கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 27 Second

வளரும் பிள்ளைகள் தங்கள் இஷ்டம் போல் ஓடியாடி விளையாடவும், விருப்பமான செயல்களை செய்யவும் நாம் தடை போடாமல் இருப்பதே அவர்களின் மூளை வளர்ச்சிக்கு வலு சேர்ப்பதாக அமையும். அவர்கள் விளையாட்டுப் போக்கில் செய்யும் குறும்புகள் அவர்களுக்கே சமயத்தில் ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் அமையுமானால், எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம். காரணம் சொல்லாமல், இதைச் செய்யாதே, அதை தொடாதே என்றெல்லாம் கூறினால் பிள்ளைகள் அதை விரும்புவதேயில்லை. அதிலும் ‘கூடாது’ என்கிற எதிர்மறை வார்த்தையைக் கேட்டால், அதை கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்கும்.

இப்பொழுதுள்ள பிள்ளைகள் எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். ஒரு செயலை செய்வதால் ஏற்படும் நன்மையையும், அதன் ஆபத்தையும் கூறி விட்டால் போதும். அதற்கேற்றபடி தன்னை பார்த்துக் கொள்வார்கள். கேள்விகள் கேட்க கேட்கத்தான் அவர்களின் புத்திசாலி தனம் மேலிடும். நாமும் அதற்கேற்ற சரியான விளக்கங்களை அளிக்கத்தான் வேண்டும். பல சமயம் கேள்விகள் கேட்டுத் துளைக்கும் குழந்தைகள், தனக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்றாலோ, தன்னை யாரும் பொருட்படுத்தவில்லை என்கிற எண்ணம் மேலிட்டாலோ பிள்ளைகள் கேள்வி கேட்பதையே நிறுத்திக் கொள்வார்கள். நாளடைவில், மௌனம் கடைபிடிக்க ஆரம்பித்து, அப்படியே ‘டல்’லாகிப் போவார்கள். ‘குழந்தைகள்தானே’ என்று ஏதேனும் பொய்யாகக் கூறிவிட்டால், அதுவே அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

ஒரு இரண்டு வயது குழந்தை, மெழுகுவர்த்தியை ஏற்றியபின், அதை ஊதி அணைக்க விரும்புகிறது. குனிந்து அதை அணைக்க முற்படும் பொழுது அதன் சுடர் முகத்தில் பட நேரிடுகிறது. அப்பொழுது குழந்தையின் பெற்றோர் அதன் மழலைப் பேச்சிலேயே பேசி குழந்தைக்கு விளக்க நினைக்கும் பொழுது, அது கவனத்துடன் கேட்டுக் கொள்கிறது. ‘அருகில் சென்று ஊதினால் சுடர் முகத்தில் படும், சற்று தள்ளி நின்று ஊத வேண்டும்’ என்பதை அழகாக புரிந்து கொள்கிறது. தான் புரிந்து கொண்டதை தெளிவாக்கும் நோக்கில் மீண்டும், தாயை மெழுகுவர்த்தி ஏற்றச் சொல்லி தள்ளி நின்று ஊதி அணைக்கிறது. எவ்வளவு தெளிவாக அதனால் புரிந்து கொள்ள முடிந்தது.

காரணம் பெற்றோர் குழந்தை பருவத்திற்கு இறங்கி வந்து புரியவைத்திருக்கிறார்கள். நம் எல்லோருக்குமே அத்தகைய பொறுமைதான் அவசியமாகிறது. ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கே பொறுமையான விளக்கம் தேவைப்படுகிறதென்றால், அவர்களின் சுதந்திரமான விளையாட்டுக்களிலும், செயல்களிலும் நம் தலையீடு ரொம்பவும் குறைத்துக் கொள்வது நல்லது. சில மேற்கத்திய நாடுகளில், பிள்ளைகளை திறந்த வெளிகளில் மற்றும் பூங்கா போன்ற இடங்களில் இஷ்டம் போல் விளையாட விடுகிறார்கள். கடற்கரை மணலில் படுத்துப் புரண்டு விளையாடுவது, மண்ணில் கோபுரங்கள் கட்டுவது போன்ற விளையாட்டுக்களிலிருந்து, அவர்களின் கற்பனைத் திறன் மேலிடுகிறது என்று கூறலாம்.

இதற்காகவே வீட்டை கட்டுமுன் அல்லது வாங்குவதற்கு முன், எங்கெல்லாம் குழந்தைகளுக்கான பூங்காக்கள் உள்ளன என்பதையும் பார்ப்பார்கள். குழந்தைகள் உலகம் என்பது தான் உண்மையில் சந்தோஷமான காலகட்டம். எப்பொழுது வேண்டுமானாலும் விளையாடலாம், உறங்கலாம், சாப்பிடலாம். மேலும் எதையாவது உடைத்தாலும், யாரும் கேள்வி கேட்க முடியாது. சில சமயங்களில் பிள்ளைகள் தங்களுக்குள் அப்பா-அம்மா உறவு போன்று, ஆசிரியர்-மாணவர் போன்று, டாக்டர்-நோயாளி போன்று அதே பாத்திரத்தை ஏற்று நடிப்பார்கள். பிரமாதமாக சென்று கொண்டிருக்கும் அவர்கள் விளையாட்டில், பெரியவர்கள் யாரேனும் பார்த்து விட்டாலோ, தலையிட்டாலோ அவ்வளவுதான்.

அத்தகைய விளையாட்டு அத்துடன் நின்று விடும். வெட்கமும், கூச்சமும் ஒன்று சேர விரக்தியில் மீண்டும் விளையாடவே மாட்டார்கள். அவர்களின் மன ஓட்டம் பாதிக்கும். நாம் முன்மாதிரியாக நடந்து கொண்டால், அவர்களின் விளையாட்டில் கூட அது பிரதிபலிக்கும். அதனால் ஒரு சில செய்கைகளை மும்முரமாக பிள்ளைகளை செய்யும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். நம்மைப் பார்த்து வளரும் பிள்ளைகளின் செய்கைகளில், நம் சாயல் கண்டிப்பாக காணப்படும்.

ஒரு சமயம் பிள்ளைகள் கை வினைப் பொருட்கள் செய்து கொண்டிருந்தார்கள். கதைகள் சொல்லிக் கொண்டும், ஒருவர் செய்து முடித்ததை மற்றவருக்குக் காட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆசிரியை இவற்றைக் கண்டு மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளுக்கு நடுவே ஒரு பழைய கண்ணாடிக் குவளை மிகவும் இடைஞ்சலாக இருப்பதைக் கண்டு அதை அப்புறப்படுத்துவதற்காக கையை வைத்தார். ஆனால் பிள்ளைகள் ஒன்று சேர்ந்து தாங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகக் கூறி, வேண்டாத பொருட்களை ஆளுக்கொன்றாக கையில் எடுத்துச் சென்றனர். துரதிஷ்டவசமாக ஒரு சிறுவன் கையிலிருந்த கண்ணாடிக் குடுவை கீழே விழுந்து உடைந்து விட்டது.

சிறிய கண்ணாடித் துகள் அவன் கால்களில் குத்த, அவன் அப்பொழுதும் உடைந்தவற்றை திரட்டி சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இதைக் கேள்விப்பட்ட ஆசிரியை அதிர்ச்சியடைந்தார். உடன் ஓடிப்போய் கண்ணாடித் துகள்களை அப்புறப்படுத்தினார். அந்தச் சிறுவனை தன் காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதித்து விட்டு ஒன்னும் பிரச்னையில்லை என்று கூறி, தடுப்பூசி போட்டு அனுப்பி வைத்தார். பையனும் சிரித்துக் கொண்டுதான் இருந்தான். அதற்குள் இவ்விஷயம் கேள்விப்பட்டவர்கள் பலவாறு பேசத் தொடங்கினர். “சிறுவன் கையில் உடையக் கூடிய கண்ணாடியை கொடுத்தனுப்பலாமா, இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய வேண்டாமா?” சரமாரியான கேள்விகள் தொடர்ந்தன.

ஆசிரியருக்கோ பாதி உயிர் போனால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு மனச் சோர்வு ஏற்பட்டது. இருப்பினும் சிறுவன் பெற்றோரிடம் உண்மையைச் சொல்ல நினைத்து தொலைபேசியில் அழைத்தார். சிறுவனின் அம்மா-அப்பா இருவரும் அலுவலகத்திலிருந்து ஓடிவந்தனர். முதலில் அவர்களை ஆசுவாசப்படுத்தி விட்டு நடந்ததை ஆசிரியர் சொல்லத் தொடங்கினார். அதற்குள் சிறுவன் குறுக்கிட்டு, ஆசிரியர் தவறு இதில் எதுவுமே கிடையாது எனவும், தானேதான் முன்வந்து வேண்டாதவற்றை அப்புறப்படுத்த நினைத்ததாகவும், தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது, மாடிப்படிகளில் கால் தவறி குதித்து விட்டதாகவும் கூறினான்.

மேலும் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும் ஆசிரியர் மருத்துவரிடம் தன்னை அழைத்துச் சென்றதையும் கூறி முடித்தான். கொஞ்சம் கவலையுடன் காணப்பட்ட பெற்றோர் முகம் மாற ஆரம்பித்தது. அதிர்ச்சியில் காணப்பட்ட ஆசிரியர் முகமும் இயல்புக்குத் திரும்பியது. அவன் கை, கால்களை யெல்லாம் உதறிக்காட்டி எப்பொழுதும் போல் சாதாரணமாக இருப்பதையும் நிரூபித்தான். பெற்றோர் சங்கடம் நீங்கப்பெற்று, மகனை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் தந்தனர்.

அத்துடன் நிற்காமல் ஆசிரியருக்கு நன்றி செலுத்த ஆரம்பித்தனர்.“நல்ல வேளை, அவன் பள்ளியில் இருக்கும்பொழுது இப்படி ஒரு விபத்து ஏற்பட்டதால், நீங்கள் முதலுதவி கொடுத்து ஒன்றுமாகாமல் செய்து விட்டீர்கள். வீட்டில் தனித்து இருக்கும் பொழுது ஏதேனும் நடந்திருந்தால் என்ன ஆவது? பள்ளிக்கும் ஆசிரியருக்கும்தான் நன்றி செலுத்த வேண்டும்” என்று சாதாரணமாக விஷயத்தை மாற்றி விட்டார்கள். ஆசிரியர் புத்துயிர் கிடைத்தது போல் உணர்ந்தார்.

இத்தகைய நிகழ்வில், படித்து பட்டம் பெற்ற பெற்றோர்கள், தன் பிள்ளையின் உதவி செய்யும் மனப்பான்மையை ஊட்டி வளர்த்துள்ளார்கள். “நீ ஏன் கண்ணாடி எடுத்துச் சென்றாய்? ஆசிரியர் ஏன் இந்த வேலை கொடுத்தார்?” என்றெல்லாம் கேட்கவேயில்லை. பையனும் தானே முன்வந்து ஆசிரியருக்கு உதவ நினைத்து, வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்துவதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு, தனக்கேற்பட்ட விபத்தையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இவையெல்லாமே பெருந்தன்மைக்கான அடையாளங்கள் எனலாம்.

இது போல், எங்கும் எதிலும் எல்லோருமே புரிதலோடு செயல்படும் பொழுது அது நல்ல சமூக சூழலை ஏற்படுத்துகிறது. வேறு விதத்தில் விஷயங்கள் மாறும் பொழுதுதான் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். பதினாறு-பதினேழு வயது ஆன ஒரு இளைஞன் என்று சொல்லலாம். ஆனால் அவனும் மாணவன்தான். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மும்முரமாக ஒத்திகை நடந்து கொண்டிருந்தன. இறுதி விழாவுக்கு இரண்டு தினங்களே இருந்த சமயம்.

ஒரு குழுவின் தலைவன், தான் எடுத்து வரவேண்டிய பொருட்களை வீட்டில் மறந்து வைத்து விட்டு, பள்ளிக்கு வந்து விட்டான். மாலை அனைவருக்கும் ஒத்திகை நேரம் வந்தது. குழுவிற்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் அவன் வீட்டில் தங்கி விடவே பெரிய குழப்பம் நடந்தது. அவன் வீட்டிற்குச் சென்று பொருட்களை எடுத்து வருவதாக ஆசிரியரிடம் அனுமதி கேட்டான்.

ஆசிரியர்கள் அவனைத் தனியாக வீட்டிற்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். ரொம்பவும் மன்றாடி கேட்டுக் கொண்டதின் பேரில் அவனைத் தனியே அனுப்ப இஷ்டப்படாமல் அலுவலக உதவியாளருடன் துணை சேர்த்து அனுப்பி வைத்தனர். வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தான். பிள்ளைகள் ஒத்திகையை ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் பள்ளி வளாகத்தில் சரசரவென்று ஒரு கார் வந்து நின்றது.

நாலு ஐந்து பேர் வேகமாக நடந்து தலைைம ஆசிரியர் அறை பக்கம் சென்றனர். அறைக் கதவு மூடப்பட்ட பின்னும் ஒரே சப்தம் வெளி மைதானம் வரை கேட்டது. வீட்டிற்குச் சென்று சற்று முன் திரும்பிய பையனின் தந்தையும் அவரின் நண்பர்களும்தான் சப்தமிட்டனர். “வீட்டிற்கு திருப்பியனுப்பி பொருட்களை எடுத்துவருமளவுக்கு அவனை யார் அனுப்பினார்கள், எதற்கு அனுப்பினார்கள்? ஒரு ‘போன்’ செய்தால், ஓடி வருமளவுக்கு வீட்டில் வேலையாட்கள் இருக்கும் பொழுது பையன் ஏன் தனித்து வரவேண்டும். வழியில் ஏதாவது விபத்துக்கள் நடந்தால் என்ன செய்வது.

பள்ளியின் மீது தப்பு நடந்துள்ளது” போன்றவைதான் வாதத்தில் வைக்கப்பட்டன. இந்த வாக்குவாதங்கள் நடைபெறுவதை ஒரு நண்பன் மூலம் அறிந்த பையன் ஒத்திகையிலிருந்து ஓடி வந்தான். தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்தான். அனைவரும் எதிர்பாராதவாறு வாக்குவாதத்தை திசை மாற்றி விட்டான். முதலில் தன் தந்தையை, அங்கு வந்து சண்டை போட்டதற்காக கடிந்து கொண்டான். தான் அனைத்தையும் வீட்டில் மறந்து வைத்த தவறினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு தன்னைத் தவிர, யாருமே காரணம் கிடையாதென விளக்கினான். ஆசிரியர்கள் தன்னை அனுப்பமறுத்தும், உதவிக்கு உடன் ஆள் அனுப்பி வைத்ததில் அவர்களின் அக்கறையும், பெற்றோர்கள் போன்று தன்னிடம் சிரத்தை காட்டியதையும் விளக்கினான்.

அவன் கண்களில் நீர் தழும்பியது. தந்தையின் அவசர நடவடிக்கைக்காக தான் தலைமையாசிரியரிடமும், ஆசிரியர்களிடமும் மன்னிப்புக் கோரினான். தன் தந்தையிடம் இதற்கெல்லாம் தலையீடு வேண்டாமென கெஞ்சிக் கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தான். பள்ளியையும், ஆசிரியர்களையும் மதிப்பதுடன், தன்னுடைய குடும்ப அந்தஸ்தை அவன் வெளிக்காட்ட விரும்பவில்லை. சீருடை அவனுக்கு அனைத்து மாணவர்களும் சமம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தது. சொந்த அப்பாவாக இருந்தாலும், ‘அந்தஸ்து’ காட்டிப் பேசுவது அவனுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கிறது. பள்ளியில் நாம் கற்றுத் தருவதும் முதலில் ஒழுக்கம்தான். பையன் நேர் வழியில்தான் சென்று கொண்டிருக்கிறான். அவனுக்கே அனைத்தும் புரியும் பொழுது, இடையே குறுக்கிடும் அந்தஸ்து-வசதிகள் பாதையை மாற்ற வழி தரலாமா?

வருடங்கள் முப்பதானாலும், இத்தகைய சூழல்கள் பிள்ளைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நம் ஆசை. அதற்காக பிறரை குற்றம் கூறுவது நம் நோக்கமல்ல. “எல்லாப் பிள்ளைகளும் மண்ணில் பிறக்கையில் நல்ல பிள்ளைகள்தான். அவர்கள் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!” என்பார்கள். ஆனால் அன்னையை மட்டும் நாம் குறை சொல்வது சரியல்ல. சமூகத்தில் ஒரு சிலரால் ஏற்படும் அவமானங்கள், கேலிப் பேச்சுகள், ஒருவரை மற்றவரோடு ஒப்பிடுதல், இயலாமை, ஏழ்மை, அந்தஸ்தைக் காட்டி உயர்த்திக் கொள்ளுதல் போன்ற சில விஷயங்கள் கூட நம் மனதை, குறிப்பாக இளமைப் பருவத்தில் மாற்றாமல் பார்த்துக் கொள்வோம். வளரும் சமூகம் சாதிப்பதற்கு நாம் துணை நிற்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இசையையும் ஆன்லைனில் கற்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post இதனால்தான் வாழை இலைக்கு இத்தனை மவுசு!! (மருத்துவம்)