என் கனவு கிராண்ட்ஸ்லாம்..! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 47 Second

நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப் பொறுத்தவரை மலை அளவு சாதனை செய்திருந்தாலும் அவர்களது பெயர் கூட வெளியே தெரிவதில்லை.

சர்வதேச அளவில் அந்த விளையாட்டிற்கான பேரும் புகழும் இருந்தாலும் நம் நாட்டை பொறுத்தவரை கிரிக்கெட்டின் மாய வெளிச்சத்தில் மற்ற விளையாட்டு போட்டிகள் மங்கி விடுகின்றன. இது போன்றதொரு நிலையில் டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகள் படைத்து வரும் சென்னையை சேர்ந்த சிறுமி ஹரிதாஸ்ரீ தன் கதையை தோழியரோடு பகிர்கிறார். ‘‘என்னுடைய அப்பா டென்னிஸ் கோச். என்னுடைய நான்கு வயதில் இருந்தே அப்பாவோடு டென்னிஸ் கோர்ட்டுக்கு போய் வருவேன்.

அப்பா மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது நானும் அவங்களோடு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்து தயாராகி கொண்டிருந்த போது, அப்பா ஒரு போட்டியில் விளையாட சொன்னார். அப்ப எனக்கு ஆறு வயசு. நான் பங்கு பெற்ற முதல் போட்டியிலேயே இறுதி சுற்றில் ரன்னரப்பாக வந்தேன். இந்த வெற்றிக்குப்பிறகு எனக்கு டென்னிஸ் விளையாட்டு மேல் இன்னும் ஆர்வம் அதிகமானது. எனது ஆர்வத்தை பார்த்து வீட்டிலும் என் மேல் தனிப்பட்ட கவனம் எடுத்து கோச்சிங் கொடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு இப்போது வரை டென்னிஸ்க்கான கோச் அப்பாதான். என்னுடைய ஃபிட்னசை சுரேஷ் சார் பார்த்துக்கிறாங்க’’ என்றவர் டென்னிஸ் விளையாட்டில் தரப்பட்டியலில் எவ்வாறு இடம் பெறுவது என்பதை குறிப்பிட்டார்.

‘‘முதலில் மாநில அளவிலான போட்டியில் விளையாடணும். அதில் நாம் திறமையாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் தேர்வாவதற்கு பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தேசிய அளவிலான போட்டிகள் எங்கு எப்போதெல்லாம் நடைபெறுகிறது என்று காலண்டர் வெளியிட்டு இருப்பாங்க. அதில் உள்ள தேதிகளைப் பார்த்து முக்கியமான போட்டி குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதன் பிறகு அந்தந்த ஊரில் நடைபெறும் போட்டியினை ேதர்வு செய்து பங்கு பெறலாம். அதில் வெற்றி பெற்றால் அதற்கேற்றார் போல் ஒவ்வொரு புள்ளிகளாக (points) சேர்ந்து கொண்டே வரும். அந்த புள்ளிகள் வைத்து ஒவ்வொரு கேட்டகரியில் ரேங்க் வரிசைப்படுத்துவார்கள். அதன் அடிப்படையில் அண்டர் 12 கேட்டகரியில் தேசிய அளவில் முதல் ரேங்க் எடுத்தேன்” என்கிற ஹரிதா, சென்னையின் பிரபல பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

‘‘ஏழு வயதிலிருந்தே மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறேன். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட டோர்னமெண்டுகள் ஆடியுள்ளேன். எல்லா டோர்னமெண்டுகளிலும் வின்னர் அல்லது ரன்னராகவே இருந்து வருகிறேன். பெங்களூரில் நடந்த போட்டியில் என்னுடைய முதல் டைட்டிலை வென்றேன். அதன் பின் ஒன்பது வயது இருக்கும் போது, ஹரியானாவில் நடந்த அண்டர் 12 கேட்டகரியில் சிங்கிள் மற்றும் டபுலில் பதக்கம் வென்றேன்.

வருடத்திற்கு ஒரு முறை தேசிய அளவிலான போட்டி நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஒற்றையர் பிரிவில் ரன்னராகவும், இரட்டையர் பிரிவில் முதலாவதாகவும் வெற்றி பெற்றேன். அந்த நேரத்தில் இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தேன். இந்திய அளவில் யார் டாப் 3 ரேங்கில் இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்து, இந்தியா சார்பாக மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிக்கு அனுப்புவார்கள். அந்த வகையில் பாகிஸ்தானில் நடந்த தகுதி சுற்று போட்டியில் எங்கள் அணி எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றது. நானும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

பாகிஸ்தானில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றதால், கஜகஸ்தான் நாட்டில் அதற்கான இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. 2021 நவம்பரில் நடைபெற்ற அப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து ரன்னர் அப் ஆனேன். இதன் மூலம் அண்டர் 12 கேட்டகரியில் இந்திய அளவில் முதல் ரேங்கில் இருந்தேன். இப்போது அண்டர் 14 கேட்டகரியில் 13வது ரேங்கில் இருக்கிறேன். அடுத்த ஆண்டு எப்படியும் முதல் ரேங்க் வந்துவிடுவேன்” என்கிற ஹரிதாவின் கனவு, விம்பிள்டன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதோடு, இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டுமாம்.

‘‘விம்பிள்டன் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு உகந்த ஸ்பான்சர்ஷிப் தேவைப்படுகிறது” என்று பேசத்துவங்கினார் ஹரிதாவின் தாய் வித்யா வெங்கடேஷ்… ‘‘இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கே எங்கள் சக்தியை தாண்டி வருடம் ஐந்து லட்சத்திற்கு மேல் செலவு செய்து கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது நிச்சயமாக இருபது லட்சத்திற்கு மேல் செலவாகும். டென்னிஸ் போட்டியில் ஹரிதா தேசிய அளவில் முதல் ரேங்க் வந்திருக்காள். ஆனால் அவளுக்கான அங்கீகாரம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை. மற்ற விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்… இந்த விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என்றால் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கிறது.

இதை நான் என் மகள் ஹரிதாவிற்காக மட்டும் பேசவில்லை, எவ்வளவோ ஏழை பசங்க ஆர்வம், திறமை இருந்தும் டென்னிஸ் பேட் தொட முடியாமல் இருக்கிறார்கள். டென்னிஸ் ஒரு பணக்கார விளையாட்டாக இருக்கிறது. சென்னையில் டென்னிஸ்க்கான கோர்ட்டுகள் ஒவ்வொன்றாக குறைந்து வருகிறது. மேலும் நாம் இங்கு முறையாக பயிற்சி பெற்றாலும், வெளிநாட்டு விளையாட்டுகளுக்கு அந்த ஊரில் சென்று பயிற்சி பெறவேண்டும்.

அப்போது தான் அந்த ஊரின் சூழல் மட்டுமில்லாமல், அங்குள்ள தட்பவெப்பம் என்ன என்று புரிந்து கொண்டு விளையாட முடியும். ஹரிதாவிற்கு அடுத்த ஆண்டு 14 வயதாகிறது. இப்போது இருந்தே சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பிக்க வேண்டும். இதற்காக எங்களின் பங்களிப்பு இருந்தாலும், ஹரிதாவின் விளையாட்டை பார்த்து ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால், அவளின் திறமைக்கு ஏற்ப அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும்.

இவளின் டென்னிஸ் ஆர்வத்தைப் பார்த்து பள்ளியில் ரொம்ப ஆதரவாக இருக்காங்க. தேர்வு நேரத்தில் போட்டி இருந்தால், மறு தேர்வு எழுத அனுமதிக்கிறார்கள். இது எங்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கிறது. தேசிய அளவில் இரண்டு முறை பங்கெடுத்து, இரண்டு முறையும் பதக்கம் வென்று, தேசிய அளவில் முதல் ரேங்கில் இருக்கும் ஹரிதா மீது தமிழக அரசின் பார்வை பட்டு ஊக்குவித்தால் நிச்சயம் அவளது கனவு பலிக்கும். இதன் மூலம் டென்னிசில் சாதிக்க காத்திருக்கும் இளம் பிஞ்சுகளின் கைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கதவு திறக்கும். இதுவே அரசுக்கு நாங்கள் வைக்கும் தாழ்மையான வேண்டுகோள்” என்கிறார் சிறுமி ஹரிதாவின் தாயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!(மகளிர் பக்கம்)