண்டும் ‘ஃப்ரீடம் ஃபைட்’ எனும் ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்துள்ளார். ஃப்ரீடம் ஃபைட் மலையாளப் படம், ஜியோ பேபி, குஞ்சிலா மாசில்லாமணி, ஜித்தின் ஐசக் தாமஸ், அகில் அனில்குமார், ஃபிரான்சிஸ் லூயிஸ் உள்ளிட்ட ஐந்து சிறப்பான இயக்குனர்களால் ஐந்து கதைகளின் தொகுப்பாக உருவாகி இருக்கிறது. ரஜிஷா விஜயன், ஜோஜு ஜார்ஜ், சித்தார்த்த சிவா, ந்தா, ரோகினி உட்பட மேலும் பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

பொதுவாக ஆந்தாலஜி படத் தொகுப்புகளில் ஒரு படம் நன்றாக இருக்கும், மற்ற தொகுப்புகள் சுமாராக இருக்கும். ஆனால் ‘ஃப்ரீடம் ஃபைட்’ ஆந்தாலஜியில், ஒவ்வொரு திரைப்படமுமே மனசுக்கு நெருக்கமாக மாறுகின்றன. முதல் கதையினை நகைச்சுவையாக ஆரம்பித்து… ெகாஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு கதையின் வீரியம் அதிகரித்து, முடிவில் நம்மை கலங்க வைக்கிறது. ஃப்ரீடம் ஃபைட் வேறுபட்ட கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் கொண்டிருந்தாலும் சுதந்திரம் எனும் ஒரே மையக்கருவின் மூலம் இணைந்திருக்கிறது. ஐந்து கதைகளில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். அது பிடித்த உடையை அணிவதில் தொடங்கி, சாதிய ஒடுக்கு
முறை வரை நீளுகிறது.

‘கீத்து அன்செயிண்ட்’ (Geethu Unchained)… இதில் நகைச்சுவையைக் கொண்டு இந்த கால பெண்கள் சந்திக்கும் மார்டன் தடைகளை விவரிக்கிறது. அகில் அனில்குமார் இயக்கத்தில் ரஜிஷா விஜயன் பாராட்டிற்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக சுழலும் வார்த்தை டாக்சிக் ரிலேஷன்ஷிப். புரிதல் ஆதரவு இல்லாமல் துன்பம் மற்றும் அழுத்தத்தை மட்டுமே கொடுத்து மனரீதியாக பலவீனமாக்கும் உறவு தான் டாக்சிக் உறவு. கணவன்/மனைவி, அலுவலகம், நண்பர்கள், பெற்றோர்கள் என இந்த உறவுமுறை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கீதுவைச் சுற்றி இந்த உறவுகள் மட்டுமே இருக்கிறது. அவளது பாய் ஃப்ரெண்ட், அலுவலகம், குடும்பம் என சுற்றி இருப்பவர்கள் கீதுவின் வாழ்க்கையில் வரம்பு மீறி உரிமை எடுக்கிறார்கள். படித்து முடித்து வேலைக்குச் செல்லும் கீது, தன் காதலை வீட்டில் வெளிப்படுத்துகிறாள். வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க… நிச்சயம் செய்யப்படுகிறது.

காதலனாக இருந்த வரை சமமாக நடத்தியவன், திருமணம் நிச்சயமானதும் பல கட்டளைகளை விதிக்கிறான். இந்த யுக காதலர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை சமூகவலைத்தளம். கீதுவும் அந்த பிரச்னையை சந்திக்கிறாள். அவளுடைய காதலனே அவள் ஐடியிலிருந்து அவளைப் போல பதிவுகள் போடுகிறான். தன்னை விரும்பிய ஒருவன் திடீரென இப்படி மாறிப்போனது கீதுவிற்கு நெருட… ஒரு கட்டத்தில் இவன் தனக்கு சரியான துணை இல்லை என முடிவு செய்து, நிச்சயத்தை முறித்து திருமணத்தை நிறுத்திவிடுகிறாள். இதனால் அவமானங்களை சந்தித்த கீது பெற்றோர்… அவளின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் வேறு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். கீதுவின் வாழ்க்கையில், அவளைத் தவிர அவளை சுற்றியிருப்பவர்களே அதிகம் உரிமை எடுத்துக்கொள்கின்றனர். அதில் இருந்து மீள்கிறாளா கீது?குஞ்சிலா மாசில்லாமணியின் ‘தி அன் ஆர்கனசைட்’ (The Unorganised) மற்ற ஆந்தாலஜியில் இருந்து மாறுபட்டு ஆவண – திரைப்பட கதை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடில் பிசியான மார்க்கெட் ஏரியாவில் ஒரு கடையின் விற்பனை பெண்ணாக ந்தா பணியாற்றுகிறாள். அவளைப் போலவே அங்குச் சுற்றியுள்ள கடைகளில் பல பெண்கள் வேலை செய்கின்றனர். பெண்கள் வேலை செய்யும் அந்த இடத்தில், ஒரு கழிவறைக் கூட இல்லை. இடைவேளை நேரத்தில் ஓட்டலில் டீ சாப்பிடும் போது அங்கிருக்கும் கழிவறையை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் இப்படி டீக்கு செலவு செய்தும், நீண்ட வரிசையில் நின்று கழிவறையை பயன்படுத்தியும் அவர்கள் சோர்ந்து போகிறார்கள். இது குறித்து ந்தா, உரிமையாளரிடம் சொல்கிறாள். அவரோ அலட்சியமாக, வீட்டிலிருந்து ஒரு பாட்டில் கொண்டு வந்து, அவசரத்திற்கு அதை பயன்படுத்திக் கொள்ள சொல்கிறார்.

பெண்களுடைய இந்த முக்கியமான பிரச்சனைக்கு யாருமே செவி சாய்க்காததால், அவர்களாகவே ஒன்று கூடி யூனியனிடம் எடுத்துச் செல்ல, அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவர்கள் அனைவரும் தங்களுக்கு நேரும் பிரச்சனைக்காக இணைந்து ஒன்று கூடி… பெரும் அமைப்பாக மாறுகின்றனர். இறுதியில் பெண்கள் அவர்களின் உரிமையினை அவர்களே கேட்டு பெறலாம் என்று முடிகிறது.

மூன்றாம் கதை பிரான்சிஸ் லூயிஸ் இயக்கியுள்ள ‘ரேஷன்’. காபினி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவள் பக்கத்து வீடு பெரிய பங்களா. அந்த வீட்டுப் பெண்ணும் காபினியும் நண்பர்கள். என்ன தான் பணக்கார வீட்டு பெண்ணுடன் நட்பு பாராட்டினாலும், நடுத்தர மக்களுக்கே உரிய கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் காபினி அவர்கள் நட்பிற்குள் சிறிய கோட்டை வரைந்து எல்லையை கடைப் பிடிக்கிறாள். காபினியின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்கு சமைக்கப்படும் உணவு பங்களா வீட்டு தோழிக்கும் வழங்கப்படுகிறது. மறுநாள், காபினி வீட்டில் இல்லாத நேரத்தில் பங்களா பெண்மணி அவள் வீட்டில் சமைக்க இருக்கும் மீனை குழந்தையிடம் கொடுத்து காபினி வீட்டு ஃபிரிட்ஜில் வைக்க சொல்கிறாள்.

வீட்டுக்கு வரும் காபினி விழாவில் உணவு அளித்ததற்கு மீன் கொடுத்திருப்பதாக நினைத்து சமைத்துவிடுகிறாள். மறுநாள் பங்களா பெண்மணி மீனை திரும்ப கேட்க, காபினிக்கு தூக்கி வாரிப் போடுகிறது. தோழியாக இருந்தாலும் மீனை சமைத்துவிட்டோம். இப்போது மீனை வாங்க காசில்லை என்று சொல்ல கூச்சப்பட்டு, தன் மோதிரத்தை விற்று, அந்த மீனை வாங்குகிறாள். பங்களா வீட்டில் விருந்து தடபுடலாக நடக்க அதில் பாதி உணவு மிச்சமாக்கப்பட்டு குப்பையில் கொட்டப்படுகிறது. அதில் காபினி தங்க மோதிரத்தை விற்று வாங்கிய மீனும் அடங்கும். வர்க்க பிரிவினையால், நடுத்தர மக்கள் தினசரி சந்திக்கும் இது போன்ற நுணுக்கமான பிரச்சனையை இத்திரைப்படம் மிக அழகாக கையாண்டிருக்கிறது.

ஜியோ பேபியின் ‘ஓல்ட் ஏஜ் ஹோம்’ (Old Age Home), ஜோஜு ஜார்ஜ், ரோகினி, லாலி நடித்துள்ளனர். கணவன்-மனைவியான ஜோஜுவும், லாலியும், கஷ்டப்பட்டு குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி, வெளிநாடுகளில் வசிக்க கணவனும் மனைவியும் ஜோஜூவின் பென்ஷனில் இங்கு சிரமமின்றி வாழ்கிறார்கள். திடீரென ஜோஜுவை டிமென்ஷியா மறதி நோய் தாக்க, அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன் நினைவுகளை இழக்கிறார்.

கணவரை கவனித்துக்கொள்ள ஒரு உதவியாளரை (ரோகினி) நியமிக்கிறாள் லாலி. ரோகினி அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மாற மூவருக்குள்ளும் (ரோகினி- ஜோஜு- லாலி) ஓர் அழகான உறவு உருவாகுகிறது. ஜோஜூ மற்றும் லாலியின் தேவைகளைப் புரிந்து இருவருக்கும் உதவியாய் இருக்கிறாள் ரோகினி. இவர்கள் மூவரும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கின்றனர்.

ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இவர்களது பிள்ளைகளுக்கு மூவரின் நட்பு சங்கடத்தைக் கொடுக்கிறது. “அம்மா உன்னுடைய வேலை அப்பாவைப் பார்த்துக்கொள்வது மட்டுமே. உனக்கு தேவையான பணத்தை நாங்கள் அனுப்புகிறோம். நீ அந்த வேலைக்காரியை வீட்டை விட்டு அனுப்பு. பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்” என்கிறார்கள். முதுமையில், வயதானவர்கள் வீட்டில் சாப்பிட்டு ஓய்வெடுத்து யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என பிள்ளைகள் நினைக்கிறார்கள். வயதானால் அவர்களுக்கென கனவு, ஆசை என எதுவும் இருக்காது என்பது தான் இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனையாக இருக்கிறது. அனைத்து பொருளாதார வர்க்கத்திலும் முதியவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை Old Age Home கூறுகிறது.

மற்ற நான்கு படங்களும் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களின் நுட்பமான பிரச்சனைகளை பேசும் போது, ஜித்தின் ஐசக் தாமஸ் இயக்கியுள்ள Pra.Thoo.Mu திரைப்படம் சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படையாகவே கையாள்கிறது. கருப்பு-வெள்ளையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் துப்புரவு தொழிலாளர்களை, அதிகாரவர்க்கம் எப்படி கையாள்கிறது என்பதை சொல்கிறது. தந்தையும் மகனும் ஒரு மந்திரியின் வீட்டில் அடைத்திருக்கும் சாக்கடையை சுத்தம் செய்ய வருகின்றனர்.

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது, யாரும் கழிவறையை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் மந்திரி, அலட்சியமாக கழிவறையை பயன்படுத்த, அந்த கழிவு சுத்தம் செய்து கொண்டிருக்கும் மகனின் மீது விழுகிறது. மகன் கோபத்தில் மந்திரியை தாக்க மந்திரியின் ஆட்கள் அவனை திருப்பி தாக்க மகன் உயிரிழக்கிறான். இதற்காக துப்புரவு தொழிலாளிகள் ஒன்றுகூடி, “நீதி கிடைக்கும் வரை, உங்கள் வீட்டு சாக்கடையை நீங்களே அள்ளுங்கள்” எனக் கூறி ஃப்ரீடம் ஃபைட் திரைப்படம் நிறைவடைகிறது. ஃப்ரீடம் ஃபைட், பெண்கள் சந்திக்கும் சில சிக்கலான பிரச்சனைகளுடன், துப்புரவு பணியாளர்களிடம் நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலையும், அவர்கள் மீதான வன்முறையையும் காத்திரமாக கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சேமிக்கலாம் வாங்க!(மகளிர் பக்கம்)
Next post நீரிழிவு நோயாளிகளுக்கு…!!(மருத்துவம்)