ஆக்டிவிட்டி கிட் உருவாக்கிய 18 வயது மாணவி! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 7 Second

தில்லியை சேர்ந்த வாணி ஜெயின் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி கிட்டினை அறிமுகம் செய்தது மட்டுமில்லாமல் ‘மிஸ்டரி கிரேட்’ (Mystery Crate) என்ற பெயரில் ஒரு நிறுவனமாக அதை இயக்கி வருகிறார். 18 வயது நிரம்பிய வாணி பள்ளி மாணவி, இவருக்கு சிறு வயதில் இருந்தே படிப்பு முடித்துவிட்டு நிறுவனங்களில் சேர்ந்து வேலை செய்வதில் விருப்பமில்லை. தனக்கென்று சொந்தமாக ஒரு தொழில் துவங்கி ஒரு தொழிலதிபராக வலம் வர வேண்டும் என்பது தான் இவரின் கனவு. அந்த கனவுக்கான பயணத்தில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தார். அதற்கு முதல் கட்டமாக Thapar Entrepreneurship Academy (YEA) அகாடமியில் சேர்ந்துள்ளார்.

‘‘என்னுடைய கனவு நோக்கிய பாதையில் நான் சரியாக பயணித்துக் கொண்டு இருக்கிறேன் என்ற நம்பிக்கை வந்த பிறகு அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று ெதரியவில்லை. இங்கு ஒரு ெதாழில்முனைவோராக உருவாக என்னவெல்லாம் செய்யலாம், மார்க்கெட்டிங், விற்பனை குறித்த அனைத்து பயிற்சிகளும் இருக்கும். ஆனால் அதற்கான ஒரு தொழிலை நாம் தேர்வு செய்ய வேண்டுமே… அது தான் எனக்கு பெரிய சவாலா இருந்தது. ஆனால் அந்த சவாலையும் தவிடுபொடியாக்கும் அளவிற்கு அதற்கான விடை என்னுடைய வீட்டிலேயே இருந்தது. எனக்கு ஒரே தம்பி. எங்க வீட்டின் செல்லமும் அவன் தான்.

கோவிட் பிறகு எல்லாருடைய கையிலும் குறிப்பாக குழந்தைகள் கையில் செல்போன்கள் விளையாட ஆரம்பித்துவிட்டது. ஆன்லைன் வகுப்பு முடிந்தாலும், அவன் வேறு ஏதாவது இணையத்தில் பார்த்துக் கொண்டு இருப்பான். பெரும்பாலும் நண்பர்களுடன் இணைந்து ஆன்லைனில் விளையாட ஆரம்பித்தான். அவன் செல்போனை கையில் எடுத்தாலே அம்மாவிற்கு பி.பி எகிறிடும். அவனை திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. நான் அவனுக்கு சப்போர்ட் செய்தாலும் அம்மா என்னை திட்டுவாங்க. ஆனால் காலப்போக்கில் இதில் ஏற்படும் அடிக்‌ஷன் அதிகமானது. போன் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை இல்லை என்பது ேபாலாகிவிட்டது.

அதனால் நானும் என் தம்பியை கண்டிக்க ஆரம்பிச்சேன். செல்்போனால் ஏற்படும் உடல் பாதிப்பு என்ன என்று சொன்னாலும் அவனுக்கு அது புரியவில்லை. அந்த சமயத்தில் தான் என் தம்பியின் கவனத்தை திசை திருப்ப நினைச்சேன். குழந்தைகள் பயனுள்ள வகையிலும் சுவாரஸ்யமாகவும் நேரம் செலவிட ஏதாவது உருவாக்கினால் என்ன? இந்தக் கேள்வி மனதில் எழுந்தது. அதற்கு நான் கண்டுபிடித்த விடைதான் `மிஸ்டரி கிரேட்’ (Mystery Crate),” என்கிறார் வாணி ஜெயின்.

‘‘இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ஒரு சர்ப்பிரைஸ் பாக்ஸ். இதனை மாத சந்தா அல்லது மூன்று மாதங்ளுக்கான சந்தா கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இந்த பெட்டியில் இருக்கும் பொருட்கள் மாறுபடும். அதாவது இந்த பெட்டியில் இரண்டு விதமான பொருட்கள் இருக்கும். ஒன்று ஆக்டிவிட்டி, பசில் போன்ற பொருள். மற்றொன்று விளையாட்டு பொருட்கள். அதாவது பரமபதம், லூடோ என வீட்டிற்குள் அமர்ந்து குடும்பமாக விளையாடக்கூடிய விளையாட்டுக்கள்.

சந்தா செலுத்திவிட்டால், அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் ெவவ்வேறு பொருட்கள் இருப்பதால், அடுத்த மாதம் என்ன பொருட்கள் வரும் என்று குழந்தைகள் மனதில் ஒரு வித ஆவலை தூண்டச் செய்யும். எல்லாவற்றையும் விட செல்போனை கையில் எடுத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து விளையாடும் பழக்கம் முற்றிலும் நீங்கி குடும்பத்துடன் சேர்ந்து விளையாடவும், அவர்களுடன் நேரம் செலவு செய்யவும் இந்த பெட்டி மிகவும் உதவுகிறது. இந்த பாக்சினை பெற்றோர்கள் பிறந்தநாள் பரிசாக அளிக்கலாம், தவிர பார்ட்டிகளில் ரிட்டர்ன் பரிசாகவும் கொடுக்கலாம்.

அல்லது பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு ஒரு பரிசாகவும் வழங்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற விளையாட்டு பொருட்களுக்கான சந்தை பெரியது. காரணம் நாம் அனைவரும் ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தான் பல பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை தாண்டி அவர்களுக்கு விளையாட்டு, இசை, கராத்தே, ஸ்விமிங் போன்ற எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீசில் சேர்த்து விடுகிறோம்.

அதனால் தான் என்னுடைய மிஸ்டரி பெட்டியை குழந்தைகள் விளையாட்டு முறையில் பாடங்களை தாண்டி மற்ற விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஏற்ப வடிவமைத்து இருக்கிறோம். இந்த பெட்டியில் இருக்கும் பொருட்கள் சிந்திக்கும் திறன், அறிவுசார் வளர்ச்சி, படைப்பாற்றல் திறன், கற்றல் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன் போன்ற அனைத்தையும் மேம்படுத்த உதவுகிறது’’ என்று கூறும் வாணி ஆரம்பக்கட்டத்தில் தான் நினைக்கும் பொருட்களை தயாரிக்கவும், அதை மார்க்கெட்டிங் செய்யவும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வது என அனைத்திலும் பல சவால்களை சந்தித்துள்ளார்.

‘‘நான் சின்ன பொண்ணு என்பதால், என்னால் என்ன செய்ய முடியும். அப்படி என்ன பிசினஸ் நான் செய்யப்போகிறேன்னு பலர் நான் சொல்வதை காது கொடுத்து கேட்க மறுத்தனர். ஆனால் நான் எனக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களை தொடர்ந்து ஃபாலோ செய்து எனக்கான தேவை என்ன என்று புரிய வைத்தேன். எல்லாவற்றையும் விட பெற்றோர்களுக்கு இது என்ன என்று புரியவைப்பதும் எனக்கு பெரிய சவாலாக இருந்தது.

தற்போது குர்கிராமில் என்னுடைய பொருட்கள் தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலையை கண்டறிந்து அதன் மூலம் எனக்கு தேவையானதை செயல்படுத்தி வருகிறேன். என் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் வித்தியாசமானவை என்பதால் நான் குழந்தைகளின் மனநிலையை அறித்து அதை உருவாக்கி வருகிறேன். அதற்கு என் தம்பி தான் ரொம்பவே உதவியா இருக்கான். வருகிற ஆண்டில் குறைந்த பட்சம் ஆயிரம் ஆர்டர்களாவது பெறவேண்டும் என்பதே என் நோக்கம். தற்போது இன்ஸ்டாவில் இதற்கான பக்கத்தை துவங்கி இருக்கேன். அதன் மூலமாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது” என்கிறார் வாணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உணவாலும் உறவு சிறக்கும்!(அவ்வப்போது கிளாமர்)
Next post படைப்பாற்றல் இருந்தால் கட்டிடத்துறையில் சாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)