தாக்கும் தோள்பட்டை காயம்… தகர்க்கும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

Read Time:8 Minute, 51 Second

தோள்பட்டையில் காயம் ஏற்படுவது, அதனால் வலி உண்டாகி கையை தூக்க முடியாமல் போவது போன்றவை இன்றைய டெக் உலகில் அதிகரித்து வரும் சாதாரண ஒன்று எனலாம். இந்த வலியினால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி மிக எளிய மக்களும் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்வது, மருத்துவர்களை அணுகுவது என்பது இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டது.

தோள்பட்டை வலி வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தோள்பட்டை மூட்டை சுற்றியுள்ள ‘Rotator Cuff’ என்று இயன்முறை மருத்துவத்தில் சொல்லப்படும் ‘நான்கு தசைகளால் ஆன பட்டையான தசை நாணில்’  ஏற்படும் காயத்தை பற்றியும், அது ஏன் வருகிறது, அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்னென்ன என்பதை பற்றியும் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதால் அதனைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

Rotator cuff என்பது…

தோள்பட்டையை சுற்றியுள்ள நான்கு தசைகள் நாண் போன்று உருமாறி வட்டமான கிண்ணம் போல் தோள்பட்டை மூட்டை மூடியிருக்கும். இதையே Rotator cuff என்கிறார்கள்.

இதன் வேலைகள்…

* தோள் மூட்டினை வலுவாக (strong) வைத்திருக்க உதவும். இதனால் தோள்பட்டை மூட்டு எளிதில் இறங்காது அல்லது தன் நிலைவிட்டு நகர்ந்து செல்லாது.

* கைகளை மேலே தூக்கி செய்யும் வேலைகளுக்கும், தோள் பட்டையை சுழற்றுவதற்கும் இந்த cuff உதவும்.

* தோள்பட்டை மூட்டு ஒரு பந்தை கிண்ணத்தில் பொருத்தியது போன்ற அமைப்பில் இருக்கும். இந்த விதமான அமைப்பை வலுவாக வைத்திருப்பதே cuff தான்.

* இந்த cuffஐ உருவாக்கிய நான்கு தசைகளும் ஒன்று சேர்ந்து அசைவுகளின்போது தோள்பட்டை எலும்பை நிலையாய் வைக்கவும், தோள்பட்டையை திடமாக்கவும் (stable), தோள்பட்டையை உயர்த்தவும் உதவி செய்யும்.

* மொத்தத்தில் தோள்பட்டையை காப்பதே இந்த cuff தான் என்று சொல்லலாம்.

காயம் ஏன் ஏற்படுகின்றது…?

* தினமும் நாம் செய்யும் சாதாரண வேலைகளில் எல்லாம் இந்த cuff பயன்படுவதால் ‘அதிக உபயோகத்தினால் ஏற்படும் காயங்கள்’ cuffல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

* திரும்பத் திரும்ப ஒரே அசைவை மேற்கொள்ளும் எந்தவொரு வேலையையும் நீண்டநேரம் மற்றும் நீண்ட நாட்கள் செய்தால் காயம் (injury) வரக்கூடும். உதாரணமாக வர்ணம் பூசுபவர் தன் கையினை தொடர்ந்து மேலே கீழே அசைப்பதை சொல்லலாம்.

* விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது அதிக தூரம் கையினை அசைக்கும் போது இவ்வகை காயங்கள் ஏற்படும்.

யாருக்கெல்லாம் வரலாம்…?

* எல்லாவிதமான மக்களுக்கும் ஒரே மாதிரியான வேலைகளைதான் இந்த cuff செய்கிறது என்றாலும், இது பேஸ்பால் வீரர்கள், நீச்சல் வீரர்கள், டென்னிஸ் வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் என தோள்பட்டையை மையமாகக் கொண்டு விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு அதி முக்கியமான ஒன்று என்பதால் போதிய உடற்பயிற்சி இல்லாத வீரர்களுக்கு கட்டாயம் இவ்வகை காயம் ஏற்படக்கூடும்.

* விளையாட்டு வீரர்கள் அல்லாமல் வர்ணம் அடிப்பவர்கள் (painters), தச்சர்கள், சமையல் கலைஞர்கள் போன்றோரும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

காயத்தின் பிரிவுகள்…

* சிறு காயம் முதல் முழு கிழிசல் வரை மூன்று பிரிவுகள் உள்ளது. அதாவது ஒரு செ.மீ முதல் ஐந்து செ.மீ வரை நீளம் உள்ள கிழிசல்கள் உள்ளன.

* பிரிவு ஒன்று: கண்ணுக்குத் தெரியாத அளவு காயம் இருக்கும். இந்த நிலையில் இயன்முறை மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால் எளிதில் முற்றிலுமாக குணமாகும்.

*பிரிவு இரண்டு: நாணில் விரிசல் ஏற்பட்டிருக்கும். இந்த நிலையிலும் இயன்முறை மருத்துவ உதவி மூலம் குணம் பெறலாம்.

*பிரிவு மூன்று: நாண் முழுவதுமாக கிழிந்திருக்கும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

அறிகுறிகள்…

* தோள்பட்டையில் வலி உண்டாகும்.

* குறிப்பாக இரவு நேரங்களில் வலி அதிகரிக்கும்.

* தோள்பட்டையை அசைக்கும் போது இறுக்கமாக (stiff) இருக்கும்.

* கையினை மேலே தூக்கும் போது, சுழற்றும் போது என சில அசைவுகள் செய்யும் போது வலி வரக்கூடும்.

ஆபத்துக் காரணிகள்…

* புகை பிடிக்கும் பழக்கம்,

* இறுகிய தோள்பட்டை (Frozen Shoulder),

* சரியான உடற்பயிற்சி இல்லாமல் விளையாடுவது,

* தோள்பட்டையை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உடற்பயிற்சி கூடங்களில் பொருந்தாத தோள்பட்டை பயிற்சிகளை மேற்கொள்வது,

* இயன்முறை மருத்துவர் அல்லாத உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்வது,

* டி.வி, யூடியூப் பார்த்து அதில் வரும் உடற்பயிற்சிகளை செய்வது என பல ஆபத்து காரணிகள் உள்ளன.

எப்படி கண்டறிவது…?

* தோள்பட்டை வலி வந்தால் முதலில் இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.

* அவர் அடிபட்டதன் பின் உள்ள வரலாறு, அறிகுறிகள் முதலியவற்றை கேட்டு தெரிந்துகொள்வர்.

* அதன்பிறகு இயன்முறை மருத்துவ ‘தனி வகை டெஸ்டுகள்’ (கைகளை அவர்கள் சொல்வது போல அசைத்து காட்ட சொல்வர்) மூலம் வலி ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிவர்.

* தேவைப்பட்டால் எக்ஸ்ரே அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் எடுக்க பரிந்துரை செய்வார்கள்.

தீர்வுகள்…

* இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலமும், சில நுட்பங்கள் மூலமும் வலியை முதலில் குறைப்பார்கள். பின் தசை தளர்வு பயிற்சிகள், தசை வலிமை பயிற்சிகளையும் பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பார்கள்.

* முழு கிழிசல் உள்ளது என்றால் அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

* அறுவை சிகிச்சை முடிந்த பின்பும் இயன்முறை மருத்துவத்தை தொடர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தோள்பட்டை முழுமையாக குணமடையும்.

*மாறாக வலி மறைவதற்கு தேவையான களிம்புகள், மாத்திரை மருந்துகள் என எடுத்துக்கொண்டால் கிட்னி போன்ற உள் உறுப்புகள் பாதிக்கப்படுமே தவிர தீர்வு காண முடியாது என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே தோள்பட்டை வலி வந்தால் அதை ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து தகுந்த இயன்முறை மருத்துவ சிகிச்சை செய்வது சிறந்தது என்பதையும், அவ்வாறு செய்வதால் காயம் ஆழமாக பாதிக்காது, அதனால் அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்பதையும் ஒவ்வொருவரும் மனதில் பதிந்துக்கொண்டாலே போதும் தோள்பட்டை வலிக்கு எளிதில் குட்பை சொல்லிவிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் பீட்டா க்ளுக்கான்!! (மருத்துவம்)
Next post இசையில் நான் ஃப்ரீ பேட்!!(மகளிர் பக்கம்)